Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிகச் சிறந்த பொம்மைகள்

மிகச் சிறந்த பொம்மைகள்

மிகச் சிறந்த பொம்மைகள்

என்னுடைய பிள்ளைக்கு எப்படிப்பட்ட பொம்மை வாங்குவது? அதற்காக எவ்வளவு பணம் செலவழிப்பது? நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுடைய மனதில் அடிக்கடி ரீங்காரமிட்டிருக்கலாம். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், மிகவும் விலை குறைந்த பொம்மைகளே மிகச் சிறந்தவையாக இருக்கலாம்.

“பொம்மைகளை வெறுமனே பார்ப்பதைவிட பிள்ளைகள் அவற்றை துருவி ஆராயும்போது அதிக பயனடைகிறார்கள். எனவே, கண்ணைப் பறிக்கும் பேட்டரி கார்களைவிட அல்லது பேசும் பொம்மைகளைவிட, கற்பனைத் திறனை வளர்க்கும் சாதாரண பொம்மைகளே பிள்ளைகளுக்கு சிறந்தது” என ஓர் ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. (தூண்டுவிக்கப்பட்ட மனங்கள்​—⁠கற்றுக்கொள்ளும் விருப்பத்தோடு பிள்ளைகளை வளர்த்தல்) அழகழகான பொம்மைகள் கையில் கிடைத்ததும் “பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் ஒரே கொண்டாட்டமாக இருக்கலாம், ஆனால் அந்த ஆர்வம் சீக்கிரத்தில் பறந்துவிடுகிறது; ஏனென்றால் அவற்றை துருவி ஆராயவோ தங்களுடைய கற்பனைத் திறனை வளர்க்கவோ முடிவதில்லை.”

பிள்ளையின் வயதிற்கேற்ப, மூளைக்கு வேலை கொடுக்கும் சாதாரண பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். பில்டிங் பிளாக்ஸ், காலி டப்பாக்கள், பேப்பர், படம் வரைய தேவையான பொருட்கள் ஆகியவற்றை கொடுக்கலாம்; மணலையும் தண்ணீரையும்கூட கொடுக்கலாம். “பண்ணை விலங்குகள் போன்ற சிறு பொம்மைகள் ஒரேபோல் இருப்பவற்றை கண்டுபிடிக்கவும், குரூப்பாக பிரிக்கவும், ஒப்பிட்டு பார்க்கவும் [பிள்ளைகளுக்கு] உதவும். அவற்றைக் கொண்டு கதைகளை உருவாக்கும்போது பிள்ளையுடைய மொழித் திறனும் வளரும்” என்று தூண்டுவிக்கப்பட்ட மனங்கள் புத்தகம் சொல்கிறது. சாதாரண இசைக்கருவிகள், ஒலிகளையும் அதன் அமைப்புகளையும் ஆராய பிள்ளைகளுக்கு உதவுவதால்​—⁠காது கிழியும் சப்தத்தை தாங்கிக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால்​—⁠அவற்றை வாங்கித் தரலாம் என்றும் அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.

பிள்ளைகளுக்குப் புதிது புதிதாக சிந்திக்கும் திறன் உண்டு, அதோடு கற்றுக்கொள்வதிலும் விளையாடுவதிலும் ஆர்வமும் உண்டு. எனவே இந்த மூன்று அம்சங்களிலும் சின்னஞ்சிறுசுகளுக்கு உதவும் பொம்மைகளை நாம் ஞானமாக தேர்ந்தெடுக்கலாமே. (g04 8/8)