Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோராக உங்கள் பங்கு

பெற்றோராக உங்கள் பங்கு

பெற்றோராக உங்கள் பங்கு

“உங்கள் பிள்ளைக்கு அன்பும் அரவணைப்பும் கிடைத்தால், ஆர்வத்துடிப்பையும் நோக்கத்தையும் ஊட்டி வளர்த்தால் மூளை நன்கு வளர்ச்சி அடையும்” என சொல்கிறார் ஹார்வார்டு மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பீட்டர் கார்ஸ்கி. “பெற்றோராக நம்முடைய பங்கு, பிள்ளையின் மூளையை சரியாக செயல்பட வைப்பதல்ல, ஆனால் ஆரோக்கியமும் பகுத்தறிவும் கரிசனையும் மிகுந்த நபராக வளர துணை புரிவதே.”

உங்கள் பிள்ளை பிறர் மீது அன்பும் அக்கறையும் உடையவனாகவும் ஒழுக்க சீலனாகவும் வளருவதை காணும்போது எவ்வளவாய் திருப்தி அளிக்கும்! அத்திருப்தியைப் பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதற்காக நீங்கள் தோழராக, மனம்விட்டுப் பேசுபவராக, ஆசிரியராக, எல்லாவற்றிலும் நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். ஒழுக்கமாக நடந்துகொள்வதற்குத் தேவையான திறனுடன்தான் எல்லா பிள்ளைகளும் பிறக்கிறார்கள், என்றாலும் அவர்களை வளர்க்கையில் சிறந்த ஒழுக்க நெறிகளை நீங்கள் படிப்படியாக புகட்ட வேண்டும்.

பிள்ளைகளை வடிவமைப்பது யார்?

பிள்ளைகளை வடிவமைப்பதில் மாபெரும் பங்கு வகிப்பவர் யார் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பிள்ளைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களுடைய சகாக்களே என சிலர் நம்புகிறார்கள். என்றாலும், பிள்ளையை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெற்றோர் வகிக்கும் பாகத்தை குறைவாக எடைபோட்டுவிட முடியாது என டாக்டர்கள் டி. பெர்ரி பிரேஸல்டனும் ஸ்டேன்லி கிரீன்ஸ்பேனும் நம்புகிறார்கள், இவர்கள் குழந்தை-வளர்ச்சித் துறையில் நிபுணர்களாக விளங்குகிறார்கள்.

பிற்கால வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களும் சகாக்களுடைய செல்வாக்குகளும் பிள்ளையின் ஆரம்பகால வளர்ச்சியை நிறைவு செய்கின்றன. குடும்ப வட்டாரத்தில் பிள்ளைகளுக்கு கரிசனை காட்டுவதும் புரிந்துகொள்ளுதலோடு அவர்களை நடத்துவதும் முக்கியம். உணர்ச்சிகளைப் பக்குவமாக சமாளிக்க கற்றுக் கொடுப்பதும்கூட அவசியம். இத்தகைய பயிற்சி பெறுகிற பிள்ளைகள் பிற்பாடு மற்றவர்களோடு வேலை செய்கையில் ஒத்துழைப்பவர்களாகவும் கரிசனைமிக்கவர்களாகவும் அனுதாபமிக்கவர்களாகவும் நடந்துகொள்கிறார்கள்.

சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளைக்கு பயிற்சி அளிப்பது ஒரு பெரிய சவால். முக்கியமாக நீங்கள் இப்போதுதான் பெற்றோராக ஆகியிருந்தால், அதிக அனுபவமிக்கவர்களுடைய உதவியை நாடுவதும் சரியான நடவடிக்கை எடுப்பதும் ஞானமான காரியமாகும். பிள்ளையின் வளர்ச்சியைப் பற்றி நிபுணர்கள் ஏகப்பட்ட புத்தகங்களை எழுதித் தள்ளியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் நம்பகமான வழிகாட்டியாகிய பைபிள் சொல்வதையே பெரும்பாலும் எதிரொலிக்கின்றன. கடவுளுடைய வார்த்தை தரும் சிறந்த நியதிகளைப் பெற்றோர்கள் பின்பற்றியபோது, அவை பிள்ளைகளைப் பேணி வளர்க்க உதவி செய்திருக்கின்றன. பின்வரும் நடைமுறையான ஆலோசனைகளை கவனியுங்கள்.

அன்பை தாராளமாக பொழியுங்கள்

பிள்ளைகள் இளஞ்செடிகளைப் போன்றவர்கள், அவர்களை சீராட்டி பாராட்டி கண்ணும் கருத்துமாக கவனிக்கும்போது நன்கு வளருவார்கள். தண்ணீரும் சூரிய ஒளியும் இளஞ்செடிக்கு ஊட்டமளித்து, நன்கு வளருவதற்கும் ஸ்திரமாக இருப்பதற்கும் துணை புரிகின்றன. அது போலவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீது பாசமழை பொழிந்து கட்டித் தழுவும்போது மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பிள்ளைகள் நன்கு வளர்ந்து ஸ்திரமாவார்கள்.

‘அன்பு கட்டியெழுப்புகிறது’ என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 8:1, NW) பிள்ளைகள் மீது தாராளமாக அன்பு மழை பொழியும் பெற்றோர்கள், உண்மையில் தங்களுடைய படைப்பாளராகிய யெகோவா தேவனைப் பின்பற்றுகிறார்கள். இயேசு முழுக்காட்டுதல் எடுத்த சமயத்தில், இவர் என்னுடைய சொந்த மகன் என்று சொல்லி பிதா தம் அன்பை வெளிக்காட்டினார் என பைபிள் கூறுகிறது. இயேசு அப்போது வளர்ந்துவிட்டிருந்த போதிலும் அது அவருக்கு எவ்வளவாய் தெம்பளித்தது!​—லூக்கா 3:⁠22.

நீங்கள் காட்டுகிற பாசமும் நேசமும், படுக்கைக்குச் செல்லும் முன்பு வாசித்துக் காட்டுகிற கதைகளும், சேர்ந்து விளையாடுகிற விளையாட்டுகளும் பிள்ளையின் வளர்ச்சிக்கு துணை புரியும் இன்றியமையா அம்சங்களாகும். ‘பிள்ளை செய்கிற ஒவ்வொன்றும் வாழ்க்கையில் அதற்கு கிடைக்கிற அனுபவமே. அந்தப் பிள்ளை தவழ்ந்து செல்ல பழகும்போது நீங்கள் அதற்கு எவ்வளவு உற்சாகம் அளிக்கிறீர்கள், எப்படி பிரதிபலிக்கிறீர்கள் என்பது முக்கியம்’ என சொல்கிறார் டாக்டர் ஜே. ஃபிரேசர் மஸ்டர்டு. பெற்றோர் காட்டும் அன்பும் அரவணைப்பும் அந்தப் பிள்ளை பிற்காலத்தில் பொறுப்பும் முதிர்ச்சியும் வாய்ந்த பெரிய ஆளாக வளருவதற்கு உறுதியான அஸ்திவாரமாக விளங்குகின்றன.

தோழராக, பேச்சுத் தொடர்புகொள்பவராக இருங்கள்

உங்கள் பிள்ளையுடன் நேரம் செலவிடுவது நல்ல பந்தத்தை ஏற்படுத்துகிறது. பேச்சுத் தொடர்புகொள்ளும் திறமைகளையும் வளர்க்கிறது. வீட்டிலும்சரி வெளியிலும்சரி எல்லா பொருத்தமான நேரங்களிலும் இப்படி பிள்ளைகளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளுமாறு பைபிள் உற்சாகப்படுத்துகிறது.​—உபாகமம் 6:6, 7; 11:18-21.

விலையுயர்ந்த பொம்மைகளைவிட அல்லது வேறெந்த திட்டவட்டமான நடவடிக்கையையும்விட பிள்ளைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவழிப்பதே மிக முக்கியம் என குழந்தை வளர்ப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிக செலவில்லாத அன்றாட நடவடிக்கைகளே பிள்ளைகளுடன் பேச்சுத் தொடர்புகொள்வதற்கு வாய்ப்புகளைத் தரலாம். உதாரணமாக, இயற்கையை கண்டு மகிழ பிள்ளைகளுடன் பூங்காவிற்குச் செல்வது அவர்களிடம் அர்த்தமுள்ள கேள்விகள் கேட்பதற்கும் பேச்சுத் தொடர்புகொள்வதற்கும் சிறந்த வாய்ப்பளிக்கலாம்.

“துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்” உண்டு என பைபிள் கூறுகிறது. (பிரசங்கி 3:1, 4, பொது மொழிபெயர்ப்பு) ஆம், கவலையின்றி ஓடியாடி விளையாடுவது, ஒரு பிள்ளை அறிவு ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் சமுக ரீதியிலும் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு முக்கியம். டாக்டர் மஸ்டர்டு கூறுகிறபடி, விளையாடுவது பயனுள்ளது மட்டுமல்ல, மிக மிக அவசியமானதும்கூட. “விளையாட்டுகளின் மூலமே பல்வேறு செயல்களுக்குத் தேவையான நரம்பு இணைப்புகள் பிள்ளைகளின் மூளையில் உருவாகின்றன” என அவர் கூறுகிறார். பிள்ளை தானாகவே விளையாடும்போது பயன்படுத்தும் பொம்மைகள் மிகவும் சாதாரணமானவையாக இருக்கலாம், ஒருவேளை காலி அட்டைப் பெட்டியாகக்கூட இருக்கலாம். விலையுயர்ந்த ‘ஹை-டெக்’ பொம்மைகளைப் போலவே சாதாரண வீட்டு சாமான்களும்கூட அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகின்றன. a

பிள்ளை என்ன செய்ய வேண்டும் என்ன விளையாட வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் ஒரு பெரிய பட்டியலே போடலாம்; இவ்வாறு பிள்ளையின் செயல்களை முழுக்க முழுக்க கட்டுப்படுத்துவது அவனுடைய கற்பனா சக்தியையும் படைப்புத் திறனையும் முடக்கி விடும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள். சமநிலை முக்கியமென பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுடைய பிள்ளை அதற்கே உரிய உலகை ஆராயவும் சொந்த திறமைகளை உபயோகித்து பார்க்கவும் விட்டுவிடுங்கள். பெரும்பாலும் ஒரு பிள்ளை தானாகவே ஒன்றை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பித்துவிடும். அதற்காக உங்களுடைய பிள்ளை என்ன செய்து கொண்டிருக்கிறது, எங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமல் விட்டுவிட வேண்டுமென அர்த்தமல்ல, அவர்கள் ஏதேனும் விபரீதமாக செய்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

நேரம் ஒதுக்குங்கள்

எதற்கும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் குணம் படைத்தவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதில் கற்பிப்பது ஓர் இன்றியமையாத பாகமாகும். பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்ட அநேக பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குகிறார்கள். இதனால், நன்னடத்தை பற்றியும் நம்முடைய படைப்பாளர் தரும் சிறந்த நெறிமுறைகளைப் பற்றியும் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. உண்மையுள்ள போதகரும் மிஷனரியுமான தீமோத்தேயு ‘பரிசுத்த வேத எழுத்துக்களை சிசுப்பருவம் முதற்கொண்டு அறிந்திருந்ததாக’ பைபிள் குறிப்பிடுகிறது.​—2 தீமோத்தேயு 3:15, NW.

உங்கள் பிள்ளைகளிடம் வாசித்துக் காட்டுவது அவனுடைய மூளையிலுள்ள நரம்பு இணைப்புகளை அதிகரிக்கும். அன்போடும் அக்கறையோடும் வாசித்துக் காட்டுவது முக்கியமாகும். எப்படிப்பட்ட விஷயத்தை வாசித்துக் காட்ட வேண்டும் என்பதைக் குறித்து கல்வித் துறை பேராசிரியர் லின்டா சீகல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “பிள்ளைகள் மகிழ்ந்து அனுபவிப்பதற்கு ஏற்ற ஒன்றாகவே அது இருக்க வேண்டும்.” அதோடு, தவறாமல் ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் வாசித்துக் காட்ட முயலுங்கள். இப்படி செய்யும்போது அந்தப் பிள்ளை அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

கற்பிப்பதில் சிட்சை கொடுப்பதும் உட்பட்டுள்ளது. அன்பாக சிட்சை கொடுக்கும்போது சிறு பிள்ளைகள் நன்மை அடையலாம். “ஞானமுள்ள மகன் தந்தையின் போதகத்தைக் [“சிட்சையைக்,” NW] கேட்கிறான்” என நீதிமொழிகள் 13:1 சொல்கிறது. ஆனால், பல விதங்களில் சிட்சை கொடுக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். உதாரணமாக, சொல்லால் கண்டிக்கலாம், ஏதாவது சலுகையை தராமல் நிறுத்தலாம், அல்லது வேறுவகை தண்டனை கொடுக்கலாம். சிட்சை என்பது “உணர்ச்சிகளையும் கட்டுப்பாடற்ற நடத்தைகளையும் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பதாகும். ஒவ்வொரு பிள்ளையும் தன் வரம்புகளை அறிய அதிகமாய் விரும்புகிறது. அன்புக்கு அடுத்தபடியாக நீங்கள் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று சிட்சை” என முன்பு மேற்கோள் காட்டப்பட்ட டாக்டர் பிரேஸல்டன் கூறுகிறார்.

நீங்கள் திறம்பட சிட்சை கொடுக்கிறீர்களா என்பதை ஒரு பெற்றோராக எவ்வாறு தீர்மானிக்க முடியும்? முதலாவதாக, சிட்சை ஏன் கொடுக்கப்படுகிறது என்பதை உங்களுடைய பிள்ளை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், நீங்கள் அன்பும் அக்கறையும் உள்ள பெற்றோர் என்பதை பிள்ளை உணரும் விதத்தில் கண்டியுங்கள்.

பலன்தரும் முயற்சிகள்

ஃபிரெட் என்பவர் தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு தன்னுடைய மகளுக்கு வாசித்துக் காட்டுவார்; அவளுடைய சிசுப் பருவத்திலிருந்தே அதைப் பழக்கமாக செய்துவந்தார். சில காலத்திற்குப்பின், அநேக கதைகள் அவளுக்கு மனப்பாடமாக தெரிந்திருந்தது, புத்தகத்தை வாசிக்கும்போது அதிலுள்ள வார்த்தைகளையும் உச்சரிப்புகளையும் நன்றாக புரிந்துகொண்டாள். கிறிஸ் என்ற மற்றொரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுவதில் மிகுந்த அக்கறை காட்டினார். புதுப் புது விஷயங்களை வாசித்துக் காட்டுவதற்கு முயற்சி எடுத்தார். அந்தப் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது, நீதிநெறி மற்றும் ஆன்மீக பாடங்களைக் கற்பிப்பதற்கு என்னுடைய பைபிள் கதை புத்தகம் போன்ற பிரசுரங்களிலுள்ள படங்களைப் பயன்படுத்தினார். b

பெற்றோர்கள் சிலர் வாசித்துக் காட்டுவதோடு வேறுசில நடவடிக்கைகளையும், அதாவது படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், இசைத்தல், சுற்றுலா செல்லுதல் அல்லது மிருகக்காட்சி சாலைக்குக் குடும்பமாக செல்லுதல் போன்ற நடவடிக்கைகளையும் சேர்த்துக்கொள்கிறார்கள். பாடம் புகட்டுவதற்கும், ஒழுக்க நெறிகளையும் நல்நடத்தையையும் பிள்ளையின் இதயத்திலும் மனதிலும் பதியவைப்பதற்கும் இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெற்றோருடைய இத்தனை உழைப்பும் முயற்சியும் பலனுள்ளதா? இங்கு சொல்லப்பட்டுள்ள நடைமுறையான குறிப்புகளை அமைதியும் பாதுகாப்புமான சூழலில் பெற்றோர் கடைப்பிடித்தால் தங்களுடைய பிள்ளைகள் நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்வதை காண்பார்கள். உங்களுடைய பிள்ளைகள் சிறு பிராயத்திலேயே அறிவுத்திறன்களையும் பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறன்களையும் பெற உதவினால், ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவர்கள் வளர நீங்கள் பெரும் பங்காற்றுவீர்கள்.

நூற்றாண்டுகளுக்கு முன்னரே நீதிமொழிகள் 22:6-⁠ல் பைபிள் இவ்வாறு தெளிவாக குறிப்பிட்டது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” பிள்ளையைப் பயிற்றுவிப்பதில் பெற்றோர்கள் நிச்சயமாகவே இன்றியமையாத பங்கு வகிக்கிறார்கள். உங்களுடைய பிள்ளைகள் மீது அன்பையும் பாசத்தையும் தாராளமாக பொழியுங்கள். அவர்களுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களை சீராட்டி பாராட்டி வளருங்கள், அவர்களுக்கு கற்பியுங்கள். இப்படி செய்வது அவர்களுக்கும் உங்களுக்கும் ஆனந்தத்தைத் தரும்.​—நீதிமொழிகள் 15:20. (g04 10/22)

[அடிக்குறிப்புகள்]

a மார்ச் 22, 1993-⁠ல் வெளிவந்த ஆங்கில விழித்தெழு! இதழில், “இலவச ஆப்பிரிக்க பொம்மைகள்” என்ற கட்டுரையைக் காண்க.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற மற்றொரு புத்தகத்தையும் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருக்கிறார்கள், சிறு பிள்ளைகளுக்குக் கற்பிக்க இது திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகிறது.

[பக்கம் 7-ன் பெட்டி]

உங்கள் குழந்தையுடன் விளையாடுதல்

◼ குழந்தைகள் மிகவும் சிறிதளவு நேரமே கவனம் செலுத்த முடியும், ஆகவே அவர்களுக்கு விளையாடும் ‘மூட்’ இருந்தால் மட்டுமே அவர்களோடு விளையாடுங்கள்.

◼ பாதுகாப்பான பொம்மைகளையும், குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் பொம்மைகளையும் மட்டுமே கொடுங்கள்.

◼ சுறுசுறுப்பூட்டும் விளையாட்டுகளை விளையாடுங்கள். உங்களை ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்ப செய்ய வைப்பதில் குழந்தைகள் குஷியடைகிறார்கள். உதாரணமாக, ஒரு பொம்மையை வேண்டுமென்றே அடிக்கடி கீழே போட்டு அதை எடுத்துத் தர வைக்கிறார்கள்.

[படத்திற்கான நன்றி]

மூலம்: Clinical Reference Systems

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

பிள்ளைக்கு வாசித்துக் காட்ட சில டிப்ஸ்

◼ அழுத்தம் திருத்தமாக வாசியுங்கள். பெற்றோர் பேசுவதைக் கேட்டுத்தான் பிள்ளை மொழியை கற்றுக்கொள்கிறது.

◼ சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு கதை புத்தகத்திலுள்ள படங்களைக் காட்டி ஆட்களின் பெயர்களையும் பொருட்களின் பெயர்களையும் சொல்லுங்கள்.

◼ பிள்ளை வளரும்போது, அதற்குப் பிடித்தமான விஷயங்கள் அடங்கிய புத்தகங்களைத் தேர்ந்தெடுங்கள்.

[படத்திற்கான நன்றி]

மூலம்: Pediatrics for Parents

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

பிள்ளைகளுடன் தரமான பொழுதுபோக்கில் ஈடுபட நேரம் செலவிடுங்கள்