Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடலோடு கலந்திட துடித்த மலை

கடலோடு கலந்திட துடித்த மலை

கடலோடு கலந்திட துடித்த மலை

வெனிசுவேலாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

வெனிசுவேலாவின் தலைநகர் காராகஸிற்கும் கடலுக்கும் இடையில் 2,000 மீட்டர் உயரத்திற்கு எல் அவீலா என்னும் மலை உள்ளது. இதன் வடக்கே, மக்கள் தொகை மிகுந்த, குறுகலான கடற்கரை பகுதி உள்ளது. இங்குதான் வெனிசுவேலாவின் முக்கிய விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகள் காராகஸ் போக இந்த மலையின் குகைப் பாதையில் பயணம் செய்ய வேண்டும்.

கடந்த டிசம்பரில் அடை மழை பெய்து, வெள்ளம் இந்த எல் அவீலா மலையை சுற்றி வளைத்தது. இவ்வாறு ‘தத்தளித்த’ மலையிலிருந்து லட்சக்கணக்கான கன அடி நீர் காட்டருவிகளாய் வந்து விழுந்தன. அதனால் மலையே உடைந்து சிதறிவிடும்போல் இருந்தது. இக்காட்சியைக் கண்ட ஒருவர், கடலோடு கலந்திட மலை துடித்ததைப்போல் இருந்தது என்றார். சேற்றையும், பாறைகளையும், மரங்களையும் அடித்துக்கொண்டு வந்த வெள்ளத்தில் மண் குடிசைகள் முதல் மாடமாளிகைகள் வரை மூழ்கின. மெத்தைகளும், குளிர்ப்பெட்டிகளும், டிவிகளும் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்து செல்லப்பட்டன. கொடிய வெள்ளம் மனித உயிர்களையும் கொண்டு சென்றது. இதையெல்லாம் கண்ட வயதான ஒருவர், உலக அழிவு வந்துவிட்டதாக நினைத்தார்.

மெல்ல மழை நின்றது. வெள்ளம் வற்ற ஆரம்பித்தது. சுமார் 50,000 பேர் இறந்துபோனார்கள். 4,00,000 பேர் வீடுகள் இன்றி தவித்தார்கள். வெனிசுவேலாவின் வரலாற்றிலேயே இது “கொடிய பேரழிவு” என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மயிரிழையில் தப்பித்தல்

டிசம்பர் 15-⁠ல் குவான் கார்லோஸ் லொரன்ஸோ என்பவரும் அவருடைய அப்பாவும் வெள்ளப் பெருக்கெடுத்து வந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் வந்த வண்டியை அப்படியே விட்டுவிட்டு, ஒரு கட்டிடத்திற்குள் புகுந்தார்கள். அங்கே ஏற்கெனவே 35 பேர் மழை வெள்ளத்திற்காக ஒதுங்கியிருந்தார்கள். கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்து, நீர்மட்டம் வேகமாக உயர ஆரம்பித்தது. எல்லாரும் எப்படியோ மொட்டை மாடியை அடைந்தார்கள். அதற்குள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்த பாறைகளும் பெரிய மரத்தண்டுகளும் கட்டிடத்தில் மோது மோதென்று மோதியதால், கொஞ்ச நேரத்திற்குள் கட்டிடத்தின் முதலாம், இரண்டாம் அடுக்குகளின் சுவர்களை தரைமட்டம் ஆயின. இப்போது அந்தக் கட்டிடத்தின் தூண்களும் மொட்டை மாடியும்தான் பாக்கி. அவற்றையும் அவை பதம் பார்க்க ஆரம்பித்தன. அதனால் அக்கட்டிடம் எந்த நேரத்திலும் நொறுங்கி விழுந்திடும் நிலையில் இருந்தது.

ஹெலிகாப்டர் வந்தது. ஆனால் நொறுங்கிடும் நிலையில் இருந்த அந்த மொட்டை மாடியில் அதை இறக்க முடியவில்லை. அது திரும்பி போய்விட்டது. ஆகவே, மரணத்தின் பிடியிலிருந்து இனி தப்ப முடியாது என்று நினைத்த குவான் கார்லோஸ் லொரன்ஸோவும் அவருடைய அப்பாவும் கண்ணீர் மல்க, ‘பிரியாமலே’ பிரியாவிடை சொல்லிக்கொண்டார்கள். பிறகு இரண்டு ஹெலிகாப்டர்கள் வந்தன. பைலட்டுகள் ஹெலிகாப்டர்களை தரை இறக்காமலே, அலேக்காக அந்தரத்தில் மிதக்க செய்து, பத்திரமாக ஒவ்வொருவராக உள்ளே ஏற்றிக்கொண்டார்கள். ஆட்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் பறப்பதற்கும், அந்தக் கட்டிடம் இடிந்து விழுவதற்கும் சரியாக இருந்தது. எல்லாரும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் சிறு விமானங்களிலும், வாகனங்களிலும், இராணுவ படகுகளிலும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். படகுகளிலிருந்த வீசிய கயிறுகளை பிடித்துக்கொண்டு, மக்கள் வரிசையாக​—⁠சிலர் குழந்தைகளை தோள்களில் சுமந்து​—⁠காட்டாறுபோல் பாய்ந்து வந்த வெள்ளத்தை கடந்து, படகுகளில் ஏறிக்கொண்டார்கள். சிலர் கையில் கிடைத்ததை வாரிக்கொண்டு வந்தார்கள். பலர் கட்டிய துணியோடு வந்தார்கள்.

நிவாரணப் பணிகள்

இயற்கை பேரழிவு என்ற வார்த்தை காதில் விழுந்த மாத்திரத்தில், வெனிசுவேலாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் நிவாரணப் பணியை முடுக்கிவிட்டது. ஆனால் வெள்ளத்தால் சரிந்து விழுந்த கட்டிட இடிபாடுகள் ரோடுகளை எல்லாம் அடைத்துவிட்டன. அதோடு பல ரோடுகள் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச் செல்லப்பட்டன. சில நாட்களுக்கு பிறகு, அவசர உபயோகத்திற்காக ஒரு நெடுஞ்சாலை திறந்துவிடப்பட்டது. மருந்து பொருட்களையும், தகுதிப்பெற்ற மருத்துவ பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற யெகோவாவின் சாட்சிகளுடைய வாகனங்களுக்கு அச்சாலையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஓர் அதிகாரி சாட்சிகளைப் பற்றி இவ்வாறு கூறினார்: “மக்களுக்கு ஆபத்து என்றதும் முதலில் ஓடிவந்து உதவியதும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றதும் யெகோவாவின் சாட்சிகளே என்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.”

தேவையில் உள்ளோரை தேடும் பணியை யெகோவாவின் சாட்சிகள் மேற்கொண்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் உடுத்திய உடைகளோடு வெளியேறினார்கள். அவர்களை காராகஸிற்கு அழைத்துப்போக சாட்சிகள் வண்டிகளை ஏற்பாடு செய்தார்கள். உணவையும், உடைகளையும், மருந்துகளையும் சிரமமின்றி மக்கள் பெறுவதற்காக நகரின் பல பகுதிகளில் வினியோக மையங்களை அமைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு உணவும், உடையும் மட்டும் போதவில்லை. உறைவிடம் இன்றி தவித்தார்கள். அவர்களது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் முகம் கோணாமல், அடைக்கலம் தந்து அரவணைத்தார்கள்.

இயற்கையின் கோரதாண்டவம் முடிந்த பிறகும் உறவினர்களையும், நண்பர்களையும் நம் சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் நிறைய நாள் வைத்து பார்த்துக்கொண்டார்கள். ஜோயல், எல்ஸா தம்பதியர் யெகோவாவின் சாட்சிகள் ஆவர். இவர்கள் பெரிட்டோ கெபெல்லோவில் சிறிய அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிறார்கள். புயல் ஓய்ந்து, ஒரு மாதம் ஆன பிறகும், இவர்கள் வீட்டில் 16 பேரை பராமரித்து வந்தார்கள். பலர் வீடுகளை இழந்ததோடு வேலைகளையும் இழந்தார்கள். அவர்கள் வேலைசெய்த இடங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின.

மக்கள் வெள்ளமென அலைமோதிய இடங்களும், துறைமுக நகரங்களும் அடையாளம் தெரியாமல் போயின. சில வண்டிகள் சேற்றுக்கு வெளியே எட்டிப் பார்த்தன. சில வண்டிகள் சுவரோடு சுவராக ஒட்டி, நசுங்கி கிடந்தன. சில வண்டிகள் கம்பங்களில் சுற்றிக்கொண்டு இருந்தன. சில வண்டிகள் கதவுகளிலும் ஜன்னல்களிலும் மாட்டிக்கொண்டிருந்தன. தெருக்களில் பல அடி உயரத்திற்கு​—⁠சில இடங்களில் மூன்று மீட்டர் வரை​—⁠சேறும் சகதியும் படிந்து, காய்ந்துபோயிருந்தன. இத்தகைய தெருக்களில் யாராவது நடந்து சென்றிருந்தால், வீட்டின் முதல் மாடியை அல்லது கூரையை அண்ணாந்து பார்க்காமல் நேராக பார்த்திருக்க முடியும்!

பொன் பொருளையே நம்பி வாழ்க்கை ஓட்டுவது எவ்வளவு வீண் என்ற பொன்னான பாடத்தை அந்த இயற்கை பேரழிவு புகட்டியதாக வெனிசுவேலாவில் சிலர் கூறினார்கள். (லூக்கா 12:29-31) “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்று கூறிய இயேசுவின் அறிவுரையை நிறையப்பேர் போற்றினார்கள்.​—மத்தேயு 6:19-21.

[பக்கம் 16, 17-ன் தேசப்படம்/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

[பக்கம் 17-ன் படங்கள்]

வெனிசுவேலா

காராகஸ்

பாதிக்கப்பட்ட பகுதி

கொலம்பியா

[பக்கம் 17-ன் படம்]

இடிந்துபோன தன் வீட்டிற்கு முன் நிற்கிறார் ரூபன் செரினோ

[பக்கம் 18-ன் படங்கள்]

1. காராகஸில் தன்னார்வ தொண்டர்கள் நிவாரப்பொருட்களை சேகரித்தார்கள்

2, 3. ராஜ்ய மன்றத்தில் ஏழு அடி உயரத்திற்கு கெட்டியாகிப் போன சேற்றை மைகுட்டியா சபையினர் அகற்றினார்கள்

4. வீடுகளை இழந்த இந்த சாட்சிகள் தங்களுக்கு வீடுகளை கட்டிக்கொண்டதோடு மற்றவர்களுக்கும் கட்டிக்கொடுக்க முன்வந்தார்கள்

5. சான் சாபாஸ்டீன் டி லாஸ் ரீயிஸில் கட்டி முடிக்கும் நிலையிலுள்ள வீடுகளில் ஒன்று