Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பிள்ளைகளும் பாட்டும்

பாடுவது, “உணர்ச்சியை வெளிக்காட்டுவதற்கான முக்கிய வழி; இது பிள்ளைகளின் குணநல வளர்ச்சியை முன்னேற்றுவிக்கிறது” என ஜெர்மனியில் வெளியாகும் உடல்நல பத்திரிகை கெசுன்ட்ஹைட் என்பதில் காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் மிகாயேல் ஃபுக்ஸ் எழுதுகிறார். எனினும், “கடந்த 20-⁠க்கும் அதிகமான வருடங்களில் பிள்ளைகளுடைய குரல்வளம் உண்மையிலேயே குறைந்திருக்கிறது. அவர்களுடைய குரலின் தொனியும் மாறுபட்டிருக்கிறது” என ஃபுக்ஸ் ஆதங்கப்படுகிறார். அதற்கு அவர் இரண்டு காரணங்களைச் சொல்லுகிறார். முதல் காரணம், “இன்று பிள்ளைகள் வீட்டில் அந்தளவுக்குப் பாடுவதில்லை. முன்பெல்லாம் குடும்பத்தார் தங்கள் ஓய்வுநேரங்களில் பாட்டுப் பாடி இசைக் கருவிகளை இசைத்து நேரத்தைக் கழித்தார்கள், இப்போதோ அவர்கள் எல்லாரும் சேர்ந்து டிவி முன் உட்கார்ந்துவிடுகிறார்கள், இசையைக் கேட்க மட்டுமே செய்கிறார்கள்.” இரண்டாவது காரணம், அப்படியே அவர்கள் பாடினாலும் ராக், பாப் பாடகர்களின் முரட்டுத்தனமான குரலை காப்பியடிக்கவே முயலுகிறார்கள். “அத்தகைய இசை நட்சத்திரங்களைக் காப்பியடிக்க பிள்ளைகள் முயலுகையில் தங்கள் குரல் உறுப்புகளுக்கு அதிக கஷ்டம் கொடுக்கிறார்கள்” என எழுதுகிறார் ஃபுக்ஸ். இப்படி செய்வதால் அவர்களது குரல்வளையும் கழுத்து தசைகளும் பெரும் அழுத்தத்திற்கு உட்படுகின்றன. இதனால், அவர்களது குரல் நாண்களில் திசுக் கட்டிகள்கூட வளரலாம், அதன் காரணமாக, குரல் இன்னும் கர்ணகடூரமாகலாம். (g03 11/08)

வெள்ளப் பெருக்கை தப்பிப்பிழைக்கும் எறும்புகள்

மழை வரும்போது எறும்புகள் என்ன செய்கின்றன? எல்லா வகை எறும்புகளும் நிலத்தடியில் வாழாவிட்டாலும் அப்படி வாழும் சில எறும்புகள் வெள்ளப் பெருக்கை தப்பிப்பிழைக்க அருமையான உத்திகளைக் கையாளுவதாக த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது. வெப்பமண்டல காட்டிலுள்ள குறிப்பிட்ட வகை எறும்புகள் தங்களது “புற்று வாசலில் ஒரு துளி [தண்ணீரை] கண்ட மாத்திரத்தில் எச்சரிக்கை செய்தியை அறிவிக்க ஒரு முனையிலிருந்து மறு முனைமட்டும் ஓடுகின்றன” என விவரிக்கிறார்கள் எறும்பு நிபுணர்களான டாக்டர் எட்வர்ட் ஓ. வில்சன் மற்றும் பர்டு ஹால்டாப்லர். “அடைபடாத சுரங்கப் பாதைகள் வழியாகவும், சில சமயங்களில் ஒரேடியாக புற்றைவிட்டும் வெளியேறுவதற்கு சக புற்றுவாசிகளுக்கு உதவுவதற்காக வாசனை தடயத்தை அவை விட்டுச் செல்கின்றன.” 30 வினாடிக்குள் அந்தப் புற்றுவாசிகளில் பெரும்பாலானவற்றை அவற்றால் கூட்டி சேர்க்க முடிகிறது. தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களிலும் தென் அமெரிக்காவின் வடபகுதியிலும் உள்ள ஃபயர் ஏன்ட் எனப்படும் ஒரு வகை எறும்புகளில், “முதிர்ந்த எறும்புகள், ராணி எறும்பு, அவளுடைய குட்டிகள் என அனைத்தும் புற்றிலிருந்து சமதளத்திற்கு ஏறி, பெருகி வரும் வெள்ளத்தில் மிதக்க ஆரம்பிக்கின்றன. பெரும்பாலானவை உயிர் தப்புகின்றன . . . இப்படி மிதக்கும் இந்த மாபெரும் எறும்புக் கூட்டம் இறுதியில் புல்லை அல்லது புதர்களைப் பிடித்துக்கொண்டு தப்பித்துக்கொள்கிறது; பின்னர் தண்ணீர் வடிந்ததும் அந்த எறும்புகள் தங்கள் ‘வீடுகளுக்கே’ திரும்பிவிடுகின்றன” என த டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. (g03 11/08)

அதிக எடையால் வரும் ஆபத்துக்கள்

“40 வயதில் அதிக எடை உள்ளவர்கள் எடை குறைந்தவர்களைவிட மூன்று வருடங்கள் முன்னதாகவே இறப்பதற்கு சாத்தியமிருக்கிறது; அதாவது, புகைபிடிப்பது எப்படி அதிக ஆபத்தானதாக இருக்கிறதோ அதே போல நடுத்தர வயதில் அதிக எடையுடன் இருப்பதும் வாழ்நாள் காலத்தைக் குறைத்துவிடும்” என த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “நீங்கள் 35-லிருந்து 45 வயதுக்குள் அதிக எடை உள்ளவர்களாக இருந்து ஆனால், பிற்பாடு உங்களுக்கு கொஞ்சம் எடை குறைந்தாலும்கூட இறப்பதற்கான சாத்தியம் அதிகமுள்ளது என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது” என்றார் எடை குறைக்கும் கிளினிக் உள்ள மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் செர்ஷ் ஷாபூர். “இள வயதிலிருந்தே நீங்கள் எடையைக் குறைக்க முயல வேண்டுமென்பதே அதன் அர்த்தம். எடையை பொருட்படுத்தாமல் நீண்ட காலம் அப்படியே விட்டுவிட்டிருந்தால் ஏற்கெனவே ஆரோக்கியம் சீரழிய ஆரம்பித்திருக்கலாம்.” இவ்வாறு எடையைக் குறைப்பது புற்றுநோயால் வரும் மரணங்களிலிருந்தும் பாதுகாக்கும். அமெரிக்கன் கான்சர் சொஸைட்டி, 9,00,000 பேரை வைத்து 16 வருடங்கள் நடத்திய ஆராய்ச்சிக்குப் பிறகு, “அதிகளவு எடையால் ஆண்களில் 14 சதவீதத்தினருக்கும் பெண்களில் 20 சதவீதத்தினருக்கும் புற்றுநோயால் மரணம் ஏற்படலாம்” என்ற முடிவுக்கு வந்திருப்பதாக டைம்ஸ் சொல்கிறது. ஆக, பல்வகை புற்றுநோய்களுக்கும் அதிக எடைக்கும் சம்பந்தமிருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. (g03 11/22)

சர்ச்சுகள்மீது அவநம்பிக்கை

“ஜெர்மானியர்கள் சர்ச்சின்மீது அல்ல, போலீஸ் மீதும் இராணுவத்தின் மீதுமே அளவுகடந்த நம்பிக்கை வைக்கிறார்கள்” என அறிக்கை செய்கிறது லைப்ட்ஸிகர் ஃபால்க்சைடுங் என்ற செய்தித்தாள். உலக பொருளாதார மன்றம் நடத்திய “நம்பிக்கை பற்றிய சுற்றாய்வு” ஒன்றில், 17 முக்கிய பொது அமைப்புகளின் வரிசையில் சர்ச்சுகள் கடைசியில் இடம்பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பின்மை பெருகிவரும் இக்காலங்களில் “நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும்” அமைப்புகளான போலீஸ், இராணுவம் போன்றவற்றின் மீதே ஜெர்மானியர்கள் அளவுகடந்த நம்பிக்கை வைக்கிறார்கள் என சமூகவியலர் ஆர்மின் நாஸஹி சொன்னார். ஏன் சர்ச்சுகள் மீது இந்தளவுக்கு அவநம்பிக்கை? “மத மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிற போதிலும், தங்கள் அடிப்படை பிரச்சினைகளை சர்ச் தீர்த்து வைக்கும் என மக்கள் நம்புவதில்லை” என சொல்கிறார் நாஸஹி. ஜெர்மனியிலுள்ள சர்ச்சுகளால் “சடங்குகளை மட்டுமே அளிக்க” முடியும் என்கிறார் அவர். (g03 12/08)

தொலைதூர சேவை மையங்கள்

ஐக்கிய மாகாணங்களிலுள்ள பிலடெல்ஃபியாவிலிருந்து ஒரு பெண்மணி உள்ளூர் வாடிக்கையாளர் சேவை எண்ணை டையல் செய்கிறார். அந்த அழைப்புக்கு பதிலளிக்கும் இளம் பெண் தன்னை மிஷெல் என அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அவளுடைய நிஜப் பெயர் மெக்னா, அவள் இந்தியாவில் இருக்கிறாள், அது நள்ளிரவு நேரம். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், AT&T, பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிட்டிபாங்க், ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற அயல் நாடுகளிலுள்ள கம்பெனிகளுக்கு இந்தியாவிலுள்ள கால் சென்டர்கள் “தொலைதூர மையங்களாக” சேவை செய்ய 1,00,000-⁠க்கும் அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன. நீண்ட தூர தொலைபேசி கட்டணம் சரிந்திருப்பதும், இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற, ஆங்கிலம் பேசும் ஏராளமானோர் இருப்பதுமே இந்த வேலையை இந்தியாவில் செய்வதற்கு ஊக்குவிப்பை அளித்திருக்கிறது; அதோடு, “அவர்களுக்கு இணையாக மேலை நாடுகளில் இப்பணி புரிபவர்களின் சம்பளங்களைவிட 80 சதவீதம் குறைவாக சம்பளம் கொடுக்கப்படுகிறது” என்றும் அறிக்கை செய்கிறது இந்தியா டுடே பத்திரிகை. முடிந்தளவுக்கு அமெரிக்கர்களைப் போல் பேசுவதற்காக மெக்னா போன்ற ஆப்ரேட்டர்கள் மாதக்கணக்கில் பயிற்சி பெறுகிறார்கள்; “ஹாலிவுட் வெற்றிப் படங்களை பார்த்து பல விதமான அமெரிக்க உச்சரிப்புகளை கற்றுக்கொள்வது” இந்தப் பயிற்சிகளில் ஒன்று. பிலடெல்ஃபியாவில் வானிலை எப்படியிருக்கிறது என்பதுகூட மெக்னாவின் கம்ப்யூட்டரில் தெரிந்துவிடுகிறது, அதைப் பற்றியும் வாடிக்கையாளரிடம் சொல்லுகிறார். “ஹேவ் அ குட் டே” என பேச்சை முடிக்கிறார். (g03 12/22)

படிக்க வயதுவரம்பு ஏது

படிப்பறிவு பெருமளவு குறைவுபடும் நேப்பாளத்தில், 12-⁠க்கும் அதிகமான பேரப்பிள்ளைகளை உடைய வயதான ஒருவர் படிப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்காக பிரபலமாகி இருக்கிறார். எழுத்தர் பாஷே என்றழைக்கப்படும் பால் பஹதூர் கார்கி 1917-⁠ல் பிறந்தவர், இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டவர். நான்கு முறை தவறவிட்ட பின்பு 84 வயதில் அவர் பள்ளிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றார். இப்போது 86-⁠ம் வயதில் கல்லூரியில் படிக்கிறார். அவர் ஆங்கிலத்தை முக்கிய பாடமாக படிக்கிறார், மற்றவர்களுக்கு இந்த மொழியைக் கற்பிக்கவும் செய்கிறார். இளைஞர்களுக்கு மத்தியில் கல்லூரியில் அமருவது தன் வயதை மறப்பதற்கும் மீண்டும் வாலிபத்தை உணருவதற்கும் உதவுவதாக அவர் சொல்கிறார். கடந்த முறை தலைநகரான காட்மாண்டுவிற்கு சென்ற போது பெரும் கரகோஷத்தின் மத்தியில் அவரது சாதனைகளுக்காக பரிசுகளைப் பெற்றார். வயதாகிவிட்டதால் சோர்ந்து போய்விட வேண்டாமென அவர் மற்றவர்களை உற்சாகப்படுத்தினார். எனினும் எழுத்தர் பாஷேக்கு ஒரு விஷயத்தில் வருத்தம். தலைநகருக்கு செல்லுவதற்கு அவர் மூன்று நாட்கள் நடந்து, பிறகு பஸ் பிடிக்க வேண்டியிருந்தது; காரணம் அவருக்கு கட்டண சலுகை மறுக்கப்பட்டது, சாதாரண விமான டிக்கெட் வாங்க அவருக்கு வசதியும் இல்லை. “மாணவர்களுக்கான சலுகையை ஏர்லைன்ஸ் எனக்கும் அளிக்க வேண்டும், நானும் மாணவன் தானே” என த காட்மாண்டு போஸ்ட் செய்தித்தாளிடம் சொன்னார். (g03 12/22)

நாய் பாஷையைப் புரிந்துகொள்வதா?

நாய் பாஷையை மனித பாஷைக்கு மொழிபெயர்ப்பதாக சொல்லப்படும் ஒரு கருவியை ஜப்பானிலுள்ள பொம்மை தயாரிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார் என ஜப்பான் தகவல் நெட்வர்க் அறிக்கை செய்கிறது. அந்தக் கருவியில், நாயின் கழுத்துப் பட்டையுடன் இணைக்கப்பட்ட வயர்லெஸ் மைக்ரோஃபோன் உள்ளது; அது ஒலிகளை ஒரு சிறிய ரிசீவரிடம் கடத்துகிறது. அந்த ரிசீவர் நாய் எழுப்பும் ஒலிகளை ஆராய்வதாகவும், விரக்தி, கோபம், மகிழ்ச்சி, துயரம், ஆசை, பிடிவாதம் போன்ற ஆறு விதமான உணர்ச்சிகளை பிரித்தறிவதாகவும் சொல்லப்படுகிறது. அதன் விளைவுகள் ரிசீவரின் லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளேயில் தெரிகிறது; அதில், “எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை!” “எனக்கு பயங்கர எரிச்சலாக இருக்கு!” “வந்து என்னோடு விளையாடு!” போன்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன. ஜப்பானில் 100 டாலர் என்ற விலையில் 3,00,000 கருவிகள் விற்கப்பட்டுவிட்டதாகவும் தென் கொரியாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இதன் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்றும் அதன் தயாரிப்பாளர் சொன்னார். (g03 12/08)

மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளி

சிம்பன்ஸிகள், ஒராங்குட்டான்கள், ரீஸஸ் குரங்குகள், வேறு சில குரங்குகள் ஆகியவற்றின் DNA-வை வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில், அவற்றின் மரபு அமைப்பு முன்பு அறிவியலாளர்கள் நம்பிய விதமாக மனிதனுடையதைப் போல் இல்லை என்பது தெரிய வந்தது. DNA-வில் காணப்படும் சிறிய வித்தியாசங்கள் அல்ல, ஆனால் பெரும் வித்தியாசங்கள் மனிதக் குரங்குகளையும் மற்ற குரங்குகளையும் வெவ்வேறாக பிரிப்பதுடன் மனிதரிலிருந்தும் அவற்றை வேறாக பிரித்துக் காட்டுகிறது” என பிரிட்டனின் நியு சைன்ட்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. “குரோமோசோம்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிலவற்றில் குறிப்பிட்ட மரபணுக்கள் விடுபட்டிருக்கின்றன, சிலவற்றில் அதிக மரபணுக்கள் காணப்படுகின்றன” என அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள பர்ல்ஜன் சைன்ஸஸ் என்ற கம்பெனியைச் சேர்ந்த கெல்லி ஃப்ரேஸர் விளக்குகிறார். அந்த வித்தியாசத்தை, “குரங்குகளையும் நம்மையும் பிரிக்கும் பெரும் இடைவெளி” என நியு சைன்ட்டிஸ்ட் பத்திரிகை வர்ணிக்கிறது. (g03 12/22)