Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு ஏற்ற சிட்சையில் பிள்ளைகளை வளர்த்தல்

கடவுளுக்கு ஏற்ற சிட்சையில் பிள்ளைகளை வளர்த்தல்

பைபிளின் கருத்து

கடவுளுக்கு ஏற்ற சிட்சையில் பிள்ளைகளை வளர்த்தல்

“நீங்கள் கிழித்த கோட்டை பிள்ளைகள் தாண்டாதிருக்க”

“ஐந்து வயதிற்குள் உங்கள் பிள்ளைக்கு சொல்லித்தர வேண்டிய ஐந்து நற்பண்புகள்”

“ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்க வேண்டிய உணர்ச்சி ரீதியிலான ஐந்து திறமைகள்”

“நீங்கள் ரொம்ப செல்லம் கொடுப்பதற்கு ஐந்து அடையாளங்கள்”

ஒன்-மினிட் டிஸிப்ளின் செய்யும் மாஜிக்

பிள்ளைகளை சிட்சிப்பது சுலபமானதென்றால் பத்திரிகைகளில் வெளிவந்த மேற்கூறப்பட்ட கட்டுரைகளைப் படிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். பிள்ளை வளர்ப்பு பற்றி குவிந்திருக்கும் புத்தகங்களும் படிப்படியாக மறைந்துவிடும். ஆனால் பிள்ளை வளர்ப்பு எந்தக் காலத்திலும் சுலபமானதாக இருந்ததில்லை. “மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை, பெற்ற தாய்க்குத் துயரம்” என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது.​—நீதிமொழிகள் 17:25, பொது மொழிபெயர்ப்பு.

இன்றைக்கு சிட்சையின் பேரில் ஏராளமான ஆலோசனைகள் இருக்கிறபோதிலும் அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எப்படி சிட்சிப்பது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பைபிள் என்ன உதவியை அளிக்கிறது?

சிட்சையின் உண்மையான அர்த்தம்

சிட்சையைக் குறித்ததில் பெற்றோரின் பங்கு என்ன என்பதை பைபிள் தெளிவாக சொல்கிறது. உதாரணமாக, “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்று எபேசியர் 6:4 சொல்கிறது. பிள்ளைகளை முன்னின்று கவனிக்க வேண்டிய பொறுப்பு முக்கியமாக தந்தைக்குத்தான் இருக்கிறது என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது. தாயும்கூட, தந்தையுடன் ஒத்துழைக்கிறாள்.

சிட்சையைப் பற்றி தி இன்டெர்பிரெட்டர்ஸ் பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு சொல்கிறது: “பைபிளில் சிட்சை என்பது ஒருபக்கத்தில் பயிற்சி, போதனை, அறிவூட்டுவது ஆகியவற்றுடனும், மறுபக்கத்தில் கடிந்துகொள்ளுதல், சீர்திருத்தம், தண்டனை ஆகியவற்றுடனும் நெருங்கி சம்பந்தப்பட்டிருக்கிறது. இது பொதுவாக பிள்ளை வளர்ப்போடு தொடர்புடையது.” ஆகவே, சிட்சை என்பது வெறுமனே கடிந்துகொள்ளுதலை மட்டும் உட்படுத்துவதில்லை. பிள்ளை நன்றாக வளரத் தேவையான எல்லா பயிற்சிகளையும் அது உட்படுத்துகிறது. ஆனால் பிள்ளைகளை கோபப்படுத்துவதை பெற்றோர் எவ்வாறு தவிர்க்கலாம்?

அனுதாபம் காட்டுங்கள்

பிள்ளையை கோபப்படுத்துவது எது? இந்தச் சூழ்நிலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்களுடன் வேலை செய்யும் ஒருவர் சரியான முன்கோபி, பொறுமையில்லாதவர். அவருக்கு உங்களை கொஞ்சமும் பிடிப்பதில்லை. தொட்டதற்கெல்லாம் தப்பு கண்டுபிடிக்கிறார். நீங்கள் செய்யும் வேலையை அவர் ஏற்றுக்கொள்ளாமல் உங்களை ஒதுக்கிவைக்கப்பட்டவர் போல் உணரச் செய்கிறார். இது உங்களைக் கோபப்படுத்தாதா, உங்கள் மனதைப் புண்படுத்தாதா?

அவ்வாறே, பெற்றோர் ஓயாமல் குறை சொல்லும்போதும் கத்திக் கூச்சல் போட்டு கண்டிக்கும்போதும் பிள்ளைகள் சங்கடமாய் உணருவார்கள். பிள்ளைகளுக்கு அவ்வப்பொழுது கண்டிப்பு தேவை என்பது உண்மைதான், பைபிள்படி அதைச் செய்ய பெற்றோருக்கு அதிகாரமும் இருக்கிறது. என்றாலும், பிள்ளையை கொடூரமாக, அன்பில்லாத வகையில் நடத்தி அவர்களைக் கோபப்படுத்துவது மனோ ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் உடல் ரீதியிலும் அவர்களை சேதப்படுத்தும்.

பிள்ளைகள் உங்கள் கவனத்தைப் பெறத் தகுதியுள்ளவர்கள்

பிள்ளைகளுக்காக பெற்றோர் நேரத்தை ஒதுக்க வேண்டும். உபாகமம் 6:7 தந்தைகளுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: ‘நீ அவைகளை [கடவுளின் சட்டங்களை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ பெற்றோர் தங்கள் மீது அதிக அக்கறை காட்ட வேண்டுமென்ற உணர்வு பிள்ளைகளுக்கு இயல்பாகவே உண்டு. தினமும் உங்கள் பிள்ளைகளுடன் சாந்தமாக பேசுவது அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள உதவும். இப்படிச் செய்யும்போது, பைபிள் நியமங்களைக் கொண்டு அவர்கள் இதயத்தை உங்களால் எட்ட முடியும்; ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள’ அவர்களைத் தூண்ட முடியும். (பிரசங்கி 12:13) தெய்வீக சிட்சையில் இது ஒரு பாகம்.

பிள்ளை வளர்த்தலை வீடு கட்டுவதற்கு ஒப்பிட்டால் சிட்சை கொடுத்தலை வீடு கட்ட பயன்படுத்தும் கருவிகளில் ஒன்றுக்கு ஒப்பிடலாம். அதைப் பெற்றோர்கள் சரியாக பயன்படுத்தும்போது பிள்ளைகளில் விரும்பத்தக்க குணங்களை வளர்க்க முடியும்; வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறமையைப் பெற அவர்களுக்கு உதவி செய்யவும் முடியும். நீதிமொழிகள் 23:24, 25 அதன் விளைவை இவ்வாறு விளக்குகிறது: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.” (g04 11/8)

[பக்கம் 25-ன் பெட்டி/படம்]

‘யெகோவாவுக்கேற்ற போதனை’

எபேசியர் 6:4, ‘யெகோவாவுக்கேற்ற போதனையைக்’ குறிப்பிடுகிறது. போதனை என்பதற்குரிய மூல கிரேக்கப் பதம் “கவனம்,” “ஆலோசனை,” “கடிந்துரை” என்று சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் சேர்ந்து பைபிளை பெற்றோர் வெறுமனே வாசிப்பது அல்லது பைபிள் சார்ந்த பிரசுரங்களை தினமும் கடமைக்கென்று வாசிப்பது போதாது, இன்னும் அதிகத்தைச் செய்ய வேண்டும் என்பதையே இப்பதங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதாவது கடவுளுடைய வார்த்தையின் அர்த்தம், கீழ்ப்படிதலின் அவசியம், யெகோவா தங்கள் மீது வைத்திருக்கும் அன்பு, அவர் தரும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ வேண்டும்.

இதை எவ்வாறு செய்யலாம்? பிள்ளைகளுக்குக் கடவுளுடைய நியமங்களை விடாமல் நினைப்பூட்டினால் மட்டும் போதாது என்பதை ஜூடி என்பவர் உணர்ந்தார்; அவர் மூன்று பிள்ளைகளுக்குத் தாய். “சொன்னதையே திரும்பத் திரும்ப ஒரே விதத்தில் சொல்வது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன். ஆகவே வித்தியாசமான முறைகளில் அவர்களுக்குப் போதிக்க முயன்றேன். அதற்கு ஒரு வழியாக, விழித்தெழு!-விலுள்ள கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். புதிய அணுகுமுறைகளை அவற்றில் கற்றுக்கொண்டேன். இப்படியாக பிள்ளைகளை கோபப்படுத்தாமல் எப்படி எதார்த்தமாக நினைப்பூட்டலாம் என்பதை தெரிந்துகொண்டேன்.”

குடும்பத்தில் நிறைய கஷ்டங்களை எதிர்ப்பட்டவர் ஆன்ஜிலோ. அவர் கடவுளுடைய வார்த்தையை தியானிக்க தன்னுடைய மகள்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதைப் பற்றி அவர் சொல்வதாவது: “நாங்கள் ஒன்றாக சேர்ந்து பைபிள் வசனங்களை வாசித்தோம். அந்த வசனங்களிலுள்ள சில சொற்றொடர்களை நான் வலியுறுத்திக் காட்டி அவை எப்படி அவர்களுக்கு பொருந்தின என்பதை விளக்கினேன். பிற்பாடு, அவர்கள் தனியாக பைபிளை வாசித்தபோதெல்லாம், தங்களுக்கு அதை எப்படிப் பொருத்தலாம் என்று ஆழ்ந்து சிந்தித்து தியானிப்பதை கவனித்திருக்கிறேன்.”