Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவித்தல் எவ்வளவு முக்கியம்?

குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவித்தல் எவ்வளவு முக்கியம்?

குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவித்தல் எவ்வளவு முக்கியம்?

ஃபிளாரன்ஸ் என்பவர் 40 வயது பெண்மணி, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவருடைய ஆசையும் நிறைவேறியது, ஆனால் குழந்தையோ கற்கும் திறனில் குறைபாட்டுடன் (learning disability) பிறக்கலாம் என டாக்டர் சொல்லிவிட்டார். என்றாலும் அவர் மனம் தளரவில்லை, கடைசியில் ஆரோக்கியமான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஸ்டீவன் பிறந்த கொஞ்ச காலத்திற்குப்பின், அவனுடைய தாயார் ஃபிளாரன்ஸ் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு வாசித்துக் காட்டினார், அவனிடம் உரையாடினார். அவன் சற்று பெரியவனாக வளர்ந்தபோது அவனுடன் சேர்ந்து விளையாடினார், அவனை வெளியில் கூட்டிக்கொண்டு போனார், அவனுக்கு 1, 2, 3 . . . சொல்லிக் கொடுத்தார், பாட்டுப் பாடினார். “குளிப்பாட்டும்போதுகூட அவனோடு ஏதாவது விளையாடியதாக” அவர் கூறுகிறார். இவையெல்லாம் நல்ல பலன்களைத் தந்தன.

மியாமி என்ற யுனிவர்சிட்டியில் படித்து 14 வயதிலேயே ஸ்டீவன் பட்டம் பெற்றான், அதுவும் ‘ஹானர்ஸ்’ பட்டம் பெற்றான். அதற்குப் பின் இரண்டு வருஷத்தில், அதாவது 16 வயதில், சட்டம் படித்து முடித்தான். அவனுடைய ‘பையோகிராபி’ காட்டுகிறபடி, பிற்பாடு அமெரிக்காவிலேயே மிக இளம் வயது வக்கீலாக ஆனான். குழந்தைகளுடைய கற்றுக்கொள்ளும் திறனைப் பற்றி ஆராய ஸ்டீவனின் தாயார் ஃபிளாரன்ஸ் அதிக நேரத்தை அர்ப்பணித்திருக்கிறார்; அவர் ஒரு டாக்டர், முன்பு ஓர் ஆசிரியையாகவும் ஆலோசகராகவும் பணியாற்றியவர். தனது மகனுக்கு சிசுப் பருவத்திலேயே கவனிப்பும் தூண்டுதலும் கொடுத்தது அவனுடைய எதிர்காலத்தையே மாற்றிவிட்டது என அவர் உறுதியாக நம்புகிறார்.

பிறவிக்குணமா வளர்ப்பா?

சமீப காலங்களில், குழந்தை உளவியலாளர்கள் மத்தியில் ஒரு விஷயம் முக்கிய சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது “பிறவிக்குணமா” அல்லது “வளர்ப்பா” என்பதே அந்த விஷயம். பிள்ளையின் வளர்ச்சியில் இந்த இரு அம்சங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன என ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலோர் நம்புகின்றனர்.

குழந்தை-வளர்ச்சி நிபுணர் டாக்டர் ஜே. ஃபிரேசர் மஸ்டர்டு இவ்வாறு விளக்குகிறார்: “சிறு பிராயத்தில் ஒரு பிள்ளைக்கு கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பிள்ளையின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்ற உண்மையை ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறோம்.” சூசன் கிரீன்ஃபீல்டு என்ற பேராசிரியரும் இதேபோல் குறிப்பிடுகிறார்: “உதாரணமாக, இடதுகை விரல்களை கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி வயலின் வித்துவான்களுக்குத்தான் அதிக வளர்ச்சி அடைகிறது என்பதை அறிந்திருக்கிறோம்.”

கொடுக்க வேண்டிய பயிற்றுவிப்பு

இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்த பெற்றோர்கள் பலர் தங்களுடைய பிள்ளைகளை தரமான நர்சரிகளுக்கு அனுப்புவதற்கு மட்டுமல்ல, எக்கச்சக்கமாக பணம் செலவழித்து இசை மற்றும் கலை வகுப்புகளுக்கு அனுப்புவதற்கும் அதிக முயற்சி எடுக்கிறார்கள். ஒரு பிள்ளை எல்லாவற்றையும் பழகிக்கொண்டால், அவன் பெரியவனாக ஆகும்போது எல்லாவற்றையும் செய்ய முடியுமென சிலர் நம்புகிறார்கள். இதனால் இன்றைக்கு ஸ்பெஷல் கோச்சிங் சென்டர்களும் நர்சரி ஸ்கூல்களும் பெருகிவருகின்றன. மற்றவர்களோடு ஒப்பிடுகையில், தங்களுடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய பெற்றோர்கள் சிலர் முயலுகிறார்கள்.

பெற்றோர்கள் இந்தளவுக்கு முயற்சி எடுப்பது முழு பலனைத் தருகிறதா? பிள்ளைகளுக்கு இவ்வாறு கற்பிப்பது எண்ணற்ற எதிர்கால வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமென தோன்றினாலும், பெரும்பாலான பிள்ளைகள் இயல்பாக விளையாடுவதால் வரும் அதிமுக்கியமான அனுபவத்தைப் பெற தவறிவிடுகிறார்கள். இயல்பாக விளையாடுவது படைப்புத் திறனைத் தூண்டுகிறது என்றும், சமுக ரீதியில், மனோ ரீதியில், உணர்ச்சி ரீதியில் திறமைகளை வளர்க்கிறது என்றும் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

பெற்றோரே விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதால் ஒரு புதுவகையான பிரச்சினை உருவாகி வருகிறது என குழந்தை-வளர்ச்சி நிபுணர்கள் சிலர் கருதுகிறார்கள். அதாவது பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் பெற்றோர் கட்டுப்படுத்துவதால் அவர்களுக்கு உடல் சோர்வும் மனச் சோர்வும் ஏற்படுகிறது, உணர்ச்சி ரீதியில் ஊசலாடுகிறார்கள், தூங்க முடியாமல் தவிக்கிறார்கள், உடம்பு வலியால் அவதிப்படுகிறார்கள் என கூறுகிறார்கள். இத்தகைய பிள்ளைகளில் அநேகர் பருவ வயதை எட்டும்போது, பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைகள் இல்லாமல், “உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் களைப்படைந்தவர்களாகவும் சமுகத்தோடு ஒட்டாதவர்களாகவும் கலகம் செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்” என்றும் உளவியலாளர் ஒருவர் கூறுகிறார்.

இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்​—⁠தங்களுடைய பிள்ளைகள் முழு திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள், அதேசமயத்தில் அவர்களைத் தேவையில்லாமல் சக்கையாக பிழிந்தெடுப்பது நல்லதல்ல என்றும் நினைக்கிறார்கள். ஆகவே, சமநிலையாக இருப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? பிள்ளைகள் முன்னேற அவர்களுக்கு எந்தளவு அறிவுத்திறன் இருக்கிறது, அந்த அறிவுத்திறனை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்? பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னுக்கு வர பெற்றோர்கள் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகளைப் பின்வரும் கட்டுரைகள் அலசும். (g04 10/22)

[பக்கம் 3-ன் படம்]

வாழ்க்கையின் ஆரம்பத்தில் கிடைக்கும் அனுபவங்கள் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன

[பக்கம் 4-ன் படம்]

விளையாட்டு, குழந்தையின் படைப்புத் திறனையும் மற்ற திறமைகளையும் வளர்க்கிறது