Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது”

“இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது”

“இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது”

டபிள்யு. கிளென் ஹௌ சொன்னது

கடந்த அறுபது ஆண்டுகளில், கனடாவில் யெகோவாவின் சாட்சிகள் அநேக வழக்குகளில் வாதாடியிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற வெற்றிகள் சட்ட வல்லுநர்களுடைய கவனத்திற்கு வந்திருக்கின்றன. இந்த வழக்குகள் சிலவற்றில் நானும் வாதாடியதால், ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ட்ரையல் லாயர்ஸ்,’ தைரியத்தோடு வழக்காடியதற்கான விருதை எனக்கு சமீபத்தில் வழங்கியது. விருது வழங்கும் விழாவில் இவ்வாறு சொல்லப்பட்டது: “யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அரசாங்கத்தின் அராஜகத்தை தடுக்கும் ஒரு பாதுகாப்பு வேலியாக இருந்தன. . . . . ஏனெனில் அந்த வழக்குகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மறைமுகமான உரிமைகள் மசோதாவை, அதாவது கனடா நாட்டு மக்களின் தனி உரிமையை அங்கீகரிக்கும் அல்லது பாதுகாக்கும் ஒன்றை சுட்டிக்காட்டின.” இந்த நீதிமன்ற வழக்குகளைப் பற்றிய சில குறிப்புகளை நான் இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சட்டத் துறையிலும் யெகோவாவின் சாட்சிகளுடனும் எனக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதையும் கூறுகிறேன்.

ஜா ர்ஜ் ரிக்ஸ் என்ற பைபிள் மாணாக்கர்—யெகோவாவின் சாட்சிகள் முன்பு இப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்—கனடாவில் உள்ள டோரன்டோவில் வசிக்கும் என் பெற்றோரை 1924-ல் சந்தித்தார். என் அம்மாவின் பெயர் பெஸ்ஸி ஹௌ, சற்று குள்ளம், பைபிளைப் பற்றி பேசுவதற்காக அவரை வீட்டிற்கு அழைத்தார்கள். அப்போது எனக்கு ஐந்து வயது, என் தம்பிக்கு மூன்று வயது.

டோரன்டோவில் பைபிள் மாணக்கர்கள் நடத்திய கூட்டங்களில் சீக்கிரத்தில் அம்மாவும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 1929-ல் முழுநேர பயனியரானார்கள். அந்த சேவையை 1969-ல் தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும் வரையிலும் செய்தார்கள். ஊழியத்தில் கொஞ்சம்கூட தளராமல் உறுதியோடு ஈடுபட்டது எங்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்தது. மற்றவர்களும் பைபிள் சத்தியத்தைப் பற்றிய அறிவை அடைய உதவியது.

என்னுடைய அப்பா ஃபிராங்க் ஹௌ ரொம்ப சாது. மத சம்பந்தமான விஷயத்தில் அம்மாவுடைய நடவடிக்கைகளை முதலில் அப்பா எதிர்த்தார். இருந்தாலும், அம்மா ஞானமாக செயல்பட்டார்கள், ஜார்ஜ் யங் போன்ற பிரயாண கண்காணிகளை வீட்டிற்கு அழைத்து அப்பாவிடம் பேச வைப்பார்கள். கொஞ்ச நாளில் அவருடைய மனதும் இளகியது. அப்பா கடைசிவரை யெகோவாவின் சாட்சியாக மாறவில்லை, ஆனால் பைபிள் சத்தியம் குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனித்ததால் அவர் எப்போதும் எங்களுக்கு உதவியாக இருந்தார்.

கடவுளை சேவிப்பதில் தீர்மானம்

1936-ல் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தேன். என்னுடைய பருவ வயதில் ஆவிக்குரிய விஷயங்களில் அதிக அக்கறை காட்டவில்லை. ஐக்கிய மாகாணங்களில் அப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்ததால் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆகவே, டோரன்டோவிலுள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். 1940-ல் சட்டக் கல்லூரியில் சேர தீர்மானித்தேன். என்னுடைய தீர்மானம் அம்மாவுக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் நான் சிறுவனாக இருக்கும்போது அம்மா அடிக்கடி எரிச்சலுடன் இப்படி சொன்னார்கள்: “இந்த குட்டி ராஸ்கல் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பண்ணுகிறான். எதிர்காலத்தில் ஒரு வக்கீலாக போகிறானோ என்னவோ!”

நான் சட்ட கல்லூரியில் சேருவதற்குச் சற்றுமுன்பு, அதாவது ஜூலை 4, 1940-ல் கனடா அரசாங்கம் எந்தவித அறிவிப்புமின்றி யெகோவாவின் சாட்சிகளுக்கு தடைவிதித்தது. இது என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக இருந்தது. குற்றமற்ற, அடக்கமான ஜனங்களான இந்த சிறிய அமைப்பின்மீது அரசாங்கம் தன் முழு அதிகாரத்தையும் காட்டியதால், யெகோவாவின் சாட்சிகளே இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர்கள் என்பதை நான் தெளிவாக புரிந்துகொண்டேன். இயேசு முன்னரே சொன்னபடி, “[தம்முடைய] நாமத்தின் நிமித்தம் [அவர்கள்] சகல ஜனங்களாலும் பகைக்கப்ப[ட்டார்கள்].” (மத்தேயு 24:9) இந்த அமைப்பை ஆதரித்துவரும் சக்தியுள்ள கடவுளை சேவிக்க தீர்மானித்தேன். பிப்ரவரி 10, 1941-ல் நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.

முழுக்காட்டுதல் பெற்றவுடன் அப்படியே பயனியர் சேவையை தொடர விரும்பினேன். என்றாலும், கனடாவில் அப்போது பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தி வந்த ஜாக் நேதன் என்பவர் முதலில் என்னுடைய சட்ட படிப்பை முடிக்கும்படி ஊக்குவித்தார். அதன்படியே மே 1943-ல் பட்டம் பெற்றபின் பயனியர் வேலையை ஆரம்பித்தேன். ஆகஸ்ட் மாதத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் டோரன்டோ கிளை அலுவலகத்தில் சேவிக்கவும் யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படும் வழக்குகள் சம்பந்தமாக உதவவும் என்னை அழைத்தார்கள். அடுத்த மாதமே கனடாவிலுள்ள ஒன்டாரியோவில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு அனுமதி கிடைத்தது.

நற்செய்திக்காக சட்டப்பூர்வமாக வழக்காடுதல்

இரண்டாம் உலக யுத்தம் தீவிரமடைந்த நிலையில் இருந்தது. கனடாவில் சாட்சிகளின் வேலையும் இன்னும் தடைசெய்யப்பட்ட நிலையிலே இருந்தது. யெகோவாவின் சாட்சிகள் என அறிந்தாலே போதும், அவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி சிறையில் போடப்பட்டனர். பிள்ளைகள் ஸ்கூல்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர், சில பிள்ளைகள் காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர். தேசிய வணக்கமுறையின் பாகமான தேசிய கொடிக்கு சல்யூட் அடிப்பது, தேசிய கீதம் பாடுவது போன்றவற்றில் ஈடுபட பிள்ளைகள் மறுத்ததன் காரணமாகவே அவ்வாறு செய்தனர். அரசியல் அமைப்பும் மீட்பும்: யெகோவாவின் சாட்சிகளும் குடியுரிமை போராட்டமும் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் பேராசிரியர் வில்லியம் காப்ளன் இவ்வாறு சொல்லியிருந்தார், “சாட்சிகள் வெளிப்படையாகவே பழித்துப் பேசப்பட்டனர். அரசாங்கமும் குடிமக்களும் அவர்களை இகழ்ந்தனர். யுத்தவெறியிலும் தேசப்பற்றிலும் சிக்கியிருந்த, பொறுக்காத அரசாங்கமும் பகைமை நிறைந்த குடிமக்களும் அவர்களுக்கு பலவித இன்னல்களை அளித்தனர்.”

சாட்சிகள் தங்கள்மீது போடப்பட்ட தடையை நீக்க பிரயாசப்பட்டனர், ஆனால் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. திடீரென அக்டோபர் 14, 1943-ல் அந்த தடை நீக்கப்பட்டது. ஆனால் சாட்சிகள் இன்னும் சிறைச்சாலைகளிலும், தொழிலாளர் முகாம்களிலும் இருந்தனர், அவர்களது பிள்ளைகளும் ஸ்கூலுக்குச் செல்ல முடியாமல் இருந்தனர். டோரன்டோவில் இருந்த உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி மற்றும் இன்டர்நேஷனல் பைபிள் ஸ்டூடன்ஸ் அஸோசியேஷன் என்ற எங்கள் அமைப்பிற்கு எதிரான தடை தொடர்ந்து நீடித்தது.

1943-ம் ஆண்டின் கடைசியில், உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்டாக இருந்த நேதன் நார் என்பவருடனும் சொஸைட்டியின் துணை பிரெஸிடென்டும் சட்ட ஆலோசகருமாகிய ஹேடன் கவிங்டன் என்பவருடனும் கலந்துபேச நான் கனடா கிளை அலுவலக ஊழியரான பெர்ஸி சேப்மேனுடன் நியூ யார்க்குக்குச் சென்றேன். சகோதரர் கவிங்டனுக்கு சட்டத்துறையில் அதிக அனுபவம் உண்டு. ஐக்கிய மாகாணங்களின் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட 45 வழக்குகளில் 36 வழக்குகளில் அவர் வெற்றி பெற்றார்.

கனடாவிலுள்ள சாட்சிகள்மீது போடப்பட்டிருந்த தடை சிறிது சிறிதாக நீங்கியது. 1944-ல் டோரன்டோ கிளை அலுவலகம் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. தடைவிதிக்கப்படுவதற்கு முன்பு அங்கு சேவை செய்தவர்கள் மறுபடியும் அலுவலகத்திற்கு திரும்ப முடிந்தது. 1945-ல் பிள்ளைகளை தங்களுடைய மனசாட்சிக்கு விரோதமான எந்தவித பயிற்சிகளிலும் ஈடுபடும்படி கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதாக ஒன்டாரியோ மாகாண உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஸ்கூல்களிலிருந்து வெளியேற்றிய பிள்ளைகளை மறுபடியுமாக சேர்க்கும்படியும் உத்தரவிட்டது. முடிவாக 1946-ல் கனடா நாட்டு அரசாங்கம் உழைப்பாளிகள் முகாம்களில் இருக்கும் எல்லா சாட்சிகளையும் விடுவித்தது. சகோதரர் கவிங்டனின் அறிவுரையைப் பின்பற்றியதால் நானும் தைரியமாக, மன உறுதியுடன் எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவில் சார்ந்து இப்படிப்பட்ட வழக்குகளை எதிர்த்துப் போராட கற்றுக்கொண்டேன்.

க்யுபெக்கில் போராட்டம்

கனடாவின் பல பகுதிகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு மத சுதந்திரம் கிடைத்தாலும் பிரெஞ்சு கத்தோலிக்க மாகாணமாகிய க்யுபெக்கில் மட்டும் கிடைக்கவில்லை. இந்த மாகாணம் 300 வருடங்களுக்கும் மேலாக ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்கூல்களும், மருத்துவமனைகளும் அநேகமாக எல்லா பொது சேவை அமைப்புகளும் பாதிரிமார்களால் நடத்தப்பட்டது அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. க்யுபெக் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு அருகில் கத்தோலிக்க கார்டினலுக்கு சிம்மாசனம்கூட இருந்தது.

க்யுபெக்கின் பிரதமரும், தலைமை சட்ட வழக்கறிஞருமான மாரிஸ் டூப்லெசி என்பவர் க்யுபெக் சரித்திராசிரியரான ஜெரார்ட் பெல்டேரின் கருத்துபடி ஒரு சர்வாதிகாரி. “அவருடைய இருபது வருட ஆட்சியின்போது பொய்யும் அநீதியும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் கெட்டவர்களின் செல்வாக்கும் அறிவீனமுமே மாகாணத்தில் தலைவிரித்து ஆடின.” ரோமன் கத்தோலிக்க கார்டினல் வில்லனியூவுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்வதன் மூலம் டூப்லெசி தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தினார்.

1940-களின் ஆரம்பத்தில் க்யுபெக்கில் 300 சாட்சிகளே இருந்தனர். என்னுடைய தம்பி ஜோ உட்பட பலர் கனடாவின் மற்ற பகுதிகளிலிருந்து வந்த பயனியர்கள். க்யுபெக்கில் பிரசங்க வேலை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு பல இடைஞ்சல்களும் வந்தன. பாதிரிமாருடைய தூண்டுதலால் உள்ளூர் போலீஸ் அடிக்கடி சாட்சிகளை கைது செய்தும் வியாபார சம்பந்தப்பட்ட துணைவிதிகளை எங்களுடைய மத நடவடிக்கைகளோடு தவறாக சம்பந்தப்படுத்தியும் எங்களை அலைக்கழித்தனர்.

வழக்குகள் சம்பந்தமாக நான் அடிக்கடி டோரன்டோவுக்கும் க்யுபெக்குக்கும் போய் வந்துகொண்டிருந்தேன். பிறகு எங்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சார்பாக வாதாடும் சாட்சிகளல்லாத வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்கு என்னை க்யுபெக்குக்கு அனுப்பினர். ஒவ்வொரு நாளும் முந்தின நாள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதும் உள்ளூர் நீதிமன்றத்திற்கு விரைந்து அவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்வதும்தான் என்னுடைய முதல் வேலை. நல்லவேளையாக ஃபிராங்க் ரோங்ரல்லி என்ற வசதிபடைத்த சாட்சி பல வழக்குகளில் ஜாமீனில் விடுவிப்பதற்கு பணம் கொடுத்து உதவினார்.

1944-லிருந்து 1946-க்குள் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 40-லிருந்து 800-ஆக உயர்ந்தது. சாட்சிகளை தொடர்ந்து கைது செய்து தொல்லை கொடுத்து வந்தவர்கள் பொது அதிகாரிகள் மட்டுமல்லர். மற்ற கலகக் கும்பல்களும்கூட கத்தோலிக்க குருவர்க்கத்தினரின் தூண்டுதலால் சாட்சிகளை துன்புறுத்தினர்.

1946, நவம்பர் 2, 3 தேதிகளில் இந்த நெருக்கடி நிலைமை குறித்துப் பேச மான்ட்ரீலில் ஒரு சிறப்புக் கூட்டம் நடந்தது. சகோதரர் நார் “நாம் என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில் கடைசி பேச்சைக் கொடுத்தார். கூடிவந்தவர்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்க அதிக ஆர்வமாக இருந்தார்கள். கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சுதந்திரத்திற்கும் எதிரான க்யுபெக்கின் கடும் பகை, கனடா மக்களுக்கு தலைகுனிவே (ஆங்கிலம்) என்ற சரித்திரப்பூர்வமான ஆதார ஏட்டை சப்தமாக வாசித்தார். க்யுபெக்கில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக மதகுருக்கள் தூண்டுவித்த கலகங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், அவை நடந்த தேதிகள், இடங்கள், போலீஸாரின் ஈவிரக்கமற்ற செயல்கள், கைது நடவடிக்கை, வன்முறை தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றி அந்த நான்கு பக்க துண்டுப்பிரதி காரசாரமாக புள்ளிவிவரத்துடன் அம்பலப்படுத்தியது. 12 நாட்களுக்குப் பின் உடனடியாக இந்த துண்டுப்பிரதியை கனடா முழுவதும் விநியோகித்தார்கள்.

சில நாட்களுக்குள், டூப்லெசி யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக “கருணையற்ற யுத்தம்” நடத்த வேண்டும் என்பதாக வெளிப்படையாக அறிக்கை செய்தார். ஆனால் கவனக்குறைவால் அவருடைய நடவடிக்கை எங்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது. எப்படி? யாரேனும் க்யுபெக்கின் கடும் பகை என்ற துண்டுப்பிரதியை விநியோகித்தால் அது தேச விரோத குற்றம் என்றார். எனவே இந்த கடுமையான குற்றம் க்யுபெக் நீதிமன்றத்திற்கு அல்ல கனடாவில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கே வழக்கை எடுத்துச் சென்றது. பொங்கி வந்த ஆத்திரத்தால் இப்படியொரு விளைவைப் பற்றி டூப்லெசி சற்றும் யோசிக்கவில்லை. அதன்பின், ஜாமீனில் விடுவதற்கு எங்களுக்கு பேருதவி புரிந்த ஃபிராங் ரோங்ரல்லி என்பவரிடமிருந்த மதுபான லைசன்ஸை ரத்து செய்யும்படி தனிப்பட்ட முறையில் அவராகவே உத்தரவிட்டார். விற்பதற்கு வைன் கிடைக்காததால் மான்ட்ரீலில் இருந்த சகோதரர் ரோங்ரல்லியின் ரெஸ்டாரன்ட் ஒருசில மாதங்களுக்குள் மூடப்பட்டது, வியாபாரத்தில் அவர் நொடித்து போனார்.

கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கானது. 800 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக 1,600 குற்றச்சாட்டுகளை நாங்கள் சமாளிக்க வேண்டியதாயிற்று. யெகோவாவின் சாட்சிகளுடைய வழக்குகளே க்யுபெக் நீதிமன்றங்களில் வந்து குவிகிறது என்பதாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் குறை கூறினர். அதற்கு ஒரே தீர்வு போலீஸார் கிறிஸ்தவர்களுக்கு பதிலாக குற்றவாளிகளை கைது செய்யட்டும், அதுவே பிரச்சினையைத் தீர்க்கும் என்பதாக நாங்கள் கூறுவோம்.

இரண்டு தைரியமுள்ள யூத வழக்கறிஞர்களான மான்ட்ரீலைச் சேர்ந்த ஏ. எல். ஸ்டீன் என்பவரும் க்யுபெக் நகரைச் சேர்ந்த சாம் எஸ். பாட் என்பவரும் எங்களுடைய வழக்குகள் சார்பாக உதவினர். குறிப்பாக, 1949-ல் க்யுபெக் நீதிமன்றத்திற்கு நான் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அவர்கள் பெரிதும் உதவினர். கனடாவின் அடுத்த பிரதம மந்திரியான பையர் எலியட் ட்ரூடியு, க்யுபெக்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள் ஏளனம் செய்யப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், முழு சமுதாயத்தினராலும் பகைக்கப்பட்டார்கள்; ஆனால், சர்ச்சையும், அரசாங்கத்தையும், தேசத்தையும், போலீஸையும், பொது மக்களின் கருத்துக்களையும் அவர்கள் சட்டப்பூர்வ வழக்குகளை வைத்தே முறியடித்திருக்கிறார்கள்.”

க்யுபெக் நீதிபதிகளின் மனநிலை என்னுடைய தம்பி ஜோவை நடத்திய விதத்திலிருந்து தெளிவாக தெரிந்தது. நாட்டின் அமைதியைக் குலைப்பதாக அவன் குற்றஞ்சாட்டப்பட்டான். நகர குற்ற விசாரணை நீதிபதி ஜீன் மெர்சியர், ஜோவுக்கு அதிகபட்ச தண்டனையாக 60 நாள் ஜெயில் தண்டனையை அளித்தார். கடைசியில் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தவராக, ஜோவுக்கு இப்படிப்பட்ட சாதாரண தண்டனை அல்ல, ஆயுள் தண்டனையை தான் வழங்க விரும்புவதாகவே கத்தினார்.

ஒரு செய்தித்தாள் கூறியபடி “எல்லா சாட்சிகளையும், சாட்சிகளாக சந்தேகிக்கப்படுபவர்களையும் கண்ணில் பட்டால் உடனே கைது செய்யுங்கள்” என்று மெர்சியர், க்யுபெக் போலீஸுக்கு உத்தரவிட்டார். க்யுபெக்கின் கடும் பகை என்ற துண்டுப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உண்மையென நிரூபிப்பதற்கு .அப்படிப்பட்ட ஆதாரமே போதுமானது. பின்வரும் தலைப்பு செய்திகள் க்யுபெக் நகரத்திற்கு வெளியே உள்ள கனடா செய்தித்தாள்களிலும் வெளிவந்தன: “க்யுபெக்கிற்கு மறுபடியும் இருண்ட காலம்” (த டோரன்டோ ஸ்டார்) “திரும்பவும் ஒடுக்குமுறை விசாரணை” (த க்ளோப் அண்ட் மெயில், டோரன்டோ), “பாசிஸத்தின் இழிவு” (த கெஸட், க்லேஸ் பே, நோவா ஸ்காடியா).

தேசதுரோக குற்றத்திற்காக வாதாடுதல்

1947-ல் எமே பூஷர்மீது சுமத்தப்பட்ட முதல் தேசதுரோக குற்றம் விசாரிக்கப்படுகையில் நான் ஸ்டீன் என்பவருக்கு உதவினேன். எமே பூஷர் சில துண்டுப்பிரதிகளை தன்னுடைய வீட்டிற்கு அருகே விநியோகித்திருக்கிறார். எமேயுடைய வழக்கு விசாரணையின்போது, க்யுபெக்கின் கடும் பகை என்ற துண்டுப்பிரதியில் எந்தவித பொய்களும் இல்லை, ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக செய்யப்பட்ட அட்டூழியங்களை எதிர்த்து கடுமையாக பேசியது, அவ்வளவுதான் என்பதாக தெளிவுபடுத்தினோம். இப்படிப்பட்ட அட்டூழியங்களை செய்பவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நாங்கள் எடுத்துரைத்தோம். எமே வெறுமனே துண்டுப்பிரதிகளை விநியோகித்ததற்காக குற்றவாளி என தீர்க்கப்பட்டிருக்கிறார். உண்மையைச் சொன்னாலே குற்றமாகிவிட்டது! வழக்கு தொடருபவரின் நிலை இதுதான்.

“தேசதுரோகம்” என்ற குற்றத்திற்கு 350 வருடங்களாகவே இருந்துவந்த தெளிவற்ற விளக்கத்தையே க்யுபெக் நீதிமன்றங்கள் இன்னும் கடைப்பிடித்து வந்தன. அந்த விளக்கத்தின்படி யாரேனும் அரசாங்கத்திற்கு எதிராக குறைகூறினால் அவர் குற்றவாளி என தீர்க்கப்படுவார். டூப்லெசியும், தன்னுடைய ஆட்சியில் குறை கூறுபவர்களை அடக்க இந்த விளக்கத்தையே நம்பி இருந்தார். ஆனால் நவீன மக்களாட்சியில் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையை அல்லது கலகத்தை தூண்டுவதைத்தான் “தேசதுரோக குற்றம்” என்று வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட எங்களது மனுவை 1950-ல் கனடா உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. க்யுபெக்கின் கடும் பகை துண்டுப்பிரதியில் இப்படிப்பட்ட எந்த தூண்டுதல்களும் இல்லை, எனவே அது சட்டப்படி பேச்சு சுதந்திரத்தின் ஓர் அம்சமே. முக்கியமான இந்த ஒரே தீர்மானத்தை வைத்தே 123 தேசதுரோக குற்ற வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன! யெகோவா எவ்வளவு பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார் என்பதை கண்ணாரக் கண்டேன்.

தடைகளுக்கு எதிராக போராடுதல்

க்யுபெக் நகரத்தில் தலைமை போலீஸ் அதிகாரியிடம் அனுமதி பெற்றால் தவிர பிரசுரங்களை விநியோகிக்கக் கூடாது என்ற துணைவிதி இருந்தது. இது ஒரு நேரடி தடுப்புச் சட்டம், எனவே மத சுதந்திரத்தை மீறுவதாக இருந்தது. அப்போது பிரயாண கண்காணியாக சேவித்து வந்த லார்யர் ஸோம்வர் என்பவர் இந்த ஒழுங்கமைப்பு சட்டத்தால் மூன்று மாத ஜெயில் தண்டனையையும் அதோடுகூட மேலும் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்ப்பட்டார்.

க்யுபெக் நகரத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக இந்த ஒழுங்கமைப்புச் சட்டத்தை செயல்படுத்துவதைத் தடுப்பதற்காக 1947-ல் சகோதரர் ஸோம்வரின் பெயரில் உரிமை வழக்கு தொடரப்பட்டது. க்யுபெக் நீதிமன்றங்கள் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்க தவறியபோது நாங்கள் மறுபடியும் கனடா உச்சநீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தோம். அக்டோபர் 1953-ல் ஒன்பது நீதிபதிகளுக்கு முன்பாக ஏழுநாள் விசாரணைக்குப்பின் எங்கள் முறையீடுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பைபிள் சார்ந்த பிரசுரங்களை விநியோகிப்பது யெகோவாவின் சாட்சிகளுடைய வணக்கத்தின் ஒரு முக்கிய பாகம், எனவே தேசத்தின் அரசியல் சட்ட திட்டத்தின்படி அவற்றை தடை செய்ய ஆணையிட முடியாது என்பதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

யெகோவாவின் சாட்சிகள் எதை சொல்கிறார்களோ அது சட்டப்பூர்வமானது என்பதை பூஷரின் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்தது. சொல்வதை எப்படி, எங்கு சொல்லலாம் என்பதை ஸோம்வரின் வழக்கு தீர்மானித்தது. ஸோம்வர் வழக்கின் வெற்றி க்யுபெக்கில் இருந்த 1,100 ஒழுங்கமைப்புச் சட்ட குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்ய உதவியது. மான்ட்ரீலில் தொடுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்குகளும் போதிய ஆதாரம் இன்றி ரத்து செய்யப்பட்டன. சீக்கிரத்திலேயே க்யுபெக் நீதிமன்றங்களில் எல்லா குற்றப்பதிவுகளும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டன!

டூப்லெசியின் கடைசி தாக்குதல்

யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக பயன்படுத்த இனி வேறெந்த சட்டமும் இல்லாததால் சட்டமன்றத்தில் ஜனவரி 1954-ன் ஆரம்பத்தில் மசோதா எண் 38 என்ற புதிய சட்டத்தை டூப்லெசி பிறப்பித்தார். இந்த மசோதாவை செய்தி மூலங்கள் ‘யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான சட்டம்’ என விவரித்தன. அச்சட்டத்தின்படி யாரேனும் “பழித்துக்கூறும் அல்லது இழிவுபடுத்தும்” வார்த்தைகளை அறிவிக்க துணிவதாக சந்தேகப்பட்டால் எந்தவித நிரூபணமும் இன்றி அவர்மீது குற்றம் சாட்டலாம். டூப்லெசி தலைமை வழக்கறிஞராக இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர் பொது அறிக்கை செய்வதை தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற முடியும். ஒரு நபருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதென்றால் அவருடைய சர்ச்சிலுள்ள எவரும் அவருக்குச் சாதகமாக வாய்திறக்க முடியாது. அதுமட்டுமல்ல அந்த சர்ச்சுக்குச் சொந்தமான பைபிள்களும், மற்ற மத புத்தகங்களும் பறிமுதல் செய்து அழிக்கப்படும். அதன் எல்லா வணக்க ஸ்தலங்களும் வழக்கு தீர்க்கப்படும்வரை மூடப்பட்ட நிலையில் இருக்கும். அதற்கு பல வருடங்கள்கூட ஆகலாம்.

இந்த மசோதா எண் 38, 15-ம் நூற்றாண்டில் டொர்குமாடாவின் ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணையின்போது உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு ஒத்திருந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவரும் அவரைச் சார்ந்தவர்களும் தவறு செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இன்றி இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தங்களுடைய எல்லா குடியுரிமையையும் இழக்கும் வாய்ப்பு இருந்தது. மசோதா எண் 38-ன் அடிப்படையில், யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா ராஜ்ய மன்றங்களையும் இழுத்துமூடி அவர்களுடைய பைபிள்களையும் மற்ற பிரசுரங்களையும் கைப்பற்றி அழித்துவிடும்படி மாகாண போலீஸுக்கு கட்டளையிடப்பட்டதாக செய்தித்தாள் அறிவித்தது. இந்த அதிர்ச்சியூட்டும் பயமுறுத்தலை அறிந்த மாத்திரத்தில் யெகோவாவின் சாட்சிகள் மாகாணத்திலிருந்து எல்லா மத புத்தகங்களையும் அப்புறப்படுத்தினர். இருந்தாலும், தங்கள் பைபிள்களை மட்டும் வைத்து வெளிப்படையாக பிரசங்கிப்பதை தொடர்ந்தார்கள்.

இந்த மசோதா ஜனவரி 28, 1954-ல் ஒரு சட்டமாக மாறியது. ஜனவரி 29, காலை 9 மணிக்கு நான் நீதிமன்றத்திற்கு விரைந்தேன். எதற்காக? டூப்லெசி இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்பாக க்யுபெக் மாகாணத்திலுள்ள எல்லா யெகோவாவின் சாட்சிகளின் சார்பாகவும் இந்த சட்டத்தை தடுக்கும் நிலையான ஆணையை அமல்படுத்துவதற்கு மனு கொடுப்பதற்காக. ஆனால் நீதிபதி அதற்கான தற்காலிய ஆணையைக்கூட வழங்கவில்லை, ஏனெனில் மசோதா எண் 38-ஐ அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்தவே இல்லை. ஆனால் அரசாங்கம் அந்த மசோதாவைப் பிரயோகிக்க முற்பட்டால் பாதுகாப்புக்காக மறுபடியும் நான் அவரை அணுகும்படி அவர் சொன்னார். நீதிபதியின் இந்த நடவடிக்கை தற்காலிய ஆணை பெற்றது போன்றே இருந்தது. ஆகவே டூப்லெசி அந்த சட்டத்தை அமல்படுத்த முயற்சித்தால் உடனே அதை தடைசெய்ய முடியும்!

மறு வாரத்தில் போலீஸ் இந்த புதிய சட்டத்தின்படி ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை கவனித்தோம்! ஒன்றும் நடக்கவில்லை! அதைக் கண்டுபிடிப்பதற்காக நான் ஒரு பரிசோதனை நடத்தினேன். விக்டோரியா டகலுக் (பின்னால் ஸ்டீல் என அழைக்கப்பட்டார்), ஹெலன் டகலுக் (பின்னால் சிம்கோக்ஸ் என அழைக்கப்பட்டார்), என்ற இரண்டு பயனியர் சகோதரிகள் டிராய்ஸ்-ரிவிரெஸ் என்ற டூப்லெசியின் சொந்த ஊரில் பிரசுரங்களுடன் வீடுவீடாக பிரசங்கித்தார்கள். இப்போதும் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. இரண்டு சகோதரிகளும் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், மாகாண போலீஸுக்கு ஃபோன் செய்யும்படி நான் லார்யர் ஸோம்வரை அனுப்பினேன். தன்னை அறிமுகப்படுத்தாமலே அவர், யெகோவாவின் சாட்சிகள் வீடுவீடாக பிரசங்கிக்கிறார்கள், டூப்லெசியின் புதிய சட்டத்தை போலீஸ் நடைமுறைப்படுத்தவில்லை என்பதாக புகார் செய்தார்.

பொறுப்பிலிருந்த அதிகாரி தர்மசங்கடத்துடன் இவ்வாறு கூறினார்: “ஆம், அச்சட்டம் அங்கீகாரம் பெறுவதற்கு அனுப்பப்பட்டது எங்களுக்குத் தெரியும்; ஆனால் அடுத்தநாளே யெகோவாவின் சாட்சிகள் எங்களுக்கு எதிரான ஆணையைப் பெற்றார்கள். ஆகவே எங்களால் இனி ஒன்றும் செய்ய முடியாது.” இதைக் கேட்ட மாத்திரத்தில் மாகாணத்திலிருந்து அப்புறப்படுத்தின பிரசுரங்களை திரும்பவுமாக கொண்டுவந்தோம். பத்துவருட காலப்பகுதியில் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது, இதற்கிடையில் எங்களுடைய பிரசங்க வேலையோ வெற்றிகரமாக முன்னேறியது.

இந்த சட்டத்தை தடுக்கும் ஆணையை பெற்றதுமல்லாமல் மசோதா எண் 38 அரசியலமைப்பிற்கு முரணானது என்பதை உறுதிப்படுத்த முயன்றோம். யெகோவாவின் சாட்சிகளை குறிவைத்தே இச்சட்டம் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு நாங்கள் தைரியமாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்தோம். அத்தீர்மானத்தின்படி டூப்லெசி வழக்கு விசாரணையில் கலந்துகொண்டு ஆதாரத்தைத் தரவேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பினோம். நான் இரண்டரை மணிநேரம் அவரை குறுக்கு விசாரணை செய்தேன். அவரிடம் நேருக்குநேராக, “யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கருணையற்ற யுத்தம்” என்று அவர் பொது அறிவிப்பு செய்ததைக் குறித்து விசாரித்தேன்; அதேபோல க்யுபெக்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளை மசோதா எண் 38 முடிவுக்குக் கொண்டுவந்து விடும் என்ற அவருடைய கூற்றையும் நேருக்குநேராக பலமுறை சுட்டிக்காட்டினேன். அதற்கு அவர், “நீ ஒரு அதிகப்பிரசங்கி!” என என்மேல் சீறி விழுந்தார்!

“டூப்லெசி அவர்களே, நாம் இருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை பற்றிப் பேசுவதாக இருந்தால் உங்களைப் பற்றி என்னாலும் பேச முடியும். ஆனால் நாம் ஒரு முக்கிய சமாச்சாரத்தைப் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது; எனவே கடைசி கேள்விக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு கொஞ்சம் விளக்குகிறீர்களா” என்றேன்.

1964-ல் மசோதா எண் 38-ஐக் குறித்த வழக்கை கனடா உச்சநீதிமன்றத்தில் வாதாடினேன். இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படாததால் அரசியலமைப்புமுறைக்கு ஏற்றதா இல்லையா என்று அதிகாரப்பூர்வமாக அவர்கள் குறிப்பிட மறுத்தனர். இருந்தாலும், அந்த சமயத்திற்குள்ளாக டூப்லெசியும் இறந்துவிட்டார். அதற்குப்பின் யாரும் மசோதா எண் 38-ஐப் பொருட்படுத்தவில்லை. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த தொகுதியினருக்கு எதிராகவோ இந்த மசோதாவை அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

1959-ல் டூப்லெசி மரிப்பதற்கு சற்று முன்பாக கனடா உச்சநீதிமன்றம், சகோதரர் ரோங்ரல்லியின் மதுபான லைசன்ஸை சட்டவிரோதமாக ரத்து செய்ததற்காக நஷ்ட ஈடு கொடுக்கும்படி அவருக்கு உத்தரவிட்டது. அச்சமயத்திலிருந்து க்யுபெக்கிலுள்ள மக்களின் மனநிலை மாற ஆரம்பித்தது. 1943-ல் 300 சாட்சிகள் இருந்த இடத்தில் இன்று அந்த எண்ணிக்கை அரசாங்க குடிமதிப்பின்படி 33,000-ஆக உயர்ந்துள்ளது. இந்த மாகாணத்தில் யெகோவாவின் சாட்சிகள் நான்காவது மிகப் பெரிய மதம் என்பதாக இப்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற வெற்றிகளை அல்லது யெகோவாவின் சாட்சிகள் ஊழியத்தில் பெறும் வெற்றிகளை நான் மனித சாதனையாகக் கருதவில்லை. வெற்றி தருபவர் யெகோவாவே. ஆகவே யுத்தம் அவருடையது, நம்முடையது அல்ல.—2 நாளாகமம் 20:15.

சூழ்நிலையில் மாற்றங்கள்

1954-ல் நான் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்கரெட் பீகல் என்ற அழகான பயனியரை திருமணம் செய்தேன்; பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து பயனியர் சேவையைச் செய்ய ஆரம்பித்தோம். நான் கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தேன். அதேபோல ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சில வழக்குகளுக்கு சட்ட ஆலோசகராகவும் சேவை செய்தேன். மார்கரெட் பல வருடங்களாக எனக்கு ஒரு செயலாளராகவும் நல்ல பக்கபலமாகவும் இருந்தாள். 1984-ல் நானும் மார்கரெட்டும் கனடா கிளை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டோம். அந்த அலுவலகத்தில் சட்ட இலாகா மறுபடியுமாக செயல்படுவதற்கு உதவினேன். வருத்தகரமாக, 1987-ல் மார்கரெட் புற்று நோயால் இறந்துவிட்டாள்.

1969-ல் என்னுடைய அம்மா இறந்து விட்டார். ஏற்கெனவே என்னுடைய தம்பி ஜோவும் அவனுடைய மனைவி எல்ஸியும் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பில் மிஷனரிகளாக தேர்ச்சி பெற்றிருந்தனர். அம்மாவுடைய மரணத்திற்குபின், அவர்கள் என்னுடைய அப்பாவை 16 வருடங்களாக அவர் மரிக்கும் வரை கவனித்து வந்தார்கள். அவர்களுடைய சுயதியாக மனப்பான்மையால் நான் முழுநேர சேவையில் நிலைத்திருக்க முடிந்தது. அதற்காக நான் எப்பொழுதும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.

தொடர்ந்து போராட்டங்கள்

தொடர்ந்து வந்த வருடங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய நீதிமன்ற வழக்குகள் மாறின. சொத்துக்களை வாங்குவது, ராஜ்ய மன்றங்களுக்கும் மாநாட்டு மன்றங்களுக்கும் அனுமதி பெறுவது சம்பந்தமாக பல வழக்குகள் இருந்தன. மற்றவை பிள்ளை பராமரிப்பு பிரச்சினை சம்பந்தப்பட்டவை. சாட்சிகளல்லாத பெற்றோர் மத பிரச்சினை என்பதை காரணமாக வைத்து பிள்ளைகளை வளர்க்கும் உரிமை தங்களுக்கே வேண்டும் என்று வழக்கு தொடருகின்றனர்; அல்லது சாட்சியான பெற்றோர் தங்களுடைய மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்வதை தடுக்க வேண்டும் போன்ற விவாதங்கள் இவற்றில் உட்பட்டிருக்கின்றன.

1989-ல் அமெரிக்க வழக்கறிஞர் லிண்டா மானிங் என்ற சகோதரி தற்காலிக சட்டப்பூர்வ உதவி அளிப்பதற்கு கனடா கிளை அலுவலகத்திற்கு வந்தார். அந்த வருடம் நவம்பர் மாதத்தில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அன்றிலிருந்து நாங்கள் இங்கு சந்தோஷமாக சேவை செய்து வருகிறோம்.

1990-களில் கனடா கிளை அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் வழக்கறிஞரான ஜான் பர்ன்ஸும் நானும் ஜப்பானுக்குச் சென்றோம். அங்குள்ள பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக கராத்தே போன்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதாக கட்டாயப்படுத்தினர். ஆகவே மாணவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கிற வழக்கில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவினோம். வயதுவந்த ஒருவருக்கு இரத்தமேற்றுதலை மறுப்பதற்கு உரிமை இருக்கிறது என்ற வழக்கிலும் எங்களுக்கு வெற்றி கிடைத்தது.

1996, 1997 வருடங்களில் நானும் என் மனைவி லிண்டாவும் சிங்கப்பூரில் ஐந்து மாதங்கள் செலவிட்டோம். அங்கு யெகோவாவின் சாட்சிகள் தடைவிதிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்; எனவே அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொண்டதன் காரணமாகவும் பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வைத்திருந்ததன் காரணமாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 64 ஆண்கள், பெண்கள், இளைஞர்களுக்காக நான் வாதாடினேன். இந்த வழக்குகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் உத்தமத்திலும் சந்தோஷத்திலும் நிலைத்திருக்க தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா எவ்வாறு பலப்படுத்தியிருக்கிறார் என்பதை எங்களால் காண முடிந்தது.

வழக்காடுவதற்கு கிடைத்த பாக்கியத்திற்கு நன்றி

என்னுடைய 80-வது வயதிலும்கூட நான் நல்ல ஆரோக்கியத்துடன் யெகோவாவின் ஜனங்களுக்காக நீதிமன்ற வழக்குகளில் தொடர்ந்து போராடுகிறேன். நீதியை நிலைநாட்ட நீதிமன்றத்திற்கு செல்வதற்கு நான் இப்போதும் தயாராக இருக்கிறேன். 1940-ல் கனடாவில் 4,000 சாட்சிகள் இருந்த இடத்தில் தற்சமயம் 1,11,000 இருப்பதைக் காண்பதில் எனக்கு அதிக சந்தோஷம். ஜனங்களும் சூழ்நிலைகளும் மாறலாம். ஆனால் யெகோவா தம்முடைய மக்கள் தொடர்ந்து முன்னேறி ஆவிக்குரிய விதமாக செழிப்படைவதற்கு உதவுகிறார்.

பிரச்சனைகள் இருக்கின்றனவா? இருக்கலாம், அப்படியிருந்தாலும் யெகோவாவுடைய வார்த்தை இவ்விதமாக நமக்கு உறுதியளிக்கிறது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.” (ஏசாயா 54:17) ‘நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டுவதற்காக’ செலவிட்ட 56 வருட முழுநேர சேவையின் அடிப்படையில், ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எந்தளவுக்கு உண்மை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.—பிலிப்பியர் 1:7.

[பக்கம் 19-ன் படம்]

என்னுடைய தம்பி மற்றும் பெற்றோருடன்

[பக்கம் 19-ன் படம்]

வழக்கறிஞர், ஹேடென் கவிங்டன்

[பக்கம் 19-ன் படம்]

நேதன் நாருடன்

[பக்கம் 20-ன் படம்]

கார்டினல் வில்லனியூவுக்கு முன் டூப்லெசி மண்டியிடுகிறார்

[படத்திற்கான நன்றி]

Photo by W. R. Edwards

[பக்கம் 20, 21-ன் படங்கள்]

ஃபிராங்க் ரோங்ரல்லி

[படத்திற்கான நன்றி]

Courtesy Canada Wide

[பக்கம் 21-ன் படங்கள்]

எமே பூஷர்

[பக்கம் 24-ன் படம்]

என் சக வழக்கறிஞர் ஜான் பர்ன்ஸ் மற்றும் என் மனைவி லிண்டாவுடன்