Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆமாட்டே— மெக்சிகோவின் பேப்பர்

ஆமாட்டே— மெக்சிகோவின் பேப்பர்

ஆமாட்டே​—⁠மெக்சிகோவின் பேப்பர்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மெக்சிகோ மக்களின் சரித்திரம் மனதைக் கொள்ளை கொள்ளும் பழமையான ஒன்று. மதிப்புமிக்க அவர்களது கலாச்சாரங்களில் இன்னும் அழியாமல் தொன்றுதொட்டு பாதுகாக்கப்படுகிற ஒன்று “சான்றுகள்,” அதாவது ஓவிய எழுத்துக்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் அல்லது கையெழுத்துச் சுவடிகள் ஆகும். இந்த கையெழுத்துச் சுவடிகளின் உதவியால் அஸ்தெக்கு, மாயா உட்பட மத்திய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது; வரலாறு, அறிவியல், மதம், காலக்கணக்கு ஆகிய துறைகளில் அவர்களது அறிவுத் திறமையையும், அவர்களது வளர்ச்சியடைந்த நாகரிகங்களின் அன்றாட வாழ்க்கையையும் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. வியக்க வைக்கும் திறமை படைத்த டலாக்விலோஸ், அதாவது எழுத்தர்கள் வரலாற்றை பலதரப்பட்ட பொருட்களில் ‘படம்பிடித்துக்’ காட்டினார்கள்.

சில கையெழுத்துச் சுவடிகளைத் தயாரிக்க, துண்டு துணிகள், மான் தோல், அல்லது மகே காகிதம் போன்றவை பயன்படுத்தப்பட்டபோதும் முக்கியமாக ஆமாட்டே என்ற பொருளே பயன்படுத்தப்பட்டது. நாவாட்டில் மொழியில் காகிதம் என அர்த்தம் தரும் ஆமாட்டில் என்ற வார்த்தையிலிருந்தே ஆமாட்டே என்ற பெயர் பிறந்தது. மோரேசி குடும்பத்தைச் சேர்ந்த ஃபைகஸ், அதாவது அத்தி மரத்தின் பட்டையிலிருந்து இந்த ஆமாட்டே பெறப்பட்டது. “அடிமரம், இலை, பூ, பழம் ஆகியவற்றை மிக உன்னிப்பாய் ஆராய்ந்தால் தவிர பல்வேறு வகை ஃபைகஸை அடையாளம் கண்டுகொள்வது கடினம்” என என்ஸைக்ளோப்பீடியா டெ மெக்சிகோ சொல்கிறது. ஒரு ஃபைகஸ், வெள்ளைநிற ஆமாட்டேயாக, வெள்ளைநிற காட்டு ஆமாட்டேயாக அல்லது அடர் பழுப்புநிற ஆமாட்டேயாக இருக்கலாம்.

தயாரிக்கப்படும் முறை

16-⁠ம் நூற்றாண்டில் ஸ்பானிய ஆக்கிரமிப்பின்போது ஆமாட்டே காகித தயாரிப்பை தடைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏன்? கத்தோலிக்க சர்ச் கண்டனம் செய்த, ஸ்பானியர்களுக்கு முற்பட்ட காலத்து மத சடங்காச்சாரங்களுடன் அதற்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆக்கிரமிப்பாளர்கள் கருதியதே காரணம். இஸ்டோர்யா டெ லாஸ் இன்டியாஸ் டெ நியூவா எஸ்பான்யா எ இஸ்லாஸ் டெ லா டையரா ஃபர்மெ (புதிய ஸ்பெயின் இண்டீஸ் மற்றும் டெர்ரா ஃபர்மா தீவுகளின் சரித்திரம்) என்ற புத்தகத்தில், ஸ்பானிய சமயத் துறவியான டியேகோ ட்யூரான் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: உள்ளூர் வாசிகள் “தங்கள் மூதாதையரின் சரித்திரங்களை மிக விலாவாரியாக தொகுத்தார்கள். ஆனால் மூடத்தனமான வைராக்கியத்தால் அவர்கள் அவற்றை அழிக்காதிருந்திருந்தால் இன்று நாம் அநேக காரியங்களை அறிந்துகொள்ள அவை வழிசெய்திருக்கும். விக்கிரகங்களென கருதி சிலர் மடத்தனமாய் அவற்றை எரித்துப் போட்டார்கள்; உண்மையில் அவை நினைவில் வைக்க வேண்டிய மதிப்புமிக்க சரித்திரங்கள்.”

எனினும் பாரம்பரிய முறையில் ஆமாட்டே காகிதம் தயாரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டன; நல்ல காலமாக அது இன்று வரை தொடருகிறது. பியூப்லா மாநிலத்திலுள்ள சியார்ரா மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் இருக்கும் சான் பாஃப்லிடோ, பாவாட்லான் முனிசிபாலிட்டி போன்ற இடங்களில் இன்னும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. மன்னர் இரண்டாம் ஃபிலிப்பின் மருத்துவரான ஃபிரான்திஸ்கோ எர்நான்டேத் எழுதிய தகவலிலிருந்து மேற்கோள் காட்டுகையில் ஆர்கேயோலோகியா மெஹிகேனே (மெக்சிக தொல்லியல்) என்ற பத்திரிகை பின்வருமாறு சொல்கிறது: “காகிதம் தயாரிப்பவர்கள் மரங்களின் இளம் கொம்புகளை விட்டுவிட்டு கெட்டியான கிளைகளை மட்டுமே வெட்டினார்கள். அதன் பிறகு அந்தக் கிளைகள் மென்மை அடைவதற்காக இரவு முழுவதும் அருகிலிருந்த ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகளில் போட்டு வைத்தார்கள். மறுநாள் கிளையிலிருந்து பட்டையை உரித்தெடுத்தார்கள், உட்புற பட்டையிலிருந்து வெளிப்புற பட்டையை பிரித்தெடுத்தார்கள்; உட்புற பட்டையை மட்டுமே சேகரித்தார்கள்.” பட்டையை சுத்தம் செய்த பின்பு பிரித்தெடுக்கப்பட்ட நார்ப்பொருள் கத்தைகள் தட்டையான மேற்பரப்பில் பரப்பப்பட்டு, கல் சுத்தியலால் தட்டப்பட்டன.

இப்போதெல்லாம், நார்ப்பொருட்கள் பெரிய கொதிநீர் பாத்திரங்களில் வேக வைக்கப்படுகின்றன; பிறகு அவற்றை மென்மையாக்குவதற்கும், அதிலிருந்து சில கழிவுகளை நீக்குவதற்கும் சாம்பலும் சுண்ணாம்பும் அதில் சேர்க்கப்படுகின்றன. இப்படி அவை ஆறு மணிநேரம் வேக வைக்கப்படுகின்றன. பின்னர் நார்ப்பொருட்கள் அலசப்பட்டு, மீண்டும் தண்ணீரிலேயே போட்டு வைக்கப்படுகின்றன. கைவினைஞர்கள் சமதள மேற்பரப்புள்ள மரச்சட்டத்தில் நாரிழைகளை சதுரங்க வடிவில் குறுக்கும் நெடுக்குமாய் ஒவ்வொன்றாக வைக்கிறார்கள். பின்னர், இந்த நார்ப்பொருட்கள் ஒன்றோடொன்று இணைந்து காகிதமாக உருவெடுக்கும்வரை கல் சுத்தியலால் ஒரே சீராக தட்டுகிறார்கள். கடைசியாக, காகித ஓரங்கள் உறுதியாக இருப்பதற்கு, உட்பக்கமாக அவை மடக்கிவிடப்படுகின்றன, பின்னர் அந்தக் காகிதம் வெயிலில் காய வைக்கப்படுகிறது.

ஆமாட்டே காகிதம் பல்வேறு நிறத்தில் காணப்படுகிறது. பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கிறது, வெள்ளை அல்லது தந்த நிறத்திலும் கிடைக்கிறது; பழுப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகளுடனும் உள்ளது, இதுதவிர மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களிலும் தயாரிக்கப்படுகிறது.

இன்று அதன் உபயோகம்

ஆமாட்டேயைப் பயன்படுத்தி மெக்சிகோவில் அழகான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் காகிதத்தில் தீட்டப்படும் சில சித்திரங்கள் மதத்துடன் சம்பந்தப்பட்டுள்ளன; ஆனால் மற்றவையோ, வெவ்வேறு விலங்குகளையும் மெக்சிக மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை காட்டும் திருவிழாக்களையும் காட்சிகளையும் சித்தரிக்கின்றன. கண்ணைக் கவரும் வண்ண நிற அழகழகுப் படங்கள் தவிர, வாழ்த்து மடல்கள், புக்மார்க்குகள் என இன்னும் பல கைவினைப் பொருட்களும் ஆமாட்டேயால் தயாரிக்கப்படுகின்றன. கலைநயமிக்க இப்பொருட்களை அழகுப் பொருட்களாக வாங்கிச் செல்லும் உள்ளூர் வாசிகளும் அயல் நாட்டவரும் அவற்றிடம் தங்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். இக்கலை மெக்சிக எல்லையையும் கடந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தடம் பதித்திருக்கிறது. பண்டைய கையெழுத்துச் சுவடிகளுக்கு ஒத்த நகல்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இக்கலையை முதன்முறையாக கண்ட ஸ்பானியருக்கு எவ்வளவு ஆர்வத்துக்குரியவையாய் இருந்திருக்க வேண்டும்! சொல்லப்போனால், உள்ளூர் வாசிகள் “ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்த வருடங்களையும் மாதங்களையும் நாட்களையும் கணக்கிட்டு எல்லாவற்றையும் புத்தகங்களிலும், நீண்ட காகித துண்டுகளிலும், எழுதியும் சித்திரம் தீட்டியும் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய சட்டங்கள், ஆணைகள், ஜனத்தொகை பட்டியல்கள் போன்ற இன்னும் பலவற்றை இந்த சித்திரங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள், இவையனைத்தும் நேர்த்தியாகவும் ஒத்திசைவுடனும் உள்ளன” என்று முன்பு குறிப்பிடப்பட்ட டொமினிகன் சமயத் துறவியான டியேகோ ட்யூரான் சொன்னார்.

பாரம்பரிய முறையிலான ஆமாட்டே காகித தயாரிப்பு, அதன் அழகில் கொஞ்சமும் குறையாமல் மெக்சிகோ நாட்டவரின் ஆஸ்தியாக நம்முடைய நாள் வரை தொடர்ந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது! பண்டைய டலாக்விலோஸ் அதாவது எழுத்தர்கள் போல இன்றைய எளிய கைவினைஞர்கள் ஆமாட்டேயின் வியத்தகு தன்மையைக் கண்டு மகிழ்கிறார்கள்; மெக்சிகோவின் பேப்பர் என இதை அழைப்பது உண்மையில் பொருத்தமானதே. (g04 3/8)

[பக்கம் 18-ன் படம்]

நார்ப்பொருட்களைத் தட்டுதல்