Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சோதனைகள் மத்தியிலும் சுடர்விட்ட என் நம்பிக்கை

சோதனைகள் மத்தியிலும் சுடர்விட்ட என் நம்பிக்கை

சோதனைகள் மத்தியிலும் சுடர்விட்ட என் நம்பிக்கை

அன்ட்ரே ஹனாக் கூறியது

அது 1943-⁠ம் வருடம், இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம். நடுநிலை வகித்ததால் ஹங்கேரி, புடாபெஸ்ட்டிலுள்ள சிறைச்சாலையில் இருந்தேன். அங்கு, தாடி வைத்த ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவர், எனக்கு கிடைத்த மூன்று நாள் ரொட்டியை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக தனது பைபிளை என்னிடம் விற்றார். பசியில் நான் செத்துக்கொண்டிருந்த போதிலும் இந்தப் பண்டமாற்றம் பிரயோஜனமானதே என்பது நிச்சயம்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசிகள் எங்கள் நாட்டை கைப்பற்றியதால் கிறிஸ்தவ மனசாட்சியை காத்துக்கொள்வது கடினமாயிருந்தது. பிறகு, 40 வருடங்களுக்கும் மேலான கம்யூனிஸ ஆட்சியின்போதும், பைபிள் நியமங்களை மீறாமல் நம் சிருஷ்டிகரான யெகோவா தேவனை சேவிப்பது பெரும் பாடாக இருந்தது.

அக்காலத்தில் கடவுளுக்கு உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வது எந்தளவு கடினமாயிருந்தது என்பதை விளக்குவதற்கு முன்பு என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். அந்த ஆரம்ப வருடங்களில் யெகோவாவின் சாட்சிகள் எதையெல்லாம் சகித்தனர் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். எங்கள் பகுதியிலிருந்த முக்கிய மதங்களைப் பற்றி ரொம்பவும் சிந்திக்க வைத்த மத சூழலைப் பற்றி முதலில் கூறுகிறேன்.

மதம் பற்றிய புரியாப் புதிர்

ஸ்லோவாக்கிய எல்லைக்கு அருகில் அமைந்திருந்த பாட்சின் என்ற ஹங்கேரிய கிராமத்தில், 1922, டிசம்பர் 3-⁠ம் தேதி பிறந்தேன். ஸ்லோவாக்கியா அப்போது செக்கோஸ்லோவாகியாவின் கிழக்கு பகுதியாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு செக்கோஸ்லோவாகியாவின் பெரும்பகுதி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் உக்ரைனின் எல்லைக்கோடு பாட்சினுக்கு அருகில் வந்துவிட்டது; இப்போது ஏறக்குறைய 30 கிலோமீட்டர் இடைவெளிதான் இருந்தது.

என் பெற்றோர் பக்தியுள்ள ரோமன் கத்தோலிக்கர்; அவர்களுக்கு பிறந்த ஐந்து பிள்ளைகளில் நான் இரண்டாமவன். எனக்கு 13 வயதாக இருக்கையில் நடந்த ஒரு சம்பவம், மதத்தைப் பற்றி ரொம்பவும் சிந்திக்க வைத்தது. நான் அம்மாவோடு சேர்ந்து ஹங்கேரியிலுள்ள மாரியாபோச் என்ற கிராமத்திற்கு 80 கிலோமீட்டர் புனித யாத்திரை சென்றேன். பெரும் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த இடத்திற்கு நடந்தே சென்றோம். அந்தப் புனித யாத்திரையில் ரோமன் கத்தோலிக்கர்களும் கிரேக்க கத்தோலிக்கர்களும் கலந்துகொண்டனர். இந்த இரண்டு சர்ச்சுகளுமே ஓரளவு ஐக்கியப்பட்ட கத்தோலிக்க மதத்தின் பாகமென முன்பு நினைத்திருந்தேன். ஆனால் அது உண்மையல்ல என்பது சீக்கிரத்தில் வெட்டவெளிச்சமானது.

அப்போது கிரேக்க கத்தோலிக்கரின் மாஸ்தான் முதலில் நடந்தது. ஆகவே அதில் கலந்துகொண்டேன். நான் அங்கு சென்றதை அறிந்த அம்மா அதிகம் நிலைகுலைந்து போனார்கள். ஓரளவு குழப்பமடைந்தவனாக, “எந்த மாஸுக்கு போனால் என்ன? நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஒரே சரீரத்தைத்தானே புசிக்கிறோம்?” என்றேன்.

அம்மாவால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால், “அப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாதுப்பா, அது பாவம்” என்று கூறினார்கள். என்றாலும், என் கேள்விகள் தொடர்ந்தன.

கேள்விகளுக்கு பதில்

1939-⁠ல், இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சில கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஸ்ட்ரீடா நட் பாட்ராகாம் என்ற சிறிய நகரத்திற்கு மாறிச் சென்றேன்; இன்று அது கிழக்கு ஸ்லோவாக்கியாவில் உள்ளது. அப்போது எனக்கு 17 வயது. அந்த ஊரிலிருந்த ஒரு கொல்லனிடம் தொழில் பழகுவதற்காக சென்றேன். ஆனால், உருக்கிய உலோகத்திலிருந்து குதிரை லாடங்களையும், மற்ற பொருட்களையும் உருவாக்க கற்றுக்கொள்வதைவிட பெருமதிப்புள்ள ஒன்றை அவருடைய வீட்டில் கற்றுக்கொண்டேன்.

அந்தக் கொல்லனுடைய மனைவியான மாரியா பன்கவிச் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். ஆகவே, பகல் நேரத்தில் கொல்லன் பட்டறையில் அத்தொழிலை அவருடைய கணவரிடமிருந்து கற்றுக்கொண்டேன், இரவு நேரத்தில் பைபிளை படித்து, அங்கிருந்த சாட்சிகளுடன் கூட்டங்களுக்கு சென்றேன். கொல்லன் தொழிலை கற்றுக்கொண்டிருந்ததால், “கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது” என சங்கீதம் 12:6 கூறுவதை இன்னும் அதிகமாக மதித்துணர ஆரம்பித்தேன். யெகோவாவின் வார்த்தைகளை ஆராய்வதிலும் என் பைபிள் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிப்பதிலும் செலவு செய்த அந்த மாலைப்பொழுதுகள் எவ்வளவு ரம்யமாயிருந்தன!

வெகு சீக்கிரத்தில் இரண்டாம் உலக யுத்தம் சூடு பிடிக்கையில் அது எனது புதிய விசுவாசத்திற்கு சோதனைக் கட்டமாய் அமையும் என அப்போது துளியும் நினைக்கவில்லை.

விசுவாசத்திற்காக சிறைவாசம்

கொல்லன் பணியில் பயிற்சி பெற ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே ஹங்கேரியிலுள்ள இளைஞர்கள் அனைவரும் இராணுவ பயிற்சி பெறும்படி அழைக்கப்பட்டார்கள். நானோ ‘இனி யுத்தத்தைக் கற்பதில்லை’ என ஏசாயா 2:4-⁠ல் உள்ள பைபிள் நியமத்தைப் பின்பற்ற தீர்மானித்தேன். இந்தத் தீர்மானத்திற்காக பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். விடுதலை பெற்ற பிறகு பைபிள் படிப்பை தொடர்ந்தேன். பிறகு, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்ததன் அடையாளமாக 1941, ஜூலை 15-⁠ம் தேதி முழுக்காட்டுதல் பெற்றேன்.

நாசி ஜெர்மனி அந்தச் சமயத்திற்குள்ளாக சோவியத் யூனியனைக் கைப்பற்றியிருந்ததால் கிழக்கத்திய ஐரோப்பா யுத்த ஜுரத்தில் மூழ்கியது. யுத்த பிரச்சாரம் வலுத்தது, தேசியவாத உணர்வுகள் காட்டுத்தீ போல் பரவின. ஆனால், பைபிள் அடிப்படையிலான நம்பிக்கைகளினால் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகித்தனர்.

ஆகஸ்ட் 1942-⁠ல் எங்களுக்கு எதிராக படுமோசமான தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்டது. சாட்சிகளாயிருக்கும் அனைத்து பெரியவர்களையும் சிறியவர்களையும் கூட்டிச்சேர்க்க பத்து இடங்களை அதிகாரிகள் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் முழுக்காட்டுதல் பெறாமல் எங்களோடு தொடர்பு வைத்திருந்தோரும் இந்த இடங்களுக்கு இழுத்துவரப்பட்டார்கள். எனது கிராமமான பாட்சினிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஷாரஷ்பாடக்கிலுள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டோரில் நானும் ஒருவன்.

எங்கள் மத்தியிலிருந்த சின்னஞ்சிறு கைதியின் வயது மூன்று மாதங்களே. சாட்சியாயிருந்த அவனுடைய தாயோடு சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டான். அந்தப் பச்சிளங்குழந்தையின் பசிக்காவது சாப்பாடு கொடுக்கும்படி காவலாளியிடம் கேட்டபோது, “நன்றாக அழட்டும். அப்போதுதான் பலமான சாட்சியாக வளருவான்” என்று பதிலளித்தான். அக்குழந்தைக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று ஒருபுறம் வருத்தமாக இருந்தது. ஆனால் மறுபுறம், தேசியவாத பிரச்சாரம் அந்த இளம் காவலாளியை இந்தளவுக்கு கல்நெஞ்சக்காரனாக ஆக்கிவிட்டதே என்பதும் வருத்தம் தந்தது.

என் வழக்கு விசாரிக்கப்பட்டபோது இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டேன். பிறகு புடாபெஸ்டிலுள்ள 85, மார்கிட் கரூட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன். சுமார் நான்குக்கு ஆறு மீட்டர் என்ற அளவுள்ள அந்த அறைகளில் ஏறக்குறைய 50, 60 பேர் அடைக்கப்பட்டனர். குளியலறையோ கழிப்பறையோ இல்லாமல் எட்டு மாதங்கள் அங்கேயே கழித்தோம். ஆகவே, குளிக்கவோ துணி துவைக்கவோ முடியாதிருந்தது. எங்கள் அனைவர் மீதும் பேன்கள் ஊர்ந்தன, இரவு நேரங்களில் அழுக்கேறிய எங்கள் உடல்களில் மூட்டைப் பூச்சிகள் வீறுநடை போட்டன.

விடியற்காலை நான்கு மணிக்கே நாங்கள் எழுந்திருக்க வேண்டும். ஒரு சிறிய கப் காப்பிதான் காலை உணவு. மதிய உணவு என அதேயளவு சூப்பும் கொஞ்சம் கூழோடு ஏறக்குறைய 150 கிராம் ரொட்டியும் கொடுத்தனர். இரவில் பட்டினிதான். அப்போது எனக்கு 20 வயதுதான், திடகாத்திரமாகவும் இருந்தேன்; ஆனால் கடைசியில் நடக்க முடியாத அளவிற்கு இளைத்துப் போனேன். பசியின் கொடுமையாலும் தொற்று நோய்களாலும் கைதிகள் மரிக்க ஆரம்பித்தனர்.

அந்தச் சமயத்தில் எங்கள் அறைக்கு ஒரு புதிய கைதி வந்து சேர்ந்தார். ஆரம்பத்தில் சொன்ன தாடி வைத்த ஆர்த்தடாக்ஸ் பாதிரிதான் அவர். பைபிளை வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. அதை வாசிக்க என் மனம் துடியாய் துடித்தது! அதை வாசிக்க கேட்டபோதோ கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால் பிறகு அவரே என்னிடம் வந்தார். “தம்பி பைபிளை நீயே வைத்துக்கொள். அதை உனக்கு விற்றுவிடுகிறேன்” என்று சொன்னார்.

“விற்கிறீர்களா? எப்படி விற்பீர்கள்? என்னிடம்தான் பணம் இல்லையே?” என்றேன்.

அப்போதுதான் அவர், எனக்கு கிடைத்த மூன்று நாள் ரொட்டியை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக தனது பைபிளை எனக்கு விற்றார். அந்தப் பண்டமாற்று எவ்வளவாய் நன்மையளித்தது! அப்போது பசியில் வாடினேன் என்பது உண்மையே. ஆனாலும், அந்தக் கஷ்ட காலங்களில் ஏற்பட்ட சோதனைகளில் என்னையும் மற்றவர்களையும் ஆதரித்த ஆவிக்குரிய உணவு எனக்கு கிடைத்ததே! அந்தப் பைபிளை இன்றுவரை பத்திரமாக வைத்திருக்கிறேன்.​—மத்தேயு 4:4.

நடுநிலை சோதிக்கப்படுகிறது

ஜூன் 1943-⁠ல் ஹங்கேரி முழுவதிலும் சாட்சிகளாயிருந்த இளம் ஆண்கள், ஏறக்குறைய 160 பேர் புடாபெஸ்டுக்கு அருகிலுள்ள யாஸ்பெரேன் நகருக்கு கூட்டிச் செல்லப்பட்டோம். அங்கே இராணுவ தொப்பிகளையும் கைகளில் மூன்று வர்ண பட்டையையும் அணிய மறுத்தபோது, சரக்கு ரயில் பெட்டிகளில் புடாபெஸ்ட்-கியோபான்யா ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கே ஆஜர் எடுப்பதுபோல் இராணுவ அதிகாரிகள் சரக்கு ரயில் பெட்டிகளிலிருந்து வெளிவரும்படி எங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்தனர். எங்களை இராணுவ வீரர்களைப் போல ரிப்போர்ட் செய்யும்படி கட்டளையிட்டனர்.

“ஹிட்லருக்கு மகிமை” என அர்த்தப்படும் “ஹேல் ஹிட்லர்” என்று கூறும்படி கட்டளையிடப்பட்டோம். நாங்கள் மறுத்தபோது ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்கினார்கள். சித்திரவதை செய்தவர்கள் அடித்து அடித்து அவர்கள் கை ஓய்ந்ததுதான் மிச்சம். ஆகவே, “கடைசியாக ஒருத்தனை அடிப்போம், ஆனால் அதோடு அவன் கதை முடிவது உறுதி” என்று ஒருவன் கூறினான்.

சரக்கு ரயில் பெட்டியிலிருந்த சாட்சிகளின் பட்டியல் ஒன்று, நீண்ட காலம் சாட்சியாயிருந்த வயதான சகோதரர் டீபார் ஹாஃப்னர் வசம் இருந்தது. அவர் என்னிடம், “பிரதர் அடுத்தது நீங்கள்தான். ஆனால் தைரியமாயிருங்கள்! யெகோவாவை நம்புங்கள்” என்று என் காதில் கிசுகிசுத்தார். அப்போது என் பெயர் வாசிக்கப்பட்டது. சரக்கு ரயில் பெட்டியின் வாசலில் வந்து நின்றபோது கீழே இறங்கி வரும்படி சொன்னார்கள். “அவனை அடிப்பதற்கு அவனிடம் என்ன இருக்கிறது, வெறும் எலும்புதான்” என ஒரு காவலன் கூறினான். “சொன்னபடி ரிப்போர்ட் செய்தால் உணவு தயாரிக்க உன்னை சமையலறைக்கு அனுப்புவோம். இல்லையென்றால் நீ சாக வேண்டியதுதான்” என்று என்னிடம் சொன்னான்.

“இராணுவ பணிக்காக நான் ரிப்போர்ட் செய்ய மாட்டேன். என் சகோதரர்கள் இருக்கும் சரக்கு ரயில் பெட்டியிலேயே என்னை விட்டுவிடுங்கள்” என்று பதிலளித்தேன்.

என்மீது இரக்கப்பட்ட இராணுவ வீரன் ஒருவன் என்னை அலக்காக தூக்கி சரக்கு ரயில் பெட்டிக்குள் வீசினான். அது அவனுக்கு கடினமாகவே இல்லை, ஏனெனில் என் எடை 40 கிலோகூட இல்லை. சகோதரர் ஹாஃப்னர் என்னிடம் வந்து, தோளில் கையைப் போட்டு, முகத்தை அன்பாக தடவிக் கொடுத்து, “ஆபத்து நாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக” என சங்கீதம் 20:1 சொல்வதை குறிப்பிட்டார்.

கட்டாய உழைப்பு முகாமில்

அதற்கு பிறகு, ஒரு படகில் டேன்யூப் ஆறு வழியாக யுகோஸ்லாவியாவிற்கு கூட்டிச் செல்லப்பட்டோம். ஜூலை 1943-⁠ல் பார் நகருக்கு அருகிலுள்ள கட்டாய உழைப்பு முகாமிற்கு வந்து சேர்ந்தோம். ஐரோப்பாவின் மிகப் பெரிய செம்பு சுரங்கம் அங்குதான் இருந்தது. காலப்போக்கில், அந்த முகாமில் இருந்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 60,000-ஐ எட்டியது. அங்கிருந்த பல தேசத்தாரில் சுமார் 6,000 யூதர்களும், ஏறக்குறைய 160 யெகோவாவின் சாட்சிகளும் இருந்தனர்.

சாட்சிகள் அனைவரும் ஒரு பெரிய கூடாரத்தில் வைக்கப்பட்டனர். அதன் மத்தியில் மேஜைகளும் பென்சுகளும் கிடந்தன, வாரத்திற்கு இரண்டு முறை அங்கே கூட்டங்களை நடத்தினோம். முகாமிற்குள் கடத்தி வரப்பட்ட காவற்கோபுர பத்திரிகைகளை படித்தோம், ரொட்டிக்கு பண்டமாற்றாக நான் வாங்கிய பைபிளை வாசித்தோம். ஒன்றாக சேர்ந்து பாடல்களை பாடி, ஜெபமும் செய்தோம்.

மற்ற கைதிகளோடு நல்லுறவை காக்க முயன்றோம், இது நன்மை செய்தது. எங்கள் சகோதரர்களில் ஒருவருக்கு வயிற்றில் கடுமையான வலியெடுத்தது, காவலாளிகளோ உதவ மறுத்துவிட்டனர். அவருடைய நிலைமை மோசமானபோது டாக்டராயிருந்த ஒரு யூத கைதி அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டார். அந்த சகோதரருக்கு எளிய மயக்க மருந்தை கொடுத்த பிறகு கரண்டியின் கைப்பிடி முனையை கூராக்கி அறுவை சிகிச்சை செய்தார். அந்தச் சகோதரர் குணமடைந்து, யுத்தத்திற்கு பிறகு ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினார்.

சுரங்க வேலை எங்கள் உயிரைக் குடித்தது, சொற்ப உணவே கிடைத்தது. வேலையின் போது நிகழ்ந்த விபத்திற்கு இரண்டு சகோதரர்கள் பலியானார்கள், இன்னொருவர் வியாதிப்பட்டு இறந்தார். செப்டம்பர் 1944-⁠ல் ரஷ்ய இராணுவம் நெருங்கி வந்ததால் அந்த முகாமை காலி செய்ய திட்டமிட்டனர். அதற்கு பிறகு நடந்ததை கண்ணார கண்டதால்தான் என்னாலேயே நம்ப முடிந்தது, இல்லையென்றால் நம்பியிருக்க மாட்டேன்.

அச்சம் நிறைந்த அணிவகுப்பு

அநேக யூத கைதிகளோடு சேர்ந்து ஒரு வாரம் நடந்தே பெல்கிரேட் வந்து சேர்ந்ததால் சோர்வுற்றோம். அத்தோடு முடியவில்லை, இன்னும் அநேக நாட்கள் நடந்தே சென்று செர்வெங்கா கிராமத்தை அடைந்தோம்.

செர்வெங்காவிற்கு வந்தபோது யெகோவாவின் சாட்சிகள் அனைவரும், வரிசைக்கு ஐந்து பேராக அணிவகுத்து நிற்கும்படி சொல்லப்பட்டோம். பிறகு, ஒரு வரிசைவிட்டு ஒரு வரிசையிலிருந்து ஒரு சாட்சி தெரிவு செய்யப்பட்டார். அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நினைத்து கண்களில் கண்ணீருடன் அவர்களைப் பரிதாபமாக பார்த்தோம். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். என்ன நடந்தது? கல்லறைகளை தோண்ட அவர்களை உபயோகிக்க ஜெர்மானிய வீரர்கள் நினைத்தனர், ஆனால் ஒரு வாரமாக சாப்பிடாததால் வேலை செய்ய முடியாதளவு இளைத்திருக்கின்றனர் என ஹங்கேரிய படைத்தலைவர் ஒருவர் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.

அன்று மாலை, செங்கல்லை உலர்த்தும் ஒரு கட்டடத்தின் பரணுக்கு சாட்சிகள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். “சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். இன்று இரவு படுபயங்கரமாக இருக்கப் போகிறது” என ஜெர்மானிய அதிகாரி ஒருவர் எங்களிடம் கூறினார். பிறகு கதவை பூட்டிவிட்டார். சில நிமிடங்களிலேயே, “சீக்கிரம்! சீக்கிரம்!” என படை வீரர்கள் கூச்சலிடுவதை கேட்டோம். அதைத் தொடர்ந்து இயந்திர துப்பாக்கிகளின் சத்தம் கேட்டது, பின் மயான அமைதி. பின்னர் மறுபடியும், “சீக்கிரம்! சீக்கிரம்!” என்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் துப்பாக்கிகள் முழங்கின.

கூரை இடைவெளியில் என்ன நடக்கிறதென்பதை எங்களால் பார்க்க முடிந்தது. இராணுவ வீரர்கள், பல யூத கைதிகளை கொண்டு வந்து, ஒரு குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து, சுட்டு வீழ்த்தினர். பின்னர் குவிந்து கிடந்த சடலங்கள் மீது கைக்குண்டுகளை வீசினர். விடிவதற்குள் எட்டு யூத கைதிகளை தவிர மற்ற அனைவரையும் கொன்றுவிட்டு ஜெர்மானிய வீரர்கள் ஓடிவிட்டனர். நாங்கள் உள்ளத்திலும் உடலிலும் அப்படியே இடிந்து போயிருந்தோம். இந்தப் படுகொலைக் காட்சியை கண்ணார கண்ட சாட்சிகளுள் யனாஷ் டோரோக்கு, யான் பாலி ஆகியோர் இன்றும் உயிரோடிருக்கின்றனர்.

உயிரோடு காக்கப்பட்டோம்

ஹங்கேரிய வீரர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக வர, மேற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் தொடர்ந்து நடந்தோம். இராணுவ வேலைகளில் பங்குகொள்ளும்படி எங்களிடம் அடிக்கடி கேட்டனர். இருந்தாலும் எங்கள் நடுநிலைமையைக் காத்துக்கொண்டதோடு உயிருடன் தப்பிக்கவும் முடிந்தது.

ஏப்ரல் 1945-⁠ல், ஹங்கேரிய ஆஸ்திரிய எல்லைகளுக்கு அருகிலுள்ள சோம்பாட்ஹே நகரில் ஜெர்மானிய, ரஷ்ய படைகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டோம். விமான தாக்குதல் நடக்கப்போவதாக எச்சரிக்கப்பட்டபோது, எங்கள் காவலராக இருந்த ஹங்கேரிய கேப்டன் இவ்வாறு கேட்டார்: “என் பாதுகாப்புக்காக நானும் உங்களோடு வரலாமா? கடவுள் உங்களோடு இருப்பதை என்னால் காண முடிகிறது.” விமான தாக்குதலுக்கு பிறகு அந்த நகரத்தைவிட்டு சென்றோம். செல்லும் வழியெல்லாம் எங்கு பார்த்தாலும் மனித, மிருக சடலங்கள் மயம்.

யுத்தம் முடியப் போவதை உணர்ந்த அதே கேப்டன் எங்களை ஒன்று திரட்டி, “என்னை மதித்து நடந்ததற்காக ரொம்ப நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் டீயும் சர்க்கரையும் கொடுக்கிறேன். என்னிடம் உள்ளது இதுதான்” என்றார். முடிந்தளவு மனிதாபிமானத்தோடு எங்களை நடத்தியதற்காக நாங்களும் அவருக்கு நன்றி கூறினோம்.

சில நாட்களிலேயே ரஷ்யர்கள் வந்து சேர்ந்தனர், நாங்கள் சிறு சிறு தொகுதிகளாக வீடு திரும்ப ஆரம்பித்தோம். ஆனாலும் எங்கள் துயரங்கள் முடிந்தபாடில்லை. புடாபெஸ்ட் வந்த பிறகு ரஷ்யர்கள் எங்களை சிறைபிடித்தனர். மறுபடியும் இராணுவத்தில், இம்முறை சோவியத் இராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம்.

இதை மேற்பார்வை செய்த மருத்துவர், உயர் பதவியிலிருந்த ஒரு ரஷ்ய அதிகாரி ஆவார். ரூமுக்குள் நுழைந்தபோது எங்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை, ஆனால் அவர் எங்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். பார் நகரில் எங்களோடு கட்டாய உழைப்பு முகாமில் இருந்த டாக்டரே அவர், நாசி படுகொலையை தப்பித்த சில யூதர்களுள் அவரும் ஒருவர். எங்களைப் பார்த்தவுடன் அவர், “இந்த எட்டு பேரையும் விடுவியுங்கள்” என்று காவலாளிகளிடம் கட்டளையிட்டார். அதற்காக நாங்கள் அவருக்கு நன்றி கூறினோம், ஆனால் அதைவிட முக்கியமாக யெகோவாவின் பாதுகாப்பிற்காக அவருக்கு மனதார நன்றி செலுத்தினோம்.

இன்றும் சுடர்விடும் என் நம்பிக்கை

ஒருவழியாக, 1945, ஏப்ரல் 30-⁠ம் தேதி நான் பாட்சினுக்கு வந்து சேர்ந்தேன். கொஞ்ச நாட்களிலேயே, கற்றுவந்த தொழிலை முழுமையாய் முடிப்பதற்காக ஸ்ட்ரீடா நட் பாட்ராகாமிலிருந்த அந்தக் கொல்லனுடைய வீட்டிற்கு சென்றேன். பன்கவிச் தம்பதியினர் எனக்கு அதிகம் கொடுத்திருந்தனர்; வாழ்வதற்கு உதவும் தொழிலை கற்றுக்கொடுத்ததோடு மிக முக்கியமாக என் வாழ்க்கையையே மாற்றிய பைபிள் சத்தியத்தையும் கற்றுக் கொடுத்தனர். இப்போது கூடுதலாக இன்னொன்றையும் எனக்கு கொடுத்தார்கள். 1946, செப்டம்பர் 23-⁠ல், அவர்களின் அழகு மகள் யோலானா என் மனைவியானாள்.

யோலானாவும் நானும் பைபிள் படிப்பு, பிரசங்க வேலை ஆகியவற்றில் மறுபடியும் ஈடுபட தொடங்கினோம். பின்னர், 1948-⁠ல் எங்கள் மகன் ஆன்ட்ரே பிறந்தபோது பெற்றோராகும் பாக்கியத்தையும் பெற்றோம். நாங்கள் அனுபவித்த மத சுதந்திரமோ நீண்ட நாள் நீடிக்கவில்லை. சீக்கிரத்திலேயே கம்யூனிஸ்டுகள் எங்கள் நாட்டை ஆக்கிரமித்ததால் துன்புறுத்துதலின் அடுத்த அலை வீச ஆரம்பித்தது. 1951-⁠ல் மறுபடியும் இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டேன்; இம்முறை அவ்வாறு செய்தது செக்கோஸ்லோவாகிய கம்யூனிஸ்ட் அதிகாரிகள். வழக்கு விசாரணை, தீர்ப்பு, சிறைத் தண்டனை, கட்டாய உழைப்பு, பசிக்கொடுமை என்ற அதே கதை மறுபடியும் தொடர்ந்தது. ஆனால், கடவுளுடைய உதவியோடு மறுபடியும் உயிர்ப்பிழைத்தேன். பொது மன்னிப்பின் விளைவாக 1952-⁠ல் விடுவிக்கப்பட்டேன். பின்னர் ஸ்லோவாக்கியாவில் உள்ள லாட்மாவ்சேயில் வசித்த என் குடும்பத்தோடு சேர்ந்தேன்.

எங்கள் கிறிஸ்தவ ஊழியம் சுமார் 40 வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த போதிலும் பரிசுத்த சேவையை தொடர்ந்து செய்தோம். 1954 முதல் 1988 வரை பயணக் கண்காணியாக சேவிக்கும் சிலாக்கியம் கிடைத்தது. வாரயிறுதி நாட்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளை சந்தித்து, உத்தமத்தில் உறுதியாய் நிலைத்திருக்க சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தினேன். வார நாட்களில் பொருளாதார தேவைகளை சமாளிக்க வேலை செய்துகொண்டு என் குடும்பத்தோடு இருந்தேன். எல்லா சமயத்திலுமே யெகோவாவின் அன்பான வழிநடத்துதலை அனுபவித்தோம். “கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், அவர்கள் கோபம் நம் மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்” என்று கூறிய பைபிள் சங்கீதக்காரனின் வார்த்தைகள் உண்மை என்பதை என் அனுபவத்தில் ருசித்தேன்.​—சங்கீதம் 124:2, 3.

காலப்போக்கில், ஆன்ட்ரே திருமணம் செய்துகொண்ட பிறகு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ கண்காணி ஆவதை யோலானாவும் நானும் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அவன் மனைவி எலிஷ்காவும், ராடிம், டானியல் எனும் அவர்களுடைய இரண்டு மகன்களும் சுறுசுறுப்பான கிறிஸ்தவ ஊழியர்களானார்கள். பிறகு, 1998-⁠ல் என் அருமை யோலானா மரித்தபோது பெரும் இழப்பை எதிர்ப்பட்டேன். நான் இதுவரை எதிர்ப்பட்ட கஷ்டங்களில் சகிப்பதற்கு இதுவே மிகவும் கடினமானதாகும். ஒவ்வொரு நாளும் அவளுடைய இழப்பை உணர்ந்து தவிக்கிறேன், ஆனாலும் உயிர்த்தெழுதல் என்ற அருமையான நம்பிக்கையை எண்ணி ஆறுதலடைகிறேன்.​—யோவான் 5:28, 29.

இப்போது 79 வயதிலும், ஸ்லோவாக்கியாவில் உள்ள ஸ்லோவென்ஸ்கே நாவே மெஸ்டா கிராமத்திலுள்ள சபையில் மூப்பராக சேவிக்கிறேன். பைபிள் அடிப்படையிலான எனது மதிப்புமிக்க நம்பிக்கையை அக்கம்பக்கத்தில் இருப்போருடன் பகிர்ந்துகொள்வதால் இங்கே ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன். கடந்துபோன நாட்களை, அதிலும் யெகோவாவின் சேவையில் செலவிட்ட 60-⁠க்கும் அதிக வருடங்களை நினைத்துப் பார்க்கையில் அவருடைய உதவியோடு எல்லா விதமான தடைகளை தகர்த்தெறியவும் சோதனைகளை சகிக்கவும் முடியும் என்பதில் நிச்சயமாக இருக்கிறேன். “என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்” என சங்கீதம் 86:12-⁠லுள்ள வார்த்தைகளே என் நம்பிக்கையும் விருப்பமும் ஆகும். (g02 4/22)

[பக்கம் 18-ன் படம்]

ரொட்டியைக் கொடுத்துவிட்டு நான் வாங்கிய பைபிள்

[பக்கம் 19-ன் படம்]

சோதனைகளில் என்னை உற்சாகப்படுத்திய டீபார் ஹாஃப்னர்

[பக்கம் 20-ன் படம்]

பார் நகர கட்டாய உழைப்பு முகாமில் சாட்சிகள்

[பக்கம் 20-ன் படம்]

ஜெர்மானிய வீரர்கள் இருக்கையிலேயே பார் நகர கட்டாய உழைப்பு முகாமில் நடந்த ஒரு சாட்சியின் சவ அடக்க ஆராதனை

[பக்கம் 21-ன் படங்கள்]

செப்டம்பர் 1946-⁠ல் யோலானா என் மனைவியானாள்

[பக்கம் 21-ன் படம்]

படுகொலை காட்சியைப் பார்த்த யனாஷ் டோரோக், யான் பாலி (உட்படம்)

[பக்கம் 22-ன் படம்]

என் மகன், மருமகள், பேரன்களுடன்