Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகள் மீது கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

பிள்ளைகள் மீது கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

பைபிளின் கருத்து

பிள்ளைகள் மீது கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பிள்ளைகள் ஈவிரக்கமின்றி, தன்னலத்தோடு, மூர்க்கத்தனமாக நடத்தப்படுகிறார்கள். அநேக பிள்ளைகள் அடிமைகளைப் போல் ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்கிறார்கள். மற்ற பிள்ளைகளோ, கடத்தப்பட்டு, இராணுவத்தில் சேருவதற்கும் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இன்னும் நிறையப் பிள்ளைகள், குடும்பத்தாராலேயே பாலியல் பலாத்காரத்துக்கும் திகிலூட்டும் சிறார் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகி மேலும் நம்பிக்கையிழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நேர்மையும் அன்புள்ளமும் கொண்ட மக்கள், பிள்ளைகள் படும் அவஸ்தையைப் பார்த்து வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலும் மனிதனுடைய பேராசையும் ஒழுக்கச் சீர்கேடும்தான் இந்த மோசமான நடத்தைகளுக்கு காரணம் என்பதை உணர்ந்திருந்தாலும், இந்த அநியாயத்தை அன்பே உருவான கடவுளால் எப்படி அனுமதிக்க முடிகிறது என்று சிலர் கேட்கிறார்கள். கடவுள் இந்தப் பிள்ளைகளை கைவிட்டுவிட்டார் அல்லது ஒருவேளை அவருக்கு இந்தப் பிள்ளைகள் மீது அக்கறையே இல்லை என அவர்கள் உணரக்கூடும். ஆனால் இது உண்மையா? பிள்ளைகளை தன்னலத்திற்காக பயன்படுத்தி, துஷ்பிரயோகம் செய்வதைப் பார்க்கும் போது, கடவுளுக்குப் பிள்ளைகள் மீது அக்கறையே இல்லை என்று அர்த்தமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

துஷ்பிரயோகம் செய்வோரை கடவுள் கண்டனம் செய்கிறார்

பிள்ளைகள் ஈவிரக்கமற்ற மனிதர்களால் தவறாக நடத்தப்பட வேண்டும் என்பது யெகோவா தேவனின் நோக்கம் அல்ல. ஆனால் ஏதேன் தோட்டத்தில் மனிதர் கலகம் செய்ததால் நிறைய துன்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் சிறார் துஷ்பிரயோகமும் ஒன்று. கடவுளுடைய உன்னத ஆட்சியுரிமையை மனிதன் ஏற்க மறுத்ததால் சக மனிதராலேயே ஈவிரக்கமின்றி நடத்தப்படும் நிலை உருவானது.​—ஆதியாகமம் 3:11-13, 16; பிரசங்கி 8:9.

துணிவும் பாதுகாப்புமின்றி நிற்கும் மக்களை தவறாக நடத்துபவர்களை கடவுள் வெறுக்கிறார். யெகோவாவை வணங்காத பூர்வ தேசத்து மக்கள் பலர் தங்களுடைய பிள்ளைகளை பலிகொடுத்து வந்தார்கள். ஆனால் ‘அதை தான் கட்டளையிடவுமில்லை, அது தன் மனதில் தோன்றவுமில்லை’ என்று யெகோவா சொன்னார். (எரேமியா 7:31) ‘அவர்களை [அதாவது, அநாதை பிள்ளைகளை] எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம் மூண்டவராவேன்’ என்று சொல்லி தமது ஜனங்களை எச்சரித்தார்.​—யாத்திராகமம் 22:22-24.

பிள்ளைகளை யெகோவா நேசிக்கிறார்

கடவுளுக்கு பிள்ளைகள் மீது அக்கறை இருக்கிறது என்பதை பெற்றோருக்கு அவர் கொடுத்திருக்கும் ஞானமான அறிவுரைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது. பாதுகாப்பான உணர்வைத் தரும் குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகள் முதிர்ச்சியுள்ளவர்களாக, சூழ்நிலைமைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்பவர்களாக ஆகும் சாத்தியம் அதிகம் உள்ளது. அதனால்தான் நமது படைப்பாளர் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். இந்த ஏற்பாட்டின் மூலம், “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) திருமண பந்தத்திற்குள் மட்டுமே பாலுறவு கொள்வதை பைபிள் அனுமதிக்கிறது, அப்பொழுதுதான் பிறக்கும் குழந்தைகளை நிலையான சூழலில் வளர்க்க முடியும்.​—எபிரெயர் 13:4.

பெற்றோர் கொடுக்கும் பயிற்றுவிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் பைபிள் வலியுறுத்துகிறது. “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 127:4, 5) பிள்ளைகள் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு. அவர்கள் தழைத்தோங்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். வில்வித்தைக்காரன் அம்பை குறிபார்த்து எய்வதுபோல் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் நல்ல வழிநடத்துதலை கொடுக்க வேண்டும் என்று கடவுள் அறிவுரை கூறுகிறார். “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்று கடவுளுடைய வார்த்தை போதிக்கிறது.​—⁠எபேசியர் 6:4.

கொடுமைக்காரர்கள் கைகளிலிருந்து பிள்ளைகளை காப்பாற்ற, பெற்றோருக்கு கடவுள் போதிக்கிறார். இது பிள்ளைகள் மீது கடவுள் வைத்துள்ள அன்பை வெளிக்காட்டும் மற்றொரு வழி. பூர்வ இஸ்ரவேலரின் காலத்தில், “நியாயப்பிரமாணத்திலிருந்து வாசிக்கப்படுவதை பிள்ளைகளும்” கேட்க வேண்டுமென கட்டளையிடப்பட்டிருந்தது. அதில் முறையான மற்றும் முறையற்ற பாலுறவு நடத்தை சம்பந்தமான சட்டங்களும் அடங்கியிருந்தன. (உபாகமம் 31:12; லேவியராகமம் 18:6-24) துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்தும் தவறாக நடத்துபவர்களிடமிருந்தும் பிள்ளைகளை பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் பெற்றோர் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

பிள்ளைகளுக்கான நம்பிக்கை

யெகோவாவின் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும் இயேசு கிறிஸ்து, பிள்ளைகள் மீது யெகோவா கொண்டுள்ள நீடித்த அன்பை மிக அழகாக செயலில் காட்டுகிறார். (யோவான் 5:19) இயேசுவுக்கு உதவி செய்வதாக நினைத்து அவருக்குப் பிடிக்காததை அப்போஸ்தலர்கள் செய்தார்கள். அதாவது, பெற்றோர்கள் சிறுபிள்ளைகளை இயேசுவிடம் கொண்டுவந்தபோது அவர்களை அவரிடம் போகவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அதைப் பார்த்த இயேசு, அவர்களை கோபத்துடன் கண்டித்தார். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” என்று அவர் கூறினார். பிறகு ‘அவர்களை அணைத்துக்கொண்டு ஆசீர்வதித்தார்.’ (மாற்கு 10:13-16) யெகோவா தேவனும் சரி அவருடைய குமாரனும் சரி, பிள்ளைகளை அற்பமானவர்களென்று எண்ணுகிறதில்லை.

கடவுள் தமது நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், தாழ்வாக நடத்தப்படும் பிள்ளைகளுக்கு வெகு சீக்கிரத்தில் விடுதலையை தரப்போகிறார் என்பது நிஜம். இன்றுள்ள கொடூரமான துஷ்பிரயோகிகளையும் பேராசைபிடித்த தன்னலவாதிகளையும் அவர் அழிக்கப்போகிறார். (சங்கீதம் 37:10, 11) யெகோவாவை தேடுகிற சாந்தமுள்ள ஆட்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”​—வெளிப்படுத்துதல் 21:3, 4.

அதுவரை, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தவறாக நடத்தப்படும் ஆட்களுக்கு ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உதவி அளிப்பதன் மூலம் கடவுள் இப்போது தமது அன்பை வெளிக்காட்டுகிறார். “நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்.” (எசேக்கியேல் 34:16) கொடுமைப்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் யெகோவா தமது வார்த்தை, பரிசுத்த ஆவி, கிறிஸ்தவ சபை இவற்றின் மூலம் ஆறுதல் அளிக்கிறார். எதிர்காலத்தில் செய்யப்போவதைப் போலவே இப்போதும், ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர் நமக்கு சகல உபத்திரவத்திலும் ஆறுதல் செய்வார்’ என்பதை தெரிந்துகொள்வதில் எப்பேர்ப்பட்ட சந்தோஷம்!​—2 கொரிந்தியர் 1:3, 4. (g04 8/8)

[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]

© Mikkel Ostergaard /Panos Pictures