Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரத்தம் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொண்டேன்

இரத்தம் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொண்டேன்

இரத்தம் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொண்டேன்

ஒரு மருத்துவர் சொல்கிறார்

நான் ஆஸ்பத்திரி ஆடிட்டோரியத்தில் இருந்தேன்; ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிஸல்ட்டைப் பற்றி சில டாக்டர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன். இறந்த நோயாளிக்கு கொடிய புற்றுநோய்க் கட்டி வந்திருந்தது. “இந்த நோயாளிக்கு அளவுக்கதிகமாக இரத்தமேற்றியதால் ஹீமாலிஸிஸ் [இரத்த சிகப்பணுக்களின் சிதைவு] ஏற்பட்டது, சிறுநீரகமும் ஒரேயடியாக செயலிழந்துவிட்டது; அதனால்தான் அவர் இப்போது இறந்தார்” என்று நான் சொன்னேன்.

உடனடியாக ஒரு மருத்துவ பேராசிரியர் எழுந்து நின்று, “அப்படியென்றால் நாங்கள் தப்பான இரத்தத்தைக் கொடுத்துவிட்டதாக சொல்கிறீர்களா?” என்றார் ஆத்திரத்தோடு. “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை” என்றேன். பிறகு, அந்த நோயாளியின் சிறுநீரகத்தினுடைய சின்னஞ்சிறிய பகுதிகளை ஸ்லைடுகளில் போட்டுக் காட்டி இவ்வாறு சொன்னேன்: “சிறுநீரகத்தில் நிறைய இரத்த சிவப்பணுக்கள் சிதைந்திருப்பது தெரிகிறது, ஆகவே சிறுநீரகம் ஒரேயடியாக செயலிழந்துவிட்டதற்கு இதுதான் காரணம் என்ற முடிவுக்கு நாம் வரலாம். * அப்போது சூழ்நிலை இறுக்கமாகிவிட்டது, பயத்தில் என் நாவெல்லாம் வறண்டுவிட்டது. நான் அனுபவம் குறைந்த டாக்டர், அவரோ பேராசிரியர் என்பது எனக்கு புரியாமல் இல்லை, ஆனால் அதற்காக வாயை மூடிக்கொள்ள மனசு வரவில்லை.

இது நடந்த சமயத்தில் நான் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை. நான் 1943-⁠ம் வருடத்தில், ஜப்பானின் வட பகுதியிலுள்ள சென்டை நகரில் பிறந்தேன். என் அப்பா நோயியல் வல்லுநராகவும் மனநோய் மருத்துவராகவும் இருந்ததால் நானும் மருத்துவம் படிக்க முடிவு செய்தேன். 1970-⁠ல், மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது மாசூக்கோ என்ற இளம் பெண்ணை கல்யாணம் செய்தேன்.

நோயியல் துறையில் காலடி எடுத்து வைத்தேன்

நான் படிப்பை முடிக்கும் வரை செலவுகளை கவனிக்க மாசூக்கோ வேலை செய்தாள். மருத்துவத் துறை என்னை மிகவும் கவர்ந்தது. மனித உடல் எத்தனை அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து பிரமித்தேன்! இருந்தாலும், படைப்பாளர் ஒருவர் இருப்பதைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. மருத்துவ ஆராய்ச்சி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் என்று நினைத்தேன். ஆகவே மருத்துவரான பிறகும், தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன்; நோயியல் துறையில், அதாவது நோயின் இயல்புகள், காரணங்கள், விளைவுகள் ஆகியவற்றை ஆராயும் துறையில் காலடி எடுத்து வைத்தேன்.

புற்றுநோயால் இறந்த நோயாளிகளின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, இரத்தமேற்றுவதால் உண்மையிலேயே பயன் உண்டா என சந்தேகப்பட ஆரம்பித்தேன். புற்றுநோய் முற்றிய நோயாளிகளுக்கு, இரத்தக் கசிவால் இரத்த சோகை ஏற்படலாம். கீமோதெரப்பியால் இரத்த சோகை மேலும் மோசமடையும் என்பதால் டாக்டர்கள் பெரும்பாலும் இரத்தமேற்றும்படி பரிந்துரைக்கிறார்கள். இருந்தாலும், இரத்தமேற்றுவதால் புற்றுநோய் இன்னுமதிகமாக பரவுமோ என்று சந்தேகப்பட்டேன். எப்படியோ இன்று, இரத்தமேற்றுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது யாவரறிந்த உண்மையாகிவிட்டது. ஆகவே, இரத்தமேற்றுவதால் புற்றுநோய் கட்டி மறுபடியும் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது, நோயாளி பிழைக்கும் வாய்ப்போ குறைகிறது. *

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவம் 1975-⁠ல் நடந்தது. அந்நோயாளியை கவனித்து வந்தது அந்தப் பேராசிரியர்தான்; அதுவும் அவர் ஒரு இரத்த இயல் நிபுணர். ஆகவேதான் இரத்தமேற்றியதால் நோயாளி இறந்துவிட்டதாக நான் சொன்னபோது அவருக்கு அப்படி கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும் நான் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்தேன், அவர் மெது மெதுவாக அமைதியானார்.

வியாதியோ மரணமோ இல்லை

கிட்டத்தட்ட அந்த சமயத்தில்தான் யெகோவாவின் சாட்சியான ஒரு வயதான பெண்மணி என் மனைவியை சந்தித்துப் பேசினார். அவர் “யெகோவா” என்ற வார்த்தையை சொன்னவுடன், அதன் அர்த்தம் என்னவென்று என் மனைவி கேட்டாள். “உண்மையான கடவுளுடைய பெயர்தான் யெகோவா” என்று அந்த பெண்மணி சொன்னார். என் மனைவி மாசூக்கோ சிறுவயதிலிருந்தே பைபிளை படித்து வந்திருந்தாள், இருந்தாலும் அவள் பயன்படுத்திய பைபிளில் கடவுளுடைய பெயர் வருகிற இடங்களில் “கர்த்தர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடவுள், தனிப்பட்ட பெயரை உடைய ஒரு நபர் என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது!

அந்த வயதான சாட்சியுடன் மாசூக்கோ உடனடியாக பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். ராத்திரி சுமார் 1:00 மணிக்கு நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பியபோது, “ஒரு விஷயம் தெரியுமா, நோயும் சாவும் இல்லாத காலம் வரப்போகுதுன்னு பைபிள்ல சொல்லியிருக்கு” என்று ரொம்ப பரபரப்புடன் சொன்னாள். “அப்படியா, கேட்கறதுக்கே நல்லாயிருக்கே!” என்றேன் நான். அவளோ, “புதிய உலகம் சீக்கிரத்தில வரப்போவதால் இனி நீங்க நேரத்தை வீணாக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்” என்றாள். நான் டாக்டர் வேலையை விட்டுவிட வேண்டுமென்று அவள் சொல்வதாக நினைத்து கோபப்பட்டேன்; அதனால் எங்கள் உறவில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது.

இருந்தாலும் என் மனைவி நம்பிக்கையை இழந்துவிடவில்லை. பொருத்தமான வசனங்களை கண்டுபிடிக்க உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்தாள், பிறகு அவற்றை என்னிடம் காட்டினாள். விசேஷமாக பிரசங்கி 2:22, 23 என் இதயத்தைத் தொட்டது; “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? . . . இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே” என்று அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது; ஏனென்றால் ராத்திரி பகலாக மருத்துவத்திற்கு என்னையே அர்ப்பணித்திருந்தேன், இருந்தாலும் உண்மையான திருப்தி கிடைக்காமல் திண்டாடினேன்.

1975-⁠ம் வருடம், ஜூலை மாதம், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு என் மனைவி போனவுடன் நானும் அங்கு போக திடீரென்று முடிவு செய்தேன். என்னை பார்த்ததும் என் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி. மற்ற சாட்சிகளும் என்னை கனிவாக வரவேற்றார்கள். அதுமுதல் எல்லா ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கும் தவறாமல் போனேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிற்பாடு ஒரு சாட்சி என்னுடன் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் என் மனைவியை முதன்முதலாக சந்தித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் முழுக்காட்டுதல் பெற்றாள்.

இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றேன்

கிறிஸ்தவர்கள் ‘இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும்’ என்று பைபிள் சொல்வதை சீக்கிரத்தில் தெரிந்துகொண்டேன். (அப்போஸ்தலர் 15:28, 29; ஆதியாகமம் 9:4) இரத்தமேற்றுவதால் உண்மையிலேயே பயன் உண்டா என்று நான் ஏற்கெனவே சந்தேகப்பட்டுக் கொண்டிருந்ததால், இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கவில்லை. * ‘படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்றால், அவரே அப்படி சொல்கிறார் என்றால், அதுதான் சரியாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தேன்.

அதுமட்டுமல்ல, வியாதிக்கும் மரணத்திற்கும் காரணம் ஆதாமிடமிருந்து நாம் வழிவழியாக பெற்றிருக்கும் பாவம் என்பதையும் கற்றுக்கொண்டேன். (ரோமர் 5:12) அந்த சமயத்தில், இரத்தக் குழாய்கள் தடிப்பு நோய் (arteriosclerosis) சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து வந்தேன். வயதாக வயதாக நம் இரத்தக் குழாய்கள் தடிமனாகவும் குறுகலாகவும் ஆகின்றன; இதனால் இதய நோய், பெருமூளை இரத்தக்குழாய் கோளாறுகள், சிறுநீரக நோய் போன்றவை ஏற்படுகின்றன. நாம் சுதந்தரித்திருக்கும் அபூரணமே இவற்றிற்குக் காரணம் என்பது நியாயமாக பட்டது. அதன் பிறகு மருத்துவத்தின் மீது எனக்கிருந்த ஆர்வம் தணிய ஆரம்பித்தது. யெகோவா தேவனால் மட்டுமே வியாதியையும் மரணத்தையும் ஒழிக்க முடியும்!

பைபிளைப் படிக்க ஆரம்பித்து ஏழு மாதங்களுக்குப் பிற்பாடு, அதாவது மார்ச் 1976-⁠ல் யூனிவர்ஸிட்டி ஆஸ்பத்திரியில் என் படிப்பிற்கு முழுக்குப் போட்டேன். மறுபடியும் மருத்துவராக என்னால் பணியாற்ற முடியாதோ என பயந்தேன்; ஆனால் இன்னொரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. மே 1976-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன். முழுநேர ஊழியராக, அதாவது பயனியராக சேவிப்பதே என் வாழ்க்கையை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழி என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே ஜூலை 1977-⁠ல் பயனியர் சேவையை ஆரம்பித்தேன்.

இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஆதரித்தல்

நவம்பர் 1979-⁠ல் மாசூக்கோவும் நானும் ஷிபா மாவட்டத்திலிருந்த ஒரு சபைக்கு மாறிச் சென்றோம்; அங்கே பிரசங்கிப்பவர்கள் அதிகமாக தேவைப்பட்டார்கள். அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் எனக்கு பகுதிநேர வேலை கிடைத்தது. முதல் நாள் வேலைக்கு சென்றபோது, அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூட்டமாக என்னை சூழ்ந்துகொண்டார்கள். “நீங்கள் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால், இரத்தம் தேவைப்படும் ஒரு நோயாளி இங்கே கொண்டுவரப்படும்போது என்ன செய்வீர்கள்?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவேன் என்று நான் மரியாதையோடு விளக்கினேன். இரத்தத்திற்கு பதிலாக மாற்று மருந்துகள் இருப்பதைப் பற்றி விவரமாக சொல்லி, நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மிகச் சிறந்த சிகிச்சை அளிப்பேன் என்று விளக்கினேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசிய பிறகு, “எனக்குப் புரிகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக இரத்தம் இழந்திருக்கும் நோயாளி கொண்டுவரப்பட்டால், அவரை நாங்களே கவனித்துக் கொள்கிறோம்” என்று தலைமை அறுவை மருத்துவர் சொன்னார். அவர் கறாரான ஆசாமி என்ற பெயர் பெற்றிருந்தார்; ஆனால் அன்று நாங்கள் பேசிய பிறகு இருவரும் நல்ல நண்பர்களானோம். என் நம்பிக்கைகளுக்கு அவர் எப்போதுமே மரியாதை காட்டினார்.

இரத்தத்திற்கு மரியாதை​—⁠பரீட்சிக்கப்பட்டது

ஷிபாவில் நாங்கள் இருந்தபோது யெகோவாவின் சாட்சிகளுடைய ஜப்பான் கிளை அலுவலகம் புதிதாக எபினாவில் கட்டப்பட்டு வந்தது. பெத்தேல் என்று அழைக்கப்படும் அந்த வளாக கட்டிடங்களைக் கட்ட உதவிய வாலண்டியர்களுக்கு மருத்துவ உதவி தருவதற்காக நானும் என் மனைவியும் வாரத்திற்கு ஒருமுறை அங்கு சென்று வந்தோம். சில மாதங்களுக்குப் பிறகு, எபினா பெத்தேலில் முழுநேரமாக சேவை செய்வதற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். மார்ச் 1981-⁠ல், 500-⁠க்கும் அதிகமான வாலண்டியர்கள் தங்கிய தற்காலிக கட்டிடங்களில் நாங்களும் தங்கினோம். காலை வேளைகளில் கட்டுமான இடத்திலிருந்த பாத்ரூம்களையும் டாய்லட்டுகளையும் நான் சுத்தம் செய்தேன், பிற்பகலில் மருத்துவ பரிசோதனைகளை செய்தேன்.

நான் கவனித்துக்கொண்ட நோயாளிகளில் ஒருவர் இல்மா இஸ்லாப்; இவர் 1949-⁠ல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பானுக்கு மிஷனரியாக வந்தவர். அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருந்தது; சில மாதங்களே உயிரோடு இருப்பார் என டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். ஆயுசைக் கூட்டுவதற்காக இரத்தமேற்றிக்கொள்ள இல்மா விரும்பவில்லை; தன்னுடைய கடைசி நாட்களை பெத்தேலில் செலவிட அங்கு வந்தார். அந்த சமயத்தில், சிவப்பணுக்களை பெருகச் செய்யும் எரித்ரோபோயிட்டின் போன்ற மருந்துகள் இல்லை. ஆகவே அவருடைய ஹீமோகுளோபின் சிலசமயங்களில் 3 அல்லது 4 கிராம் வரை குறைந்தது! (பொதுவாக 12 முதல் 15 கிராம் இருக்க வேண்டும்.) ஆனாலும், என்னால் முடிந்தளவுக்கு மிகச் சிறந்த சிகிச்சையளித்தேன். இல்மா தன் இறுதி மூச்சுவரை கடவுளுடைய வார்த்தையில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டினார்; அவர் இறந்தது ஜனவரி 1988-⁠ல், அதாவது சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு!

கடந்த பல வருடங்களாக, யெகோவாவின் சாட்சிகளுடைய ஜப்பான் கிளை அலுவலகத்தின் வாலண்டியர்கள் அநேகருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அருகிலிருந்த ஆஸ்பத்திரிகளைச் சேர்ந்த டாக்டர்கள் இரத்தமில்லாமல் ஆபரேஷன்கள் செய்ய உதவியிருப்பது பாராட்டத்தக்க விஷயம். அநேக சமயங்களில், ஆபரேஷன் செய்யப்படும் முறையை கிட்டே இருந்து பார்க்க நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்; சிலசமயங்களில் ஆபரேஷன் செய்யவும் உதவியிருக்கிறேன். இரத்தம் சம்பந்தமான யெகோவாவின் சாட்சிகளுடைய தீர்மானத்தை மதிக்கும் அப்படிப்பட்ட டாக்டர்களை ரொம்பவும் போற்றுகிறேன். அவர்களோடு பணியாற்றியபோது, என் நம்பிக்கைகளைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களில் பேச முடிந்தது. அந்த டாக்டர்களில் ஒருவர் சமீபத்தில் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டப்பட்டார்.

யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமில்லாமல் சிகிச்சையளிக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிகள் மருத்துவத் துறைக்கு பெரும் பயனளித்திருக்கின்றன. இரத்தமில்லா சிகிச்சைகள், இரத்தமேற்றுவதைத் தவிர்ப்பதால் வரும் நன்மைகளுக்கு அத்தாட்சி அளித்திருக்கின்றன. நோயாளிகளின் உடல்நிலை அதிக வேகமாக தேறுகிறது, சிக்கல்களும் அதிகமாக ஏற்படுவதில்லை என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

தலைசிறந்த மருத்துவரிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ளுதல்

மருத்துவத் துறையில் ஏற்படும் புதிய முன்னேற்றங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க முயற்சி செய்கிறேன். அதேசமயத்தில் தலைசிறந்த மருத்துவரான யெகோவாவிடமிருந்தும் தொடர்ந்து கற்றுவருகிறேன். அவர் வெளிப்புறத்தை மட்டும் பார்க்காமல் முழு நபரையும் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) ஒரு டாக்டராக நான் ஒவ்வொரு நோயாளியையும் ஒரு முழு நபராகப் பார்க்கிறேன்; அவரது வியாதியை மட்டுமே பார்ப்பதில்லை. இதனால் சிறந்த விதத்தில் மருத்துவ உதவியளிக்க முடிகிறது.

நான் இன்னமும் பெத்தேலில் சேவை செய்கிறேன். இப்போதும் எல்லாவற்றையும்விட அதிக சந்தோஷம் தருவது, யெகோவாவைப் பற்றியும் இரத்தத்தைப் பற்றிய அவருடைய நோக்குநிலையைப் பற்றியும் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி வருவதுதான். தலைசிறந்த மருத்துவரான யெகோவா தேவன் விரைவில் எல்லா வியாதியையும் மரணத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஜெபம்.​—⁠யாசுஷி ஐசாவா சொன்னது. (g03 12/08)

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 4 “முன்னொரு சமயம் இரத்தமேற்றுதலால், கர்ப்பம் தரித்ததால், அல்லது உறுப்பு மாற்று சிகிச்சையால் அலர்ஜிக்குள்ளான நோயாளிக்கு . . . இரத்தமேற்றுதலின் தாமத எதிர்விளைவான சிவப்பணு சிதைவு” ஏற்படலாம் என டாக்டர் டனிஸ் எம். ஹார்மனிங் எழுதிய நவீன இரத்த சேமிப்பு மற்றும் இரத்தமேற்றுதல் பழக்கங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இரத்தமேற்றுதலால் நோயாளியின் உடலில் விபரீத விளைவை ஏற்படுத்தும் ஆன்ட்டிபாடீஸை, “இரத்தமேற்றுதலுக்கு முன்பு செய்யப்படும் முறைப்படியான சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது.” டெய்லீஸ் நோட்ஸ் ஆன் ப்ளட் சொல்கிறபடி, “பொருந்தாத . . . இரத்தத்தை மிகக் குறைவாக ஏற்றினால்கூட [சிவப்பணு சிதைவு] ஏற்படலாம். சிறுநீரகம் செயலிழக்கும்போது நோயாளியின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு சேர்ந்து விடுகிறது. ஏனென்றால் இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரகங்களால் அகற்ற முடிவதில்லை.”

^ பாரா. 8 ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் ஆன்காலஜி, ஆகஸ்ட் 1988 இவ்வாறு அறிக்கை செய்தது: “ஆபரேஷன் சமயத்தில் இரத்தமேற்றப்படும் புற்றுநோய் நோயாளிகளின் உடல்நிலை, இரத்தமேற்றப்படாமல் ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகளின் உடல்நிலையைவிட மிகக் குறைவாகவே தேறுகிறது.”

^ பாரா. 16 இரத்தத்தைப் பற்றிய பைபிள் போதனைகளை அதிகமாக தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருக்கும், உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டைக் காண்க.

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

“இரத்தத்திற்கு பதிலாக மாற்று மருந்துகள் இருப்பதைப் பற்றி விவரமாக சொல்லி, நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மிகச் சிறந்த சிகிச்சை அளிப்பேன் என்று விளக்கினேன்”

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

“இரத்தமில்லா சிகிச்சைகள், இரத்தமேற்றுவதைத் தவிர்ப்பதால் வரும் நன்மைகளுக்கு அத்தாட்சி அளித்திருக்கின்றன”

[பக்கம் 15-ன் படங்கள்]

மேலே: பைபிள் பேச்சு கொடுக்கையில்

வலது: இன்று என் மனைவி மாசூக்கோவுடன்