Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் ஆன்மீக தாகம் தணிந்தது

என் ஆன்மீக தாகம் தணிந்தது

என் ஆன்மீக தாகம் தணிந்தது

லூச்சீயா மூசாநெட் கூறியது

இத்தாலியின் வடமேற்கு மூலையில், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸுக்கு அருகில், பிரான்சின் பிரபலமான மான்ட் ப்ளாங்குக்குப் பக்கத்தில் கொலுவீற்றிருக்கிறது வாலே டாவோஸ்டா பிரதேசம். அங்குதான் 1941-⁠ல் ஷலன்ட் சென்டன்செல்ம் என்ற சிறிய ஊரில் பிறந்தேன்.

ஐந்து பிள்ளைகளில் நான் மூத்தவள்; எனக்கு நான்கு தம்பிகள். அம்மா கடின உழைப்பாளி, கத்தோலிக்க பக்தையும்கூட. அப்பாவும் ஆன்மீக குடும்பத்தில் பிறந்தவர். என் அத்தைகளில் இரண்டு பேர் கன்னியாஸ்திரீகள். என் படிப்புக்காகவும் மற்ற காரியங்களுக்காகவும் எத்தனையோ தியாகங்களை என் அப்பா அம்மா செய்தார்கள். எங்கள் சிறிய ஊரில் பள்ளிகளே இல்லை, எனவே எனக்கு 11 வயதாகையில் படிப்பதற்காக என்னை கன்னியாஸ்திரீகள் நடத்திய போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கு மற்ற பாடங்களுடன் லத்தீன், பிரெஞ்சு மொழிகளையும் கற்றுக்கொண்டேன். எனக்கு 15 வயதானபோது கடவுளுக்கு சேவை செய்வதைப் பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தேன். யோசித்துப் பார்த்த போது கான்வென்டில் சேருவதுதான் சிறந்த வழி என எனக்குப் பட்டது. ஆனாலும் இது என் அப்பா அம்மாவுக்கு துளிகூட பிடிக்கவில்லை, காரணம் அம்மாவே தனி ஆளாக தம்பிகளைக் கவனிக்க வேண்டியிருக்குமே. நான் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், பொருளாதார ரீதியில் குடும்பத்துக்கு உதவியாக இருப்பேன் என்பதே அவர்கள் கனவாக இருந்தது.

என் முடிவைக் கேட்டு அவர்கள் நடந்துகொண்ட விதம் எனக்கு கவலையை ஏற்படுத்தினாலும் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன், கடவுளுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமென்று எண்ணினேன். எனவே 1961-⁠ல் ரோமன் கத்தோலிக்க கான்வென்டில் சேர்ந்தேன்.

கன்னியாஸ்திரீயாக வாழ்க்கை

ஆரம்ப மாதங்களில் சர்ச்சினுடைய தராதரங்களையும் சட்டதிட்டங்களையும் கற்றுக்கொண்டேன், கான்வென்டில் உடம்பை வளைத்து வேலை செய்ய வேண்டியிருந்தது. 1961, ஆகஸ்ட்டில் கற்றுக்குட்டியாக என் சமயப் பணியை ஆரம்பித்தேன், கன்னியாஸ்திரீகளுக்கே உரிய ஆடையை அணிய ஆரம்பித்தேன். இனேஸ் என்ற புதிய பெயரையும் எனக்கு சூட்டுமாறு கேட்டுக் கொண்டேன், இது என் அம்மாவின் பெயர். அதற்கு ஒப்புதல் கிடைத்தது; அது முதல் என் பெயர் சிஸ்டர் இனேஸ்.

புதிதாக சமயப் பணியை ஆரம்பித்தவர்களில் பெரும்பாலோர் கான்வென்டில் உடலை வருத்தி வேலை செய்தார்கள், நானோ ஆரம்ப பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் அளவுக்கு படித்திருந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1963 ஆகஸ்ட்டில் உறுதிமொழி எடுத்தேன்; இத்தாலியில் ஆஸ்டாவிலுள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் சான் ஜுஸிப்பே என்ற பிரிவின் கன்னியாஸ்திரீ ஆனேன். பின்னர், கான்வென்ட் தன் சொந்த செலவில் மேற்படிப்புக்காக என்னை ரோமிலிருந்த மாரியா சான்டிசிமா ஆசுன்டா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தது.

ரோமில் என் படிப்புகளை முடித்து 1967-⁠ல் ஆஸ்டா திரும்பியதும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தேன். 1976-⁠ல் பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டேன். அப்போது சில வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வந்தாலும் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது, வாலே டாவோஸ்டா பிராந்திய பள்ளி வாரியத்தின் அங்கத்தினரும் ஆனேன்.

ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்பதே என் உள்ளான ஆசை. அவர்களுக்காக என் நெஞ்சம் உருகியது. எனவே, நோய்வாய்ப்பட்டு சாகக் கிடந்த நாதியற்றவர்களுக்கு உதவுவது உட்பட பல்வேறு சமூக நல திட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தினேன். குடியேறிகளின் பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தையும் ஏற்படுத்தினேன். மேலும், ஏழை எளியவர்களுக்கு வேலை தேடித் தருவது, குடியிருக்க வீடு பார்த்துக் கொடுப்பது, தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவ பராமரிப்புக்கு உதவி அளிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டேன். சர்ச்சின் மத கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ முயன்றேன்.

அந்த சமயத்தில் நான் கத்தோலிக்க இறையியலை ஏற்றுக்கொண்டேன்; அதில், திரித்துவம், ஆத்துமா அழியாமை போன்ற சர்ச் போதனைகளும் மனிதனின் நித்திய எதிர்காலம் பற்றிய கத்தோலிக்க கருத்துக்களும் உட்பட்டிருந்தன. அச்சமயத்தில், கலப்பு விசுவாசம் போன்ற கருத்துக்களுக்கும் கத்தோலிக்க இறையியல் இடமளித்தது; அந்த கலப்பு விசுவாசம், மற்ற மதங்களை அங்கீகரித்து, அதனுடன் ஒத்து வாழ்வதை அர்த்தப்படுத்தியது.

நிலைகுலைய வைத்த விஷயங்கள்

எனினும் கத்தோலிக்க சர்ச்சில் நடந்த சில காரியங்கள் என்னை நிலைகுலைய வைத்தன. உதாரணமாக, பெற்றோரும் பிள்ளைகளும், ஞானஸ்நானம் பெறுவதற்கும் புதுநன்மை எடுப்பதற்கும் முன்பு அவற்றில் என்னென்ன உட்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வதற்கு படிப்பது அவசியம். ஆனால் பெரும்பாலோர் அப்படிப்பு நடைபெற்ற வகுப்புகளுக்கு வரவே இல்லை, மற்றவர்களோ படிப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடுகூட ஒரு பங்கில் (parish) ஞானஸ்நானம் பெறுவதற்கும் புதுநன்மை எடுப்பதற்கும் ஒப்புதல் கிடைக்காதபோது அவற்றைப் பெறுவதற்காக மற்றொரு பங்கிற்கு மாறிச் சென்றார்கள். எனக்கு அது மேலோட்டமானதாக, மாய்மாலமானதாக தோன்றியது.

“மற்ற வேலைகளுக்காக நம்மையே அர்ப்பணிப்பதற்குப் பதிலாக சுவிசேஷத்தை நாம் பிரசங்கிக்க வேண்டாமா?” என்ற கேள்வி சில சமயம் என்னில் எழுந்தது; இந்தக் கேள்வியை சக கன்னியாஸ்திரீகளிடமும் கேட்டிருக்கிறேன். “நற்செயல்களை செய்வதன் மூலம் நாம் பிரசங்கிக்கிறோம்” என்பதே அவர்கள் பதில்.

அதோடுகூட, என் பாவங்களுக்காக பாதிரியாரிடம் சென்று பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்படிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து நானே கடவுளிடம் பேச முடியும் என்பது எனக்கு நியாயமாக தோன்றியது. மேலும் ஜெபங்களை மனப்பாடம் செய்து, திரும்ப திரும்ப சொல்வது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவும் என் மனம் இடங்கொடுக்கவில்லை. போப் தவறே செய்யாதவர் என்பதை நம்புவது எனக்கு ரொம்பவே கடினமாக இருந்தது. காலப்போக்கில், இந்த விஷயங்களில் என் சொந்த நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் என் ஆன்மீக வாழ்க்கையை தொடருவதுதான் நல்லது என பட்டது.

பைபிளை அறிந்துகொள்ள ஆவல்

எனக்கு எப்போதுமே பைபிளிடம் அதிக மதிப்பிருந்தது, அதை அறிந்துகொள்ளவும் ஆசைப்பட்டேன். தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் அல்லது கடவுளுடைய ஆதரவு தேவைப்பட்ட சமயத்தில் பைபிளை வாசிப்பது என் வழக்கம். கான்வென்டில் நாங்கள் பைபிளைப் படித்ததே இல்லை, ஆனால் தனிப்பட்ட விதத்தில் வாசித்து வந்தேன். ஏசாயா 43:10-12-⁠ல் ‘நீங்கள் எனக்குச் சாட்சிகள்’ என யெகோவா தேவன் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்தமான வசனம். எனினும் அந்த சமயத்தில் அந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

1965 வாக்கில் ரோமிலிருந்த பல்கலைக்கழகத்தில் பயிலுகையில் வாடிகன் ஏற்பாடு செய்து நடத்திய நான்கு வருட இறையியல் வகுப்பில் கலந்துகொண்டேன். ஆனால் அங்கு உபயோகிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் பைபிள் இடம் பெறவில்லை. ஆஸ்டாவிற்குத் திரும்பியதும் உலகளாவிய கிறிஸ்தவ ஒற்றுமையை முன்னேற்றுவிக்கும் அநேக கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன்; பல மத தொகுதிகளும் கத்தோலிக்கர் அல்லாத அமைப்புகளும் ஏற்பாடு செய்து நடத்தியவற்றிலும்கூட கலந்துகொண்டேன். அவை பைபிள் போதனைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தீராத தாகத்தை அதிகரித்தன. அப்போது ஒரே புத்தகத்தை போதிப்பதாக சொல்லிக் கொண்ட தொகுதிகளுக்கு இடையிலேயே ஏராளமான குழப்பம் நிலவியது!

பைபிளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளுதல்

நான் சமூக சேவை செய்து வந்த மையத்திற்கு 1982-⁠ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் வந்தார், பைபிள் பற்றிய கலந்தாலோசிப்பில் என்னையும் உட்படுத்த முயன்றார். என் வேலையில் மும்முரமாக இருந்தபோதிலும் பைபிளைப் பற்றி அறிந்துகொள்வது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. எனவே, “தயவுசெய்து என் ஸ்கூலுக்கு வாங்க, ஃப்ரீ டைமில் பேசலாம்” என சொன்னேன்.

அந்தப் பெண்மணியும் வந்தார், ஆனால் எனக்குத்தான் “ஃப்ரீ டைம்” கிடைக்கவில்லை. என் அம்மாவுக்கு கேன்சர் என தெரிந்ததும் லீவு எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவுவதற்குப் போனேன். 1983, ஏப்ரலில் அம்மா இறந்த பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பினேன்; அதற்குள்ளாக அந்த சாட்சியுடன் எனக்கு தொடர்பில்லாமல் போய்விட்டது. எனினும் சீக்கிரத்திலேயே சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் பைபிளைப் பற்றி என்னிடம் பேசுவதற்கு வந்தாள்; அவள் ஒரு யெகோவாவின் சாட்சி. சொந்தமாக நானே பைபிளில் வெளிப்படுத்துதல் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். எனவே அவளிடம் “வெளிப்படுத்துதல் 14-⁠ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த 1,44,000 பேர் யார்?” என கேட்டேன்.

நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போவார்கள் என எனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது; அதில் இந்த 1,44,000 பேர் பரலோகத்தில் தனியாக பிரிக்கப்படுவது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ‘இந்த 1,44,000 பேர் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?’ என யோசித்தேன். இந்தக் கேள்விகள் சதா என் மனதைக் குடைந்தன. அந்த சாட்சி என்னை சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்தாள், எப்போதும் வெளியே செல்ல வேண்டிய வேலையிருந்ததால் என்னை அவளால் சந்திக்கவே முடியவில்லை.

இறுதியில் அந்த சாட்சி அவளுடைய சபையின் மூப்பரான மார்கோ என்பவரிடம் என் விலாசத்தைக் கொடுத்திருக்கிறாள். ஒருவழியாக 1985, பிப்ரவரியில் அவர் என்னை கண்டுபிடித்தார். நான் படுபிஸியாக இருந்ததால் சில நிமிடம்தான் பேச முடிந்தது; ஆனால் மீண்டும் சந்திக்கும் நாளையும் நேரத்தையும் முடிவு செய்தோம். பின்னர் அவரும் அவருடைய மனைவி லினாவும் தவறாமல் என்னை வந்து சந்தித்தார்கள், பைபிளைப் புரிந்துகொள்ள உதவினார்கள். சீக்கிரத்திலேயே அடிப்படை கத்தோலிக்க போதனைகளான திரித்துவம், ஆத்துமா அழியாமை, நரக அக்கினி ஆகியவை உண்மையில் பைபிளில் இல்லை என்பதை என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.

சாட்சிகளுடன் கூட்டுறவு

யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டத்திற்கு சென்ற போது அது கத்தோலிக்க சர்ச்சிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. தனியாக பாடகர் குழுவினர் என்று இல்லாமல் எல்லாருமே அங்கு பாடினார்கள். பின்னர் அவர்கள் கூட்டங்களிலும் பங்கேற்றார்கள். அந்த அமைப்பிலிருந்த ஒவ்வொருவரும் “சகோதரர்கள்,” “சகோதரிகள்” என்பதையும் கண்ணாரக் கண்டேன். அவர்கள் அனைவரும் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் கரிசனையுடன் நடந்துகொண்டார்கள். இவை அனைத்தும் என் நெஞ்சை தொட்டன.

அந்த சமயத்தில், கன்னியாஸ்திரீ உடையில் கூட்டங்களுக்கு போனேன். ராஜ்ய மன்றத்தில் ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்தது சிலரை நிஜமாகவே நெகிழ வைத்தது. பாசமும் நேசமுமிக்க பெரிய குடும்பத்தார் மத்தியில் இருக்கும் உணர்வில் ஆனந்தமும் திருப்தியும் எனக்கு ஏற்பட்டது. மேலும், பைபிளைப் படிக்க படிக்க என் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைந்த அநேக நியமங்கள் கடவுளுடைய வார்த்தையோடு ஒத்துப் போகாததைக் கண்டேன். உதாரணமாக, கடவுளுடைய ஊழியர்கள் பிரத்தியேக உடை உடுத்துவதைப் பற்றி பைபிள் எங்கும் குறிப்பிடவில்லை. சர்ச்சில் குருமார் வகிக்கும் பதவிகளையும் பகட்டாரவாரமாக நடத்தப்படும் சடங்குகளையும் பார்த்தபோது, மனத்தாழ்மையுள்ள மூப்பர்கள் சபையை முன்நின்று வழிநடத்துவது பற்றி பைபிள் போதிப்பவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன.

என் காலுக்குக் கீழே உறுதியான ஆதாரமில்லாதது போல், ஏதோ புதைமணலில் நிற்பதைப் போல் உணர்ந்தேன். தவறான நம்பிக்கைகளுக்காக 24 வருடங்களை செலவழித்திருந்ததை அறிந்து கூனிக் குறுகிப்போனேன். எனினும் இதுதான் உண்மையான பைபிள் சத்தியம் என்பது எனக்குத் தெள்ளத் தெளிவானது. இந்த 44-⁠ம் வயதில் முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டுமென்ற எண்ணமே எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை அறிந்த பின்பு எப்படி கண்ணை மூடிக்கொண்டு என்னால் தொடர்ந்து நடக்க முடியும்?

முக்கிய தீர்மானம்

கான்வென்டைவிட்டு வெளியேறினால் என் கையில் சல்லிக் காசுகூட இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நீதிமான்கள் ‘கைவிடப்பட மாட்டார்கள், அவர்களுடைய மரபினர் பிச்சை எடுக்க மாட்டார்கள்’ என தாவீது சொன்ன வார்த்தைகளை நினைத்துக்கொண்டேன். (சங்கீதம் 37:25, பொது மொழிபெயர்ப்பு) ஓரளவு பாதுகாப்பை இழப்பேன் என அறிந்திருந்தாலும் கடவுள்மீது என் நம்பிக்கையை வைத்தேன்; ‘நான் ஏன் பயப்பட வேண்டும்?’ என எண்ணினேன்.

எனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டதாக என் குடும்பத்தார் நினைத்தார்கள். அது எனக்கு விசனமாக இருந்தாலும் “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன். (மத்தேயு 10:37) அதே சமயத்தில் சின்ன சின்ன விஷயத்திலும் சாட்சிகள் நடந்துகொண்ட விதம் எனக்கு உற்சாகத்தையும் பலத்தையும் அளித்தது. கன்னியாஸ்திரீ உடையில் தெருவில் நான் நடந்துபோவதைப் பார்க்கையில் அவர்கள் வலிய வந்து என்னிடம் நலம் விசாரித்தார்கள். இது சகோதரத்துவத்துடன் இன்னும் நெருங்கி வர செய்தது; அவர்களுடைய குடும்பத்தில் ஒருத்தியாகவே என்னை உணர வைத்தது.

கடைசியில் மதர் சுப்பீரியரிடம் சென்று, கான்வென்டை விட்டு வெளியேற தீர்மானித்ததற்கான காரணத்தை விளக்கினேன். என் தீர்மானத்திற்கான காரணத்தை பைபிளிலிருந்து காட்ட முயன்றபோது அவர் கேட்க மறுத்துவிட்டார்; “பைபிளிலிருந்து எதையாவது புரிந்துகொள்ள விரும்பினால் பைபிளில் கரைகண்டவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்!” என சொல்லிவிட்டார்.

என் தீர்மானத்தைக் கேட்டு கத்தோலிக்க சர்ச்சே அதிர்ச்சியடைந்தது. நடத்தை கெட்டவள், பைத்தியக்காரி என்றெல்லாம் அவர்கள் என்னை வசைபாடினார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பது என்னை நன்கு அறிந்திருந்தவர்களுக்கு தெரியும். என்னோடு வேலை செய்தவர்கள் ரொம்பவே வித்தியாசமான விதங்களில் நடந்துகொண்டார்கள். தைரியமான காரியத்தை நான் செய்துவிட்டதாக சிலர் பெருமிதப்பட்டார்கள். முற்றிலும் தவறான பாதையில் போக ஆரம்பித்ததாக நினைத்து சிலர் வருத்தப்பட்டார்கள். இன்னும் சிலர் என்மீது அனுதாபப்பட்டார்கள்.

1985, ஜூலை 4-⁠ம் தேதி கத்தோலிக்க சர்ச்சிலிருந்து வெளியேறினேன். முன்பு இவ்வாறு செய்தவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை அறிந்த சாட்சிகள் என் பாதுகாப்பை நினைத்து கவலைப்பட்டார்கள், சுமார் ஒரு மாதத்திற்கு என்னை ஒளித்து வைத்திருந்தார்கள். நான் தங்கியிருந்த இடத்திற்கே வந்து கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்கள், மீண்டும் கொண்டுவந்து விட்டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கும் வரை யார் கண்ணிலும் படாமல் இருந்தேன். பிறகு 1985, ஆகஸ்ட் 1-⁠ம் தேதி யெகோவாவின் சாட்சிகளுடன் ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பித்தேன்.

அந்த ஆகஸ்ட் மாத கடைசியில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டேன்; அப்போது நான் சர்ச்சிலிருந்து வெளியேறிய விஷயத்தை மீடியாக்கள் அறிய வந்து அதை பிரசுரித்தன. 1985, டிசம்பர் 14-⁠ம் தேதி முழுக்காட்டுதல் பெற்றபோது உள்ளூர் தொலைக்காட்சியும் செய்தித்தாளும் அதை மிகவும் மோசமானதாக கருதியதால் அதை மறுபடியும் பிரசுரித்தன; நான் செய்ததை ஊர் உலகமெல்லாம் அறிய வேண்டுமென அப்படி செய்தன.

கான்வென்டிலிருந்து வெளியேறிய போது என்னுடையது என சொல்லிக் கொள்ள பெயருக்குக்கூட என்னிடம் எதுவுமில்லை. எனக்கு வேலையில்லை, வீடில்லை, ஓய்வூதியமில்லை. எனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணியைப் பராமரிக்கும் பணியை சுமார் ஒரு வருடம் செய்தேன். 1986, ஜூலை மாதத்தில் பயனியர் ஆனேன்; யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்கள். புதிதாக வளர ஆரம்பித்த சிறிய சபை இருந்த இடத்திற்கு மாறிச் சென்றேன். அங்கு மொழி கற்றுக்கொள்ள வகுப்பு நடத்தினேன், வேறு பாடங்களையும் கற்பித்தேன்; இதற்கு, என் பள்ளிப் படிப்பு கைகொடுத்தது. இப்படியாக நேரத்தை வசதிக்கேற்ப திட்டமிட்டு உபயோகிக்க முடிந்தது.

அயல்நாட்டில் சேவித்தல்

இப்போது பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டதால் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அதைப் பற்றி சொல்ல ஆசைப்பட்டேன். எனக்கு பிரெஞ்சு மொழி தெரிந்ததால் அது பேசப்படும் ஓர் ஆப்பிரிக்க நாட்டுக்குப் போய் சேவை செய்வதைப் பற்றி யோசித்தேன். ஆனால் 1992-⁠ல் அண்டை நாடான அல்பேனியாவில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அந்த வருடக் கடைசியில் இத்தாலியிலிருந்து தொகுதியாக சில பயனியர்கள் அங்கு ஊழியம் செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள். அப்படி, எங்கள் சபையிலிருந்து மார்யோ, கிஸ்டினா ஃபாட்சியோ தம்பதியினரும் அனுப்பப்பட்டார்கள். அவர்களை வந்து சந்திக்கும்படியும் அல்பேனியாவில் ஊழியம் செய்வதைக் குறித்து சிந்திக்கும்படியும் எனக்கு அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். ஆக 52-வது வயதில், இருந்த ஓரளவு பாதுகாப்பை மீண்டும் உதறிவிட்டு முன் பின் தெரியாத நாட்டிற்கு செல்வது குறித்து ஜெபத்துடன் கவனமாக யோசித்து முடிவெடுத்தேன்.

1993, மார்ச் மாதம் அங்கு போய் சேர்ந்தேன். என்னுடைய சொந்த நாட்டிலிருந்து இது வெகு தொலைவில் இல்லாவிட்டாலும் வேறொரு உலகத்துக்கே வந்துவிட்டதைப் போன்ற உணர்வு உடனடியாக ஏற்பட்டது. இங்கு ஜனங்கள் எங்கு போனாலும் நடந்தே போனார்கள்; என்னால் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத அல்பேனிய மொழியை பேசினார்கள். அரசாங்கங்கள் மாறிக் கொண்டே இருந்ததால் அந்த நாட்டில் மாபெரும் மாற்றங்களும் நிகழ்ந்த வண்ணமிருந்தன. ஆனாலும் பைபிள் சத்தியத்திற்காக ஜனங்களிடம் தணியாத தாகம் இருந்தது; அவர்கள் வாசிப்பதிலும் படிப்பதிலும் ஆர்வம் காட்டினார்கள். பைபிள் மாணாக்கர்கள் மளமளவென ஆவிக்குரிய காரியங்களில் முன்னேறினார்கள், இது என் நெஞ்சைக் குளிர செய்தது, இந்தப் புதிய சூழலைப் பழகிக் கொள்ள உதவியது.

1993-⁠ல் அல்பேனியாவின் தலைநகரான டிரானேக்கு வந்தபோது அங்கு ஒரேவொரு சபை மட்டுமே இருந்தது; 100-⁠க்கும் சற்று அதிகமான சாட்சிகள் அந்த நாடெங்கும் பரவியிருந்தார்கள். அந்த மாதம் டிரானேயில் முதல் விசேஷ மாநாட்டு தினம் நடைபெற்றது; அதற்கு 585 பேர் வந்திருந்தார்கள், 42 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். மாநாட்டில் எனக்கு ஒன்றுமே புரியாவிட்டாலும் சாட்சிகள் பாடியதைக் கேட்டதும், அவர்கள் கவனமாக செவிகொடுத்ததைப் பார்த்ததும் என்னை நெகிழ வைத்தது. ஏப்ரல் மாதம் இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு வந்தது, அதில் 1,318 பேர் கலந்துகொண்டார்கள்! அது முதற்கொண்டு அல்பேனியாவில் கிறிஸ்தவ ஊழியம் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போட்டது.

டிரானேயில் இருக்கையில் நாலாவது மாடியிலுள்ள எனது வீட்டு பால்கனியிலிருந்து பார்க்கையில் ‘இந்த ஜனங்க எல்லாருக்கும் என்றாவது சத்தியத்தை சொல்ல முடியுமா?’ என யோசித்ததுண்டு. யெகோவா தேவன் அதை கவனித்துக் கொண்டார். இப்போது டிரானேயில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் 23 உள்ளன. அந்நாடு முழுவதிலுமுள்ள 68 சபைகளிலும் 22 தொகுதிகளிலும் 2,846 சாட்சிகள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்குள் இந்த அபார அதிகரிப்பு! 2002-⁠ல் நினைவு ஆசரிப்பில் 12,795 பேர் கலந்துகொண்டார்கள்!

அல்பேனியாவில், இந்த பத்தாண்டுகளில் முழுக்காட்டுதல் பெறும்படி சுமார் 40 பேருக்கு உதவியது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். அவர்களில் அநேகர் இப்போது பயனியர்களாக இருக்கிறார்கள், ஏதோவொரு விதத்தில் முழுநேர ஊழியத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வருடங்கள் முழுவதும் அல்பேனியாவில் நடைபெறும் ஊழியத்தில் உதவுவதற்கு ஆறு தொகுதிகளாக இத்தாலிய பயனியர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று மாதம் மொழிப் பயிற்சி அளிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது, கடைசி நான்கு வகுப்புகளை நடத்துவதற்கு எனக்கு அழைப்பு வந்தது.

சர்ச்சிலிருந்து வெளியேறுவது பற்றிய என் தீர்மானத்தை என் நண்பர்கள் முதலில் அறிந்தபோது அவர்கள் ஒரேயடியாக பாரா முகம் காட்டினார்கள். எனினும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு, நான் அமைதியோடும், சமாதானத்தோடும் வாழ்வதைப் பார்க்கையில் அவர்களுடைய இறுகிய மனது இப்போது இளகியிருக்கிறது. இன்னும் கன்னியாஸ்திரீயாக இருக்கும் என் 93 வயது அத்தை உட்பட குடும்பத்தார் ரொம்பவே ஆதரவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

யெகோவாவை அறிந்துகொண்ட நாள் முதலாக பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளிலும் அவர் என்னை தாங்கியிருக்கிறார்! அவருடைய அமைப்பை கண்டுபிடிக்க என்னை வழிநடத்தியிருக்கிறார். என் கடந்த காலத்தைத் திரும்பி பார்க்கையில் ஏழைகளுக்கும், வசதிவாய்ப்பற்றவர்களுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவ ஆசைப்பட்டதையும், கடவுளுடைய சேவையே என் உயிர்மூச்சாக இருக்க ஆசைப்பட்டதையும் எண்ணுகிறேன். எனவே, என் ஆன்மீக தாகம் தணியும்படி யெகோவா பார்த்துக்கொண்டதால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். (g03 6/22)

[பக்கம் 23-ன் படம்]

நான் பைபிளைக் கற்றுக்கொடுத்திருக்கும் அல்பேனிய குடும்பத்தார். பதினோரு பேர் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்

[பக்கம் 23-ன் படம்]

அல்பேனியாவில் நான் பைபிள் கற்றுக்கொடுத்த இந்தப் பெண்களில் பலர் இப்போது முழுநேர ஊழியம் செய்கிறார்கள்