Skip to content

அவர்களுடைய உடையையும் தலைமுடியையும் பார்த்து தப்புக்கணக்குப் போட்டேன்

அவர்களுடைய உடையையும் தலைமுடியையும் பார்த்து தப்புக்கணக்குப் போட்டேன்

அவர்களுடைய உடையையும் தலைமுடியையும் பார்த்து தப்புக்கணக்குப் போட்டேன்

ஐலீன் ப்ரம்பா

‘பழைய ஒழுங்கு ஜெர்மன் பாப்டிஸ்ட் பிரதரன்’ என்ற மதத்தில்தான் நான் இருந்தேன். அது 1708-ல் ஜெர்மனியில் உருவான ரொம்பக் கறாரான, பிற்போக்கான ஒரு மதம். தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்கிறபடி, கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை எல்லா மக்களும் கேட்க வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் இந்த பிரதரன் மதம் உருவாக்கப்பட்டது. அதனால்தான், உலகத்திலுள்ள நிறைய நாடுகளுக்கு அது மிஷனரிகளை அனுப்பியது.

1719-ல், அலெக்ஸாண்டர் மாக் என்பவரின் தலைமையில் ஒரு சின்னத் தொகுதி அமெரிக்காவுக்கு வந்தது. அதன் பிறகு, அந்தத் தொகுதி நிறைய பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது. ஒவ்வொரு பிரிவின் நம்பிக்கைகளும் வித்தியாசமாக இருந்தன. எங்களுடைய சபையில் 50 பேர்தான் இருந்தோம். பைபிளைப் படிப்பதும், சபைத் தலைவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே செய்வதும்தான் ரொம்ப முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம்.

கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாகவே என்னுடைய குடும்பம் இந்த மதத்தில்தான் இருந்தது. 13 வயதில் நான் இந்தச் சபையில் ஞானஸ்நானம் எடுத்தேன். கார், டிராக்டர், போன், ரேடியோ, எலெக்ட்ரிக் சாதனங்கள் போன்ற எதையுமே நாங்கள் வைத்திருக்கவும் கூடாது, பயன்படுத்தவும் கூடாது என்றுதான் சபையில் கற்றுக்கொடுத்தார்கள். சபையில் இருக்கும் பெண்கள் ரொம்ப சாதாரணமாகத்தான் டிரஸ் பண்ணிக்கொள்வோம். எங்கள் முடியை வெட்டிக்கொள்ள மாட்டோம். தலைக்குத் தொப்பி அல்லது முக்காடு போட்டுக்கொள்வோம். ஆண்கள் தாடி வைத்திருப்பார்கள். இந்த உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது என்று இயேசு சொல்லியிருப்பதால், உலக ஜனங்களைப் போல துணிமணியும் மேக்கப்பும் நகையும் போட்டுக்கொள்வது ஒரு பாவம் என்று நினைத்தோம். பெருமைபிடித்தவர்கள்தான் இதையெல்லாம் போட்டுக்கொள்வார்கள் என்றும் நினைத்தோம்.

பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதால் அதற்கு ரொம்ப மதிப்பு காட்ட வேண்டுமென்று எங்களுக்கு சொல்லித்தந்தார்கள். என்னுடைய வீட்டில் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன் எல்லாரும் ஒன்றாகக் கூடிவருவோம். அப்பா பைபிளிலிருந்து ஒரு அதிகாரத்தை வாசித்து சில குறிப்புகளைச் சொல்வார். பிறகு, நாங்கள் எல்லாரும் மண்டிபோடுவோம், அப்பா ஜெபம் செய்வார். அதன் பிறகு, அம்மா பரமண்டல ஜெபத்தைச் சொல்வார். இப்படி நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து கடவுளை வணங்கும் நேரத்துக்காக நான் ஆசை ஆசையாகக் காத்திருப்பேன்.

இண்டியானாவில் டெல்ஃபி என்ற ஊருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பண்ணையில்தான் நாங்கள் இருந்தோம். எங்கள் வயலில் விதவிதமான காய்கறிச் செடிகளை வைத்திருந்தோம். அதையெல்லாம் அறுவடை செய்து, ஒரு குதிரை வண்டியில் எடுத்துக்கொண்டு, வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் போய் விற்றோம். கடினமாக உழைப்பது கடவுளுக்குச் செய்யும் ஒரு சேவை என்று நினைத்தோம். அதனால், ஞாயிற்றுக்கிழமையைத் தவிர மற்ற எல்லா நாளும் நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தோம். ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் என்பதால் அன்று மட்டும் எந்த வேலையும் செய்யக் கூடாதென்று எங்கள் சபையில் சொல்லியிருந்தார்கள். ஆனால் சிலசமயம், எங்கள் பண்ணையில் நிறைய வேலை இருக்கும் என்பதால் கடவுளுக்காக நேரம் ஒதுக்குவது ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.

கணவரும் பிள்ளைகளும்

1963-ல் எனக்குக் கல்யாணம் ஆனது. அப்போது எனக்கு 17 வயதுதான். என் கணவர் ஜேம்ஸும் பிரதரன் சபையைச் சேர்ந்தவர்தான். அவருடைய குடும்பத்தாரும் தலைமுறை தலைமுறையாக இந்தச் சபையில்தான் இருந்தார்கள். நாங்கள் இரண்டு பேருமே கடவுளுக்குச் சேவை செய்ய ரொம்ப ஆசைப்பட்டோம். எங்களுடைய சபைதான் உண்மையான கிறிஸ்தவ சபை என்றும் நினைத்தோம்.

1975-ல் எங்களுக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். ரெபேக்கா என்ற மகளும் இருந்தாள். 1983-ல் என்னுடைய கடைசி மகன் பிறந்தான். நானும் என் கணவரும் கடினமாக உழைத்தோம், சிக்கனமாக செலவு செய்தோம், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தோம். எங்கள் பெற்றோரிடமிருந்தும் பிரதரன் சபையிலிருந்தும் கற்றுக்கொண்ட பைபிள் விஷயங்களை எங்கள் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க முயற்சி செய்தோம்.

பிரதரன் சபையில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, நாம் டிரஸ் பண்ணிக்கொள்ளும் விதம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏனென்றால், ஒருவர் டிரஸ் பண்ணிக்கொள்ளும் விதத்தைப் பார்த்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று நம்பினோம். யாராவது தலைமுடியை ரொம்ப ஸ்டைலாக வைத்துக்கொண்டால் அவர் பெருமைபிடித்தவர் என்று நினைத்தோம். ஒருவர் பெரிய பெரிய டிசைன் போட்ட துணிமணிகளைப் போட்டுக்கொண்டால் ரொம்ப பந்தா காட்டுவதாக நினைத்தோம். சிலசமயங்களில், பைபிள் சொல்லும் விஷயங்களைவிட இந்த விஷயங்கள்தான் எங்களுக்கு ரொம்ப முக்கியமாகத் தெரிந்தது.

சிறையில் ஒரு அனுபவம்

என் கணவரின் தம்பி ஜெசியும் பிரதரன் சபையைச் சேர்ந்தவர்தான். அவர் ராணுவத்தில் சேர மறுத்ததால் கிட்டத்தட்ட 1968-ல் அவரை சிறையில் போட்டார்கள். அங்கே அவர் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தார். போர் செய்வது பைபிளின்படி தவறு என்றுதான் யெகோவாவின் சாட்சிகளும் நம்புகிறார்கள் என்று அவர் தெரிந்துகொண்டார். (ஏசாயா 2:4; மத்தேயு 26:52) பைபிள் விஷயங்களைப் பற்றி ஜெசி அவர்களோடு அடிக்கடி பேசினார். அவர்களை அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. பைபிளை நன்றாகப் படித்த பிறகு, அவரும் யெகோவாவின் சாட்சியாக ஆகிவிட்டார். ஆனால், அதைத் தெரிந்துகொண்டபோது எங்கள் மனம் உடைந்துவிட்டது.

பைபிளில் கற்றுக்கொண்ட விஷயங்களை ஜெசி என் கணவரிடம் சொன்னார். அதுமட்டுமல்ல, என் கணவருக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் தவறாமல் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதையெல்லாம் படித்த பிறகு என் கணவருக்கு பைபிள்மேல் இன்னும் ஆர்வம் வந்துவிட்டது. கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை அவருக்கு எப்போதுமே இருந்ததுதான். ஆனாலும், கடவுளிடம் நெருக்கமாக இல்லாததுபோல் உணர்ந்தார். அதனால், கடவுளோடு நெருங்கிப்போக எது உதவி செய்தாலும் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ரொம்பவே ஆசைப்பட்டார்.

எங்களைப் போன்ற நம்பிக்கைகள் வைத்திருக்கும் மற்ற மதங்களும் இந்த உலகத்தின் பாகமாக இருப்பதாகத்தான் நாங்கள் நினைத்தோம். ஆனாலும், எங்கள் சபையை நடத்தியவர்கள் அந்த மதங்களின் புத்தகங்களைப் படிக்கச் சொன்னார்கள். என் அப்பாவுக்கு யெகோவாவின் சாட்சிகள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. அவர்கள் கொடுக்கிற காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை நாங்கள் தொடவே கூடாது என்று அவர் நினைத்தார். கடைசியில் என் கணவரே அந்தப் பத்திரிகைகளைப் படிப்பதைப் பார்த்தபோது எனக்குப் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. எங்கே அவர் வழிதவறிப் போய்விடுவாரோ என்று நான் ரொம்ப பயந்தேன்.

பிரதரன் சபையில் சொல்லிக்கொடுத்த சில போதனைகளின் மேல் என் கணவருக்கு ஏற்கெனவே சந்தேகம் இருந்தது. அவை பைபிளோடு ஒத்துப்போகவில்லை என்று நினைத்தார். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்யக் கூடாது, அப்படிச் செய்தால் அது ஒரு பாவம் என்று சபையில் சொல்லித்தந்தார்கள். அந்த நாளில் மிருகங்களுக்கு வேண்டுமானால் தண்ணீர் கொடுக்கலாம், அதைத் தவிர ஒரு புல்லைக்கூட பிடுங்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், இதற்கெல்லாம் பைபிளிலிருந்து ஒரு தெளிவான காரணத்தை அவர்களால் எடுத்துக் காட்ட முடியவில்லை. அதனால், போகப் போக அந்த மாதிரி போதனைகளின் மேல் எனக்கும் சந்தேகம் வந்தது.

இத்தனை நாளாக எங்களுடைய மதம்தான் உண்மையான மதம் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அதைவிட்டு வெளியே வந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் யோசித்தோம். அதனால், அதை விட்டுவிட்டு வருவது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், பைபிளில் சொல்லாத விஷயங்களைச் செய்யும் ஒரு மதத்தில் தொடர்ந்து இருப்பதற்கு எங்கள் மனசாட்சி ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் 1983-ல், நாங்கள் ஏன் அந்த மதத்தைவிட்டுப் போகிறோம் என்று ஒரு கடிதத்தில் எழுதி சபையில் கொடுத்தோம். அந்தக் கடிதத்தை எல்லார் முன்பும் வாசிக்க சொன்னோம். அதன் பிறகு, எங்களை சபையிலிருந்து விலக்கிவிட்டார்கள்.

உண்மை மதத்தைத் தேடினோம்

நாங்கள் உண்மையான மதத்தைத் தேட ஆரம்பித்தோம். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என இல்லாமல், மற்றவர்களுக்குச் சொல்லித்தருவதைக் கடைப்பிடிக்கிறவர்களைத் தேடினோம். முதலில், போருக்கு ஆதரவு காட்டிய எல்லா மதங்களையும் ஒதுக்கிவிட்டோம். எளிமையாக வாழ்கிறவர்களும் எளிமையாக டிரஸ் பண்ணுகிறவர்களும்தான் உண்மையிலேயே இயேசுவின் சீஷர்கள் என்று நினைத்தோம். அதனால், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் மதங்களைத் தேடினோம். 1983-லிருந்து 1985 வரைக்கும் நாடு முழுக்க பயணம் செய்து மெனோனைட்டுகள், க்வேக்கர்கள் போன்ற எளிமையான மதங்களை ஆராய்ந்தோம்.

அந்தச் சமயத்தில், இண்டியானாவில் காம்டன் என்ற ஊருக்குப் பக்கத்தில் இருந்த எங்கள் பண்ணைக்கு யெகோவாவின் சாட்சிகள் வந்தார்கள். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்டோம், ஆனால் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னோம். அவர்கள் போரில் கலந்துகொள்ளாத விஷயம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும், அவர்கள் உலக மக்களைப் போலத்தான் நடந்துகொள்கிறார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால், எங்களைப் போல் அவர்கள் எளிமையாக டிரஸ் பண்ணவில்லை. அதனால், அவர்கள் உண்மை மதமாக இருக்க முடியாது என்று நினைத்தேன். பெருமைபிடித்தவர்கள்தான் மாடர்ன் டிரஸ் போடுவார்கள், நவீன பொருள்களை வைத்திருப்பார்கள் என்றெல்லாம் நம்பினேன்.

என் கணவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்குப் போக ஆரம்பித்தார். எங்களுடைய பையன்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு போனார். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னையும் வரச் சொன்னார், ஆனால் நான் போகவில்லை. ஒருநாள் அவர் என்னிடம், “அவங்க சொல்லிக்கொடுக்குற விஷயங்கள நீ ஏத்துக்கலனா பரவால, அவங்க ஒருத்தர ஒருத்தர் எப்படி நடத்துறாங்கனு மட்டும் வந்து பாரு” என்று சொன்னார். ஏனென்றால், அதுதான் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.

கடைசியில், ராஜ்ய மன்றத்துக்குப் போய்ப் பார்க்க நான் முடிவு பண்ணினேன். ஆனால், ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். சாதாரண டிரஸையும் தொப்பியையும் போட்டுக்கொண்டு போனேன். என்னுடைய சில பையன்கள்கூட சாதாரண டிரஸில்தான் வந்தார்கள், செருப்புகூடப் போடவில்லை. ஆனாலும், யெகோவாவின் சாட்சிகள் எங்களிடம் வந்து அன்பாகப் பேசினார்கள். பார்க்க நாங்கள் வித்தியாசமாக இருந்தபோதும் எங்களோடு அவர்கள் ரொம்ப நன்றாகப் பழகியது என்னை யோசிக்க வைத்தது.

அவர்கள் காட்டிய அன்பு எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும், கூட்டத்தில் பார்வையாளராக மட்டும் இருந்துவிட்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்தேன். அவர்கள் பாடியபோது நான் எழுந்து நிற்கவும் இல்லை, பாடவும் இல்லை. கூட்டம் முடிந்ததும் அவர்களிடம் கேள்விக்குமேல் கேள்வி கேட்டேன். ஒரு வசனத்தின் அர்த்தத்தைப் பற்றி அல்லது எனக்குச் சரியென்று படாத விஷயங்களைப் பற்றிக் கேட்டேன். அதுவும், மனதில் பட்டதை அப்படியே நேரடியாகக் கேட்டுவிட்டேன். இருந்தாலும், அவர்கள் யாருமே கோபப்படவில்லை, அக்கறையோடு எனக்குப் பதில் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, ஒரே கேள்வியை எத்தனை பேரிடம் கேட்டாலும் அவர்கள் எல்லாரும் ஒரே விதமான பதிலைத்தான் கொடுத்தார்கள். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிலசமயம், பதிலை அவர்கள் எழுதிக் கொடுத்தார்கள். வீட்டுக்குப் போய்ப் படித்துப் பார்ப்பதற்கும் யோசிப்பதற்கும் அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.

1985-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக டென்னெஸீயில் இருக்கும் மெம்ஃபிஸ் நகரத்துக்கு நாங்கள் குடும்பமாகப் போனோம். அப்போதுகூட சாதாரண டிரஸில்தான் போனோம். என் கணவர் தாடியோடுதான் வந்தார். இடைவேளை நேரங்களில் எல்லாரும் எங்களிடம் வந்துவந்து பேசினார்கள். அவர்கள் அன்போடும் அக்கறையோடும் பழகியது எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல, அவர்களுக்குள் இருந்த ஒற்றுமையைப் பார்த்து நாங்கள் அசந்துபோய்விட்டோம். ஏனென்றால், எந்த ஊரில் நடக்கும் கூட்டத்துக்கு நாங்கள் போனாலும் அவர்கள் சொல்லித்தந்த விஷயங்கள் ஒரே மாதிரிதான் இருந்தன.

யெகோவாவின் சாட்சிகள் காட்டிய அன்பும் அக்கறையும் என் கணவருக்கு ரொம்பப் பிடித்திருந்ததால் அவர்களோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார். படிக்கும் விஷயங்கள் உண்மைதானா என்று உறுதி செய்துகொள்வதற்காக அவர் எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தார். (அப்போஸ்தலர் 17:11; 1 தெசலோனிக்கேயர் 5:21) கடைசியாக, அதுதான் உண்மை என்று புரிந்துகொண்டார். ஆனால், என் மனதில் ஒரு பெரிய போராட்டமே நடந்துகொண்டிருந்தது. ஒருபக்கம், சரியானதைச் செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தது. இன்னொரு பக்கம், நான் “மாடர்னாக” மாறி, “உலகத்தாராக” ஆகிவிடக் கூடாதென்று தோன்றியது. நான் முதன்முதலில் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டபோது, என் மடியில் ஒரு பக்கத்தில் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளையும் இன்னொரு பக்கத்தில் நவீன புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளையும் வைத்திருந்தேன். நான் ஏமாந்துபோய்விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வசனத்தையும் இரண்டு பைபிளிலுமே எடுத்துப் பார்த்தேன்.

என் மனம் தெளிவடைந்தது

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கப் படிக்க நிறைய உண்மைகளைத் தெரிந்துகொண்டோம். உதாரணத்துக்கு, கடவுள் ஒரு திரித்துவம் கிடையாது… அவர் ஒருவர்தான்… நமக்குள் அழியாத ஆத்துமா என்ற ஒன்று கிடையாது… என்றெல்லாம் தெரிந்துகொண்டோம். (உபாகமம் 6:4; 1 கொரிந்தியர் 8:5, 6) அதேபோல், நரகம் என்பது இறந்தவர்களின் நிலையைத்தான் குறிக்கிறதே தவிர, இறந்தவர்கள் வாட்டி வதைக்கப்படும் இடத்தைக் குறிப்பதில்லை என்று தெரிந்துகொண்டோம். (யோபு 14:13; சங்கீதம் 16:10; பிரசங்கி 9:5, 10; அப்போஸ்தலர் 2:31) குறிப்பாக நரகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதுதான் எங்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது. ஏனென்றால், எங்களுடைய பழைய மதத்தில் ஆளாளுக்கு ஒரு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனாலும், யெகோவாவின் சாட்சிகள் எப்படி உண்மை மதமாக இருக்க முடியும் என்ற சந்தேகம் என் மனதில் இருந்துகொண்டேதான் இருந்தது. ஏனென்றால், நான் எதிர்பார்த்தபடி அவர்கள் “எளிமையான” வாழ்க்கை வாழ்ந்ததாகத் தெரியவில்லை. அதனால், அவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருப்பதாகத்தான் நினைத்தேன். அதேசமயம், இயேசுவின் கட்டளைப்படி கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அவர்கள் எல்லாருக்கும் சொல்லிவந்தார்கள். அதனால், எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது!—மத்தேயு 24:14; 28:19, 20.

யெகோவாவின் சாட்சிகள் காட்டிய அன்புதான், விஷயங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து பார்க்க எனக்கு உதவியது. சபையில் இருந்த எல்லாருமே எங்கள் குடும்பத்தின்மேல் அக்கறை காட்டினார்கள். அடிக்கடி எங்களை வந்து பார்த்தார்கள். சிலசமயம், எங்கள் பண்ணையில் பாலும் முட்டையும் வாங்க வந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு எங்களைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே நல்ல ஜனங்கள் என்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. எங்களுக்கு பைபிளை சொல்லிக்கொடுத்தது ஒருவர்தான் என்றாலும், சபையில் இருந்த மற்றவர்கள்கூட எந்த நேரத்தில் எங்கள் வீட்டுப்பக்கம் வந்தாலும் எங்களைப் பார்த்துவிட்டுத்தான் போனார்கள். யெகோவாவின் சாட்சிகள் இப்படியெல்லாம் செய்ததால்தான், அவர்கள் உண்மையான அன்பும் அக்கறையும் காட்டுவது எங்களுக்குப் புரிந்தது.

பக்கத்து சபையில் இருந்த யெகோவாவின் சாட்சிகள்கூட எங்கள்மேல் அக்கறை காட்டினார்கள். டிரஸ் பண்ணும் விஷயத்தில் எனக்குக் குழப்பமாகவே இருந்த சமயத்தில், பக்கத்து சபையில் இருந்த கே ப்ரிக்ஸ் என்ற யெகோவாவின் சாட்சி என்னைப் பார்க்க வந்தார். அவர் சாதாரணமாகத்தான் டிரஸ் பண்ணிக்கொள்வார், மேக்கப்பும் போட மாட்டார். அதனால், அவரிடம் மனம்விட்டுப் பேசுவது எனக்கு சவுகரியமாக இருந்தது. அதன் பிறகு, லூயிஸ் ஃப்ளோரா என்ற சகோதரர் என்னைப் பார்க்க வந்தார். அவரும் “எளிமையான” ஒரு மதத்திலிருந்து யெகோவாவின் சாட்சியாக மாறியவர்தான். எனக்குள் இருந்த குழப்பத்தை என் முகத்தைப் பார்த்தே அவர் தெரிந்துகொண்டார். பிறகு, என் குழப்பத்தைத் தீர்ப்பதற்காகப் பத்துப் பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அவர் என்மேல் காட்டிய அக்கறையைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது. அவருடைய கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தேன்.

ஒருசமயம், ஏசாயா 3:18-23-ஐயும் 1 பேதுரு 3:3, 4-ஐயும் எனக்கு விளக்கும்படி ஓடெல் என்ற ஒரு பயணக் கண்காணியிடம் கேட்டேன். “கடவுளுக்கு பிடிச்ச மாதிரி வாழணும்னா சாதாரண டிரஸ் போடுறது அவசியம்னு இந்த வசனங்கள் சொல்லுதுதானே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “தொப்பி போடுறதுல ஏதாவது தப்பு இருக்கா? ஜடை பின்னுறது தப்பா?” என்றெல்லாம் கேட்டார். அது என்னை யோசிக்க வைத்தது. நான் முன்பு இருந்த மதத்தில் பெண்கள் தொப்பி போட்டுக்கொள்வார்கள், பெண் பிள்ளைகளுக்கு ஜடையும் பின்னிவிடுவோம். அதனால், அந்த மதத்தின் நம்பிக்கைகளில் முரண்பாடு இருந்ததைப் புரிந்துகொண்டேன். அதோடு, அந்தப் பயணக் கண்காணி காட்டிய பொறுமையும் அன்பும் என் மனதைத் தொட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக என் மனம் தெளிவானது. ஆனாலும், ஒரு விஷயத்தை மட்டும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. பெண்கள் முடியை வெட்டிக்கொள்ளலாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சபையிலிருந்த மூப்பர்கள் இதைப் பற்றி என்னிடம் பேசினார்கள். ‘சில பெண்களுக்கு முடி ஓரளவுதான் வளரும், ஆனா மத்த பெண்களுக்கு ரொம்ப நீளமா வளரும். அதுக்காக இவங்க அவங்களவிட நல்லவங்கனு சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்கள். அதோடு, டிரஸ் பண்ணிக்கொள்ளும் விஷயமும் முடி வெட்டும் விஷயமும் ஒருவருடைய மனசாட்சியோடு சம்பந்தப்பட்டது என்பதைப் புரிய வைத்தார்கள். இது சம்பந்தமாக நான் படித்துப் பார்க்க சில கட்டுரைகளையும் கொடுத்தார்கள்.

நாங்கள் உண்மையைப் புரிந்துகொண்டோம்

கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்கிறவர்களை நாங்கள் தேடினோம், கடைசியில் கண்டுபிடித்துவிட்டோம். “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 13:35) யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான அன்பு காட்டுகிறார்கள் என்று எங்களுக்கு ரொம்பத் தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆனாலும், எங்களுடைய மூத்த பிள்ளைகள் நேத்தனுக்கும் ரெபேக்காவுக்கும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஏனென்றால், எங்களுடைய பழைய மதம்தான் உண்மை என்று நினைத்து அதில் அவர்கள் ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். ஆனால், பைபிளில் இருக்கும் உண்மைகளை நாங்கள் அவர்களுக்குக் காட்டினோம். அதோடு, யெகோவாவின் சாட்சிகள் காட்டிய அன்பை அவர்களே பார்த்தார்கள். இதெல்லாம் அவர்களுடைய மனதை மாற்றிவிட்டது.

ரெபேக்காவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கடவுளோடு நெருக்கமாக இருக்க வேண்டுமென்றுதான் எப்போதுமே ஆசைப்பட்டாள். கடவுள் நம் தலையில் எதையுமே எழுதி வைக்கவில்லை என்று தெரிந்துகொண்டபோது கடவுளிடம் மனம்விட்டு ஜெபம் செய்ய அவளால் முடிந்தது. அதோடு, கடவுள் ஒரு திரித்துவம் அல்ல, அவர் உண்மையான ஒரு நபர், அவரைப்போல் நாம் நடந்துகொள்ள முடியும் என்றெல்லாம் தெரிந்துகொண்டபோது கடவுளிடம் இன்னும் நெருக்கமானாள். (எபேசியர் 5:1) பழங்காலத்து பைபிள் வார்த்தைகளைச் சொல்லி நாம் ஜெபம் செய்ய வேண்டியது இல்லை என்று புரிந்துகொண்டபோது ரொம்ப சந்தோஷப்பட்டாள். ஜெபத்தைப் பற்றியும், இந்தப் பூமியைக் கடவுள் ஒரு பூஞ்சோலையாக மாற்றி நம்மை என்றென்றும் வாழ வைக்கப்போகிறார் என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டபோது, கடவுளோடு அவளுக்கு ஒரு புதிய பந்தம் உருவானதுபோல் இருந்தது.—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

இப்போது யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம்

என் கணவரும் நானும் எங்களுடைய ஐந்து மூத்த பிள்ளைகளும்—நேத்தன், ரெபேக்கா, ஜார்ஜ், டானியல், ஜான்— 1987-ல் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளாக ஆனோம். ஹார்லி 1989-லும் சைமன் 1994-லும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இப்போது நாங்கள் குடும்பமாக, இயேசு கொடுத்த வேலையைச் செய்துவருகிறோம். அதாவது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி எல்லாருக்கும் சொல்லிவருகிறோம்.

எங்கள் மகன்கள் நேத்தன், ஜார்ஜ், டானியல், ஜான், ஹார்லி, அதோடு மகள் ரெபேக்கா யெகோவாவின் சாட்சிகளுடைய அமெரிக்க கிளை அலுவலகத்தில் சேவை செய்திருக்கிறார்கள். ஜார்ஜ் 14 வருஷங்களாக அங்கு சேவை செய்துவருகிறான். சைமனும் 2001-ல் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சமீபத்தில் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய ஆரம்பித்தான். எங்களுடைய எல்லா மகன்களுமே யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் மூப்பர்களாகவோ உதவி ஊழியர்களாகவோ இருக்கிறார்கள். என் கணவர் மிஸ்சௌரியில் இருக்கும் தேயர் சபையில் மூப்பராகச் சேவை செய்கிறார். நான் ஊழியத்தை சுறுசுறுப்பாகச் செய்துவருகிறேன்.

இப்போது எங்களுக்கு ஜெஸிக்கா, லதீஷா, காலப் என்ற மூன்று பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுடைய பிஞ்சு மனதில் யெகோவாமேல் அன்பு வளருவதற்கு அவர்களுடைய பெற்றோர் உதவி செய்வதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. யெகோவா தன்னுடைய குடும்பத்தில் எங்கள் குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. உண்மையான அன்பு காட்டுகிறவர்கள்தான் அவருடைய மக்கள் என்று புரிந்துகொள்ளவும் அவர்களைக் கண்டுபிடிக்கவும் அவர் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதற்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்.

சிலர் கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ மனதார ஆசைப்படுகிறார்கள். ஆனால், பைபிள் சொல்வதைவிட அவர்களுடைய மதம் சொல்வதுதான் முக்கியம் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல் சிக்கியிருக்கும் ஆட்களைப் பார்க்கும்போது எங்கள் மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. இப்போது நாங்கள் அனுபவிக்கிற சந்தோஷம் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. முன்பு நாங்கள் வீடு வீடாகப் போய் காய்கறிகளை விற்றோம். ஆனால் இப்போது, வீடு வீடாகப் போய் கடவுளுடைய அரசாங்கம் கொண்டுவரப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி சந்தோஷமாகச் சொல்கிறோம். யெகோவாவின் மக்கள் எங்களிடம் காட்டிய பொறுமைக்கும் அன்புக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை, அதை நினைக்கும்போதே என் கண்கள் குளமாகின்றன!