Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேசும் கிள்ளைகள் ஆபத்தில்!

பேசும் கிள்ளைகள் ஆபத்தில்!

பேசும் கிள்ளைகள் ஆபத்தில்!

பிரிட்டனிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

“பூமியிலேயே அதிக ஆபத்தில் இருக்கும் பறவைகளில்” கிளிகளும் இருப்பதாக அ.ஐ.மா., மேரிலாண்ட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த டாக்டர் திமோத்தி ரைட் கூறுகிறார். வருத்தகரமாக, அவற்றின் கண்கவர் சிறகுகளின் வர்ணங்களும் மனிதருடைய குரலை ‘மிமிக்’ செய்யும் திறமையும் அற்றுப்போகும் ஆபத்திற்கு அடிகோலியிருக்கின்றன.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர் ஒருவர் செல்லப்பிராணியாகிய ஒரு கிளியைப் பற்றி எழுதினார்; அவருடைய பதிவுதான் இதைக் குறித்து அறியப்பட்ட எழுத்துப் பதிவுகளிலேயே மிகவும் பழமையான பதிவு. அந்தப் பறவை கிரேக்க வார்த்தைகளையும் அதன் தாயகமாகிய இந்தியாவின் ஒரு மொழியில் சில வார்த்தைகளையும் பேசியபோது அவர் அசந்துபோனார்.

‘மிமிக்’ செய்யும் இந்தக் கிளிப்பிள்ளைகள் மீதுள்ள கவர்ச்சி இன்று அவற்றை செல்லப்பிராணியாக வளர்ப்பதை பிரபலமாக்கியிருக்கிறது, சட்ட விரோதமாக பிடித்து வியாபாரம் செய்யப்படுவதையும் அதிகரித்திருக்கிறது. 14 நாடுகளில் உள்ள 21 வகை கிளிகளின் 30 சதவீத கூடுகளையும், 4 வகை கிளிகளின் 70 சதவீத கூடுகளையும் சட்ட விரோதமாக பறவை பிடிப்பவர்கள் நாசம் செய்திருக்கிறார்கள் என கடந்த 20 ஆண்டுகால ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பறவையின் இனப்பெருக்க வீதமும் வெகு குறைவே, பொதுவாக ஓராண்டிற்கு ஒரு தடவைதான் முட்டைகள் இடுகிறது, அதோடு அதன் இயற்கை வாழிடமும் அழிக்கப்பட்டு வருகிறது, இவையெல்லாம் அதற்குரிய மவுசை அதிகரித்திருக்கின்றன​—⁠அந்தக் கிளி எந்தளவுக்கு அரிதாக காணப்படுகிறதோ அந்தளவுக்கு அதன் விலையும் எக்கச்சக்கம்.

சில கிளி வகைகள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை வைத்தே அது மறைந்துவிடும் ஆபத்து எவ்வளவு தீவிரமாகி வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிரேஸிலில் லியர் மக்கா என்ற வகை கிளி 200-⁠க்கும் குறைவாகவே இருப்பதாக கணக்கிடப்படுகிறது. பியூர்டோ ரிகோவிலோ கிளிகளின் எண்ணிக்கை அதிக கவலைக்கிடமாக உள்ளது, 50-⁠க்கும் குறைவானவையே வனத்தில் வலம்வருகின்றன. வனத்திலிருந்து மறைந்துவிட்டதாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஸ்பிக்ஸ் மக்கா இனத்தைப் பாதுகாப்பதற்கு அவை கூண்டிலடைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

இவை நிலைத்திருக்கும் வரை, கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்த அழகிய பறவைகள் படைப்பாளரை பறைசாற்றுகின்றன; அவர் நிச்சயமாகவே அவற்றின் ஒப்பற்ற தோற்றத்திலும் சிறந்த திறமைகளிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறார். மனிதருடைய பேராசை கிளிப்பிள்ளைகளை அற்றுப்போகச் செய்துவிடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கிடையில், சொன்னதைச் சொல்லும் இந்தக் கிளிப்பிள்ளைகளுக்கு ஆபத்துதான்! (g02 7/22)

[பக்கம் 31-ன் படங்கள்]

பியூர்டோ ரிகோ கிளிகள்

லியர் மக்கா

ஸ்பிக்ஸ் மக்கா

[படங்களுக்கான நன்றி]

பியூர்டோ ரிகோ கிளிகள்: U.S. Geological Survey/Photo by James W. Wiley; லியர் மக்கா: © Kjell B. Sandved/Visuals Unlimited; ஸ்பிக்ஸ் மக்கா: Progenies of and courtesy of Birds International, Inc.