Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?

கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?

பைபிளின் கருத்து

கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?

மாற்க் டுவெய்ன் என்ற ஆசிரியர் ஒருசமயம் இவ்வாறு வேடிக்கையாக சொன்னார்: “புகைபிடிப்பதை விட்டுவிடுவதுதான் இந்த உலகத்தில் மிகவும் சுலபமான காரியம். ஏனென்றால் நான் ஆயிரக்கணக்கான தடவை அதை செய்திருக்கிறேன்.” ஏக்கத்தோடு டுவெய்ன் சொல்லும் இந்தக் குறிப்பை பலரும் ஒத்துக்கொள்வார்கள். ஒழுக்க ரீதியில் சில பழக்கவழக்கங்கள் தவறானவை, தீமை விளைவிப்பவை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தாலும், அவற்றை மேற்கொள்வதும் விட்டொழிப்பதும் அதிக கடினமானது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பழக்கவழக்கங்கள் பல ஆண்டுகளாக ஆழமாய் வேரூன்றியிருக்கலாம், அவற்றை மாற்றிக்கொள்ள முயற்சிகள் எடுத்தாலும் அவை அப்படியே நம்மிடம் ஒட்டியிருக்கலாம். இப்படிப்பட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்துவது சோர்வூட்டலாம், வேதனையும்கூட அளிக்கலாம்.

குற்றவாளிகள் தங்களுடைய தீவிர உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பதாக அடிக்கடி சொல்வதை சிறைச்சாலையில் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் ஆந்தனி டேனியல்ஸ் குறிப்பிடுகிறார். ஒருவர் ஏதாவதொன்றுக்கு அடிமையாகும்போது, “நிர்ப்பந்தத்தின் உடும்புப் பிடியில் சிக்கியிருக்கிறார், அதை எதிர்த்து நிற்க அவருக்கு சக்தியில்லை” என அவர்கள் வாதிடுகிறார்கள். இப்படிப்பட்ட நியாயவிவாதங்கள் உண்மையாக இருந்தால், நிர்ப்பந்தத்தால் நாம் சில காரியங்களுக்கு அடிபணியும்போது நம்மிடம் யாருமே கணக்குக் கேட்க முடியாது. ஆனால், நம்முடைய உள்தூண்டுதல்களுக்கும் ஆசைகளுக்கும் நாம் பலியாகி நிர்க்கதியாக நிற்கிறோம் என்பது உண்மையா? அல்லது கெட்ட பழக்கங்களை நம்மால் விட்டொழிக்க முடியுமா? நம்பகமான பதிலைப் பெற, பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் இப்பொழுது ஆராயலாம்.

ஆசை Vs செயல்

நம்முடைய செயல்களுக்கு கடவுள் நம்மிடம் கணக்குக் கேட்பார் என பைபிள் தெளிவாக கூறுகிறது. (ரோமர் 14:12) அதோடு, நாம் அவருடைய நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழ வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 1:15) நமது படைப்பாளராக இருப்பதால், நமக்கு மிகச் சிறந்தது எது என்பதை அவர் அறிந்திருக்கிறார், இன்று இந்த உலகத்தில் சர்வ சாதாரணமாக காணப்படும் பழக்கவழக்கங்கள் பலவற்றை அவருடைய நியமங்கள் கண்டனம் செய்கின்றன. (1 கொரிந்தியர் 6:9, 10; கலாத்தியர் 5:19-21) என்றபோதிலும், அபூரண மனிதரிடம் அவர் எதிர்பார்க்கும் விஷயத்தில் எதார்த்தமானவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார்.​—⁠சங்கீதம் 78:38; 103:13, 14.

ஆகவேதான் சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.” (சங்கீதம் 130:3) ஆம், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்பதை யெகோவா முழுமையாக அறிந்திருக்கிறார். (ஆதியாகமம் 8:21) மரபியல், சுதந்தரிக்கப்பட்ட பலவீனங்கள், கடந்தகால அனுபவங்கள் ஆகியவற்றின் காரணமாக எல்லா கெட்ட சிந்தைகளையும் ஆசைகளையும் விட்டொழிப்பது நமக்கு முடியாத காரியமாகிறது. ஆகவேதான், யெகோவா நம்மிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்காமல் கரிசனையோடு நடந்துகொள்கிறார்.​—⁠உபாகமம் 10:12; 1 யோவான் 5:3.

இருந்தபோதிலும், கடவுள் நமக்கு கரிசனை காட்டுவதால் கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்தாமல் இருந்துவிடலாம் என்று அர்த்தமல்ல. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடியதாக அப்போஸ்தலன் பவுலே ஒத்துக்கொண்டபோதிலும், அவர் சோர்ந்துவிடவில்லை. (ரோமர் 7:21-24) “என் சரீரத்தை அடக்கி ஒடுக்கி, அதை ஓர் அடிமையைப் போல நடத்துகிறேன்” என அவர் கூறினார். எதற்காக? “நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு” என்று சொன்னார். (1 கொரிந்தியர் 9:27; NW) ஆம், நம் தவறான ஆசைகளையும் பழக்கவழக்கங்களையும் எதிர்த்துப் போராடி கடைசியில் வெற்றி பெற தன்னடக்கம் இன்றியமையாதது.

மாற்றம் சாத்தியமே

நல்ல பழக்கங்களைப் போலவே, கெட்ட பழக்கங்களும் கற்றுக்கொள்ளப்பட்டு காலம் செல்லச் செல்ல வளர்த்துக் கொள்ளப்படுகின்றன என நடத்தையைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது சரியென்றால், கெட்ட பழக்கங்களை நிச்சயமாகவே ஒழிக்கவும் முடியும்! எப்படி? “பழைய நடத்தை முறையை விட்டொழிப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.” பிற்பாடு “உங்களுடைய நடத்தையை மாற்றிக்கொள்வது எவ்வாறு உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவிக்கிறது என்பதை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்” என அழுத்தத்தை சமாளித்தல் பற்றிய நூலின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆம், கெட்ட நடத்தையை மாற்றிக்கொள்வதால் வரும் பயன்கள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது நம்மை மாற்றிக்கொள்ள உந்துவிக்கும்.

‘நம்முடைய மனதை உந்துவிக்கும் சக்தியை புதிதாக்குவதற்கு’ அப்போஸ்தலன் பவுல் தரும் புத்திமதியை சிந்தித்துப் பாருங்கள். (எபேசியர் 4:22, 23, NW) அந்த சக்திதான் மேலோங்கி நிற்கும் நம்முடைய மனச்சாய்வு. கடவுளிடம் நெருங்கி வருவதன் மூலமும் அவருடைய தராதரங்கள் மீது போற்றுதலை வளர்த்துக்கொள்வதன் மூலமும் அந்த சக்தியை உங்களால் புதிதாக்க முடியும். யெகோவாவை பிரியப்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்திருப்பது, தேவையான மாற்றங்களை செய்ய உங்களை உற்சாகப்படுத்துகிறது.​—⁠சங்கீதம் 69:30-33; நீதிமொழிகள் 27:11; கொலோசெயர் 1:9, 10.

ஆனால், பல வருடங்களாக நம் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் கெட்ட பழக்கங்களை விரட்டுவது கஷ்டமாக இருக்கும். அந்தப் போராட்டத்தை நாம் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. நிச்சயமாகவே சறுக்கல்களும் தோல்விகளும் உண்டாகும். ஆனால், காலம் செல்லச் செல்ல எல்லாம் உங்களுக்கு நிச்சயம் எளிதாகிவிடும். எந்தளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களுடைய புதிய நடத்தை உங்களுக்கு இயல்பாக ஆகிவிடும்.

கடவுளை நேசிப்பவர்கள் அவருடைய உதவியையும் ஆசீர்வாதத்தையும் குறித்தும் நம்பிக்கையுடன் இருக்கலாம். “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், . . . [அதை] தாங்கத்தக்கதாக, . . . அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்று பவுல் உறுதியளிக்கிறார். (1 கொரிந்தியர் 10:13) விரைவில், யெகோவா தேவன் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையையும் அதன் மோசமான சோதனைகளையும் ஆசைகளையும் ஏக்கங்களையும் அழித்துவிடுவார். (2 பேதுரு 3:9-13; 1 யோவான் 2:16, 17) இதை தப்பிப்பிழைக்கும் அபூரண மனிதர் அனைவரும் கடைசியில் எல்லா துன்பங்களிலிருந்தும்​—⁠உடல் ரீதியிலான, மனோ ரீதியிலான, உணர்ச்சி ரீதியிலான எல்லா துன்பங்களிலிருந்தும்​—⁠முழுமையாகவும் நித்தியத்திற்கும் குணமாக்கப்படுவார்கள். “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். (ஏசாயா 65:17) “முந்தினவைகள்” என்பதில் தொல்லைமிக்க ஏக்கங்களும் ஆசைகளும் அடங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இன்றைக்கு கெட்ட பழக்கங்களை எதிர்த்துப் போராட நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு இது மிகச் சிறந்த காரணம் அல்லவா? (g04 4/8)

[பக்கம் 27-ன் பெட்டி/படங்கள்]

கெட்ட பழக்கங்களை முறியடித்தல்

1. கெட்ட பழக்கங்களை கண்டுணர்ந்து அவற்றை ஒப்புக்கொள்ளுங்கள். ‘இந்தப் பழக்கத்தினால் உண்மையிலேயே எனக்கு பலன் கிடைக்கிறதா? இது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகிறதா அல்லது தொந்தரவாக இருக்கிறதா? இது என் ஆரோக்கியத்தையோ பொருளாதாரத்தையோ நல்வாழ்வையோ குடும்பத்தையோ மனநிம்மதியையோ பாதிக்கிறதா? இதில்லாமல் என்னுடைய வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கும்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

2. கெட்ட பழக்கங்களை ஒழித்து, நல்ல பழக்கங்களை வளருங்கள். உதாரணமாக, அதிக நேரத்தை இன்டர்நெட்டில் செலவழிக்கிறீர்களா, ஒருவேளை மோசமான காரியங்களைப் பார்க்கிறீர்களா? அப்படியானால், அந்த நேரத்தை நல்ல விஷயங்களை வாசிப்பதற்கு, படிப்பதற்கு அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு ஒதுக்குங்கள்.

3. உங்கள் முன்னேற்றத்தை கண்காணியுங்கள். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டால், என்ன சூழ்நிலைமைகள் அந்தப் பிரச்சினைக்கு வழிநடத்தின என்பதை தீர்மானியுங்கள்.

4. பிறருடைய உதவியை பெறுங்கள். இந்தப் பழக்கத்தை விட்டொழிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்பதை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள், அதோடு அந்தப் பழக்கத்திற்குள் நீங்கள் மீண்டும் வழுவிச் செல்வதைப் பார்த்தால் உங்களுக்கு நினைப்பூட்டும்படியும் கேட்டுக்கொள்ளுங்கள். அதே பழக்கத்தை வெற்றிகரமாக முறியடித்தவர்களிடம் பேசுங்கள்.​—⁠நீதிமொழிகள் 11:⁠14.

5. சமநிலையுடனும் எதார்த்தமாகவும் இருங்கள். எடுத்த எடுப்பில் வெற்றியை எதிர்பார்க்காதீர்கள். பல வருடமாக வளர்ந்த பழக்கங்கள் சீக்கிரத்தில் போகாது.

6. கடவுளிடம் ஜெபியுங்கள். கடவுளுடைய உதவியால் எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் உங்களால் முறியடிக்க முடியும்.​—⁠சங்கீதம் 55:22; லூக்கா 18:⁠27.