Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?

கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?

இளைஞர் கேட்கின்றனர் . . . 

கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?

“கடவுள் மேலே பரலோகத்தில் இருக்கிறார், அங்கே எல்லாமே ரம்மியமாக இருக்கிறது, ஆனால் நாமோ இங்கே அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.”​—⁠மேரி. a

இன்றைய இளைய தலைமுறையினர் கொடூரமான ஓர் உலகில் பிறந்திருக்கிறார்கள். பூகம்பங்களும் இயற்கை பேரழிவுகளும் ஆயிரக்கணக்கானோருடைய உயிரை கொள்ளைகொண்டு போவது இன்று சகஜம். போர்களும் தீவிரவாதிகளுடைய தாக்குதல்களுமே செய்திகளில் பரபரப்பாக பேசப்படுகின்றன. வியாதி, வன்முறை, விபத்துக்கள் ஆகியவை நமது நேசத்திற்குரியவர்களை பறித்துக்கொண்டு போய்விடுகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட மேரியின் வாழ்க்கையில் ஒரு சோக நிகழ்ச்சி ஏற்பட்டது, அவளுடைய அப்பா இறந்துவிட்டார்; அப்போது அவள் மனங்கசந்து சொன்ன வார்த்தைகளே அவை.

சோக சம்பவங்கள் நம் வாழ்க்கையில் ஏற்படும்போது, ஏமாற்றத்தையும் இழப்பையும் உணருவது அல்லது கோபப்படுவதுகூட மனித இயல்பே. ‘இது ஏன் நடக்க வேண்டும்?’ என நீங்கள் கேட்கலாம். ‘ஏன் எனக்கு நேரிட்டது?’ அல்லது ‘ஏன் இப்போது நேரிட்டது?’ இத்தகைய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் தேவை. ஆனால் சரியான பதில்களைப் பெற நாம் சரியான ஊற்றுமூலத்திடம் செல்ல வேண்டும். டர்ரல் என்ற ஓர் இளைஞன் கூறியபடி, “மிகுந்த வேதனையில் இருக்கும்போது சிலரால் தீர யோசிக்க முடிவதில்லை.” ஆகவே நீங்கள் தர்க்க ரீதியிலும் நியாயமாகவும் சிந்திப்பதற்கு முதலில் உங்களுடைய மன வேதனையை சற்று இலகுவாக்குவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம்.

கசப்பான உண்மைகளை சமாளித்தல்

யோசித்துப் பார்ப்பதற்கு கசப்பாக தோன்றினாலும், மரணமும் வேதனையும் வாழ்க்கையின் நிஜங்கள். பின்வருமாறு சொன்னபோது யோபு இதை அருமையாக எடுத்துரைத்தார்: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.”​—யோபு 14:1.

“நீதி வாசமாயிருக்கும்” புதிய உலகைப் பற்றி பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆனால் அத்தகைய ரம்மியமான சூழ்நிலைமைகள் வருவதற்கு முன்பு, சரித்திரத்தில் என்றுமில்லாத அளவுக்கு துன்மார்க்கம் பெருகியிருக்கும் ஒரு காலகட்டத்தை மனிதர் கடந்துசெல்ல வேண்டும். “கடைசி நாட்களில் கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” என பைபிள் சொல்கிறது.​—2 தீமோத்தேயு 3:1, NW.

இந்தக் கஷ்ட காலங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும்? அடிப்படையில் இதே கேள்வியைத்தான் இயேசுவின் சீஷர்களும் கேட்டார்கள். ஆனால், துன்பம் நிறைந்த இந்த ஒழுங்குமுறை எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதற்கு திட்டவட்டமான ஒரு நாளையோ மணிநேரத்தையோ இயேசு அவர்களிடம் குறிப்பிடவில்லை. மாறாக, “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என இயேசு கூறினார். (மத்தேயு 24:3, 13) இயேசுவின் வார்த்தைகள், நீண்ட கண்ணோட்டத்தில் பார்க்கும்படி நம்மை உற்சாகப்படுத்துகின்றன. முடிவு வரும் முன் அநேக கஷ்டங்களை சகிப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

கடவுள் காரணமா?

அப்படியானால், துன்பத்தை கடவுள் அனுமதிப்பதற்காக அவரிடம் கோபப்படுவது நியாயமா? எல்லா துன்பத்திற்கும் முடிவு கொண்டு வரப்போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருப்பதை பார்க்கும்போது அப்படி கோபப்படுவது நியாயமில்லை. கெட்ட காரியங்களை கடவுளே ஏற்படுத்துகிறார் என்று நினைப்பதும் நியாயமில்லை. பெரும்பாலான சோக நிகழ்ச்சிகள் தற்செயலாக ஏற்படுகின்றன. உதாரணமாக, காற்றடித்து ஒரு மரம் சாய்கையில் அங்குள்ள சிலருக்கு காயமேற்படுவதை கற்பனை செய்து பாருங்கள். இதை தேவச் செயல் என மக்கள் அழைக்கலாம். ஆனால் அந்த மரம் விழும்படி கடவுள் செய்யவில்லை. இப்படிப்பட்ட செயல்கள் ‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்’ ஏற்படுவதால் வரும் சோகமான விளைவே என்பதை புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவி செய்கிறது.​—பிரசங்கி 9:11, NW.

தவறாக தீர்மானம் எடுப்பதால்கூட துன்பம் வரலாம். இளைஞர் பட்டாளம் ஒன்று மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது பயங்கரமான விபத்து நேரிடலாம். இதற்கு யாரை குற்றம்சாட்டுவது? கடவுளையா? இல்லை, அவர்களுடைய தவறான செயலால் வந்த விளைவையே அறுவடை செய்தார்கள்.​—கலாத்தியர் 6:⁠7.

‘ஆனால் இப்போதே கஷ்டங்களைப் போக்கும் சக்தி கடவுளுக்கு இருக்கிறதல்லவா?’ என நீங்கள் ஒருவேளை கேட்கலாம். பைபிள் காலங்களில் உண்மையுடன் வாழ்ந்த மனிதர்கள் சிலர் இதைப் பற்றி யோசித்தனர். கடவுளிடம் தீர்க்கதரிசியாகிய ஆபகூக் இவ்வாறு கேட்டார்: “அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?” என்றாலும், ஆபகூக் அவசரப்பட்டு முடிவெடுக்கவில்லை. ‘நான் என் காவலிலே தரித்து, . . . அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்று கவனித்துப் பார்ப்பேன்’ என அவர் சொன்னார்: பிற்பாடு, ‘குறித்த காலத்தில்’ துன்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். (ஆபகூக் 1:13; 2:1-3) ஆகவே, நாமும் பொறுமையாக இருக்க வேண்டும், கடவுள் அவருடைய குறித்த காலத்தில் துன்மார்க்கத்தை ஒழிப்பதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.

நாம் கஷ்டப்பட வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார் அல்லது அவர் நம்மை சோதிக்கிறார் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடாதீர்கள். கஷ்டங்கள் நம்மைப் புடமிடலாம் என்பதும், கடவுள் அனுமதிக்கும் சோதனைகள் நம்முடைய விசுவாசத்தை சுத்திகரிக்கலாம் என பைபிள் சொல்வதும் உண்மைதான். (எபிரெயர் 5:8; 1 பேதுரு 1:7) சோதனைகளை அல்லது அதிர்ச்சியூட்டும் துன்பங்களை அனுபவிக்கும் அநேகர் அதிக பொறுமைசாலிகளாக அல்லது இரக்கமுள்ளவர்களாக ஆகிறார்கள் என்பதுகூட உண்மைதான். ஆனால், கடவுளால்தான் அவர்களுக்கு கஷ்டங்கள் வருகின்றன என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. இப்படி நினைத்தால் கடவுளுடைய அன்பையும் ஞானத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறுகிறோம் என அர்த்தம். பைபிள் தெளிவாக இவ்வாறு கூறுகிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” மாறாக, ‘நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்’ கடவுளிடமிருந்து வருகிறது!​—யாக்கோபு 1:13, 17.

பொல்லாங்கை கடவுள் அனுமதிப்பதற்கு காரணம்

அப்படியானால், பொல்லாங்கு எங்கிருந்து ஆரம்பமாகிறது? கடவுளுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்; அதில் பிரதானமானவன் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவனே.’ (வெளிப்படுத்துதல் 12:9) நமது முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளை தொல்லையற்ற ஓர் உலகில் கடவுள் வைத்தார். ஆனால் கடவுளுடைய ஆட்சியின்றி இன்னும் நன்றாக வாழ முடியும் என ஏவாளை சாத்தான் நம்பச் செய்தான். (ஆதியாகமம் 3:1-5) சாத்தானுடைய பொய்களை ஏவாள் நம்பி, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனது வருந்தத்தக்கதாகும். இந்தக் கலகத்தனத்தில் ஆதாமும் அவளுடன் சேர்ந்து கொண்டான். விளைவு? “மரணம் எல்லாருக்கும் வந்தது” என பைபிள் கூறுகிறது.​—ரோமர் 5:12.

சாத்தானையும் அவனை பின்பற்றியவர்களையும் அழித்து உடனடியாக இந்தக் கலகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக, கொஞ்சம் காலத்தை அனுமதிப்பது தகுந்தது என கடவுள் கண்டார். அது எதை சாதிக்கும்? ஒரு விஷயம் என்னவென்றால், சாத்தான் ஒரு பொய்யன் என்பதை அது அம்பலமாக்கும்! கடவுளிடமிருந்து பிரிந்து தன்னிச்சையாக செயல்படுவது அழிவைத்தான் கொண்டுவரும் என்பதற்கு அத்தாட்சியை குவிக்கும். சரியாக இதுதான் சம்பவித்திருக்கிறது அல்லவா? ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) அதோடு, ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டு வந்திருக்கிறான்.’ (பிரசங்கி 8:9) மனிதர் தோற்றுவித்த மதங்கள் முரண்பாடான போதனைகள் என்ற பெரும் குழப்பமாகவே இருக்கின்றன. ஒழுக்க நெறிகள் என்றுமில்லாத அளவுக்கு மிகவும் கீழ்த்தரமாக சென்றுவிட்டன. மனித அரசாங்கங்கள் எல்லாவித ஆட்சி முறையையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டன. அவை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன, சட்டங்களை அமல்படுத்துகின்றன, ஆனால் சாதாரண மக்களுடைய தேவைகள் இன்னும் பூர்த்திச் செய்யப்படாமலேயே இருக்கின்றன. போர்கள் துன்பத்திற்கு மேல் துன்பத்தை கொண்டுவருகின்றன.

கடவுள் தலையிட்டு துன்மார்க்கத்திற்கு முடிவு கொண்டு வருவது அவசியம் என்பது தெள்ளத் தெளிவு! ஆனால் இது கடவுளுடைய உரிய காலத்தில் மட்டுமே நடக்கும். அதுவரை, பைபிளில் உள்ள சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிந்து கடவுளுடைய அரசாட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது நமக்கு கிடைத்திருக்கும் பாக்கியமாகும். அசம்பாவிதங்கள் நடக்கும்போது, தொல்லையற்ற உலகில் வாழ்வோம் என்ற உறுதியான நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடையலாம்.

நீங்கள் தனியாக இல்லை

என்றாலும், துன்பம் நம்மை தனிப்பட்ட விதமாக பாதிக்கும்போது, ‘ஏன் இதெல்லாம் எனக்கு வருகிறது?’ என நாம் கேட்கக்கூடும். ஆனால், துன்பப்படுவது நாம் மாத்திரமே அல்ல என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். ‘இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது’ என பவுல் கூறுகிறார். (ரோமர் 8:22) இந்த உண்மையை அறிந்திருப்பது துன்பத்தை சமாளிக்க உங்களுக்கு உதவி செய்யலாம். உதாரணமாக, செப்டம்பர் 11, 2001-⁠ல் நியு யார்க் நகரத்திலும் வாஷிங்டன் டிசியிலும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் உணர்ச்சி ரீதியில் அதிர்ச்சியடைந்திருந்த நிக்கால் என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். “நான் திகிலடைந்தேன், எனக்கு குலை நடுங்கியது” என அவள் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் சக கிறிஸ்தவர்கள் இத்துயரத்தை சமாளித்த விவரப்பதிவை வாசித்தபோது அவளுடைய நோக்குநிலை மாறியது. b “நான் தனியாக இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன். என்னுடைய வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தேன்.”

சிலருடைய விஷயத்தில், மனம்விட்டு பேசுவதற்கு யாராவது ஒருவரை​—⁠பெற்றோரையோ முதிர்ச்சிவாய்ந்த நண்பரையோ அல்லது கிறிஸ்தவ மூப்பரையோ​—⁠நாடிச் செல்வது ஞானமானது. நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம் உங்களுடைய உணர்ச்சிகளைக் கொட்டுவது உற்சாகமூட்டும் “நல்வார்த்தை”யைப் பெற உதவி செய்யும். (நீதிமொழிகள் 12:25) பிரேஸில் நாட்டைச் சேர்ந்த இளம் கிறிஸ்தவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “ஒன்பது வருஷங்களுக்கு முன்பு என் அப்பாவை இழந்துவிட்டேன், யெகோவா அவரை ஒருநாள் உயிர்த்தெழுப்புவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய உணர்ச்சிகளை எழுத்தில் வடித்தது எனக்கு உதவியாக இருந்தது. அதோடு, என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களிடம் என்னுடைய உணர்ச்சிகளைப் பற்றி பேசினேன்.” நீங்கள் மனம்விட்டுப் பேசுவதற்கு உங்களுக்கு உண்மையான ‘சிநேகிதர்கள்’ யாராவது இருக்கிறார்களா? (நீதிமொழிகள் 17:17) அப்படியென்றால், அவர்களுடைய அன்பான உதவியிலிருந்து பயனடையுங்கள்! கண்ணீர்விட்டு அழுவதற்கோ உங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கோ பயப்படாதீர்கள். ஏன், இயேசுவே ஒரு சமயம் தனது நண்பரை இழந்தபோது ‘கண்ணீர் விட்டாரே!’​—யோவான் 11:35.

ஒருநாள், நாம் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்”வோம் என பைபிள் உறுதியளிக்கிறது. (ரோமர் 8:21) அதுவரை, நல்மனம் படைத்தவர்கள் அநேகர் துன்பப்படலாம். இத்தகைய துன்பம் ஏன் வருகிறது என்பதையும், அது தொடர்ந்து நீடித்திருக்காது என்பதையும் அறிவதில் ஆறுதல் அடையுங்கள். (g04 3/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b பிப்ரவரி 8, 2002 விழித்தெழு! இதழில் வெளிவந்த “பேரழிவிலும் மனவுறுதி” என்ற தொடர் கட்டுரைகளைக் காண்க.

[பக்கம் 16-ன் படம்]

உங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்துவது உதவியாக இருக்கலாம்