Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மியூசிக் வீடியோக்கள்—நான் எவ்வாறு தெரிவு செய்யலாம்?

மியூசிக் வீடியோக்கள்—நான் எவ்வாறு தெரிவு செய்யலாம்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

மியூசிக் வீடியோக்கள்​—நான் எவ்வாறு தெரிவு செய்யலாம்?

“ஒரு மாதிரியான குரூப் அல்லது பாடலோட பெயரை பார்த்த உடனே சேனலை மாத்திருவேன்.”​கேசி.

மியூசிக் வீடியோக்கள் நல்ல பொழுதுபோக்கு என அநேக இளைஞர் நினைக்கின்றனர். ஆனால், இத்தொடரில் முன்னர் வெளிவந்த ஒரு கட்டுரை காண்பித்தபடி அநேக மியூசிக் வீடியோக்களில் பாலுறவு ஒழுக்கக்கேடும் வன்முறையும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் சித்தரிக்கப்படுகின்றன. a எந்த விதமான பொழுதுபோக்காக இருந்தாலும் சரி, அது கடவுள் கண்டனம் செய்வதை சித்தரித்துக் காட்டினால் அதை ஒரு கிறிஸ்தவன் பார்க்கக்கூடாது. என்றாலும், மியூசிக் வீடியோக்கள் அனைத்துமே அந்தளவிற்கு ஒழுக்கங்கெட்டவையாக இருப்பதில்லை. சில வீடியோக்கள் ஓரளவு நல்லவையாக இருக்கலாம். மற்றவையோ, மேலோட்டமாக பார்த்தால் மோசமாக இல்லாதவையாய் தோன்றலாம். இருந்தாலும், கடவுளுடைய வார்த்தைக்கு முரணான விஷயங்களை அவை மறைமுகமாக கூறலாம்.

மியூசிக் வீடியோக்களைப் பார்க்க உங்கள் பெற்றோர் அனுமதித்தால் நீங்கள் கவனமாக தெரிவுசெய்யவும் வேண்டும், பார்ப்பதற்கு எது ஏற்றது, எது ஏற்றதல்ல என்பதை வித்தியாசம் காண பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட ‘பகுத்தறியும் திறமைகளை’ உபயோகிக்கவும் வேண்டும். (எபிரெயர் 5:14, NW) இதன் சம்பந்தமாக, பைபிளிலுள்ள எந்த நியமங்கள் உங்களுக்கு உதவும்? பின்வரும் சில பைபிள் வசனங்களும் குறிப்புகளும் உங்களுக்கு உதவலாம்.

நீதிமொழிகள் 4:23: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” நீங்கள் பொக்கிஷமாக கருதும் ஏதாவதொரு விளையாட்டு சாதனம் அல்லது இசைக் கருவி உங்களிடம் உள்ளதா? அதை நல்ல நிலையிலும் பாதுகாப்பான இடத்திலும் வைக்க நீங்கள் கடினமாக முயலுவீர்கள் இல்லையா? அது சேதமடையலாம் அல்லது திருட்டு போகலாம் என்ற பயத்தின் காரணமாக அதை ஒரு நிமிடம்கூட அசட்டையாக தெருவில் போட்டுவிடமாட்டீர்கள். ஆம், நீங்கள் அதை பத்திரமாக காத்துக்கொள்வீர்கள். அதைப்போலவே, உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ள நீங்கள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டும்; தவறான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலம் அதை ஒரு நிமிடத்திற்குக்கூட ஆபத்திற்குள்ளாக்க விரும்பக்கூடாது.

எபேசியர் 2:1, 2: “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து [“காற்றின்,” NW] அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.” இந்தக் காற்று, உலகத்தின் மனப்பான்மையே; அதாவது, தேவபக்தியற்ற நடத்தைக்கு காரணமான சிந்தனைகளும் மனப்பான்மைகளும் ஆகும். அநேக மியூசிக் வீடியோக்களில் இந்த மனப்பான்மை வெளிப்படுகிறது; இது, சந்தோஷம், சமாதானம், இச்சையடக்கம் போன்ற குணங்களை உண்டாக்கும் கடவுளுடைய ஆவிக்கு நேர் எதிரானது.​—⁠கலாத்தியர் 5:22, 23.

2 தீமோத்தேயு 2:22: “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோ[டு].” பாலுறவு காட்சிகளை கணநேரமே பார்த்தாலும் அது இச்சைகளை தூண்டிவிடத்தான் செய்யும். அப்படிப்பட்ட காட்சிகள் எளிதில் மனதைவிட்டு மறைவதில்லை என்பதை அநேக இளைஞர் ஒப்புக்கொள்கிறார்கள்; அவர்கள், அவற்றை தங்கள் மனத்திரையில் திரும்பத்திரும்ப ஓடவிட்டும் பார்க்கலாம். கீழ்த்தரமான எண்ணங்களைத் தூண்டுகிற வீடியோவை பார்த்த டேவ் என்ற இளைஞன், “அதுக்கப்புறம் அந்தப் பாட்டை கேட்டப்ப எல்லாம் அந்த வீடியோதான் ஞாபகம் வந்துச்சு” என்று கூறுகிறான். ஆகவே, அப்படிப்பட்ட வீடியோக்களை பார்த்தால் தவறான பாலுறவு ஆசைகள் வளரலாம்.​—1 கொரிந்தியர் 6:18; கொலோசெயர் 3:5.

நீதிமொழிகள் 13:20: “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” ‘வன்முறை, ஆவிக்கொள்கை, குடிபோதை அல்லது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோரை என் வீட்டிற்குள் அழைப்பேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். டிவி வாயிலாக அப்படிப்பட்டவர்களோடு தொடர்புகொள்வது அவர்களை உங்கள் வீட்டிற்குள் அழைப்பதற்கு சமமாகும். அவ்வாறு அழைத்தால் நீங்கள் ‘நாசமடைய’ வாய்ப்புள்ளதா? “பார்ட்டிக்கு வரும்போது சில பொண்ணுங்க சமீபத்தில வீடியோல பார்த்த மாதிரி டிரெஸ் போட்டுகிட்டு வர்றதை, இல்லாட்டி அதே மாதிரி மோசமான அங்க அசைவுகள் செய்றதை நான் பார்த்திருக்கேன்” என்று கிம்பர்லீ கூறுகிறாள். நீங்களும்கூட இது போன்றவற்றை பார்த்திருக்கலாம். இந்த இளைஞர்கள், கடவுளுடைய தராதரங்களை மதிக்காதவர்களை பின்பற்றுவதன் மூலம் தாங்கள் ஏற்கெனவே ‘நாசமடைய’ ஆரம்பித்திருப்பதை காண்பிக்கின்றனர். ஆகவே, எந்த வகையான ‘கெட்ட கூட்டுறவையும்’ தவிர்க்க ஜாக்கிரதையாக இருங்கள்.​—⁠1 கொரிந்தியர் 15:33, NW.

சங்கீதம் 11:5: “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” அர்த்தமற்ற, கீழ்த்தரமான வன்முறையை புகழும் வீடியோக்களை பார்த்தால், நாம் ‘கொடுமையில் பிரியமுள்ளவர்கள்’ என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துமா?

தெரிவுசெய்யும் சவால்

“உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிட”ப்பதால் இந்த உலகத்தின் சிந்தனையாலும் மனப்பான்மைகளாலும் பாதிக்கப்படாத பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது அதிக கடினமாகிவிட்டது. (1 யோவான் 5:19) சில மியூசிக் வீடியோ சேனல்கள் அசிங்கமான விஷயங்களையே அதிகமாக காண்பிக்கலாம். நிகழ்ச்சிகள் வெளிப்படையாகவே ஒழுக்கங்கெட்டவையாக அல்லது வன்முறையாக இல்லையென்றாலும் அநேக சமயங்களில் அவை இவ்வுலகின் மனப்பான்மையைத்தான் படம்பிடித்துக் காட்டுகின்றன. “முன்பு மியூசிக் சேனலாக இருந்தது, இப்போது ‘லைஃப் ஸ்டைல் சேனலாக’ மாறிவிட்டது” என்று பிரபலமான மியூசிக் வீடியோ சேனல் ஒன்றைப் பற்றி இசைக் கலைஞர் ஒருவர் கூறினார்.

ஒரு வீடியோ மோசமாக இருந்தால் சேனலை மாற்றிவிடுங்கள் என்று தீர்வு சொல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால், டிவியில் மற்ற சேனல்களை பார்க்கும்போதும் இதேயளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான் சவால். அநேக சேனல்கள், விலாவாரியான வன்முறை அல்லது காமவெறி நிறைந்த நிகழ்ச்சிகளையே அல்லது ஒழுக்க ரீதியில் தவறுசெய்ய வழிநடத்தும் சூழ்நிலையில் இருப்பவர்களையே காண்பிக்கின்றன. பொழுதுபோக்கை அனுபவிக்க முயலுகையில் எந்நேரமும் சேனலை மாற்ற விழிப்பாயிருப்பது எரிச்சலூட்டலாம், ஒருவேளை வெறுப்பையும்கூட ஏற்படுத்தலாம். சில சமயங்களில், சேனலை மாற்றுவதற்கு முன்பே சேதம் ஏற்பட்டுவிடலாம். ஒழுக்கக்கேடான சித்திரங்கள் நம் மனத்திரையில் பதிந்துவிடலாம். என்றாலும், உங்கள் இருதயத்தைப் பாதுகாக்க நீங்கள் எடுக்கும் உண்மையான முயற்சிகளை யெகோவா தேவன் நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள்.​—⁠2 சாமுவேல் 22:21.

உதவியளிக்கும் நடைமுறையான மற்ற வழிகளும் உள்ளன. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கேசி, எது தனக்கு பெரிதும் உதவுகிறது என்பதைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: “பாடுறது எந்த குரூப், என்ன பாட்டுங்கிறத பொதுவா வீடியோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போடுவாங்க. ஒவ்வொரு பேண்டுக்கும் ஒரு பேரு இருக்கிறதுனால எந்த குரூப்பும், எந்த பாட்டும் மோசமாயிருக்கும்னு முன்கூட்டியே சுலபமா தெரிஞ்சுக்கலாம். அதனால, ஒரு மாதிரியான குரூப் அல்லது பாடலோட பெயரை பார்த்த உடனே சேனலை மாத்திருவேன். முளையிலேயே கிள்ளிடுவேன்.”

‘உங்கள் இருதயத்தில் சத்தியத்தை பேசுங்கள்’

பைபிள் நியமங்களை நீங்கள் அறிந்திருந்தாலும் மோசமானதைக் கண்டும் பொறுத்துப்போக ஆரம்பித்துவிடலாம். எவ்வாறு? அவற்றை நியாயப்படுத்துவதன் மூலமே. (யாக்கோபு 1:22) ‘இருதயத்தில் சத்தியத்தைப் பேசுகிறவனே’ யெகோவாவின் நண்பன் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 15:2, NW) ஆகவே, உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். உங்களையே ஏமாற்றிக்கொள்வதை தவிருங்கள். உங்களுக்கு நீங்களே நியாயப்படுத்திக்கொண்டு மோசமானதை பார்ப்பதாக உணர்ந்தால், ‘நான் இதைப் பார்ப்பதை யெகோவா ஏற்றுக்கொள்வாரா?’ என்று உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். எது சரி, எது தவறு என்பதை அறிந்திருப்பது மட்டுமல்ல, சரியானதை செய்ய வேண்டுமென தீர்மானிப்பதே பெரும்பாலும் சவாலாக இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்! ஏதோவொரு பொழுதுபோக்கைவிட யெகோவாவோடு உள்ள உங்கள் நட்புறவே அதிக விலையுயர்ந்தது என நீங்கள் கருத வேண்டும்.​—⁠2 கொரிந்தியர் 6:17, 18.

இன்னும் கவனமாக தெரிவுசெய்ய வேண்டும் என்று அரைமனதோடு, மேலோட்டமான ஒரு தீர்மானத்தை செய்வது போதாது. உங்கள் தீர்மானம் உறுதியாக இல்லையென்றால் அது சீக்கிரத்தில் ஆட்டம் கண்டுவிடலாம். யோபு என்ற தேவபக்தியுள்ள மனிதன் தன் மனைவிக்கு உண்மையுள்ளவராய் இருக்க எவ்வாறு தீர்மானித்தார் என பைபிள் சொல்கிறது. “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என்று அவர் கூறினார். (யோபு 31:1) அதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! யோபு, எதை மட்டுமே பார்ப்பது என்பதைக் குறித்து தனக்குத்தானே ஓர் உடன்படிக்கை அல்லது உறுதியான ஒப்பந்தம் செய்துகொண்டார். நீங்களும் அவ்வாறே செய்யலாம். மோசமானவற்றை பார்க்கவே கூடாது என்று உறுதியாக தீர்மானம் செய்துகொள்ளுங்கள்; உங்களுக்கு நீங்களே ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். திட்டவட்டமான வரம்புகளை வையுங்கள். அதைப் பற்றி ஜெபியுங்கள். பிறகு அந்த ஒப்பந்தத்தை அப்படியே கடைப்பிடியுங்கள்; உதவியாக இருக்குமென்றால் அதை எழுதியும் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் உதவி தேவைப்பட்டால், உங்கள் பெற்றோர் போன்ற நீங்கள் நம்புகிற, முதிர்ச்சி வாய்ந்த நபர்களிடம் ஏன் மனம்விட்டு பேசக்கூடாது?

இப்படிப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதால், எந்தச் சந்தர்ப்பத்திலுமே மியூசிக் வீடியோக்களை பார்ப்பதில்லை என்று சில கிறிஸ்தவ இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தில் உங்கள் தீர்மானம் என்னவாக இருந்தாலும் உங்கள் பகுத்தறியும் திறமைகளை உபயோகியுங்கள். சுத்தமான மனசாட்சியை காத்துக்கொள்ளுங்கள். நல்லதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ள பொழுதுபோக்கை மட்டுமே அனுபவிப்பதன் மூலம், உங்கள்மீது வரும் தீங்கை தவிர்க்கலாம், யெகோவாவோடு உள்ள உங்கள் நட்புறவையும் காத்துக்கொள்ளலாம். (g03 3/22)

[அடிக்குறிப்பு]

[பக்கம் 14-ன் படம்]

வெளிப்படையாக ஒழுக்கக்கேடானவையாய் தோன்றாத சில வீடியோக்களும் மோசமான கருத்துக்களை பரப்புகின்றன

[பக்கம் 15-ன் படம்]

கடவுளுக்கு விருப்பமில்லாதவற்றை பார்க்கக்கூடாது என தீர்மானமாயிருங்கள்