Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சிநேகபாவமுள்ள பிள்ளைகளே மிகவும் பிரியமானவர்கள்

“பிள்ளைகள் டிசைனர் ஜீன்ஸுகள் அணிந்திருந்தாலும் சரி புதுப் புது சாதனங்களை வைத்திருந்தாலும் சரி, பிரியமானவர்களாக ஆகிவிடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நண்பர்கள் வட்டாரத்தில் சமூக அந்தஸ்தைவிட சிநேகபாவமே பிரியத்தை சம்பாதிக்கிறது” என சொல்கிறது ஜெர்மானிய பத்திரிகையான சைகோலோஜி ஹாய்டா. பெர்லினிலுள்ள மாக்ஸ் பிளாங்க் மனித வளர்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த யூடிட் ஷ்ரெங்க், கிரிஸ்டீன் குர்ட்லர் என்ற உளவியல் நிபுணர்கள், பத்து ஆரம்பப் பள்ளிகளை சேர்ந்த மூன்றாம், ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் 234 பேரை வைத்து ஆய்வு நடத்தினார்கள். மற்றவர்களை அனுசரித்துப் போக விரும்பிய, சிநேகபாவமுள்ள, கலகலவென பேசுகிற பிள்ளைகளே மிகவும் பிரியமானவர்களாக இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தார்கள். மற்றவர்களை அடிக்கிற அல்லது கிண்டல் செய்கிற பிள்ளைகளுக்கு நண்பர்கள் மத்தியில் செல்வாக்கில்லாதிருந்தது. “பார்ப்பதற்கு அழகாக இருந்தாலோ பாக்கெட் நிறைய பணம் இருந்தாலோகூட சகமாணவர்களை வளைத்துப் போட்டுக்கொள்ள முடியாது” என்கிறது அந்த அறிக்கை. (g04 3/22)

களைக் கொல்லியை உற்பத்தி செய்யும் எறும்புகள்

“உணவுக்காக பூஞ்சக்காளானை உற்பத்தி செய்யும் சில எறும்புகள் ஓர் ஒட்டுண்ணியை ஒழித்துக் கட்ட களைக் கொல்லியையும் உற்பத்தி செய்கின்றன” என அறிக்கை செய்கிறது ப்ளூம்பர்க் செய்திச் சேவை. தங்கள் புற்றுகளுக்கு கொண்டு செல்லும் இலைதழைகளையும் செடிசெத்தைகளையும் அட்டைய்ன் என்னும் எறும்புகளால் ஜீரணிக்க முடியாது. அவை சேகரிக்கிற அழுகும் தாவரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன, இவை பூஞ்சக்காளான் தோட்டங்கள் வளர உதவுகின்றன. எனினும், எறும்புகள் வளர்க்கும் இந்தப் பூஞ்சக்காளானை மிக நுண்ணிய ஒட்டுண்ணி தாக்குகிறது, இதனால் எறும்புகளின் உணவுப் பொருள் குறைக்கப்படவோ அழிக்கப்படவோ வாய்ப்புண்டு. பூஞ்சக்காளானை பாதுகாப்பதற்காக இந்த எறும்புகள் தங்கள் உடலில் ஒரு வகை பாக்டீரியாவை வளர்க்கின்றன. “[ஒட்டுண்ணியாகிய] எதிரி பூஞ்சக்காளான் தென்படுகையில், இந்த அட்டைய்ன் எறும்புகள் தங்கள் உடலை அதன் மீது தேய்த்து, களைக் கொல்லியை உதிர்க்கின்றன” என்கிறது அந்த அறிக்கை. (g04 3/8)

ஓசோன் அடுக்குக்கு உதவும் வெனிசுவேலாவின் மின்னல்கள்

புவியைச் சுற்றியுள்ள ஓசோன் படலத்தில் 90 சதவீதம் சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களால் உருவாக்கப்பட்டாலும் மீதமுள்ள 10 சதவீதம் மின் புயல்களால் உருவாக்கப்படுகிறது. வெனிசுவேலாவில் சூல்யா மாநிலத்திலுள்ள காடாடூம்போ தேசிய பூங்காவில் இருக்கும் சதுப்புநிலங்களில் மின் புயல்கள் அதிகளவில் உருவாகின்றன. காடாடூம்போ ஆற்று கழிமுகப் பகுதியில் வருடத்திற்கு “140 முதல் 160 நாட்களுக்கு மின் புயல்கள்” ஏற்படுகின்றன என காராக்ஸில் வெளியாகும் த டெய்லி ஜர்னல் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சுற்றிலுமுள்ள கடற்கழிகளிலும் சதுப்பு நிலங்களிலும் உள்ள அழுகும் தாவரங்களிலிருந்தும் பிற பொருட்களிலிருந்தும் கிடைக்கும் உப பொருளான மீத்தேன் வாயு, தாழ்வான மேகங்களுடனும் மோசமான சீதோஷணத்துடனும் இணைகையில் அது மின்னலை தூண்டிவிடுவதாய் நம்பப்படுகிறது. காடாடூம்போ மின்னலின் கருத்தைக் கவரும் மற்றொரு அம்சம், அது வெகு தொலைவில் நிகழ்வதால் இடி முழக்கம் கேட்பதில்லை. இது, “உலகில் எங்கும் சம்பவிக்காத இயற்கை நிகழ்ச்சியாக உள்ளது” என்கிறது லாஸ்ட் உவர்ல்டு அட்வெஞ்ச்சர்ஸ் வெப் சைட். (g04 3/8)

அதிக செலவு பிடித்த நகரங்கள்

உலகிலேயே டோக்கியோ, மாஸ்கோ, ஒசாகா ஆகிய நகரங்கள்தான் அதிக செலவு பிடித்த நகரங்களாகும். இது, மர்சர் மனித வள ஆலோசக நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவாகும். இந்த ஆய்வு 144 நகரங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது; வீடு, உடை, போக்குவரத்து, பொழுதுபோக்கு, ஃபர்னிச்சர், வீட்டு சாமான்கள் உட்பட 200-⁠க்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஆகும் செலவை ஒப்பிட்டுப் பார்த்து அது நடத்தப்பட்டது. அதிக செலவு பிடித்த 20 நகரங்களில் பாதிக்குப் பாதி ஆசியாவில் உள்ளன. மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் ஜெனிவா, லண்டன், சூரிச் ஆகிய நகரங்கள் அதிக செலவு பிடித்தவை. இப்பட்டியலில் பத்தாவது இடத்தில் நியு யார்க் உள்ளது; மேலும் முதல் 100 இடத்தில் கனடாவை சேர்ந்த எந்த நகரத்தின் பெயரும் இடம் பெறவில்லை. வாழ்க்கைச் செலவு மிக குறைவாக உள்ள நகரங்களில் முதலிடம் வகிப்பது பராகுவேயிலுள்ள அஸன்ஷியன் நகரமாகும். (g04 3/8)

ஜலதோஷம் வருவதற்குக் காரணம்

நீங்கள் குளிரில் நடுங்க ஆரம்பித்தால் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என அநேகர் நம்புகிறார்கள். எனினும், “இதை பொய் என நிரூபிக்க அறிவியலாளர்கள் ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமாக, எக்கச்சக்கமான நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை முயற்சிகள் எடுத்தும், ஜலதோஷத்திற்கும் சீதோஷண நிலைக்கும் உள்ள தொடர்பு நீடிக்கிறது, தொடர்ந்து ஆராய்ச்சி செய்யவே தூண்டுதல் கிடைத்திருக்கிறது” என அறிக்கை செய்கிறது த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள். உடலை குளிர் தாக்குவதற்கும் ஜலதோஷம் பிடிப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கு 1878-⁠ல் லூயி பாஸ்டர் மேற்கொண்ட பரிசோதனையில் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதில் ஆச்சரியமேதுமில்லை. சீதோஷணநிலை அல்ல ஆனால் ஈரப்பதமே ஜலதோஷத்திற்குக் காரணம் என ஜலதோஷத்தை ஆராயும் தலைசிறந்த உலக நிபுணர்களில் ஒருவரான இளையவர் டாக்டர் ஜேக் குவால்ட்னி கருத்துத் தெரிவிக்கிறார். முக்கிய குறிப்பு என்னவென்றால், “ஜலதோஷம் என்பது ஒரு தனி வியாதி அல்ல ஆனால் அதை ஒத்த அநேக வியாதிகளின் சேர்க்கையாக இருக்கிறது; எனினும் அவை எல்லாமே சீதோஷணத்திற்கு ஏற்றாற்போல மாறி மாறி வருகின்றன, இருந்தாலும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் புரியா புதிராகவே உள்ளன” என்கிறது டைம்ஸ் செய்தித்தாள். (g04 3/8)

விசிட்டிங் கார்டுகள்​—⁠புழக்கத்திலிருந்து மறைகின்றனவா?

“பெருமளவில் ஆட்களைக் கடத்தும் பிரேசில் நாட்டில் தாங்கள் பார்க்கும் வேலையையும், தங்கள் தகுதியையும் தெரிவிக்கும் கார்டுகளை பெரும் புள்ளிகள் கொண்டு செல்லாதிருப்பது உத்தமம்” என பிரேசிலில் வெளியாகும் பிஸ்னஸ் பத்திரிகையான எஸாமெ என்பதில் பாதுகாப்பு ஆலோசகரான கார்ல் பாலாடினி சொல்கிறார். அத்தகைய தகவல்கள் ஒருவருடைய பொருளாதார நிலையைப் பற்றிய தடயத்தை குற்றவாளிகளுக்கு அளித்துவிடுகின்றன. “உங்கள் பர்ஸில் இருக்கும் தகவல்கள் உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம்” என வாக்னர் டான்ஜெலோ சொல்லுமளவுக்கு நிலைமை உள்ளது; இவர் க்ரோல் என்ற பெரிய பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிகிறார். பெருமளவு ஆட்களைக் கடத்தும் நாடுகளிலுள்ள பிஸ்னஸ் புள்ளிகள் தங்களது கார்டுகளில் குறிப்பிட்டுள்ள பட்டங்களையும், தகுதிகளையும் நீக்கிவிடும்படியும், “விலையுயர்ந்த காகிதத்தில் கண்கவர் எழுத்துக்களிலுள்ள கார்டுகளை வைத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அவர் ஆலோசனை கூறுகிறார். இந்த உத்தியை சீக்கிரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் சில பெரும் புள்ளிகள் விசிட்டிங் கார்டுகளுக்கே முழுக்கு போட்டுவிட்டிருக்கிறார்கள். (g04 3/22)

பிள்ளையின் மரணம் பெற்றோரை பாதிக்கும் விதம்

லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் செய்தித்தாளின்படி, டென்மார்க்கில் ஆர்ஹுஸ் பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அங்கு, “வியாதியில், விபத்தில், கொலையில் அல்லது தற்கொலையில் 18 வயதுகூட ஆகாத தங்கள் பிள்ளையைப் பறிகொடுத்த 21,062 பெற்றோர்களின் வாழ்க்கையை கண்காணித்து வந்தார்கள்.” தங்கள் பிள்ளைகளை இழக்காதிருக்கும் 3,00,000 பெற்றோர்களுடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தார்கள். “பிள்ளையின் மரணத்திற்குப் பிறகு முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு தாய் பொதுவாக விபத்து அல்லது தற்கொலை என்ற அசாதாரண காரணங்களால் இறப்பதற்கு கிட்டத்தட்ட 300 சதவீதம் அதிக வாய்ப்பிருந்தது, தகப்பன் இறப்பதற்கு 57 சதவீதம் அதிக வாய்ப்பிருந்தது.” இறப்பு வீதம் மிக அதிகமாவதற்கு, தாங்க முடியாத மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். (g04 3/22)

உலகிலேயே உயரமான கட்டடம்​—⁠மீண்டும் போட்டி ஆரம்பம்

“உலகெங்குமுள்ள நகர திட்டமைப்பாளர்கள் உலகிலேயே மிக உயரமான கட்டடத்தைக் கட்ட மறுபடியும் போட்டா போட்டி போடுகிறார்கள்” என த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவிக்கிறது. தைவானில் உள்ள தைபீயில் ஒரு வானளாவிய கட்டடம் ஏற்கெனவே மேலெழும்ப ஆரம்பித்துவிட்டது; அது 508 மீட்டர் உயரம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது நியு யார்க்கில் இருந்த இரட்டை கோபுரங்களைவிட சுமார் 90 மீட்டர் அதிக உயரமானது. இதற்கிடையே, சீனாவிலுள்ள ஷாங்காயில் 492 மீட்டர் உயரமுள்ள உலக பொருளாதார மையத்தைக் கட்டும் திட்டங்கள் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடம் தைவானில் இருப்பதைவிட உயரமாக இருக்கும் என ஷாங்காய் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏனென்றால் தைவான் கட்டடத்தின் உயரத்தை கணக்கிடுகையில் அதன் 50 மீட்டர் டெலிஷன் ஆன்ட்டெனாவும் சேர்க்கப்பட்டது என்கிறார்கள். இவற்றைவிட அதிக உயரத்திற்கு, அதாவது 540 மீட்டர் உயரத்திற்கு ஒரு சர்வதேச வர்த்தக மையத்தை கட்ட தென் கொரியாவிலுள்ள சீயோல் திட்டமிட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட, நியு யார்க் நகரம்தானே செப்டம்பர் 11 அன்று தீவிரவாத தாக்குதல்களின்போது இழந்த கட்டடங்களை ஈடுசெய்யும் விதத்தில் உலகிலேயே மிக உயரமான கட்டடத்தைக் கட்ட ஆலோசனை செய்துவருகிறது. “2001 தாக்குதல்களுக்குப் பிறகு, உயரமான கட்டடங்களைக் கட்டுவதற்கான போட்டி இவ்வளவு விரைவாக ஆரம்பமாகும் என பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்” என்கிறது அந்த ஜர்னல். (g04 2/8)