Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரிகள் மீது வெறுப்பு அதிகமாகி வருகிறதா?

வரிகள் மீது வெறுப்பு அதிகமாகி வருகிறதா?

வரிகள் மீது வெறுப்பு அதிகமாகி வருகிறதா?

“நாள் பூரா மாடாய் உழைத்தும் ஊதியம் பறிபோகிறது.”​—⁠பாபிலோனிய பழமொழி, சுமார் பொ.ச.மு. 2300.

“சாவையும் வரியையும் தவிர இவ்வுலகில் வேறெதுவும் நிச்சயமில்லை.”​—⁠ஐ.மா. அரசியல் மேதை பென்ஜமின் ஃபிராங்ளின், 1789.

ரூபன் என்பவர் ஒரு சேல்ஸ்மேனாக வேலை பார்க்கிறார். வருஷாவருஷம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பாகம் வரி என்ற பெயரில் மாயமாய் மறைந்துவிடுகிறது. “சம்பாதிக்கிற காசெல்லாம் எங்கதான் போகுதுன்னே தெரியல” என புலம்புகிறார் அவர். “அரசாங்கம் சலுகைகளையெல்லாம் குறைத்துவிட்டதால், முன்னைவிட இப்போது குறைந்த சேவையே கிடைக்கிறது” என்றும் சொல்கிறார்.

நீங்கள் விரும்பினாலும்சரி விரும்பாவிட்டாலும்சரி, வரி கட்டுவது வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது. எழுத்தாளர் சார்ல்ஸ் ஆடம்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போது முதல் அரசாங்கங்கள் பல்வேறு வழிகளில் வருமானத்திற்கு வரி விதித்து வந்திருக்கின்றன.” வரிகளால் அடிக்கடி மனக்கசப்பும், சிலசமயங்களில் கலகமும் வெடித்திருக்கின்றன. “வரி செலுத்துவதைவிட நம் தலைபோவது எவ்வளவோ மேல்!” என்று சொல்லி பூர்வ பிரிட்டிஷ்காரர்கள் ரோமர்களிடம் சண்டை செய்தனர். பிரான்சில் உப்பு வரியை மக்கள் எதிர்த்ததால், பிரெஞ்சு புரட்சி வெடிப்பதற்கு அது அடிகோலியது; அந்தப் புரட்சியில் வரி வசூலிப்பவர்களின் தலை வெட்டப்பட்டது. இங்கிலாந்திற்கு எதிராக நடந்த ஐ.மா. சுதந்திர போருக்கு காரணம் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட கலவரங்களே.

அப்படியானால், வரி விதிப்புகளுக்கு எதிரான சீற்றம் இந்நாள் வரை புகைந்து கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. வளரும் நாடுகளில் வரி சட்டங்கள் பெரும்பாலும் “பயனற்றவையாகவும்,” “நியாயமற்றவையாகவும்” இருக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏழ்மையான ஓர் ஆப்பிரிக்க தேசத்தில், “300-⁠க்கும் அதிகமான உள்ளூர் வரிகள் இருக்கின்றன என்றும், திறமைமிக்க வேலையாட்கள் இருந்தும் நிர்வாகம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன என்றும்” ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். “தகுந்த முறையில் வரி வசூலித்து அதை சீராக பயன்படுத்தும் முறைகளும் அங்கு கிடையாது அல்லது அவை செயல்படுத்தப்படுவதில்லை, . . . இது துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்புகளை திறந்து வைக்கிறது.” ஓர் ஆசிய நாட்டில், “உள்ளூர் அதிகாரிகள் டஜன்கணக்கில் . . . சட்டவிரோதமாக வரி போட்டார்கள்​—⁠வாழைமரங்கள் வளர்ப்பது முதல் பன்றிகளை வெட்டுவது வரை பலவற்றிற்கும் சகட்டுமேனிக்கு வரி போட்டார்கள்; இவையெல்லாம் உள்ளூர் நிதி நிலையை உயர்த்துவதற்கு அல்லது தங்களுடைய பாக்கெட்டில் போட்டுக்கொள்வதற்கு” என பிபிசி நியூஸ் அறிக்கை செய்தது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பிளவு எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதாக இருக்கிறது. ஆஃப்ரிக்கா ரெக்கவரி என்ற ஐ.நா. பிரசுரம் இவ்வாறு கூறுகிறது: “வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கிவரும் வேளையில், வளரும் நாடுகள் விவசாயிகள் மீது வரி விதிக்கின்றன; இதுவே வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு பொருளாதார வேற்றுமைகளில் ஒன்று. . . . ஐமா வழங்கும் மானியத்தின் விளைவாக, பருத்தி ஏற்றுமதியால் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு கிடைத்திருக்க வேண்டிய வருடாந்தர வருவாயில் ஆண்டொன்றுக்கு 25 கோடி டாலர் குறைகிறது என உலக வங்கி ஆய்வுகள் கருத்துத் தெரிவிக்கின்றன.” ஆகையால், ஏற்கெனவே கிடைக்கக்கூடிய கொஞ்சநஞ்ச வருமானத்தையும் வரிகள் என்ற பெயரில் அரசாங்கம் பிடுங்கும்போது வளரும் நாடுகளிலுள்ள விவசாயிகள் இதைக் குறித்து கொதிப்படையலாம். ஓர் ஆசிய நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “[அரசாங்க அதிகாரிகள்] எப்பொழுதெல்லாம் இங்கு வருகிறார்களோ அப்பொழுதெல்லாம் நிச்சயம் பணம் கேட்கத்தான் வருகிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.”

சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் விவசாயிகளுடைய நிலத்திற்கு தீர்வை போட்டபோது இத்தகைய கொதிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் தென்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக அந்த விவசாயிகள் அச்சுறுத்தினார்கள். இப்படி வரி போட்டால் “விவசாயிகள் திவாலாகிவிடுவார்கள், அதோடு பண்ணை வேலையாட்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கும்” என விவசாயிகள் சார்பாக ஒருவர் பேசினார். சில சமயங்களில், வரி விதிப்பைக் கண்டு மக்கள் கொதித்தெழுவதால் இன்றும் வன்முறை வெடிக்கிறது. பிபிசி நியூஸ் இவ்வாறு அறிவிக்கிறது: “கடந்த ஆண்டில், அதிக வரிவிதிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய ஒரு கிராமத்திற்குள் போலீஸ் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இரண்டு [ஆசிய] விவசாயிகள் கொல்லப்பட்டனர்.”

ஆனால் வரி கட்டுவதை எதிர்ப்பது ஏழைகள் மட்டுமே அல்லர். செல்வந்தர்கள் அநேகரும் “கூடுதலான வரிகளைக் கட்ட மனமில்லாமல் இருக்கிறார்கள்; அப்படி அவர்கள் கட்டாவிட்டால் அவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான சேவைகளை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்பதை அறிந்தும் வரிகட்ட மனமில்லாமல் இருக்கிறார்கள்” என்பதை தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியது. மியூசிக், சினிமா, ஸ்போர்ட்ஸ், அரசியல் போன்ற துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்வது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கின்றன. வருமான வரியில் சரிவு (& வீழ்ச்சி?) என்ற ஆங்கில நூல் இவ்வாறு கூறுகிறது: “வரி சட்டத்திற்குக் கீழ்ப்படியும்படி சாதாரண குடிமக்களை உற்சாகப்படுத்தும் விஷயத்தில், நமது அரசாங்க உயர் அதிகாரிகள், அதாவது நமது ஜனாதிபதிகள் எந்த விதத்திலும் உதாரண புருஷர்களாக திகழவில்லை என்பது வருந்தத்தக்கது.”

எக்கச்சக்கமாகவும் அநியாயமாகவும் வரிகள் விதிப்பது திக்குமுக்காடச் செய்வது போல் இருப்பதாக ஒருவேளை நீங்கள் உணரலாம். அப்படியானால், வரி செலுத்துவதை நீங்கள் எப்படி கருத வேண்டும்? இது ஏதாவது நோக்கத்தை நிறைவேற்றுகிறதா? வரிச் சட்டங்கள் ஏன் பெரும்பாலும் சிக்கலானவையாக இருக்கின்றன, நியாயமற்றவையாகவும் தோன்றுகின்றன? இந்தக் கேள்விகளை பின்வரும் கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. (g03 12/08)

[பக்கம் 4-ன் படம்]

வளரும் நாடுகளில் ஏழைகள் வரிச் சுமையினால் நியாயமற்ற விதத்தில் பாரமடையலாம்

[படத்திற்கான நன்றி]

Godo-Foto