Skip to content

Eritrea

விசுவாசத்துக்காக சிறைவாசம்—எரிட்ரியா

விசுவாசத்துக்காக சிறைவாசம்—எரிட்ரியா

பல வருஷங்களாக எந்தவொரு விசாரணையும் செய்யாமல் அல்லது மத விஷயங்களுக்காக முறையான விதத்தில் குற்றச்சாட்டு சுமத்தாமல் அல்லது காரணமே சொல்லாமல் எரிட்ரிய அரசாங்கம் அங்கிருக்கிற யெகோவாவின் சாட்சிகளைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட இருக்கிறார்கள். 1993-ல் நடந்த சுதந்திர வாக்கெடுப்பில் யெகோவாவின் சாட்சிகள் கலந்துகொள்ளாததாலும், மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததாலும் அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்வதாக அக்டோபர் 25, 1994-ல் ஜனாதிபதி அஃப்வர்கி உத்தரவு போட்டார். கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்துவதற்கு முன்பு, எரிட்ரியாவில் இருக்கிற அதிகாரிகள், அதற்குப் பதிலாக மற்ற பொது சேவைகளைச் செய்ய அனுமதி கொடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில், அரசாங்கத்துடைய வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் நிறைய சாட்சிகள் பொது சேவைகளைச் செய்தார்கள். ‘தேசிய நலப்பணி சேவையை நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை’ எரிட்ரிய அதிகாரிகள் முறைப்படி வழங்கினார்கள். அந்தச் சேவை செய்தவர்களை அடிக்கடி பாராட்டவும் செய்தார்கள். ஆனால், ஜனாதிபதியின் உத்தரவு வந்த பிறகு, பாதுகாப்பு அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளைச் சிறையில் போட்டு, சித்திரவதை செய்து, கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது விசுவாசத்தைவிட்டு விலக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்கள்.

இப்போது முப்பத்தி ஒன்பது யெகோவாவின் சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள் (27 ஆண்கள், 12 பெண்கள்). டிசம்பர் 4, 2020 அன்று, 28 யெகோவாவின் சாட்சிகள் (26 ஆண்கள், 2 பெண்கள்) விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் 5-லிருந்து 26 வருஷங்கள்வரை தங்களுடைய விசுவாசத்துக்காக சிறையில் இருந்திருக்கிறார்கள். ஜனவரி 29, 2021-ல், 12 வருஷங்களுக்குமேல் சிறையில் இருந்த சாட்சிகளில் ஒருவர் (ஆண்) விடுதலை செய்யப்பட்டார். அதோடு, பிப்ரவரி 1, 2021-ல் இன்னும் மூன்று சாட்சிகள் விடுதலை செய்யப்பட்டார்கள் (1 ஆண், 2 பெண்கள்). இவர்கள் 4-லிருந்து ஒன்பது வருஷங்கள்வரை சிறையில் இருந்திருக்கிறார்கள்.

சிறையில் இருக்கும் படுமோசமான நிலைமைகளால் சாட்சிகள் மரணம்

எரிட்ரியாவின் சிறைச்சாலையில் இருந்த படுமோசமான நிலைமைகளால் நான்கு சாட்சிகள் அங்கு இருக்கும்போதே இறந்துவிட்டார்கள், வயதான மூன்று சாட்சிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு இறந்துவிட்டார்கள்.

2018-ல், இரண்டு சாட்சிகள் மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு இறந்துவிட்டார்கள். 76 வயதான ஹப்டிமைக்கேல் டெஸ்ஃப்பாமரியம் ஜனவரி 3-ம் தேதி இறந்தார். 77 வயதான ஹப்டிமைக்கேல் மெக்கோன்னேன் மார்ச் 6-ம் தேதி இறந்தார். 2008-ல், எரிட்ரிய அதிகாரிகள் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் இந்த இரண்டு ஆண்களையும் சிறையில் அடைத்தார்கள்.

2011-லும் 2012-லும் இரண்டு சாட்சிகள் மெய்டிர் சிறைச்சாலை முகாமில் கொடூரமாக நடத்தப்பட்டதால் இறந்துபோனார்கள். ஜூலை 2011-ல் 62 வயதான மிஸ்கினா கெப்ரிடின்சே இறந்துபோனார். தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘பாதாளத்தில்’ இருந்த தாங்க முடியாத சூட்டினால் அவர் இறந்துபோனார். அதே மாதிரியான சூழ்நிலையில் கிட்டத்தட்ட நான்கு வருஷங்கள் அடைக்கப்பட்டிருந்த 68 வயதான யோஹனஸ் ஹய்லி ஆகஸ்ட் 16, 2012-ல் இறந்துபோனார். மெய்டிர் முகாமில் அதே மோசமான நிலைமையில் காவலில் வைக்கப்பட்டிருந்த வயதான மூன்று சாட்சிகளான கசாய் மேக்கோனன், கொய்டோம் கெப்ரிகிறிஸ்டோஸ் மற்றும் டேஸ்சிஹேயீ டேஸ்ஃபாரியம், விடுதலை செய்யப்பட்ட பிறகு இறந்துபோனார்கள்.

முக்கியமான மனித உரிமைகள் அமைப்புகளுடைய பரிந்துரைகள் நிராகரிப்பு

மனித உரிமைகளுக்கென்று உலகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நெறிமுறைகளை எரிட்ரியா தொடர்ந்து நிராகரித்துவருகிறது. அடிப்படை உரிமைகளை எரிட்ரியா மீறுவதை முக்கியமான மனித உரிமை அமைப்புகள் கண்டனம் செய்திருக்கின்றன, நிலைமையைச் சரிசெய்யும்படி எரிட்ரியாவுக்குத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

2014-ல், எரிட்ரியாவில் மனித உரிமைகள் சம்பந்தமாக இருக்கிற நிலைமைகளைப் பற்றி சிறப்பு அறிக்கையாளர் மனித உரிமை கவுன்சிலுக்கு (HRC) ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். ”சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப“ மனசாட்சியின்படி சில காரியங்களை ஒருவர் மறுப்பதற்கான உரிமையை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சொன்னது. அதோடு, ”கைதிகளுக்கு அவர்கள் உடல்மேல் இருக்கிற உரிமையை மதிப்போம் என்று சொல்லி உத்திரவாதம் கொடுக்க வேண்டும், மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களுக்கு அதைக் கொடுக்க வேண்டும். . . . சிறையில் இருக்கிற நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு ஏற்றபடி உயர்த்த வேண்டும்“ என்றும் அது சொன்னது. HRC 2015-ல் எடுத்த தீர்மானத்தில், ”மனசாட்சியின்படி ராணுவ சேவையை மறுப்பதற்கு அனுமதி கொடுக்கச் சொல்லி“ எரிட்ரிய அரசாங்கத்துக்கு உத்தரவு போட்டது.

2016-ல் எரிட்ரியாவில் இருக்கிற மனித உரிமைகளுக்கான விசாரணைக் குழு, எரிட்ரிய அதிகாரிகள் ”மனிதகுலத்துக்கு எதிராகக் குற்றம்“ செய்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தது. ஏனென்றால், அந்த அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளையும் மற்றவர்களையும் ”மத மற்றும் இன அடிப்படையில் துன்புறுத்தியிருக்கிறார்கள்.“

சட்டப்படி பாதுகாப்பு இருந்தாலும், ”யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள்“ அந்த உரிமைகளை அனுபவிக்க முடியவில்லை என்றும் அவர்கள் ரொம்ப கொடூரமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் 2017-ல் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலன் குறித்த ஆப்பிரிக்க நிபுணர்களின் குழு (ACERWC) சொன்னது. ”யோசிப்பதற்கும் மனசாட்சியின்படி நடப்பதற்கும் ஒரு மதத்தை பின்பற்றுவதற்கும் ஒரு பிள்ளைக்கு இருக்கிற சுதந்திரத்தை எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை முழுமையாக அமல்படுத்தவும் வேண்டும்“ என்று எரிட்ரியாவுக்கு இந்தக் குழு பரிந்துரை செய்தது.

”யெகோவாவின் சாட்சிகள் உட்பட . . . காவலில் வைக்கப்பட்டிருக்கிற எல்லாருக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதை சரிசெய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி“ 2018-ல் மனித மற்றும் மக்கள் உரிமைகளுக்கான ஆப்பிரிக்க ஆணையம் எரிட்ரியாவுக்குப் பரிந்துரை செய்தது. காவலில் இருக்கும்போது இறந்துபோன சாட்சிகளுடைய மரணத்தை விசாரிக்கவும் சொன்னது. யெகோவாவின் சாட்சிகளுக்கு ”அவர்களுடைய குடியுரிமை கிடைப்பதை“ எரிட்ரியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையம் வலியுறுத்தி சொன்னது.

மதம் மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரத்தை ஒருவர் பின்பற்றுவதற்கான உத்தரவாதத்தை எரிட்ரியா கொடுக்க வேண்டும் என்றும், ”மத சுதந்திரத்தைப் பின்பற்றுவதால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிற யெகோவாவின் சாட்சிகள் உட்பட எல்லாரையும் விடுதலை செய்ய வேண்டும்“ என்றும் மே 2019-ல் ஐ.நா. மனித உரிமைக் குழு (CCPR) சொன்னது. அதோடு, ”மனசாட்சியின்படி ராணுவ சேவையை மறுப்பதற்கு சட்டப்படி அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி மறுக்கிறவர்களுக்கு மற்ற பொது சேவைகளைச் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்“ என்றும் இந்தக் குழு எரிட்ரியாவைக் கேட்டுக்கொண்டது.

”தங்களுடைய நம்பிக்கைக்காக அல்லது கொள்கைக்காக விசாரணை செய்யப்படாமலோ குற்றம் சுமத்தப்படாமலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற 20 யெகோவாவின் சாட்சிகளையும் மற்ற எல்லாரையும் உடனடியாகவும் எந்தவித நிபந்தனை இல்லாமலும் [எரிட்ரிய அரசாங்கம்] விடுதலை செய்ய வேண்டும்“ என்று மே 12, 2021-ல் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, ”யெகோவாவின் சாட்சிகளுடைய மத நம்பிக்கையைக் காரணம் காட்டி அவர்களுடைய குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று எரிட்ரியா எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்... யெகோவாவின் சாட்சிகளுக்கு அவர்களுடைய குடியுரிமைகள் திரும்ப கிடைப்பதை உறுதிப்படுத்தும்படி மனித மற்றும் மக்கள் உரிமைகளுக்கான ஆப்பிரிக்கா ஆணையம் கொடுத்த பரிந்துரையை மதிக்க வேண்டும்... காவலில் இருந்தபோது சில யெகோவாவின் சாட்சிகள் இறந்துபோனதைப் பற்றி விசாரிக்க வேண்டும்“ என்றும் அந்த அறிக்கையாளர் கேட்டிருக்கிறார்.

காலவரையற்ற சிறைத்தண்டனைகள்

கைது செய்யப்படும் சாட்சிகளில் (ஆண்கள்) பெரும்பாலானவர்களுக்குக் காலவரையற்ற சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. அதனால், சாகும்வரை அல்லது கிட்டத்தட்ட அந்த நிலைமைக்குப் போகும்வரை சிறையிலேயே காலத்தைத் தள்ளுகிறார்கள். பிரயோஜனமான எந்தவித சட்ட உதவிகளோ தீர்வுகளோ அவர்களுடைய நாட்டில் இல்லாததால், கைது செய்யப்பட்டாலே வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

காலவரிசை

  1. ஜூன் 17, 2024

    மொத்தம் 39 சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள்.

  2. பிப்ரவரி 1, 2021

    மூன்று சாட்சிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

  3. ஜனவரி 29, 2021

    ஒரு சாட்சி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

  4. டிசம்பர் 4, 2020

    28 சாட்சிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

  5. மார்ச் 6, 2018

    மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு 77 வயதான ஹப்டிமைக்கேல் மெக்கோன்னேன் இறந்துவிட்டார்.

  6. ஜனவரி 3, 2018

    மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு, 76 வயதான ஹப்டிமைக்கேல் டெஸ்ஃப்பாமரியம் இறந்துவிட்டார்.

  7. ஜூலை 2017

    மெய்டிர் முகாமில் இருந்த எல்லா சாட்சிகளும் அஸ்மாராவுக்கு வெளியே இருக்கிற மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.

  8. ஜூலை 25, 2014

    ஏப்ரல் 14 அன்று கைதான பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள், ஆனால் ஏப்ரல் 27 அன்று கைதான 20 பேர் விடுதலை செய்யப்படவில்லை.

  9. ஏப்ரல் 27, 2014

    பைபிள் படிப்பதற்காக ஒன்றுகூடி வந்த 31 சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள்.

  10. ஏப்ரல் 14, 2014

    இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு நாளுக்காக ஒன்றுகூடி வந்த 90-க்கும் அதிகமான சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள்.

  11. ஆகஸ்ட் 16, 2012

    68 வயதான யோஹனஸ் ஹய்லி, சிறைச்சாலையிலிருந்த படுமோசமான நிலைமைகளால் இறந்துபோனார்.

  12. ஜூலை 2011

    62 வயதான மிஸ்கினா கெப்ரிடின்சே, சிறைச்சாலையிலிருந்த படுமோசமான நிலைமைகளால் இறந்துபோனார்.

  13. ஜூன் 28, 2009

    வணக்கத்துக்காக சாட்சிகள் ஒன்றுகூடி வந்த ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அங்கிருந்த 23 சாட்சிகளைக் கைது செய்தார்கள். அவர்கள் 2-லிருந்து 80 வயதுக்கு உட்பட்டவர்கள்.

  14. ஏப்ரல் 28, 2009

    காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைத் தவிர மற்ற எல்லாரையும் மெய்டிர் சிறைச்சாலை முகாமுக்கு அதிகாரிகள் மாற்றினார்கள்.

  15. ஜூலை 8, 2008

    24 சாட்சிகளை கைது செய்வதற்காக அதிகாரிகள் அவர்களுடைய வீடுகளையும் அவர்கள் வேலை பார்த்த இடங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தார்கள். பெரும்பாலான அந்தச் சாட்சிகளுடைய சம்பாத்தியத்தை நம்பிதான் அவர்களுடைய குடும்பமே இருந்தது.

  16. மே 2002

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு மதங்களின் கீழ் செயல்படாத அனைத்து மதப் பிரிவுகளையும் அரசாங்கம் தடை செய்தது.

  17. அக்டோபர் 25, 1994

    யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து குடியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளைப் பறிக்க ஆணையிட்டார் ஜனாதிபதி.

  18. செப்டம்பர் 17, 1994

    எந்தவித குற்றப் பதிவோ விசாரணையோ இல்லாமல் பவ்லோஸ் இயாஸு, ஐசக் மொகோஸ் மற்றும் நேகேடி டேக்லிமரியம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

  19. 1950-களில்

    எரிட்ரியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் சில தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்டன.