Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிகவும் கவரத்தக்க நபராக இருக்க நான் என்ன செய்யலாம்?

மிகவும் கவரத்தக்க நபராக இருக்க நான் என்ன செய்யலாம்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

மிகவும் கவரத்தக்க நபராக இருக்க நான் என்ன செய்யலாம்?

“பெண்களோடு பேசுறதுன்னாலே எனக்கு ரொம்ப கஷ்டமா, ரொம்ப டென்ஷனா இருந்தது. ஏன்னா, அவங்க மனசுல என்ன இருக்குது, அவங்க என்ன நினைக்கிறாங்க, என்ன கண்ணோட்டத்துல பார்க்குறாங்க என்றெல்லாம் எனக்கு தெரியல.”​டைலர்.

பையன்களிடம் பெண்களுக்குப் பிடித்த குணங்கள் என்ன? “தன்னம்பிக்கை” என சொல்கிறார் எமிலி என்ற இளம் பெண். பையன்கள் ஜோவியலாக இருக்க வேண்டியதுதான் மிக முக்கியம் என ராபன் என்ற மற்றொரு இளம் பெண் கூறுகிறாள். சரி, பெண்களிடம் பையன்களுக்குப் பிடித்த குணங்கள் என்ன? அழகே அவர்களது முதல் எதிர்பார்ப்பு என ஓர் ஆய்வு காட்டியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஒரேவிதமான அக்கறைகளும் அபிப்பிராயங்களும் பெற்றிருக்க வேண்டுமென்ற விருப்பம் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

இளைஞருக்கென வெளியிடப்படும் பத்திரிகைகளில், பையன்கள்/பெண்கள் நட்புறவுகளைப் பற்றிய கட்டுரைகளையும் ஆய்வுகளையும் சகஜமாக பார்க்கலாம். இளைஞர்கள் அநேகர் எதிர்பாலார் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அதிகமாக யோசிப்பது​—அல்லது ஒருவேளை கவலையும் படுவது​—தெளிவாக தெரிகிறது. நீங்களும்கூட சில சமயங்களில் அவ்வாறு கவலைப்படலாம். அதற்காக, விரைவில் நீங்கள் மணம் முடிக்கத் தயாராக இருக்கிறீர்கள் என அர்த்தமில்லை. யாருமே கவர்ச்சியற்றவராகவோ விரும்பத்தகாதவராகவோ இருக்க ஆசைப்படுவதில்லை என்பதே உண்மை! டைலர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “டீனேஜ் பருவத்துல எல்லாரையும் கவர விரும்புறீங்க. உங்க வயசு பாய்ஸ், கர்ல்ஸ் எல்லாருக்கும் பிடித்த மாதிரி நடந்துக்க விரும்புறீங்க.” ஒருநாள் உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைய வேண்டும் எனவும் நீங்கள் ஆசைப்படலாம். அந்த சமயம் வரும்போது, அந்த நபரை கவர விரும்புவீர்கள் என்பது இயல்பு.

இருந்தாலும், ஒரு கிறிஸ்தவ இளைஞராக எதிர்பாலாரிடம் பழகும் விஷயத்தில் உங்களுக்கு அதிக அனுபவம் இல்லாதிருக்கலாம். அதோடு, உங்கள் வயதைச் சேர்ந்தவர்களைப் போலவே நீங்களும் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்க தூண்டப்படலாம். ஏராளமான சூப்பர் மாடல்களையும் கட்டுக்கோப்பான உடல்வாகுடைய நடிகர்களையும் டிவியிலும் பத்திரிகைகளிலும் பார்க்கையில் நீங்கள் தன்னம்பிக்கை இழந்து லாயக்கற்றவர்களாயும் உணருவது சகஜம்தான். அப்படியானால் எதிர்பாலாருக்கும் மற்றவர்களுக்கும் முன் இனியவர்களாக​—நண்பர்களாயும் பயனுள்ளவர்களாயும்—​இருக்க என்ன தேவைப்படுகிறது?

சர்வலட்சணத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்

பொழுதுபோக்கு துறையின் செல்வாக்கினால் இளைஞர் பலர் “சாப்பாட்டை குறைப்பதிலும் பளு தூக்குவதிலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதிலும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகிறார்கள்; தங்கள் உருவத்தையும் உடல் வாகையும் மாற்றுவதற்கே இப்படியெல்லாம் படாதபாடு படுகிறார்கள்” என கூறுகிறார் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் வில்லியம் எஸ். பாலக். சர்வலட்சணத்தையும் பெறுவதற்கு கொலைப்பட்டினி கிடப்பது போன்ற ஆபத்தான காரியங்களில்கூட சிலர் இறங்கிவிடுகிறார்கள். ஆனாலும், சமூக பிரச்சினைகளின் ஆய்வு மையம் ஒன்று இவ்வாறு கூறுகிறது: “இன்றைய மீடியாக்களில் மாடல்களாக வருவோரின் அழகை 5 சதவீதத்திற்கும் குறைவான பெண்களால் மட்டுமே எட்ட முடிகிறது; அதுவும் அவர்களுடைய எடையையும் உருவத்தையும் பொறுத்ததில் மட்டுமே. அந்த மாடலுடைய அதே உடலமைப்பையும் முகத்தையும் பெற வேண்டுமானால், சுமார் ஒரு சதவீத வாய்ப்பே உள்ளது.”

ஆகவே ரோமர் 12:2-⁠ல் பைபிள் தரும் ஆலோசனை நடைமுறையானது: “உங்களைச் சுற்றியுள்ள உலகம் அதன் வார்ப்புக்குள் உங்களைத் திணிக்க அனுமதியாதீர்கள்.” (ஃபிலிப்ஸ்) என்றாலும், உங்களுடைய தோற்றத்தை பொருட்படுத்தவே வேண்டாம் என இது அர்த்தப்படுத்துவதில்லை. மிதமான உடற்பயிற்சி செய்து, சமச்சீர் உணவை உட்கொண்டு உங்கள் உடலை பராமரிப்பது நியாயமானதே. (ரோமர் 12:1; 1 தீமோத்தேயு 4:8) போதுமான ஓய்வும் தூக்கமும்கூட உள்ளத்திற்கும் உடலுக்கும் பொலிவூட்டும். அதே சமயத்தில் உங்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதற்கு கவனம் செலுத்துங்கள். பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞன் இவ்வாறு குறிப்பிடுகிறான்: “பார்ப்பதற்கு ரொம்ப அழகான ஒரு பெண் இருக்கிறாள், ஆனால் அவள் பக்கத்தில் போனாலே நாற்றம் அடிக்கும். இதனாலேயே எல்லாரும் அவளை கண்டால் ஒதுங்கி விடுகிறார்கள்.” ஆகவே, தவறாமல் குளியுங்கள். சுத்தமான கைகள், தலை முடி, நகங்கள் உங்கள் தோற்றத்திற்கு அழகு சேர்க்கலாம்.

ஆடை அணிகலனுக்கு அளவுக்கதிக முக்கியத்துவம் கொடுப்பதை பைபிள் ஊக்குவிக்காத போதிலும், “நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும்” என அது கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறது. (1 தீமோத்தேயு 2:9, பொ.மொ.) அரைகுறையான அல்லது அடக்கமற்ற உடைகளை அல்ல, ஆனால் உங்கள் தோற்றத்திற்கு அழகு சேர்க்கிற ஆடைகளை அணியுங்கள். a தோற்றத்திற்கு தகுந்த கவனம் செலுத்துவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம். பால் என்ற இளைஞன் இவ்வாறு சொல்கிறான்: “நீங்கள் சூப்பர் அழகியாகவோ/அழகனாகவோ இல்லாதிருக்கலாம்; ஆனால் உங்களுக்கு இருக்கிற அழகையே நீங்கள் மேம்படுத்தலாம்.”

உள்ளத்திலுள்ள பண்புகள்

இனிய முகமும் உடல்வாகும் மற்றவர்களின் கவனத்தை சுண்டியிழுக்கின்றன என்றாலும் நாட்கள் கடந்தோடுகையில் “அழகு ஒரு நீர்க்குமிழியே.” (நீதிமொழிகள் 31:30, பையிங்டன்) சிறந்த தோற்றம் நிலையற்றது, அது நிச்சயமாகவே உள்ளத்திலுள்ள இனிய பண்புகளுக்கு ஈடாகாது. (நீதிமொழிகள் 11:22) “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்பதையும் நினைவில் வையுங்கள். (1 சாமுவேல் 16:7) ஆகவே, கொடியிடைக்கோ திரண்ட உடற்கட்டுக்கோ முழுக்க முழுக்க கவனம் செலுத்துவதற்கு பதிலாக ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தால்’ உங்களை அலங்கரிக்க முயலுங்கள். (1 பேதுரு 3:3, 4: எபேசியர் 4:24) இன்றைய உலகில் இளைஞர் பலரும் மெச்சத்தக்க குணங்களுக்கு, அதுவும் ஆன்மீக குணங்களுக்கு துளியும் கவனம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான். b ஆனால் தெய்வீக நெறிமுறைகளை பின்பற்றுகிறவர்களோ அவற்றை போற்றுகிறார்கள், கவர்ச்சியானதாகவும் காண்கிறார்கள்!

அப்படியானால், ஆன்மீக சிந்தையுடைய கிறிஸ்தவ ஆண்களையும் பெண்களையும் கவருவதற்கு நீங்களும் ஆன்மீக சிந்தையுடையவர்களாய் இருப்பதே சிறந்த வழி. ஜெபிப்பது, பைபிளை தனிப்பட்ட விதமாக படிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவது ஆகியவற்றின் வாயிலாக ஆன்மீகத்தை அபிவிருத்தி செய்யுங்கள். (சங்கீதம் 1:1-3) இருந்தாலும், இன்னும் பல பயனுள்ள திறமைகளையும் குணங்களையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். இந்த குணங்களை வளர்ப்பதற்காக நீங்கள் டேட்டிங் போக வேண்டுமென்றோ ரொமான்டிக்காக இருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை. மாறாக, அன்றாடம் மற்றவர்களுடன் பழகுகையில் அவற்றை நீங்கள் வெளிக்காட்டலாம்.

உதாரணமாக, எதிர்பாலார் முன்னிலையில் பேச முடியாமல் தவிக்கிறீர்களா, கூச்சப்படுகிறீர்களா? பால் என்ற இளைஞன் இவ்வாறு ஒத்துக்கொள்கிறான்: “சில சமயங்கள்ல நான் கூச்சப்படறேன்; ஏன்னா அவங்க எல்லாரும் பொண்ணுங்க. பையங்கள பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிற அளவுக்கு அவங்களப் பற்றி எனக்கு தெரியாது. அவங்க முன்னால அவமானப்பட நான் விரும்பல.” மற்றவர்கள் சங்கோஜப்படும் நிலைக்கு ஆளாகாதவாறு தன்னம்பிக்கையையும் நிதானத்தையும் நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரும் பலதரப்பினரின் கூட்டுறவை பிரயோஜனப்படுத்திக் கொள்வதாகும். கூட்டங்களுக்குச் செல்கையில் பிறரிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்; உங்கள் வயதிலுள்ள எதிர்பாலாரிடம் மட்டுமல்ல, சிறுபிள்ளைகள், பெரியவர்கள், முதியவர்கள் என எல்லாரிடமும் அக்கறை காட்டுங்கள். (பிலிப்பியர் 2:4) அப்படி பலதரப்பினரிடம் நன்கு பழக கற்றுக்கொள்வது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும்.

ஆனாலும் கவனமாய் இருங்கள். ‘உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூர’ வேண்டும் என்று இயேசு சொன்னது உண்மைதான். (மத்தேயு 19:19) உங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மற்றவர்களுக்கு முன்பு ஏடாகூடமாக நடந்துகொண்டு தர்மசங்கடப்படும் அவசியம் வராது. c ஆனாலும், தன்மதிப்பு ஓரளவுக்கு இருப்பது அவசியமாக இருந்தாலும், மிதமிஞ்சி போய்விடாதீர்கள். “உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது: உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது [என்பதே]” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.​—உரோமையர் [ரோமர்] 12:3, பொது மொழிபெயர்ப்பு.

உங்களுடைய நடத்தையையும் பிறருடன் பழகும் திறமையையும் நேர்மையாக ஆராயுங்கள். “எங்க ஸ்கூல்ல ஒரு பையன் இருக்கான், அவனை நிறைய பொண்ணுங்களுக்கு பிடிச்சிருந்தது. அவனோட பழகிய பிறகோ அவங்களுக்கு அவனை சுத்தமா பிடிக்கல. ஏன்னா அவனுக்கு கனிவாயும் நடக்கத் தெரியல, சாதுரியமாயும் நடக்கத் தெரியல” என்கிறாள் பிரிட்டனைச் சேர்ந்த லிடியா. தயவாயும் சாதுரியமாயும் பேசி, பிறரிடத்தில் கரிசனை காட்டுகிறவர் ஜனங்களை கவருகிறார். (எபேசியர் 4:29, 32; 5:3, 4) “இனிமையான நடத்தை முறைகள் பாஸ்போர்ட் போன்றது; அது சுதந்திரம் அளிக்கிறது, பலரிடம் பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறது” என குறிப்பிடுகிறார் டாக்டர் டி. பெரி ப்ரேசல்டன். நடத்தை முறைகள் “பிறருடைய அங்கீகாரத்தைப் பெற மிகவும் முக்கியம்.”

பழக்கவழக்கங்களும் நன்னடத்தை முறைகளும் உலகம் முழுவதிலும் மாறுபடுகின்றன. ஆகவே, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க விரும்பலாம். உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு ஆண் கதவைத் திறந்துவிடுவது உங்கள் நாட்டு பழக்கமா? அப்படியானால் இந்தப் பண்பை வளர்க்க கற்றுக்கொள்வது, கண்ணியமான நாகரிகமான நபராக உங்களுடைய மதிப்பைக் கூட்டும்.

முடிவாக, சமநிலையான நகைச்சுவை உணர்வுடன் நடந்துகொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். “நகைக்க ஒரு காலமுண்டு” என பைபிள் கூறுகிறது; நகைச்சுவை உணர்வுடைய ஒருவர் பிறரை எளிதில் நண்பராக்கிக் கொள்கிறார்.​—பிரசங்கி 3:1, 4.

நட்பு vs சரசம்

எதிர்பாலாரை கவருவதற்கான வழி சரசமாடுவதே என “வெற்றிகரமான டேட்டிங்குக்கு வழிகாட்டி” என்ற பத்திரிகை ஆலோசனை அளித்தது. புன்னகைக்கவும் கண்ணால் பேசவும் ஆசை வார்த்தைகளால் பேச ஆரம்பிக்கவும் பழகுமாறு அதில் வாசகர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த ஆலோசனை எதிர்பாலாரை ‘எல்லாக் கற்புடனும்’ பாவிக்கும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்ன ஆலோசனைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.​—1 தீமோத்தேயு 5:2.

சரசமாடுவது, சுயமதிப்பை வளர்த் தாலும் அது போலியானது, நேர்மையற்றது. சுவாரஸ்யமான உரையாடலுக்கு சரசமாடவோ நாணிக்கோணுவது போல நடிக்கவோ வேண்டியதில்லை. எதிர்பாலாரின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்வதற்கு தர்மசங்கடமான அல்லது பொருத்தமற்ற கேள்விகளையும் கேட்க வேண்டியதில்லை. ‘நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள’ காரியங்களையே எப்போதும் பேசுங்கள்; அப்போது நீங்கள் உண்மையிலேயே முதிர்ச்சியை நோக்கி முன்னேறும் ஆன்மீக சிந்தையுள்ள ஆணாகவோ பெண்ணாகவோ உங்களை காட்டுவீர்கள். (பிலிப்பியர் 4:8) தெய்வீக நியமங்களுக்குக் கீழ்ப்படிவது, எதிர்பாலாருக்கு முன்பாக மட்டுமல்ல கடவுளுக்கு முன்பாகவும் இனியவர்களாக இருக்க உதவும். dநீதிமொழிகள் 1:7-9. (g02 7/22)

[அடிக்குறிப்புகள்]

a எமது ஏப்ரல் 8, 1991 இதழில் காணப்படும் “இளைஞர் கேட்கின்றனர் . . . சரியான உடைகளைத் தெரிந்துகொள்வதில் இருக்கும் இரகசியம் என்ன?” என்ற கட்டுரையைக் காண்க.

b ஓர் ஆய்வாளர் குறிப்பிடுகிறபடி, புத்திசாலியான இளைஞர்களின் திறமைகள் பெரும்பாலும் கேலிக்குரியவை ஆகின்றன. இதனால் சில இளைஞர்கள் தங்கள் அறிவுத்திறனை மட்டுப்படுத்திக் காட்டுகின்றனர்.

c யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்​—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் 12-⁠ம் அதிகாரத்தில் தன்மதிப்பை வளர்ப்பது பற்றி எண்ணற்ற நடைமுறை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

d நீங்கள் மணம் முடிக்கும் வயதை எட்டாதவராயின், பலதரப்பட்டவர்கள் கூடியிருக்கையில் எதிர்பாலாருடன் கூட்டுறவு கொள்வது ஞானமானது. பிப்ரவரி 8, 2001 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 27-ன் படங்கள்]

உங்களுடைய தோற்றத்திற்கு அல்ல ஆன்மீக குணங்களை வளர்ப்பதற்கே கவனம் செலுத்துங்கள்

பலதரப்பினரிடமும் சகஜமாக பேசிப்பழக கற்றுக்கொள்ளுங்கள்