Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தவறான ஆசைகளை நீங்கள் எவ்வாறு விரட்டலாம்?

தவறான ஆசைகளை நீங்கள் எவ்வாறு விரட்டலாம்?

பைபிளின் கருத்து

தவறான ஆசைகளை நீங்கள் எவ்வாறு விரட்டலாம்?

“நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.”ரோமர் 7:⁠21.

உயர்ந்த கிறிஸ்தவ நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி மற்ற அப்போஸ்தலரைவிட பவுல் அதிகமாய் உற்சாகப்படுத்தினார் என்றே சொல்லலாம். (1 கொரிந்தியர் 15:9, 10) என்றாலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை கள்ளங்கபடமின்றி அவரே ஒத்துக்கொண்டார். மனதிற்கும் தவறான ஆசைகளுக்கும் இடையே சதா போராட்டம் இருப்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார். அப்போஸ்தலன் பவுலைப் போல நீங்களும் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உண்மையில் பார்த்தால், அபூரணர்களாகிய நம்மில் யாருக்குத்தான் இப்படிப்பட்ட மனப்போராட்டம் இல்லை?

பெரும்பாலோருக்கு தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாக இருக்கிறது. சிலர் ஒழுக்கயீனமான பாலியல் ஆசைகளோடு போராடுகிறார்கள். வேறு சிலரோ சூதாட்டம், புகைபிடித்தல், போதைப்பொருள், அல்லது மதுபான பழக்கங்கள் ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். தீய மற்றும் அசுத்தமான ஆசைகள் நம்மைப் பற்றிக்கொள்ளும்போது, அவற்றை நாம் எவ்வாறு விரட்டலாம்? அதற்கு என்ன உதவி இருக்கிறது? தவறான ஆசைகளுக்கு எதிரான போராட்டம் என்றாவது முடிவுக்கு வருமா?

அன்பு​—⁠தவறான ஆசைகளை விரட்ட உதவும் முக்கிய சாட்டை

நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மிகப் பெரிய கட்டளைகளை இயேசு சுட்டிக்காட்டினார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்பதே முதல் கட்டளை. (மத்தேயு 22:37) இயேசு சொன்னது போல நாம் கடவுள் மீது அன்புகூர்ந்தால், அவரைப் பிரியப்படுத்துவதே நமது மிகப் பெரிய ஆசையாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால், அந்த நியாயமான ஆசை, மனதில் ஊறிப்போன தவறான ஆசைகளையும்கூட எதிர்த்துப் போராட நிச்சயம் நமக்கு உதவும்! இது வெறுமனே ஒரு சிறந்த கொள்கையல்ல. நிஜவாழ்க்கையில் கிறிஸ்தவர்களில் லட்சக்கணக்கானோர் தவறான ஆசைகளை தினமும் வெற்றிகரமாக எதிர்த்து வருகிறார்கள். கடவுள் மீது நீங்கள் எப்படி இத்தகைய பலமான பந்தத்தை வளர்த்துக் கொள்ளலாம்? அவருடைய படைப்பிலும், பைபிளிலும், சொந்த அனுபவத்திலும் நாம் காணும் அவருடைய நற்குணத்தை நன்றியுடன் தியானிப்பதன் மூலமே.​—சங்கீதம் 116:12, 14; 119:7, 9; ரோமர் 1:20.

இயேசு சொன்ன இரண்டாவது மிகப் பெரிய கட்டளை: “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:39) “அன்பு . . . அயோக்கியமானதைச் செய்யாது,” “தன்னல அக்கறைகளை நாடாது” (NW) என அப்போஸ்தலன் பவுல் கூறினார். இத்தகைய சுயநலமற்ற அன்பு பிறருக்குத் தீங்கிழைக்கும் எந்தவொரு நடத்தையையும் தவிர்ப்பதற்கு நமக்கு உதவுகிறது. (1 கொரிந்தியர் 13:4-8) இதை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? நம்மை மற்றவர்களுடைய இடத்தில் வைத்துப் பார்த்து, அவர்களுடைய உணர்ச்சிகளிலும் நீடித்த நலனிலும் உள்ளப்பூர்வமாக அக்கறை காட்டுவதன் மூலமே.​—பிலிப்பியர் 2:4.

என்ன உதவி இருக்கிறது?

சரியானதை செய்வது நமக்கு எவ்வளவு கடினம் என்பதை கடவுள் புரிந்துகொள்வதால், பல்வேறு விதங்களில் நமக்கு உதவியை ஏற்பாடு செய்திருக்கிறார். தீமையை வெறுப்பதற்கும் தம் மீது ஆரோக்கியமான மரியாதையை வளர்த்துக் கொள்வதற்கும் தமது வார்த்தையாகிய பைபிளின் வாயிலாக நமக்கு கற்பிக்கிறார். (சங்கீதம் 86:11; 97:10) தவறான ஆசைகளுக்கு அடிபணிந்து போவதால் வரும் படுபயங்கரமான விளைவை எடுத்துக்காட்டுகிற நிஜவாழ்க்கை சம்பவங்கள் பைபிளில் உள்ளன. அதோடு, நாம் கடவுளிடம் கேட்டால், நம்மை பலப்படுத்துவதற்கு இந்த அண்டத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த பரிசுத்த ஆவியை அவர் தருவார் என இயேசு கூறினார். (லூக்கா 11:13) சரியானதை செய்வதற்கு நாம் எடுத்திருக்கும் திடதீர்மானத்தை இது பலப்படுத்தும். தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடுகிற சக கிறிஸ்தவர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் பரஸ்பர ஆதரவும் உற்சாகமும் மற்றொரு ஏற்பாடாகும். (எபிரெயர் 10:24, 25) இத்தகைய பயனுள்ள செல்வாக்குகள் தீய செல்வாக்குகளை நொறுக்கி வீழ்த்துவதால், சரியானதை செய்வதற்கான போராட்டத்தில் நமக்கு உதவி கிடைக்கிறது. (பிலிப்பியர் 4:8) இத்தகைய அணுகுமுறை உண்மையிலேயே பயனளிக்குமா?

சமுதாயத்தில் பெரும் ‘குடி’மகனாக பேரெடுத்த ஃபீடெல் என்பவரை சிந்தித்துப் பாருங்கள். அவர் புகைபிடித்தார், சூதாடினார், குடிவெறியில் மற்றவர்களுடன் சண்டை போட்டார். பைபிள் படிப்பும் யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவும் இந்தப் பழக்கவழக்கங்களை மேற்கொள்ள அவருக்கு உதவின. இப்பொழுது தனது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் மேம்பட்ட வாழ்க்கையை அனுபவித்து மகிழுகிறார்.

‘ஆனால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறையே நான் செய்தால் என்ன செய்வது?’ என ஒருவர் கேட்கலாம். இது ஏற்படலாம் என்பதை அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:1, 2) ஆம், பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய மனப்பூர்வமாக போராடுகிற ஒருவருடைய தவறுகளை இயேசுவின் பலி மூடிவிடுகிறது. இத்தகைய ஏற்பாடு நமக்கு இருப்பதால், சரியானதைச் செய்யும் போராட்டத்தில் தளர்ந்துவிட யாருக்குத்தான் நியாயமான காரணம் இருக்கிறது?

தவறான ஆசைகள் வெல்லப்படும்

கடவுள் மீதும் அயலார் மீதும் அன்பை வளர்த்துக்கொண்டு கடவுள் தரும் உதவியைப் பயன்படுத்திக் கொண்டால், தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடுவதில் இப்பொழுதும்கூட நாம் வெற்றி பெறலாம். மேலும், இந்தப் போராட்டம் என்றென்றும் தொடராது என கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. கடவுள் தரும் ஆவிக்குரிய ஏற்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் சீக்கிரத்தில் ஆன்மீக ரீதியிலும் சரீர ரீதியிலும் பூரண சுகம் பெறுவார்கள். (வெளிப்படுத்துதல் 21:3-5; 22:1, 2) பாவத்தின் பிடியிலிருந்தும் பாவத்தினால் உண்டாகும் மரணத்திலிருந்தும் அவர்கள் விடுதலை அடைவார்கள். (ரோமர் 6:23) மறுபட்சத்தில், அசுத்தமான மற்றும் தீய ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே குறியாக இருக்கிறவர்கள் இத்தகைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியாது.​—வெளிப்படுத்துதல் 22:15.

தவறான ஆசைகளோடு நாம் நடத்தும் போராட்டத்திற்கு முடிவு உண்டு என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! அப்படிப்பட்ட ஆசைகள் முற்றிலும் ஒழிக்கப்படும், நிரந்தரமாக ஒழிக்கப்படும். அப்போது எப்பேர்ப்பட்ட நிம்மதி கிடைக்கும்! (g03 12/08)