Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்

புதிதாய் பிறந்திருந்த எங்கள் பெண் குழந்தையை என் கணவர் ஆசையாய் கொஞ்சி விளையாடியதை பார்த்து, நான் இல்லாவிட்டாலும் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நினைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. நான் அவர்களுக்கு பாரமாய் ஆகிவிட்டதாகவே நினைத்தேன். காரை எடுத்துக்கொண்டு, எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போய்விட வேண்டும் என்று விரும்பினேன். போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் எனப்படும், பிரசவத்துக்குப் பின் ஏற்படும் மனச்சோர்வுக்கு பலியாகியிருந்ததை அப்போது உணரவில்லை.

எனக்கு திருமணமாகி பத்து வருடங்கள் இனிதாய் கழிந்தன. எங்கள் முதல் மகள் லீயானாவை நானும் ஜேஸனும் சீராட்டி பாராட்டி வளர்த்தோம். ஆகவே நான் மறுபடியும் கர்ப்பமானதை அறிந்தபோது, எங்கள் எல்லாருக்குமே அளவிலா ஆனந்தம்.

ஆனால் இந்த முறை பிரசவம் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பிள்ளை பிறந்தவுடன் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் நான் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன் என்றே சொல்லலாம். ஆனால் பிரசவத்திற்கு முன்பு, கர்ப்ப காலத்தின் கடைசி கட்டத்தில் அடிக்கடி குழம்பிப் போனேன். எங்கள் பிஞ்சு குழந்தை கார்லியை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்ததும் அந்தக் குழப்பம் இன்னும் மோசமானது. எப்பொழுதும் களைப்பாகவே உணர்ந்தேன்; சின்னச்சின்ன விஷயங்களில்கூட தீர்மானம் எடுக்க முடியாமல் தவித்தேன். நான் அடுத்து என்ன செய்ய வேண்டும், நான் சொன்னது அல்லது செய்தது சரிதானா என்றெல்லாம் கேட்க ஜேஸன் ஆபீஸுக்கு ஒருநாளில் பல தடவை போன் செய்வது எனக்குப் பழக்கமாகிப் போனது.

மற்றவர்களோடு, என் பழைய சிநேகிதர்களோடுகூட சேர்ந்திருக்கவே எனக்கு பயமாக இருந்தது. எதிர்பாராமல் யாராவது வீட்டிற்கு வந்துவிட்டால், உடனே பாத்ரூமில் போய் ஒளிந்துகொள்வேன். வீடு அலங்கோலமாக கிடந்தாலும் அதை கண்டுகொள்ள மாட்டேன்; எளிதில் திசைதிருப்பப்பட்டு, குழப்பமடைந்துவிடுவேன். வாசிப்பது என்றால் எனக்கு உயிர்; ஆனால் இப்போதோ கவனம் செலுத்த முடியாததால் கிட்டத்தட்ட வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். ஜெபிக்கவும் கஷ்டமாக இருந்ததால் என் ஆன்மீக நலம் பாதிக்கப்பட்டது. உணர்ச்சி ரீதியில் மரத்துப் போனேன்; யாரையுமே என்னால் நேசிக்க முடியவில்லை. என்னால் தெளிவாக சிந்திக்க முடியாததால் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்களோ என்று பயந்தேன். என் சுயமதிப்பு திடீரென சரிந்தது. எனக்கு பைத்தியம் பிடிக்கப் போவதாகவே நினைத்தேன்.

அப்போதெல்லாம், ஜேஸன் வேலையிலிருந்து வீடு திரும்பியதும் வீட்டை சுத்தமாக வைக்க அல்லது சமைக்க எனக்கு உதவுவார்; ஆனால் அது என் எரிச்சலை இன்னும் கிளப்பிவிடும்! அவர் அவ்வாறு செய்து வந்தது, என்னைக் கையாலாகாத தாய்போல் காட்டுவதாக உணர்ந்தேன். ஆனால் அவர் எனக்கு உதவி செய்யாவிட்டாலோ என்னிடம் அவருக்கு கொஞ்சம்கூட அக்கறை இல்லை என்று அவர்மீது எரிந்துவிழுவேன். ஜேஸன் மட்டும் முதிர்ச்சியோடும் அன்பாகவும் என்னிடம் நடந்துகொள்ளாதிருந்தால், எனக்கு வந்த போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் எங்கள் மண வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கியிருக்கும். எனக்கு வந்த நோயால் ஜேஸன் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார் என்பதை அவரே சொன்னால் ஒருவேளை உங்களுக்கு நன்றாக புரியும்.

பாதிக்கப்பட்டதைப் பற்றி என் கணவரே சொல்கிறார்

“முதலில், ஜனலுக்கு என்ன ஆனது என்று நான் ரொம்பவே குழம்பிப் போனேன். எப்போதும் போல் அவள் சந்தோஷமாக இல்லை, எல்லாரோடும் சகஜமாக பழகவில்லை; அவள் அடியோடு மாறிவிட்டாள்; ஏதோ மூன்றாம் நபரிடம் நடந்துகொள்வது போல் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். நான் என்ன சொன்னாலும் அது அவளுக்குக் குதர்க்கமாகவே பட்டது; அவள் வேலைப்பளுவை குறைக்க கூடமாட ஏதாவது ஒத்தாசை செய்யப் போனாலும் அவளுக்குப் பிடிக்காது. ஆரம்பத்தில், அப்படியெல்லாம் நடந்துகொள்ளாமல் இருக்குமாறு சொல்ல வாயெடுப்பேன்; பிறகு அப்படி சொல்வது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்று புரிந்துகொண்டு பேசாமல் இருந்துவிடுவேன்.

“எங்கள் இருவருக்கும் இடையில் சதா பிரச்சினைதான். உலகமே தன்னை வெறுப்பதுபோல் ஜனல் எண்ணியதாக தோன்றியது. போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் சிரமப்பட்டு வந்த மற்ற பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். இவளுக்கும் அந்த நோய்தான் வந்திருக்குமோ என்று சந்தேகிக்க ஆரம்பித்தபோது, அதைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தளவு வாசிக்க தொடங்கினேன். நான் வாசிக்க வாசிக்க என் சந்தேகம் ஊர்ஜிதமானது. ஜனலுக்கு வந்திருக்கும் நோய்க்கு அவள் காரணமல்ல​—அதாவது, அவளுடைய உதாசீனத்தால் ஏற்பட்ட நோயல்ல என்றும் எனக்கு புரிந்தது.

“அவளையும் பிள்ளைகளையும் கூடுதலாக கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதால் உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் நான் களைத்துப் போனேன். இரண்டு வருடங்களுக்கு என் ஆபீஸ் வேலையையும், சபை மூப்பராகவும் கணவனாகவும் தகப்பனாகவும் எனக்கு இருந்த பொறுப்புகளையும் கவனமாக திட்டமிட்டு செய்ய வேண்டியிருந்தது. என் வேலையில் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள முடிந்ததால், முக்கியமாக கூட்டம் நடைபெறும் நாட்களில் சீக்கிரமாகவே வீடு திரும்பினேன். இரவு சாப்பாடு தயாரிக்கவும் பிள்ளைகளை கூட்டத்திற்குப் புறப்பட வைக்கவும் ஜனலுக்கு உதவ சரியான சமயத்தில் நான் வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. இதனால், நாங்கள் அனைவருமே கூட்டங்களுக்குச் செல்ல முடிந்தது.”

குணமடைந்து வருகையில்

என் கணவரின் அன்பான ஆதரவின்றி, நான் இவ்வளவு சீக்கிரத்தில் குணமடைந்திருக்கவே முடியாது. எனக்குள் புதைந்து கிடந்த பயங்களை ஜேஸனிடம் கொட்டித் தீர்க்கும்போதெல்லாம் அவர் பொறுமையுடன் கேட்டார். எக்காரணத்தைக் கொண்டும் என் உணர்வுகளை அடக்கி வைக்கக்கூடாது என்று எனக்குப் பட்டது. சில சமயங்களில், நான் கோபப்பட்டதும் உண்டு. ஆனால் ஜேஸன் என்னை நேசிப்பதாகவும் இந்த நோயால் நான் படும் கஷ்டத்தில் தானும் பங்குகொள்வதாகவும் சொல்லி எப்போதும் எனக்கு உறுதியளிப்பார். நம்பிக்கையளிக்கும் அம்சங்களையும் பார்க்க எனக்கு எப்போதும் உதவுவார். பிறகு நான் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பேன். என் நோய் தான் அப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று சொல்லி என்னை தேற்றுவார். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால், அவர் பரிவுடன் சொன்ன இந்தச் சொற்கள் எனக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தன என்று புரிகிறது.

கடைசியில், என் மனதிலுள்ளதை எல்லாம் கேட்க நேரம் எடுத்துக்கொண்ட கனிவான டாக்டர் ஒருவரை நாங்கள் கண்டுபிடித்தோம். எனக்கு ஏற்பட்டிருந்த நோய் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்று அவர் கண்டறிந்தார்; அடிக்கடி என்னை வாட்டியெடுத்த கவலையை சமாளிக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப் போவதாக சொன்னார். மனநல நிபுணரின் உதவியைப் பெறும்படியும் என்னை உற்சாகப்படுத்தினார். அத்துடன், மனச்சோர்வை சமாளிக்க அநேகருக்கு உதவிய, உடற்பயிற்சி செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய பரிந்துரைத்தார்.

குணமடைந்து வருகையில் எனக்குப் பெரும் முட்டுக்கட்டையாய் இருந்தவற்றில் ஒன்று, போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் ஏற்பட்ட வெட்கம் ஆகும். ஒருவருக்கு வந்திருக்கும் நோய் என்ன, ஏது என புரியாதபோது அவருக்கு ஒற்றுணர்வு காட்டுவது பெரும்பாலும் மக்களுக்கு கஷ்டமாகும். உதாரணமாக, ஒருவரது கால் முறிந்து போனால் மற்றவர்கள் அதைப் பார்க்க முடியும், அவரிடம் பரிவுடன் நடந்துகொள்ள முடியும். ஆனால், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனைப் பொறுத்தமட்டில், அது அப்படி அல்ல. என்றாலும், என் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் உண்மையில் எனக்கு பெரும் ஆதரவு அளித்தனர், அனுசரணையோடு என்னிடம் நடந்துகொண்டனர்.

குடும்பத்தாரும் நண்பர்களும் அளித்த அன்பான ஆதரவு

இந்தக் கடினமான சூழ்நிலையின்போது என் அம்மா அளித்த உதவியை நானும் ஜேஸனும் பெரிதும் மதித்துணர்ந்தோம். சில சமயங்களில், வீட்டில் ஏற்பட்ட உணர்ச்சிப் போராட்டங்களிலிருந்து ஜேஸனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அம்மா எப்பொழுதும் உற்சாகமளித்தார்; என் வேலை எல்லாவற்றையும் அவரே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, எனக்கு பக்கபலமாய் இருந்து என்னால் முடிந்தளவு வேலைகளை நானே செய்யும்படி உற்சாகமளித்தார்.

சபை நண்பர்களும் பெருமளவு ஆதரவு அளித்தனர். அவர்கள் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதை தெரிவிக்க சிறுசிறு குறிப்புகள் எழுதி அனுப்பினர். அந்த கனிவான வார்த்தைகள் என்னை எவ்வளவாய் தேற்றின! என்னால் நேரிலோ, ஃபோனிலோ மற்றவர்களிடம் சாதாரணமாக பேச முடியாமல் இருந்ததே முக்கியமாக நான் அவ்வாறு உணர்ந்ததற்குக் காரணம். கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் உடன் கிறிஸ்தவர்களுடன் பேசுவதும் எனக்கு சிரமமாக இருந்தது. எனவே அவர்கள் எங்களுக்கு கடிதம் எழுதுவதன் மூலம், மனச்சோர்வால் அவதிப்படும் என் வரையறைகளை தாங்கள் அறிந்திருப்பதை காண்பித்தது மட்டுமின்றி, என் மீதும் என் குடும்பத்தார் மீதும் தங்களுக்கு அன்பும் கரிசனையும் இருப்பதையும் உறுதி செய்தார்கள்.

இது ஆயுள் தண்டனை அல்ல!

என் டாக்டரின் பரிந்துரையாலும், என்னைத் தாங்கி ஆதரித்த என் குடும்பத்தாராலும், அனுசரணையோடு நடந்துகொண்ட நண்பர்களாலும் இப்பொழுது எனக்கு எவ்வளவோ தேவலை. இப்போதும்​—களைப்பாக உணரும் சமயங்களில்கூட​—தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன்; ஏனென்றால் இது குணமடைய எனக்கு உதவியிருக்கிறது. மற்றவர்கள் ஆறுதலாக என்னிடம் பேசும்போது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளவும் முயலுகிறேன். சிரமமான சமயங்களில், பைபிள், கிங்டம் மெலடீஸ்​—யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஆன்மீக, உணர்ச்சி ரீதியில் உற்சாகமூட்டும் இசை​—ஆகிய ஆடியோ கேஸட்டுகளைப் போட்டுக் கேட்கிறேன். இவை என்னை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தி, ஆக்கபூர்வமாக சிந்திக்க உதவுகின்றன. சமீபத்தில், மறுபடியும் பைபிள் அடிப்படையிலான பேச்சுக்களை சபையில் கொடுக்கவும்கூட ஆரம்பித்திருக்கிறேன்.

இன்று என் கணவர், பிள்ளைகள், மற்றவர்கள் என எல்லாரிடமும் அன்பாகவும் கரிசனையுடனும் நடந்துகொள்கிறேன்; இந்த நிலையை அடைய இரண்டரை வருடங்களுக்கும் அதிக காலம் எடுத்திருக்கிறது. என் குடும்பத்தாருக்கு இந்தக் காலப்பகுதி கஷ்டமாகவே இருந்திருக்கிறது; என்றாலும் முன்பைவிட இப்போது எங்களுக்கிடையே உள்ள பந்தம் பலப்பட்டிருப்பதாக நாங்கள் உணருகிறோம். முக்கியமாக, ஜேஸனுக்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; என் மனச்சோர்வின் உச்சக்கட்டத்தின் போது அவர் சகித்துப்போனதாலும், எனக்கு உதவி தேவைப்பட்ட போதெல்லாம் ஆதரவளித்ததாலும் என்மீது தனக்கிருந்த அன்பை பெருமளவு உறுதிப்படுத்தினார். எல்லாவற்றையும்விட, யெகோவாவுடன் இப்போது நாங்கள் இருவரும் இன்னுமதிகளவில் நெருங்கிய உறவு வைத்திருக்கிறோம்; நாங்கள் எதிர்ப்பட்ட சோதனைக் காலங்களில் உண்மையில் அவரே எங்களை பலப்படுத்தினார்.

இப்பொழுதும் சில சமயங்களில் எனக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது; ஆனால் என் குடும்பத்தார், என் டாக்டர், சபை, யெகோவாவின் பரிசுத்த ஆவி ஆகியவற்றின் உதவியுடன் எப்படியாவது குணமடைவேன் என்ற நம்பிக்கைச் சுடர் நாளுக்கு நாள் அதிகமதிகமாய் ஒளிவீசுகிறது. ஆம், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் ஓர் ஆயுள் தண்டனை அல்ல. அது ஒரு பகையாளி; நாம் அதை வெல்லலாம்.​—ஜனல் மார்ஷல் சொன்னது. (g02 7/22)

[பக்கம் 20-ன் பெட்டி/படம்]

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள்

ஹார்மோனின் அளவில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர, வேறு அநேக காரணங்களாலும் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் ஏற்படலாம். அவற்றில் அடங்குபவை:

1. தாய்மை பற்றிய ஒரு பெண்ணின் சுயகருத்துக்கள்; இவை மகிழ்ச்சியில்லாத பிள்ளைப் பருவம், தன் பெற்றோருக்கிடையே பலவீனமடைந்த உறவுகள் ஆகியவற்றால் வரலாம்.

2. தாய்களின்மீது சமுதாயத்தால் திணிக்கப்படும் எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்.

3. ஏற்கெனவே குடும்பத்தில் யாராவது மனச்சோர்வால் அவதிப்பட்டால்.

4. தாம்பத்திய உறவில் திருப்தியின்மை; குடும்பத்தாரின் அல்லது சொந்த பந்தங்களின் ஆதரவின்மை.

5. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை.

6. சிறு பிள்ளைகளை சதா கவனிப்பதால் பாரமடைதல் அல்லது திண்டாடுதல்.

இது முழுமையான பட்டியல் அல்ல. வேறு பிற காரணங்களாலும் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் ஏற்படலாம். இதன் காரணங்கள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.

[பக்கம் 21-ன் பெட்டி]

இது “பிரசவ சோர்வு” மட்டுமே அல்ல

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை பிரசவத்திற்குப் பின் சாதாரணமாக ஏற்படும் “மூட்” மாற்றங்களுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. டாக்டர் லாரா ஜே. மில்லர் கூறுவதாவது: “சாதாரணமாக பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் மனநிலை மாற்றம் ‘பிரசவ சோர்வு’ என்று அறியப்பட்டிருக்கிறது. . . . பிரசவ காலத்தில் சுமார் 50 சதவீத பெண்களுக்கு இதனால் அழுகையும் உணர்ச்சி தடுமாற்றமும் ஏற்படுகிறது. பிள்ளை பிறந்து பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இது உச்சக்கட்டத்தை எட்டுகிறது; பிறகு சில வாரங்களில் படிப்படியாக தானாகவே மறைகிறது.” பிரசவத்திற்குப் பின்பு அந்தப் பெண்ணுடைய ஹார்மோனின் அளவில் ஏற்படும் மாற்றங்களால் அவளது “மூட்” மாறலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“பிரசவ சோர்வு” போல் அல்லாமல், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் அவதிப்படுகையில், மனச்சோர்வு நீடிக்கும்; இது பிள்ளை பிறந்தவுடன் ஆரம்பிக்கலாம்; அல்லது பிள்ளை பிறந்து சில வாரங்களோ சில மாதங்களோ கழித்தும் ஏற்படலாம். பிரசவத்துக்குப் பின் இந்த மனச்சோர்வால் அவதிப்படும் தாய், ஒரு நிமிடம் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பாள், மறுநிமிடமே மனச்சோர்வில் துவண்டுவிடுவாள்; தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம்கூட அவளுக்கு வரலாம். அத்துடன், எதற்கெடுத்தாலும் பிறரிடம் எரிந்து விழலாம், மனக்கசப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டலாம். ஒரு தாயாக தன் கடமையை சரிவர செய்ய முடியாது என்ற எண்ணம் அவளை ஆட்டிப்படைக்கலாம்; தன் பிள்ளையிடம் பாசத்தைக் காட்ட முடியாமல் அவள் தவிக்கலாம். டாக்டர் மில்லர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்த மனச்சோர்வு இருப்பதாக கண்டறியப்பட்ட தாய்மார்களில் சிலருக்கு, பிள்ளைகளிடம் தங்களுக்குப் பாசம் இருப்பது மனதளவில் தெரியும், ஆனாலும் சலிப்பு, எரிச்சல், அருவருப்பு போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவர். மற்றவர்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கு தீங்கிழைக்க வேண்டும் அல்லது அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணங்கள்கூட எழுகின்றன.”

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் காலம் காலமாய் இருந்து வந்திருக்கிறது. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிலேயே, பிரசவத்திற்குப் பின்பு சில பெண்களுக்கு திடீரென உளவியல் ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டதை கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்ரட்டிஸ் கவனித்தார். பிரேஸிலியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் அண்ட் பயாலஜிக்கல் ரிசர்ச்-⁠ல் பிரசுரிக்கப்பட்டிருந்த ஓர் ஆய்வு இவ்வாறு விளக்கியது: “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் பெரும் மருத்துவ பிரச்சினை; அநேக நாடுகளில் இது 10-15 சதவீத தாய்களை பாதித்திருக்கிறது.” என்றாலும் வருத்தகரமாக, “அப்படிப்பட்ட மனச்சோர்வால் அவதிப்படுவதை பெரும்பாலும் சரிவர கண்டறிய முடிவதில்லை; அவற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும் முடிவதில்லை” என அந்த ஜர்னல் குறிப்பிட்டது.

பிரசவத்திற்குப் பிறகு வரும் அரிதான, அதே சமயத்தில் கடுமையான ஒரு நோய், போஸ்ட்பார்ட்டம் ஸைக்கோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்நோயால் அவதிப்படுபவர், மாயக்காட்சிகளைக் காண்பார், தனக்குள் குரல்களைக் கேட்பார்; நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் திண்டாடுவார்; ஆனாலும் இடையிடையே சில மணிநேரத்துக்கோ சில நாட்களுக்கோ நன்றாக இருப்பார். இந்த ஸைக்கோசிஸுக்கான காரணங்கள் இன்னும் சரிவர கண்டுபிடிக்கப்படவில்லை; ஆனால், “ஒருவேளை ஹார்மோனின் அளவில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் மரபியல் பலவீனமே இதை பெரிதும் பாதிப்பதாக தெரிகிறது” என டாக்டர் மில்லர் குறிப்பிடுகிறார். போஸ்ட்பார்ட்டம் ஸைக்கோசிஸுக்கு திறமையான மருத்துவரால் நல்ல சிகிச்சை அளிக்க முடியும்.

[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]

நீங்கள் என்ன செய்யலாம் a

1. மனச்சோர்வு மறையவே இல்லையெனில், மருத்துவ உதவியை பெறுங்கள். எவ்வளவு சீக்கிரம் உதவி பெறுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்கள் நோய் குணமாகலாம். உங்கள் நிலை பற்றி நன்கறிந்த கரிசனையுள்ள மருத்துவரை தேடிக் கண்டுபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை எண்ணி வெட்கப்படவோ அல்லது இதற்கு சிகிச்சை தேவைப்படுகையில் தர்மசங்கடப்படவோ வேண்டியதில்லை.

2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். மனச்சோர்வுக்கு உடற்பயிற்சி ஓர் அருமருந்து என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

3. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனதிலுள்ளவற்றை கொட்டிவிடுங்கள். உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள், அல்லது உங்கள் உணர்வுகளை அடக்கி வைக்காதீர்கள்.

4. உங்கள் வீட்டுக்கும் குடும்பத்துக்கும் எந்தக் குறையும் வைக்காமல் எல்லாவற்றையும் சரிவர முழுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். அத்தியாவசிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையை எளியதாக்க முயலுங்கள்.

5. தைரியத்தையும் பொறுமையையும் பெறும்படி ஜெபியுங்கள். உங்களுக்கு ஜெபிக்க சிரமமாய் இருந்தால், வேறு யாரையாவது உங்கள் சார்பாக ஜெபிக்க சொல்லுங்கள். குற்ற உணர்வுகளுக்கோ லாயக்கற்றவர் என்ற எண்ணங்களுக்கோ மனதில் இடங்கொடுத்தால் குணமடைவது தாமதிக்கலாம்.

[அடிக்குறிப்பு]

a விழித்தெழு! எந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் சிபாரிசு செய்வதில்லை. ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலாருக்கும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் எல்லா சூழ்நிலையிலும் பொருந்துவதில்லை; சில ஆலோசனைகள் சில சூழ்நிலைகளுக்கு பொருந்தாமலேயும் போகலாம்.

[பக்கம் 23-ன் பெட்டி]

ஆண்களுக்கு ஆலோசனைகள்

1. போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் உங்கள் மனைவியின் தவறல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவளுக்கு அந்த நோய் தொடர்ந்தால், அதைப் புரிந்து பரிவோடு நடத்தும் ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அவளை அழைத்துச் செல்லுங்கள்.

2. உங்கள் மனைவி சொல்வதை பொறுமையுடன் கேளுங்கள். அவளுடைய உணர்ச்சிகளை ஒப்புக்கொள்ளுங்கள். நம்பிக்கையற்ற விதத்தில் அவள் உணர்வதைக் கண்டு கோபப்படாதீர்கள். நடப்பவற்றின் நம்பிக்கையான மறுபக்கத்தை காண அவளுக்கு உதவுங்கள், குணமாகிவிடும் என்று உறுதி அளியுங்கள். அவளுடைய எல்லா பிரச்சினையையும் நீங்கள் தீர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஒவ்வொன்றுக்கும் அவள் நியாயமான பதிலை எதிர்பார்க்காமல் ஆறுதலையே தேடலாம். (1 தெசலோனிக்கேயர் 5:14) போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் அவதிப்படுபவர்களுக்கு நியாயமாகவும், தெளிவாகவும் சிந்திக்க முடியாது என்பதை நினைவில் வையுங்கள்.

3. உங்கள் மனைவிக்கு பக்கபலமாய் இருந்து ஆதரவளிப்பதில் அதிக நேரம் செலவிடும்படிக்கு, தேவையில்லாத காரியங்களுக்கு செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள். இது அவள் சீக்கிரம் குணமடைய வழிவகுக்கலாம்.

4. உங்களுக்கென்றும் சற்று நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவிக்கு மேம்பட்ட வகையில் ஆதரவு அளிப்பதற்கு உங்களுடைய உடல், மன, ஆன்மீக நலன் உதவும்.

5. உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசும் ஒருவரோடு​ஒருவேளை போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் அவதிப்பட்டிருக்கும் மனைவியை உடைய ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்ற ஒருவரோடு​உரையாடுங்கள்.

[பக்கம் 23-ன் படம்]

மார்ஷல் குடும்பம்