Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபாசம்—தீங்கற்ற பொழுதுபோக்கா?

ஆபாசம்—தீங்கற்ற பொழுதுபோக்கா?

பைபிளின் கருத்து

ஆபாசம்​—தீங்கற்ற பொழுதுபோக்கா?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூர்வ நகரமாகிய பாம்ப்பியின் சிதிலங்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி அகழ்ந்தெடுக்க ஆரம்பித்தபோது தாங்கள் கண்டெடுத்தவற்றைக் கண்டு திடுக்கிட்டனர். அழகிய சுவரோவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றுக்கு இடையில் காமகளியாட்டத்தை அப்பட்டமாக சித்தரிக்கும் அநேக ஓவியங்களும் சிலைகளும் காணப்பட்டன. வக்கிரமான இந்த உருவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரிகள் அவற்றை இரகசிய அருங்காட்சியகங்களில் வைத்துவிட்டனர். அப்பட்டமான இந்தக் கலைப்பொருட்களை வகைப்படுத்துவதற்கு, ஆபாசம் என்று அர்த்தம் தரும் “போர்னோகிராஃபி” என்று பெயரிட்டனர்; “விபசாரிகளை வர்ணித்தல்” என்று அர்த்தம் தரும் போர்னீ, கிராஃபோஸ் என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளின் அடிப்படையில் இவ்வாறு பெயரிட்டனர். இன்று ஆபாசம் என்பது, “புத்தகங்களில், படங்களில், சிலைகளில், திரைப்படங்களில், இதுபோன்ற இன்னும் பலவற்றில் பாலுணர்வைத் தூண்டிவிடும் நோக்கத்துடன் சித்தரிக்கப்படும் அப்பட்டமான காமச் செயல்” என்று விவரிக்கப்படுகிறது.

இன்று ஆபாசம் எங்கும் பரவியுள்ளது; பெரும்பாலான இன்றைய சமுதாயத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது. ஒரு காலத்தில் மோசமான திரைப்படங்களிலும் சிகப்பு விளக்குப் பகுதிகளிலும் மட்டுமே காணப்பட்டது, இன்றோ அநேக சமுதாயங்களில் மலிந்து காணப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஆபாசத் துறையிலிருந்து ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலாவதாக கணக்கிடப்பட்டுள்ளது!

ஆபாசத்தை ஆதரிப்பவர்கள் சிலர், சலிப்பூட்டும் மண வாழ்க்கைக்கு உயிர்கொடுக்கும் வடிகால் என்று இதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். ஓர் எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்: “கற்பனா சக்தியை இது பெருமளவு தூண்டுகிறது. செக்ஸ் இன்பத்தைப் பெறுவதற்கான தகவல்களை இது அளிக்கிறது.” செக்ஸ் விஷயங்களில் ஒளிவு மறைவின்றி இருக்க இது உந்துவிப்பதாக மற்றவர்கள் கூறுகின்றனர். “ஆபாசம் பெண்களுக்கு நன்மை தருகிறது” என்று சொல்லிக்கொள்கிறார் எழுத்தாளரான வென்டீ மாக்கெல்ராய்.

ஆனால் இவற்றை எல்லாரும் ஆமோதிப்பதில்லை. பலவித தீய பாதிப்புகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆபாசத்தோடு பெரும்பாலும் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆபாசத்திற்கும் கற்பழிப்புக்கும் இடையே சம்பந்தம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்; பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு எதிராக இழைக்கப்படும் இன்னும் பிற வன்முறைமிக்க கொடுமைகளோடு அதற்கு சம்பந்தம் இருப்பதாகவும் கூறுகின்றனர். “ஆபாசத்தை மூர்க்கத்தனமாய் அனுபவிப்பதற்கான வேட்கை” தனக்கிருந்ததாக தொடர் கொலைக்குப் பேர்போன டெட் பண்டீ ஒத்துக்கொள்கிறான். அவன் கூறுவதாவது: “ஒருவரால் இந்த மோசமான நிலைமையை உடனே புரிந்துகொள்ள முடியாது; அதை ஒரு மோசமான பிரச்சினையாக கண்டுணரவும் முடியாது. . . . ஆனால் இந்த ஆர்வம் வன்முறைமிக்க செக்ஸில் . . . ஈடுபட வைக்கிறது. ஆபாசத்தை மூர்க்கத்தனமாய் அனுபவிப்பதற்கான வேட்கை படிப்படியாக வளருகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இது குறுகிய காலத்தில் திடீரென வந்துவிடாது.”

இன்று இது சம்பந்தமான விவாதத்திற்கு முடிவே இல்லாததாலும், ஆபாசத்தை சித்தரிக்கும் பொருட்கள் பரவலாக கிடைப்பதாலும், ‘இந்த விஷயத்தில் பைபிள் ஏதாவது அறிவுரை அளிக்கிறதா?’ என்று நீங்கள் கேட்கலாம்.

பைபிள் பாலுறவைப் பற்றி வெளிப்படையாக பேசுகிறது

பைபிள் செக்ஸ் விஷயங்களை மூடி மறைக்காமல் வெளிப்படையாக தெரிவிக்கிறது. (உபாகமம் 24:5; 1 கொரிந்தியர் 7:3, 4) “இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு. . . . அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக!” என்று அறிவுரை கூறினார் சாலொமோன். (நீதிமொழிகள் 5:18, 19, பொ.மொ.) பாலுறவு பற்றிய தெளிவான அறிவுரையும் புத்திமதியும் அதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன; அதை அனுபவிப்பதோடு சம்பந்தப்பட்ட வரம்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மணம் முடிக்காமல் பாலுறவில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதைப் போன்றே இயல்புக்கு மாறான காம நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.​—லேவியராகமம் 18:22, 23; 1 கொரிந்தியர் 6:9; கலாத்தியர் 5:⁠19.

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்ளேயும்கூட கட்டுப்பாடும் மரியாதையும் எதிர்பார்க்கப்படுகிறது. “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 13:4) இந்த புத்திமதி, ஆபாசத்தின் நோக்கத்திற்கும் அடிப்படை கருத்திற்கும் நேர் முரணாக இருக்கிறது.

ஆபாசம் பாலுறவை கொச்சைப்படுத்துகிறது

செக்ஸ் உறவை, மணம் முடித்த தம்பதியினருக்கு மத்தியிலான அருமையான பரஸ்பர நெருக்கமாக சித்தரிப்பதற்கு பதில், ஆபாசம் செக்ஸை கீழ்த்தரமானதாக ஆக்குகிறது; கொச்சைப்படுத்துகிறது. விளையாட்டான, நெறிகெட்ட செக்ஸ் கிளுகிளுப்பூட்டுவதாகவும் விரும்பத்தக்கதாகவும் சித்தரிக்கப்படுகிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்காமல் சொந்த ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதே முக்கியப்படுத்திக் காட்டப்படுகிறது.

செக்ஸ் இன்பத்தை நுகருவதற்காகவே இவ்வுலகில் பெண்களும் ஆண்களும் பிள்ளைகளும் வாழ்வதாக சித்தரிக்கப்படுகின்றனர். “ஒருவரது அங்க அமைப்பாலும் கற்பனையான எதிர்பார்ப்பாலுமே அழகு அளவிடப்படுகிறது” என்று ஓர் அறிக்கை கூறுகிறது. “ஆண்களை பொறுத்தவரை பெண்கள், எப்பொழுதும் விருப்பத்தோடிருக்கும்/காத்துக்கிடக்கும் அர்த்தமற்ற சாதாரண செக்ஸ் பாவைகளாக சித்தரிக்கப்படுகின்றனர்; பொருள் லாபத்துக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் ஆடைகளைக் களைந்து மேனியைக் காட்டும் பொம்மைகளாகவும் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்; இது, சமத்துவம், கண்ணியம், மனிதாபிமானம் ஆகியவற்றை பெற்றவர்களாக அவர்களை சித்தரிக்க சாத்தியமில்லை” என மற்றொரு அறிக்கை முடிவில் கூறுகிறது.

அதற்கு மாறாக, அன்பு, “பண்பில்லாமல் நடந்துகொள்ளாது, தன்னல ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள நாடாது” என்று எழுதினார் பவுல். (1 கொரிந்தியர் 13:5, NW) ஆண்கள், “தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்” என்றும், அவர்களை செக்ஸ் இன்பம் தரும் போகப் பொருளாக மட்டுமே கருதாமல், ‘அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்ய’ வேண்டும் என்றும் பைபிள் அறிவுறுத்துகிறது. (எபேசியர் 5:28; 1 பேதுரு 3:7) ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், செக்ஸ் உணர்வைத் தூண்டும் பிறரது உருவங்களை எப்பொழுதும் பார்ப்பவர் உண்மையில் பண்பாக நடந்துகொள்கிறாரா? அவர் உண்மையில் மதிப்பு மரியாதை காட்டுகிறாரா? அன்புக்குப் பதிலாக சுயநல ஆசையையே ஆபாசம் ஒருவரில் வளர்க்கிறது.

ஆபாசம் சம்பந்தமாக மற்றொரு அம்சத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். முறையற்ற எந்தவொரு தூண்டுதலையும் போலவே, முதலில் ஒருவரின் ஆர்வத்தைக் கிளறும் விஷயங்கள் பிறகு உப்புச்சப்பில்லாமல் போய்விடுகின்றன. ஓர் எழுத்தாளர் சொல்கிறார், “காலப்போக்கில், [ஆபாசத்தை நாடுபவர்கள்] இன்னும் அப்பட்டமான, இன்னும் நெறிகெட்ட விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். . . . தங்கள் துணைகளை இயல்புக்கு மாறான மட்டரகமான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட அதிகமாக தூண்டுவார்கள், . . . , உண்மையான பாசத்தை காட்டும் தங்கள் [சுய] திறமையையும் தொலைத்துவிடுவார்கள்.” அது தீங்கற்ற பொழுதுபோக்காக தோன்றுகிறதா? ஆனால் ஆபாசத்தை தவிர்ப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

பைபிளும் காமமும்

செக்ஸ் பற்றிய கனவுலகில் மிதப்பதில் எவ்வித தீங்கோ ஆபத்தோ இல்லை என்பதாக இன்று அநேகர் நினைக்கலாம்; ஆனால் பைபிள் அதை மறுக்கிறது. நம் மனதை எப்படிப்பட்ட விஷயங்களால் நிரப்புகிறோம் என்பதற்கும் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதற்கும் இடையே நெருங்கிய சம்பந்தமிருப்பதை அது தெளிவாக விளக்குகிறது. “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்” என கிறிஸ்தவ சீஷன் யாக்கோபு சுட்டிக்காட்டுகிறார். (யாக்கோபு 1:14, 15) “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்று இயேசு கூறினார்.​—மத்தேயு 5:⁠28.

யாக்கோபும் இயேசுவும் சுட்டிக்காட்டியபடி, மனிதர் ஆசைகளின் தூண்டுதலுக்கேற்ப செயல்படுகிறார்கள். அந்த ஆசைகளை மேன்மேலும் வளர்க்கையில், அவை இறுதியில் பயங்கர வெறியாக மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட வெறிக்குக் கடிவாளம் போடுவது கடினம்; எனவே காலப்போக்கில் அந்த வெறி ஒருவரை செயல்பட வைத்துவிடுகிறது. இவ்வாறு, நம் மனதை எதனால் நிரப்புகிறோம் என்பது, காலப்போக்கில் எவ்வாறு செயல்படுவோம் என்பதை பெரிதும் பாதிக்கிறது.

செக்ஸ் கனவுலக மயக்கம் கடவுள் வணக்கத்துடன் நேருக்கு நேர் குறுக்கிடலாம். அதனால்தான் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை [“பேராசை,” NW] ஆகிய இவைகளை . . . உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”​—கொலோசெயர் 3:⁠5.

இச்சந்தர்ப்பத்தில் பவுல், செக்ஸ் மோகத்தை பேராசையுடன் இணைத்துப் பேசுகிறார்; அது ஒருவர் தன்னிடமில்லாத பொருள்மீது வைக்கும் மிதமிஞ்சிய ஆசையாகும். a பேராசை என்பது ஒருவித விக்கிரகாராதனை ஆகும். ஏன்? ஏனெனில் பேராசைமிக்கவர் தான் ஆசைப்பட்ட அந்தப் பொருளை, கடவுள் உட்பட மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறார். ஆபாசமானது, இல்லாத ஏதோ ஒன்றின்மீது மோகத்தை தூண்டுகிறது. “வேறொருவரின் செக்ஸ் வாழ்க்கையை நீங்கள் விரும்புகிறீர்கள். . . . உங்கள் மனதில், உங்களிடம் இல்லாததன் மீதுள்ள காமப் பசியைத் தவிர வேறெதுவும் இல்லை. . . . நாம் மோகிப்பதையே வணங்குகிறோம்” என்கிறார் ஒரு மத எழுத்தாளர்.

ஆபாசம் சீரழிக்கிறது?

“கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, . . . அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்” என பைபிள் அறிவுரை கூறுகிறது. (பிலிப்பியர் 4:8) தன் கண்களாலும் மனதாலும் ஆபாசத்தைப் பருகும் ஒரு நபர் பவுலின் இந்தப் புத்திமதியை நிராகரிக்கிறார். ஆபாசம் ஒழுக்கங்கெட்டது; ஏனெனில் மிக அந்தரங்கமான செயல்களை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது. அது வெறுக்கத்தக்கது; ஏனெனில் மக்களை கீழ்த்தரமாக்கி அவர்களின் மனிதத்தன்மையையே கெடுக்கிறது. அது அன்பற்றது; ஏனெனில் கனிவுக்கோ கரிசனைக்கோ இடமளிப்பதில்லை. அது தன்னல மோகத்தை மட்டுமே முன்னேற்றுவிக்கிறது.

தீங்கு விளைவிக்கும் வகையில் ஒழுக்கங்கெட்ட, கீழ்த்தரமான செயல்களை சித்தரிப்பதன் மூலம், ‘தீமையை வெறுப்பதற்கு’ ஒரு கிறிஸ்தவன் எடுக்கும் முயற்சிகளை ஆபாசம் பலவீனப்படுத்துகிறது, அல்லது குலைத்துவிடுகிறது. (ஆமோஸ் 5:15) பாவச் செயலை ஊக்குவிக்கிறது; மேலும், எபேசிய கிறிஸ்தவர்களுக்கு பின்வருமாறு பவுல் அறிவுறுத்தியதற்கு நேர் முரணாக இருக்கிறது: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் [“பேராசையும்,” NW] ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், . . . பரியாசமும் [“அசிங்கமான கேலிப்பேச்சும்,” NW] தகாதவைகள்.”​—எபேசியர் 5:3, 4.

ஆபாசத்தில் தீங்கற்ற அம்சம் எதுவுமே இல்லை. அது ஆட்களை சுரண்டுகிறது, சீரழிக்கிறது. அது உறவுகளை சின்னாபின்னமாக்கி விடலாம்; கண்ணியமான பாலியல் உறவை கொச்சைப்படுத்தி, அப்பட்டமான செக்ஸ் காட்சிகளைப் பார்த்து ரசிக்க தூண்டுகிறது. அப்படிப்பட்ட நபரின் மனதையும் ஆன்மீகத்தையும் நஞ்சாக்கிவிடுகிறது. இது சுயநலமான, பேராசைமிக்க மனோபாவங்களை வளர்க்குகிறது; தங்கள் காமப் பசியை தீர்க்க வந்தவர்களாகவே மற்றவர்களைப் பார்க்க ஜனங்களுக்கு கற்பிக்கிறது. நல்ல காரியங்களைச் செய்து, சுத்தமான மனசாட்சியோடு இருக்க ஒருவர் எடுக்கும் முயற்சிகளை அது அடியோடு அரித்துவிடுகிறது. எல்லாவற்றையும்விட, கடவுளுடன் ஒருவருக்குள்ள நல்லுறவில் விரிசலை ஏற்படுத்துகிறது, அல்லது அந்த உறவையே சிதைத்துவிடுகிறது. (எபேசியர் 4:17-19) உண்மையில், ஆபாசம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய கொள்ளை நோயாகும்.​—நீதிமொழிகள் 4:14, 15. (g02 7/8)

[அடிக்குறிப்பு]

a இயல்பான பாலுறவு நாட்டத்தைப் பற்றி​ஒருவருடைய மணத்துணையுடன் இயல்பாக உடலுறவு கொள்வதற்கான ஆசையைப் பற்றி பவுல் இங்கு சொல்லவில்லை.

[பக்கம் 20-ன் படம்]

ஆபாசம் எதிர்பாலாரைப் பற்றிய கண்ணோட்டத்தை கொச்சைப்படுத்துகிறது