Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளுதல்

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளுதல்

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளுதல்

உங்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ் கிரீமை அல்லது சீஸ்ஸை கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் ரசித்து ருசித்து முடித்திருக்கிறீர்கள். திடீரென வயிற்றை இழுத்துப் பிடிக்கிறது, வயிற்றுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது; வாயுத் தொல்லை வேறு. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட சமீப காலமாக பயன்படுத்த ஆரம்பித்த மாத்திரையை இப்போதும் விழுங்குகிறீர்கள். “ஏன் என் வயித்துக்கு எதுவுமே ஒத்துக்க மாட்டேங்குது?” என உங்களையே கேட்டுக்கொள்கிறீர்கள்.

பாலைக் குடித்த பிறகோ பால் பண்ணைப் பொருட்களை சாப்பிட்ட பிறகோ குமட்டல், வயிற்றை இழுத்துப் பிடிப்பது, வயிறு ஊதுவது, வாயுத் தொல்லை, அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை சம்பவித்தால் உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். ஒருவரது உடம்புக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாவிட்டால் பால் பண்ணைப் பொருட்களை சாப்பிடுகையில் இப்படிப்பட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவது சகஜம்தான். “மூன்று முதல் ஐந்து கோடி அமெரிக்கர்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்வதில்லை” என நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டையாபட்டீஸ் அண்டு டைஜஸ்டிவ் அண்டு கிட்னி டிசீஸஸ் என்ற நிறுவனம் அறிக்கை செய்கிறது. ஹார்வர்டு மருத்துவப் பள்ளி பிரசுரித்த த சென்ஸிட்டிவ் கட் என்ற புத்தகத்தின்படி “உலக ஜனத்தொகையில் 70 சதவீதத்தினருக்கு லாக்டோஸால் ஏதாவது பிரச்சினை வந்துகொண்டிருக்கிறது” என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியானால் லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போவது எதை அர்த்தப்படுத்துகிறது?

லாக்டோஸ் என்பது பாலில் காணப்படும் சர்க்கரை ஆகும். லாக்டேஸ் என்ற என்ஸைமை சிறுகுடல் உற்பத்தி செய்கிறது. க்ளூக்கோஸ், கேலக்டோஸ் என்ற இரண்டு எளிய சர்க்கரைகளாக லாக்டோஸை சிதைப்பதே இந்த லாக்டேஸின் பணியாகும். இப்படி செய்வதால் இரத்தத்தில் க்ளூக்கோஸ் எளிதில் கலந்துவிடுகிறது. இந்தப் பணியைச் செய்வதற்கு போதுமான லாக்டேஸ் இல்லாவிட்டால் சிதைக்கப்படாத லாக்டோஸ் பெருங்குடல் வழியாக சென்று, புளிக்க ஆரம்பித்து, அமிலங்களையும் வாயுக்களையும் உண்டாக்குகிறது.

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போகும் இந்நிலையால் மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் சில அல்லது அனைத்தும் ஏற்படலாம். பிறந்து இரண்டு வயது வரை லாக்டேஸ் எக்கச்சக்கமாக உடலில் உற்பத்தியாகிறது; அதன் பிறகு அதன் உற்பத்தி சீராக குறைகிறது. எனவே பலருக்கும் இந்நிலை மெல்ல மெல்ல ஏற்படலாம், ஆனால் அதை அவர்கள் அறியாமல் இருக்கலாம்.

இது ஓர் அலர்ஜியா?

பால் பண்ணைப் பொருளை சாப்பிட்ட பின்பு அதன் எதிர்விளைவால் கஷ்டப்படுவதால் பால் தங்களுக்கு அலர்ஜி என்ற முடிவுக்கு சிலர் வரலாம். இந்த எதிர்விளைவுக்குக் காரணம் அலர்ஜியா அல்லது ஒத்துப்போகாமல் இருப்பதா? அலர்ஜியை ஆராயும் சில நிபுணர்களின்படி, உண்மையில் உணவு அலர்ஜி அரிதாகவே ஏற்படுகிறது, இதனால் மக்களில் 1 முதல் 2 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளைப் பொறுத்ததில் இந்த சதவீதம் சற்று அதிகம், ஆனாலும் அது 8 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. அலர்ஜிக்கும் லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போவதற்கும் உரிய அறிகுறிகள் ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றிற்கிடையே வித்தியாசங்கள் உள்ளன.

உணவு அலர்ஜிக்கான அறிகுறிகள் நோய் எதிர்ப்பு அமைப்பால் ஏற்படுகின்றன; அவை, நீங்கள் சாப்பிட்ட அல்லது குடித்த ஏதோவொன்றை எதிர்த்து உடல் தற்காப்பை​—⁠ஹிஸ்டமினை​—⁠அளிக்கும்போது ஏற்படுகின்றன. உதடுகள் அல்லது நாக்கு வீங்குவது, தோல் அரிப்பு (தடிப்பு) அல்லது ஆஸ்துமா போன்ற சில அறிகுறிகளும்கூட ஏற்படலாம். லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போகையில் இந்த அறிகுறிகளெல்லாம் ஏற்படாது, காரணம் இதில் நோய் எதிர்ப்பு அமைப்பு சம்பந்தப்படுவதில்லை. ஏதோ ஒருவித உணவை உடல் நன்கு ஜீரணிக்காதபோது லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போகிறது, இதனால் எதிர்வினை ஏற்படுகிறது.

நீங்கள் அலர்ஜியால் கஷ்டப்படுகிறீர்களா அல்லது ஒத்துக்கொள்ளாமல் போவதால் கஷ்டப்படுகிறீர்களா என்பதைக் கண்டுபிடிக்க எது உங்களுக்கு உதவும்? த சென்ஸிட்டிவ் கட் புத்தகம் அதற்கு பதிலளிக்கிறது: “உண்மையில் அலர்ஜியாக இருந்தால் . . . சேராத உணவை சாப்பிட்ட சில நிமிடத்திலேயே எதிர்வினைகள் நிகழ்கின்றன. ஒரு மணிநேரத்திற்கும் பிறகு அறிகுறிகள் தென்பட்டால் பெரும்பாலும் உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்றே அர்த்தம்.”

பச்சிளங்குழந்தைகளில் பாதிப்பு

பச்சிளங்குழந்தையோ சிறு பிள்ளையோ பால் குடித்த பின்பு கஷ்டப்படுகிறதென்றால் அந்தக் குழந்தைக்கும் சரி அதன் பெற்றோர்களுக்கும் சரி, அது தாங்க முடியாத வேதனை அளிக்கும். குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஆரம்பித்தால் நீரிழப்பு நேரிடலாம். அப்போது, குழந்தை நல மருத்துவரை பெற்றோர் நாடுவது ஞானமான செயலாகும். ஒத்துக்கொள்ளாமல் போனதால் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தால் பாலுக்குப் பதிலாக அதற்கு சமமான வேறொன்றை சில டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள். இதனால் அநேகருக்கு வேதனை தரும் அறிகுறிகள் மறைந்து நிம்மதி பிறக்கிறது.

அலர்ஜி என்றால் கவலை அதிகம்தான். சில டாக்டர்கள், ஹிஸ்டமின் எதிர்ப்பிகளைக் (antihistamine) கொடுக்கிறார்கள். எனினும் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகையில் அந்த சூழ்நிலையை சரிசெய்ய டாக்டர் வேறு ஏதேனும் நடவடிக்கை எடுப்பது அவசியம். அரிய சந்தர்ப்பங்களில், கடும் அலர்ஜி (anaphylaxis) ஏற்படுகையில் மரணம் நிகழ்கிறது.

பச்சிளங்குழந்தை வாந்தியெடுக்க ஆரம்பிக்கும்போது, கேலக்டோசிமியா (galactosemia) என்ற அரிய, கவலைக்கிடமான நிலை ஏற்படுகிறது. முன்னர் குறிப்பிட்டதுபோல, லாக்டேஸ் கேலக்டோஸை சிதைக்கிறது, ஆனால் அந்த கேலக்டோஸ் க்ளூக்கோஸாகவும் சிதைக்கப்பட வேண்டும். கேலக்டோஸ் அதிகளவில் உடலில் சேர்ந்துவிடும்போது ஈரல் மோசமாக பாதிக்கப்படலாம், சிறுநீரகம் பழுதடையலாம், மன வளர்ச்சி குன்றிவிடலாம், ஹைப்போகிளைசிமியா ஆகியவற்றுடன் ஒருவேளை கண்புரைகள்கூட ஏற்படலாம். ஆகவே, ஆரம்பத்திலேயே பச்சிளங்குழந்தையின் உணவில் லாக்டோஸை முழுமையாக தவிர்த்துவிடுவது அவசியம்.

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போவது எந்தளவுக்கு பாதிக்கும்?

வாயு தொந்தரவாலும் வயிறு இழுத்துப் பிடிப்பதாலும் ஓர் இளம் பெண் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். நிலைமை இன்னும் மோசமானபோது அவள் மருத்துவ சிகிச்சையை நாடினாள். பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு அவளுக்குக் குடல்வீக்க அழற்சி நோய் a இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நோயைக் கட்டுப்படுத்த மருந்து எழுதிக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவள் தொடர்ந்து பால் பண்ணைப் பொருட்களை சாப்பிட்டு வந்தாள், எனவே அவளிடம் அந்த நோய் அறிகுறிகள் தொடர்ந்து இருந்து வந்தன. தானாகவே ஆராய்ச்சி செய்த பிறகு சாப்பாடுதான் தன் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் என்பதை புரிந்துகொண்டாள், எனவே சில உணவுப் பதார்த்தங்களை சாப்பிடாமல் தவிர்க்க ஆரம்பித்தாள். இறுதியில் பால் பண்ணைப் பொருட்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட்டாள், அவளுடைய நோய் அறிகுறிகள் இருந்த இடம் தெரியாமல் மறைய ஆரம்பித்தன! ஒரு வருடத்திற்குள், இன்னும் பல பரிசோதனைகளுக்குப் பிறகு, குடல்வீக்க அழற்சி நோய் அவளுக்கு இல்லவே இல்லையென டாக்டர் அவளிடம் கூறினார். அவளுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறது. அவளுக்குள் பிறந்த நிம்மதியை சற்று எண்ணிப் பாருங்கள்!

உடலில் லாக்டேஸின் உற்பத்தியை ஊக்குவிக்க தற்சமயம் எந்த சிகிச்சை முறையும் இல்லை. எனினும், லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போவதால் உயிருக்கு ஆபத்தில்லை. எனவே லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அதை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?

எந்தளவு பால் பண்ணைப் பொருட்களை சாப்பிடுவது ஒத்துக்கொள்ளும் என்பதை சுய பரிசோதனை செய்து பார்த்து சிலர் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்கள் எந்தளவுக்கு பண்ணைப் பொருட்களை சாப்பிடுகிறீர்கள் என்பதையும் உங்கள் உடலில் ஏற்படும் எதிர்விளைவுகளையும் கவனமாக கண்காணித்தால் எந்தளவுக்கு அவை ஜீரணமாகும், எந்தளவு ஜீரணமாகாது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும்.

பால் பண்ணைப் பொருட்களை சாப்பிடுவதை சிலர் ஒட்டு மொத்தமாக நிறுத்திவிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் அல்லது டயட்டிஷியனைக் கேட்டு தெரிந்துகொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான கால்ஷியத்தை சிலர் வேறு வழிகளில் ஈடுகட்டுகிறார்கள். சில பச்சைக் காய்கறிகளிலும் சில வகை மீன்களிலும் கொட்டைகளிலும் கால்ஷியம் அதிகமுள்ளது.

பால் பண்ணைப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட விரும்புகிறவர்கள், மார்க்கெட்டில் மாத்திரைகள் வடிவில் அல்லது திரவ வடிவில் கிடைக்கும் சில பொருட்களை வாங்கி சாப்பிடலாம். இவற்றில் லாக்டேஸ் இருப்பதால் குடலில் லாக்டோஸ் சிதைக்கப்படுவதற்கு பெரும் உதவியாக உள்ளன. இவற்றை சாப்பிடுவது லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் போவதை தவிர்க்க உதவும்.

இன்றைய உலகில் ஒருவர் தன் ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பது பெரும் பாடாய் இருக்கிறது. ஆனால் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ காலம் வரும் வரையில், மருத்துவ ஆராய்ச்சியின் காரணமாகவும் நம் உடல் இழந்த வலுவை தானாகவே மீண்டும் பெறும் ஆற்றலின் காரணமாகவும் நம்மால் இப்பிரச்சினைகளை சமாளிக்க முடிகிறது.​—⁠ஏசாயா 33:24; சங்கீதம் 139:14. (g04 3/22)

[அடிக்குறிப்பு]

a குடல்வீக்க அழற்சி நோயில் இரண்டு வகைகள் உள்ளன; ஒன்று க்ரோன் வியாதி, மற்றொன்று சீழ்ப்புண் சார்ந்த பெருங்குடல் அழற்சி. மோசமான இந்த நோய்களால் குடலின் ஒரு பகுதியையே அகற்ற நேரிடலாம். குடல்வீக்க அழற்சியால் வரும் சிக்கல்கள் மரணத்தில் போய் முடியலாம்.

[பக்கம் 28-ன் பெட்டி/படங்கள்]

இவற்றிலும் லாக்டோஸ் இருக்கலாம்:

◼ ரொட்டியும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களும்

◼ கேக்குகள் மற்றும் குக்கீஸ்

◼ சாக்லேட்டுகள்

◼ ரெடிமேட் உருளைக்கிழங்கு மாவு

◼ டால்டா

◼ டாக்டர் எழுதிக் கொடுக்கும் பல மருந்துகள்

◼ மருந்து சீட்டின்றி வாங்கும் மருந்துகள்

◼ பான்கேக்குகள், பிஸ்கெட்டுகள், குக்கீஸ் ஆகியவை தயாரிக்க உதவும் ரெடிமிக்ஸ்கள்

◼ பதனப்படுத்தப்பட்ட காலை உணவான சீரியல்கள்

◼ சாலட்டை அலங்கரிக்கும் சாஸுகள்

◼ வேக வைத்து, பதனப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

◼ சூப்புகள்