Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யூத் டான்ஸ் கிளப்புகளுக்கு நான் போகலாமா?

யூத் டான்ஸ் கிளப்புகளுக்கு நான் போகலாமா?

இளைஞர் கேட்கின்றனர் . . . 

யூத் டான்ஸ் கிளப்புகளுக்கு நான் போகலாமா?

“நான் ஒரு குறிக்கோளோடதான் போனேன், படுஜாலியா பொழுதக் கழிக்கப் போனேன்.”​—⁠ஷான்.

“உண்மைய சொல்லப்போனா, ஜாலியாய் இருந்துச்சு​—⁠ஒரே ஜாலிதான்! டான்ஸ், டான்ஸ், விடிய விடிய டான்ஸ்தான்.”​—⁠எர்னஸ்ட்.

சமீப காலத்தில் யூத் டான்ஸ் கிளப்புகள் அதிக பிரபலமாகியிருக்கின்றன. ஜாலியாக பொழுதைக் கழிக்கத் துடிக்கிற இளவட்டங்கள் அநேகர் இப்படிப்பட்ட கிளப்புகளுக்குத் தவறாமல் போகின்றனர்.

உண்மைதான், நாம் எல்லாருமே ஜாலியாக இருக்க விரும்புகிறோம். “மகிழ்ச்சியாக இருக்க ஒரு காலமுண்டு” என்றும் “நடனம் பண்ண ஒரு காலமுண்டு” என்றும்கூட பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:4; டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆனால், யூத் டான்ஸ் கிளப்புகள் நல்ல பொழுதுபோக்காக இருக்கின்றனவா? அல்லது இப்படிப்பட்ட கிளப்புக்குப் போவதற்கு முன்பு ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்துப் பார்ப்பது புத்திசாலித்தனமா?

“மூர்க்கத்தனமான பார்ட்டிகள்”

ஆடம்பரமற்ற சமூக கூட்டங்களை பைபிள் கண்டனம் செய்வதில்லை என்றாலும், ‘களியாட்டுகளை,’ அல்லது ‘மூர்க்கத்தனமான பார்ட்டிகளைக்’ குறித்து எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:19-21; பையிங்டன்) பைபிள் காலங்களில், களியாட்டுகள் அநேகமாக கட்டுக்கடங்கா நடத்தையில் போய் முடிந்தன. தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு எழுதினார்: “விடியற் காலையிலேயே விழித்தெழுந்து, போதை தரும் மதுவை நாடி அலைந்து, இரவு வரை குடித்துப் பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஐயோ, கேடு! அவர்கள் கேளிக்கை விருந்துகளில் கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை.”​—⁠ஏசாயா 5:11, 12, பொது மொழிபெயர்ப்பு.

இத்தகைய விருந்துகளில் “போதை தரும் மது”வும் வெறித்தனமான இசையும் முக்கிய அம்சங்களாக இருந்தன. இவையெல்லாம் பொழுதுவிடிந்து பொழுதுசாயும் வரை தொடர்ந்தன. அந்தக் களியாட்டுக்காரர்களுடைய மனநிலையையும் கவனியுங்கள்​—⁠கடவுளே இல்லை என்பது போல அவர்கள் நடந்து கொண்டார்கள்! அப்படியானால், இத்தகைய விருந்துகளை கடவுள் கண்டனம் செய்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், இன்றைக்கு அநேக யூத் டான்ஸ் கிளப்புகளில் நடக்கும் விஷயங்களைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?

உண்மைகளை சிந்தித்துப் பாருங்கள். ஒரு விஷயம் என்னவென்றால், சில கிளப்புகளில் கூட்டமும் கும்மாளமுமாக வெறித்தனமான டான்ஸ்கள் நடக்கின்றன. “இது ‘பங்க்’ ஸ்டைலுக்கு பிந்தைய கிளப்புகளில் 80-களின் மத்திபத்தில் ஐ.மா.-வில் தோன்றியது. இது ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் ‘ஸ்லாம்’ டான்ஸிலிருந்து . . . வந்தது” என ஒரு பத்திரிகை தெரிவிக்கிறது. இந்த விதமான டான்ஸில் பெரும்பாலும் மேலும் கீழும் குதிப்பது, வெறித்தனமாக தலையை அசைப்பது, மாடு மாதிரி ஒருவருக்கொருவர் முட்டிக்கொள்வது, டான்ஸ் ஆடுபவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்வது போன்ற செயல்கள் நடக்கின்றன. முட்டியை உடைத்துக்கொள்வதும் வெட்டுக் காயங்களும் சர்வ சாதாரணம், தண்டுவடத்திலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மரணமும்கூட சம்பவித்திருக்கிறது. அதோடு, சில கிளப்புகளில், கூட்டத்தினர் ஆட்களை அப்படியே அலாக்காக தூக்கி மற்றவர்களிடம் ‘பாஸ்’ பண்ணுகிறார்கள். இப்படி ‘பாஸ்’ பண்ணுகையில் சிலரை பெரும்பாலும் கீழே போட்டுவிடுகிறார்கள். இதனால் காயம் ஏற்படுகிறது. பெண்களை ‘பாஸ்’ பண்ணுகையில் அவர்களை கண்டகண்ட இடங்களில் தொடுவதும் தடவுவதும் சகஜம்.

இத்தகைய நடத்தையை கடவுள் கண்டனம் செய்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால், ‘அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தி . . . உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணும்படி’ கிறிஸ்தவர்களுக்கு அவருடைய வார்த்தை கட்டளையிடுகிறது.​—⁠தீத்து 2:⁠12.

இசையும் போதைப்பொருட்களும்

பெரும்பாலான டான்ஸ் கிளப்புகளில் போடப்படும் மியூசிக் பற்றியும்கூட சிந்தித்துப் பாருங்கள். ‘ஹார்டு ராக்’ அல்லது ‘ஹெவி மெட்டல்’ போன்ற மியூசிக்குகளுக்கு சில கிளப்புகள் பேர்போனவை; இத்தகைய மியூசிக்குகளில் அதிரவைக்கும் தாளமும் அசிங்கமான பாடல் வரிகளுமே மேலோங்கி நிற்கின்றன. ஆனால் அநேக கிளப்புகளில் ‘ராப்,’ அதாவது ஹிப்-ஹாப் மியூசிக்கே பாப்புலர் மியூசிக். இந்த வகை மியூசிக்கின் சிறப்பம்சம் செக்ஸ், வன்முறை, கலகத்தனம் ஆகியவைதான். ஆரோக்கியமற்ற சூழலில் இப்படிப்பட்ட இசையை கேட்பது உங்களை பாதிக்குமா? டேவிட் ஹாலிங்வொர்த் என்ற நைட்கிளப் அறிவுரையாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “ஆட்கள் மீது மனோ ரீதியில் பயங்கர தாக்கத்தை இசை ஏற்படுத்துகிறது. கூட்டத்தாரோடு சேர்ந்து அதை நீங்கள் கேட்கும்போது, மூர்க்கத்தனமான இயல்புடைய மனநிலைகளைத் தூண்டுவிக்கும்.” ஐ.மா.-வில் பெரும்பாலான நகரங்களிலுள்ள டான்ஸ் கிளப்புகளில் வன்முறை வெடித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. மோசமான செயலையும் முரட்டுத்தனமான நடத்தையையும் உந்துவிக்கிற இசைக் கலாச்சாரத்தின் நேரடி விளைவே இதெல்லாம் என்பதை அநேகர் உணருகின்றனர். *

சமீப ஆண்டுகளில், டான்ஸ் கிளப்புகளில் போதைப்பொருட்களும் கிடைக்கின்றன. “சட்டவிரோதமான போதைப்பொருட்கள் எந்தளவு கிடைக்கின்றன, எத்தனை வகைகளில் கிடைக்கின்றன, எந்தளவு உட்கொள்ளப்படுகின்றன என்பதையெல்லாம் பொறுத்தே டான்ஸ் கிளப்புகள் பிரபலமாகின்றன” என ஓர் ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டார். சொல்லப்போனால், ‘டான்ஸ் போதைப்பொருள்’ என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருட்களே கிடைக்கின்றன. டான்ஸ் கிளப்புகளுக்கு அடிக்கடி போகிற சிலர் பல்வேறு போதைப்பொருட்களைக் கலந்து உட்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவற்றில் மிகவும் சகஜமாக பயன்படுத்தப்படுவது கெட்டமின் (ஸ்பெஷல் K என்றும் அழைக்கப்படுகிறது); இது உணர்ச்சியை மூளையின் மற்ற செயல்பாடுகளிலிருந்து துண்டித்து, வலிப்பையும் மூச்சுத்திணறலையும் நரம்புக் கோளாறையும் உண்டாக்கலாம். மெத்தாம்ஃபெடமைன் என்பது நினைவிழப்பையும் வெறித்தனத்தையும் வன்முறையையும் இருதயக் கோளாறையும் நரம்புக் கோளாறையும் ஏற்படுத்தலாம். முக்கியமாக, ஆம்ஃபிடமைன் கொண்ட போதைப்பொருள் பிரபலமாக இருக்கிறது; இது ‘எக்ஸ்டஸி’ என அறியப்படுகிறது. இது குழப்பத்தையும் கவலையையும் அதிக நாடித்துடிப்பையும், உயர் இரத்த அழுத்தத்தையும் பயங்கர காய்ச்சலையும் உண்டாக்கலாம். ‘எக்ஸ்டஸி’யை உபயோகித்த சிலர் மரித்தும்கூட இருக்கிறார்கள்.

சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்துவது ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள’ வேண்டுமென பைபிள் நமக்கு கொடுக்கும் கட்டளைக்கு முரணாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 7:1) போதைப்பொருள் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் இடத்தில் நீங்கள் இருப்பது ஞானமான செயலா?

கெட்ட கூட்டுறவு

மிகவும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பின்வரும் எச்சரிக்கையை மனதில் வையுங்கள்: “கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களை கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) பைபிள் காலங்களில் வாழ்ந்த களியாட்டுக்காரர்களைப் போல, டான்ஸ் கிளப்புகளுக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலோர் கடவுளைப் பிரியப்படுத்துவதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. சொல்லப்போனால், பெரும்பாலோர் ‘தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராக’ இருக்கிறார்கள் என வர்ணிக்கலாம். (2 தீமோத்தேயு 3:4) இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தாருடன் நெருங்கிய கூட்டுறவு கொள்வதற்கு நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்களா?

கிறிஸ்தவ இளைஞர்களுடன் சேர்ந்து டான்ஸ் கிளப்புகளுக்குச் சென்றால் அதிக ஆபத்துக்கள் இருக்காது என சிலர் நியாயப்படுத்தலாம். ஆனால், ‘நடத்தையில் . . . விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்கிற’ கிறிஸ்தவ இளைஞர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட இடங்களுக்குப் போக விரும்ப மாட்டார்கள். (1 தீமோத்தேயு 4:12) அப்படியே டான்ஸ் கிளப்புகளுக்குச் சென்று கிறிஸ்தவ இளைஞர் கூட்டத்தினர் எல்லாரும் ஒன்றாக சேர்ந்திருந்தாலும்கூட, ஆரோக்கியமற்ற இசையும் சூழலும் இன்னும் அங்கே இருக்கத்தான் செய்யும். அவர்கள் அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்றிருக்கையில் அங்கிருக்கும் மற்றவர்கள் அவர்களை டான்ஸ் மேடைக்கு அழைத்தால் தர்மசங்கடமாக உணரலாம். இளைஞர்கள் சிலர் சண்டையிலும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள்! ஆகவே பைபிளின் பின்வரும் வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”​—⁠நீதிமொழிகள் 13:⁠20.

ஆசையைத் தூண்டும் டான்ஸ்கள்

சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் டான்ஸ். மிகவும் வித்தியாசமான ஒரு வகை டான்ஸ் அதிக பிரபலமாகியிருக்கிறது, முக்கியமாக ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் இளசுகள் மத்தியில் பாப்புலர் ஆகியிருக்கிறது. பாலியல் விஷயங்களை அப்பட்டமாக வர்ணிக்கும் பாமாலைகளுடன் ராப் மியூசிக் இசைக்கையில் டான்ஸ் ஆடுகிறார்கள். மேலும், இந்த டான்ஸ்தானே பாலுறவை ஒத்திருக்கிறது. அதனால்தான், இந்த வகை டான்ஸ் மூவ்மென்ட்கள் ‘ஆடையுடன் செக்ஸ்’ என வர்ணிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிறிஸ்தவ இளைஞர் இப்படிப்பட்ட டான்ஸ் ஆட விரும்புவாரா? அவர் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால் அப்படி செய்ய விரும்ப மாட்டார், ஏனென்றால் “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என அவர் நமக்கு கட்டளையிடுகிறார். (1 கொரிந்தியர் 6:18) ‘எல்லாரும்தான் அதில் ஈடுபடுகிறார்கள், அதனால் அந்தளவுக்கொன்றும் மோசமாக இருக்காது’ என சிலர் நியாயப்படுத்தலாம். என்றாலும், அநேகர் போகும் போக்கு தவறாக இருக்கலாம். (யாத்திராகமம் 23:2) உங்கள் சகாக்களின் அழுத்தத்தை எதிர்த்து நிற்க தைரியத்தை ஒன்றுதிரட்டுங்கள். கடவுளிடம் நல்மனசாட்சியை காத்துக்கொள்ளுங்கள்!​—⁠1 பேதுரு 4:3, 4.

தீர்மானம் எடுத்தல்

இதனால் எல்லா டான்ஸ்களுமே மோசம் என அர்த்தமாகாது. பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியுடன் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது மகிழ்ச்சிப் பெருக்கினால் தாவீது ராஜா ‘தன் முழு பலத்தோடு . . . நடனம் பண்ணினார்’ என பைபிள் சொல்கிறது. (2 சாமுவேல் 6:14) கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமையில், அவன் மனந்திரும்பி வந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தினால் வீட்டில் ‘கீதவாத்தியமும் நடனக்களிப்பும்’ இருந்தது.​—⁠லூக்கா 15:25.

இதுபோல சில வகை டான்ஸ்கள் உங்களுடைய சமுதாயத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இருக்கலாம். அப்படியிருந்தாலும்கூட, சமநிலையும் சரியாக தீர்மானிப்பதும் முக்கியம். கிளப்புகளைவிட தகுந்த கட்டுப்பாடும் கண்காணிப்பும் உள்ள கிறிஸ்தவ பார்ட்டிகளில் இசையையும் நடனத்தையும் இளைஞர்கள் அனுபவிப்பது அதிக பாதுகாப்பானது. நன்கு கண்காணிக்கப்படும் கிறிஸ்தவ பார்ட்டிகளில், இளைஞர்கள் தங்களை தனியே பிரித்து வைத்துக்கொள்ள மாட்டார்கள், ஆனால் எல்லா வயது கிறிஸ்தவர்களுடனும் ஆரோக்கியமான கூட்டுறவை அனுபவிப்பார்கள்.

உண்மைதான், மியூசிக்கும் நாகரிகமான டான்ஸும் உள்ள சில ரெஸ்டரன்ட்டுகள் உங்களுடைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட எந்தவொரு இடத்திற்கும் செல்வதற்கு அழைப்பு கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன்பு, பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது: அந்த இடம் எப்படிப்பட்ட பெயரெடுத்திருக்கிறது? இளைஞர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்துகிறதா? அப்படியானால், ஆரோக்கியமான சூழல் இருப்பது எந்தளவு சாத்தியம்? அங்கே எப்படிப்பட்ட மியூசிக் போடுவார்கள்? எப்படிப்பட்ட டான்ஸ்கள் இருக்கும்? நான் அங்கே போவதைப் பற்றி என்னுடைய அப்பா அம்மா என்ன நினைப்பார்கள்? இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நீங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும்.

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஷான் விஷயங்களை அழகாக தொகுத்துரைக்கிறார். கிறிஸ்தவராவதற்கு முன்பு அவர் டான்ஸ் கிளப்புகளுக்குப் போவது வழக்கம். அவர் சொல்கிறார்: “நைட் கிளப்புகளில் படுமோசமான காரியங்களெல்லாம் நடக்கும். மியூசிக் பொதுவாக கேட்க சகிக்காது, டான்ஸிங் சொல்லவே வேண்டியதில்லை, ரொம்ப செக்ஸியாக இருக்கும், கிளப்புக்கு வருகிற மெஜாரிட்டியான ஆட்களுடைய ‘மோட்டிவே’ செக்ஸுக்காக ஒருவரை கண்டுபிடிப்பதுதான்.” யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்தபின், கிளப்புக்குப் போவதற்கு ஷான் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை அவர் தெரிவிக்கிறார்: “அந்த கிளப்புகள் கிறிஸ்தவர்களுக்கு ஏற்ற இடமல்ல.” (g04 4/22)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 13 அக்டோபர் 8, 1999, விழித்தெழு! இதழில் “நாம் இசைக்கு மயங்குவதேன்?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 24-ன் படம்]

இளைஞர்கள் சிலர் டான்ஸ் கிளப்புகளில் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்