Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கையற்ற மனநிலையை உங்களால் எதிர்த்துப் போராட முடியும்

நம்பிக்கையற்ற மனநிலையை உங்களால் எதிர்த்துப் போராட முடியும்

நம்பிக்கையற்ற மனநிலையை உங்களால் எதிர்த்துப் போராட முடியும்

வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் சறுக்கல்களை எப்படி நோக்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதில், நீங்கள் நம்பிக்கையான மனநிலையுடையவரா அல்லது நம்பிக்கையற்ற மனநிலையுடையவரா என்பதை சுட்டிக்காட்டும் என நிபுணர்கள் பலர் இப்பொழுது கருதுகிறார்கள். வாழ்க்கையில் நாம் எல்லாருமே பல்வேறு கஷ்டநஷ்டங்களை அனுபவிக்கிறோம், நம்மில் சிலர் மற்றவர்களைவிட அதிகமாக அனுபவிக்கிறோம். ஆனால் ஏன் சிலர் கஷ்டங்களிலிருந்து மீண்டு வந்து, ஏதாவது சாதிக்க தயாராகிவிடுகிறார்கள், மறுபட்சத்தில் சிலர் சிறுசிறு கஷ்டங்கள் வந்தால்கூட நொடிந்துபோய் உட்கார்ந்து விடுகிறார்கள்?

உதாரணமாக, நீங்கள் ஒரு வேலை தேடி அலைகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இன்டர்வியூவுக்குப் போகிறீர்கள், ஆனால் அதில் தோல்வி அடைந்துவிடுகிறீர்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? ஒருவேளை இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, ‘என்னை மாதிரி ஆளை ஒருவரும் வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. எனக்கு ஒருநாளும் வேலை கிடைக்காது’ என நீங்கள் புலம்பலாம். அல்லது, அதைவிட மோசமாக, உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த ஏமாற்றம் உங்களை செல்வாக்குச் செலுத்த அனுமதித்து, ‘நான் எதற்கும் லாயகில்லை, என்னால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை’ என நினைக்கலாம். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இப்படிப்பட்ட சிந்தையே நம்பிக்கையற்ற மனநிலைக்கு முழுக் காரணம்.

நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடுதல்

நம்பிக்கையற்ற மனநிலையை நீங்கள் எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்? இத்தகைய எதிர்மறையான சிந்தனைகளை இனம் கண்டுகொள்வது முக்கியமான முதல் படி. அவற்றை எதிர்த்துப் போராடுவது இரண்டாவது படி. உங்களை வேலைக்கு எடுக்காததற்கு நியாயமான வேறுசில காரணங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, யாருமே உங்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்பதாலா உங்களை அனுப்பி விட்டார்கள்? அல்லது, வேறுசில தகுதிகளையுடைய வேறொருவரை அந்த முதலாளி தேடிக் கொண்டிருந்ததாலா?

திட்டவட்டமான உண்மைகள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்திப் பார்ப்பது, நம்பிக்கையற்ற எண்ணங்களை வெளிப்படுத்தும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒதுக்கப்பட்டதால் நீங்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக அர்த்தமாகுமா? அல்லது வாழ்க்கையில் நீங்கள் ஓரளவு வெற்றி பெற்ற வேறுசில அம்சங்களைப் பற்றி, அதாவது உங்களுடைய ஆன்மீக நாட்டங்களையோ குடும்ப உறவுகளையோ நட்புறவுகளையோ பற்றி சிந்தித்துப் பார்க்க முடியுமா? எதிர்காலத்திலும் “தோல்வியே கதி” என்ற உங்களுடைய முன்கணிப்புகளை ஒதுக்கித்தள்ள கற்றுக்கொள்ளுங்கள். சொல்லப்போனால், இனிமேல் உங்களுக்கு வேலையே கிடைக்காது என்று நிச்சயமாக தெரியுமா? எதிர்மறையான எண்ணத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை இன்னும் இருக்கின்றன.

இலக்குகள் நிறைந்த நம்பிக்கையான மனநிலை

சமீப காலங்களில் ஆராய்ச்சியாளர்கள் அக்கறைக்குரிய ஆனால் ஓரளவு குறுகிய விளக்கத்தை நம்பிக்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை என்பது இலக்குகளை உங்களால் அடைய முடியும் என்ற கருத்து என அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை என்பதில் அதிக அர்த்தம் பொதிந்துள்ளது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்; ஆனால் இந்த விளக்கம் பல்வேறு வழிகளில் பயனுள்ளதாக தோன்றுகிறது. இத்தகைய தனிப்பட்ட நம்பிக்கையின் இந்த அம்சத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது இலக்குகள் நிறைந்த அதிக நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும்.

நமது எதிர்கால இலக்குகளை அடைய முடியும் என நம்ப வேண்டுமென்றால், இலக்குகள் வைத்து அவற்றை அடைவதில் நாம் அனுபவம் பெற வேண்டும். உங்களுக்கு அத்தகைய அனுபவம் இல்லை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் வைக்கும் இலக்குகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கலாம். முதலாவதாக, உங்களுக்கு ஏதாவது இலக்குகள் இருக்கின்றனவா? உண்மையிலேயே வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறோம், எது நமக்கு மிக முக்கியம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும்கூட நேரமில்லாத அளவுக்கு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் சிக்கியிருக்கலாம். வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டியவற்றை தெளிவாக திட்டமிட்டு வைத்துக்கொள்ளும் நடைமுறையான இந்தக் கொள்கையின் சம்பந்தமாக, “அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என வெகு காலத்திற்கு முன்பே பைபிள் அழகாக சொல்லியிருக்கிறது.​—⁠பிலிப்பியர் 1:10, NW.

வாழ்க்கையில் முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றை தீர்மானித்துவிட்டால், ஆன்மீக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, வேலை, கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் முக்கியமான இலக்குகளை தேர்ந்தெடுப்பது சுலபமாகிவிடும். என்றாலும், ஆரம்பத்திலேயே அநேக இலக்குகளை வைக்காதிருப்பதும், எளிதில் அடைய முடியும் என நாம் நினைக்கும் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம். ஓர் இலக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தால், அது நம்மை திணறடித்துவிடும், கடைசியில் நாம் நம்பிக்கையிழந்து விடக்கூடும். ஆகவே, பெரிய, நீண்டகால இலக்குகளை சிறிய, குறுகியகால இலக்குகளாக பிரித்துக் கொள்வதே பெரும்பாலும் நல்லது.

“மனமிருந்தால் மார்க்கமுண்டு” என ஒரு பழமொழி கூறுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருப்பதாக தெரிகிறது. மனதில் முக்கியமான இலக்குகளை நாம் தீர்மானித்துவிட்டால், அவற்றை முயன்று அடைய நமக்கு மனோபலம் வேண்டும், அதாவது ஆசையும் உறுதியும் வேண்டும். நமது இலக்குகளின் மதிப்பையும் அவற்றை அடைவதால் வரும் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நமது தீர்மானத்தை நாம் பலப்படுத்தலாம். உண்மைதான், தடைகள் கண்டிப்பாக வரும், ஆனால் அவற்றை தடைக்கற்களாக எண்ணுவதற்குப் பதிலாக சவால்களாக நோக்குவதற்குக் கற்றுக்கொள்வது அவசியம்.

இருந்தாலும், நம்முடைய இலக்குகளை அடைய நடைமுறையான வழிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பதும் அவசியம். எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு பல்வேறு வழிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என சி. ஆர். ஸ்நைடர் என்ற ஆசிரியர் கூறுகிறார்; இவர் நம்பிக்கையின் மதிப்பைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்திருப்பவர். ஆகவே, ஒரு வழி சரிப்பட்டு வரவில்லை என்றால், இரண்டாவது, மூன்றாவது என நாம் முயன்று பார்க்கலாம்.

ஓர் இலக்கை விட்டுவிட்டு எப்பொழுது மற்றொரு இலக்கிற்கு மாறுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஸ்நைடர் சிபாரிசு செய்கிறார். ஓர் இலக்கை அடைவதற்கு உண்மையிலேயே ஏதாவது தடையாக இருந்தால், அதைப் பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிருப்பது நம்மை சோர்வடையச் செய்யும். மறுபட்சத்தில், அதற்கு பதிலாக அதிக எதார்த்தமான இலக்கை வைப்பது நம்பிக்கை தரும்.

இதன் சம்பந்தமாக பைபிளில் பயனுள்ள ஓர் உதாரணம் உள்ளது. தனது கடவுளாகிய யெகோவாவுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்ற இலக்கை தாவீது ராஜா நெஞ்சார நேசித்து வந்தார். ஆனால் அவருடைய மகன் சாலொமோனுக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கும் என தாவீதிடம் கடவுள் சொன்னார். இதைக் குறித்து முகம் சுளிப்பதற்கு அல்லது இந்த ஏமாற்றத்தை எப்படியாகிலும் மேற்கொள்ள வேண்டுமென கங்கனம் கட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தாவீது தனது இலக்குகளை மாற்றிக்கொண்டார். அதன்பின்பு, தனது மகன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் நிதியும் பொருளும் திரட்டுவதில் தன்னையே அர்ப்பணித்தார்.​—⁠1 இராஜாக்கள் 8:17-19; 1 நாளாகமம் 29:3-7.

நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடுவதன் மூலமும் இலக்குகள் நிறைந்த நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக் கொள்வதன் மூலமும் தனிப்பட்ட அளவில் நம்பிக்கையை அதிகரிப்பதில் நாம் வெற்றி பெற்றாலும்கூட, நாம் இன்னும் பெருமளவில் நம்பிக்கை இல்லாமலேயே இருக்கலாம். எப்படி? இந்த உலகில் நாம் எதிர்ப்படும் பெருமளவிலான நம்பிக்கையற்றத் தன்மை நம்முடைய சக்திக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரணங்களால் ஏற்படுகிறது. வறுமை, போர், அநீதி, வியாதி, மரணம் போன்ற பிரச்சினைகள் மனிதகுலத்தை வாட்டி வதைப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, எப்படி நாம் நம்பிக்கையான நோக்கை காத்துக்கொள்ள முடியும்? (g04 4/22)

[பக்கம் 7-ன் படம்]

ஒரு வேலை தேடி செல்லும்போது அது கிடைக்காவிட்டால், இனிமேல் உங்களுக்கு வேலையே கிடைக்காது என நினைத்துக் கொள்கிறீர்களா?

[பக்கம் 8-ன் படம்]

தாவீது ராஜா சூழ்நிலைமைக்கு ஏற்ப தன் இலக்குகளை மாற்றிக் கொண்டார்