Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நூலகங்கள் அறிவுக் களஞ்சியத்தின் கதவுகள்

நூலகங்கள் அறிவுக் களஞ்சியத்தின் கதவுகள்

நூலகங்கள் அறிவுக் களஞ்சியத்தின் கதவுகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நூலகங்கள் “நாகரிகத்தின் தூண்களில் ஒன்று” என அழைக்கப்பட்டிருக்கின்றன. மனித கலாச்சாரமும் தொழில்நுட்பமும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதற்குப் பங்களித்தவற்றுள் நூலகங்களுக்கும் பெரும் பங்குண்டு என உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. நூலகங்களை மனிதகுலத்தின் நினைவலைகள் என ஜெர்மன் நாட்டு கவிஞர் கார்டா அழைத்தார்.

எந்த நூலகங்கள் “நாகரிகத்தின்” மிக முக்கிய ‘தூண்களாக’ இருந்திருக்கின்றன? நூலகங்கள் பிரபலமடைவதற்கும் கல்வியறிவு நாலாபுறமும் பரவுவதற்கும் எந்தப் புத்தகம் பெருமளவு காரணமாக இருந்திருக்கிறது? இன்றுள்ள மாபெரும் நூலகங்களில் எத்தனை புத்தகங்கள் உள்ளன? முதல் கேள்விக்குப் பதிலளிக்க, நாம் கடந்த காலத்தை நோக்கி பயணித்து, மனிதன் உருவாக்கிய பூர்வ நூலகம் ஒன்றிற்கு விஜயம் செய்ய வேண்டும்.

“மனித அறிவின்” பூர்வகால “கலைக்களஞ்சியம்”

இன்று ஈராக் என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கு நாட்டில் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது பொ.ச.மு. 650-⁠ம் ஆண்டு. பிரமாண்டமான மதில் சூழ்ந்த நகரமான நினிவேயில் (இன்றைய மோசுலுக்கு அருகே) இருக்கிறீர்கள். உங்கள் கண்ணெதிரே அசூர்பானிபால் ராஜாவின் மாபெரும் அரண்மனை இருக்கிறது; இவர் அசீரியா, எகிப்து, பாபிலோனியா ஆகிய சாம்ராஜ்யங்களுக்கு ராஜாவாக இருக்கிறார். a நீங்கள் அரண்மனையின் கதவருகே நிற்கும்போது, கனமான மண் ஜாடிகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஆட்கள் உள்ளே செல்வதை கவனிக்கிறீர்கள். இவர்கள் அசீரிய ராஜ்யத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார்கள்; இவர்கள் அசூர்பானிபால் ராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களின் சமூக, கலாச்சார, மத பாரம்பரியங்களைப் பற்றிய புத்தகங்களையும் ஆவணங்களையும் சேகரித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஜாடிகளில் ஒன்றைத் திறக்கும்போது அதில் சுமார் எட்டு சென்டிமீட்டர் அகலமும் பத்து சென்டிமீட்டர் நீளமுமுள்ள செவ்வக வடிவ களிமண் பலகை துண்டுகள் நிறைந்திருப்பதைக் கவனிக்கிறீர்கள்.

அந்த ஆட்களில் ஒருவருடன் சேர்ந்து நீங்கள் அரண்மனைக்குள் செல்கிறீர்கள்; அங்கு நகல் எடுப்பவர்களைப் பார்க்கிறீர்கள்; ஈரப்பதமுள்ள சிறிய களிமண் பலகை துண்டுகளில் எலும்பாலான எழுத்தாணியைப் பயன்படுத்தி ஆப்பு வடிவ எழுத்துக்களை அவர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் பிறமொழி ஆவணங்களை அசீரிய மொழியில் மொழிபெயர்க்கிறார்கள். பின்னர், இந்தப் பலகை துண்டுகள் சூட்டடுப்பில் சுடப்படும், அப்போது அப்பதிவுகள் கிட்டத்தட்ட அழியாதவையாய் ஆகிவிடும். இவை எண்ணற்ற ஷெல்ஃபுகளைக் கொண்ட அறைகளில் நூற்றுக்கணக்கான ஜாடிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. அந்த அறைகளின் நிலைக்கதவுகளில், எதைப் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்கும் விவரக் குறிப்பு காணப்படுகிறது. இந்த நூலகத்திலுள்ள 20,000-⁠க்கும் அதிகமான களிமண் பலகை துண்டுகளில் வியாபாரக் கணக்குகள், மத பழக்கவழக்கங்கள், சட்டம், சரித்திரம், மருத்துவம், மானிட உடலியல், விலங்கின உடலியல் பற்றிய தகவல்கள் இருப்பதால், இதை “மனித அறிவின் கலைக்களஞ்சியம்” என பிற்காலத்தில் கல்விமான் ஒருவர் வர்ணித்தார்.

நினிவே நூலகத்திற்கு முன்பும் பின்பும்

நினிவேயில் உள்ள அசூர்பானிபாலின் நூலகம் உதயமாவதற்கு முன்பே வேறு பெரிய நூலகங்களும் இருந்திருக்கின்றன. அசூர்பானிபால் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு, பார்சைப்பா என்ற பாபிலோனிய நகரத்தில் ஹமுராபி ராஜா ஒரு நூலகத்தைக் கட்டினார். அசூர்பானிபால் பிறப்பதற்கு 700-⁠க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய நகரமான தீப்ஸில் இரண்டாம் ராமசேஸ் பிரபல நூலகம் ஒன்றை உருவாக்கினார். ஆனால் பல்வகை தகவல்களும் ஏராளமான பதிவுகளும் அசூர்பானிபாலுடைய நூலகத்தில் இருந்ததால் அது “பண்டைய உலகின் மிகப் பெரிய” நூலகம் என்ற நற்பெயரைப் பெறுகிறது. இதன் பெருமையைத் தட்டிச் சென்ற இன்னொரு நூலகம் 350 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தோன்றியது.

அந்த மாபெரும் நூலகத்தை, மகா அலெக்ஸாந்தரின் தளபதிகளில் ஒருவரான முதலாம் தாலமி சோடர் சுமார் பொ.ச.மு. 300-⁠ல் கட்டினார். எகிப்தின் துறைமுகப் பட்டணமான அலெக்சாண்டிரியாவில் அதைக் கட்டினார்; அன்றைய உலகில் இருந்த பெரும்பாலான சுவடிகளின் பிரதிகளைச் சேகரிப்பதற்கு அதன் நூலகர்கள் பெரும் முயற்சி செய்தார்கள். b பாரம்பரியத்தின்படி, அலெக்சாண்டிரியாவில்தான் சுமார் 70 கல்விமான்கள் எபிரெய வேதாகமத்தைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். இந்த மொழிபெயர்ப்பே கிரேக்க செப்டுவஜின்ட் என அழைக்கப்படலாயிற்று. இதை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் பெருமளவு பயன்படுத்தினார்கள்.

கிழக்கத்திய நூலகங்கள்

அசூர்பானிபால் தன் நூலகத்தை மேம்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் சீனாவை சௌ வம்சத்தார் ஆட்சி செய்து வந்தார்கள். பொ.ச.மு. 1122 முதல் பொ.ச.மு. 256 வரையான இவர்களுடைய ஆட்சி காலத்தில் ஐந்து இலக்கியங்கள் என்று அறியப்படும் புத்தகங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அத்தொகுப்பில், எதிர்காலத்தை வெளிப்படுத்தும் கையேடும், ஆரம்ப கால ஆட்சியாளர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுதியும், கவிதைகளும், மத சடங்குகள் மற்றும் ஆசாரங்களின் பேரிலான அறிவுரைகளும், சுமார் பொ.ச.மு. 722 முதல் பொ.ச.மு. 481 வரையிலான லூ மாகாணத்தின் சரித்திரம் அடங்கிய புத்தகமும் இருந்தன; கடைசி புத்தகத்தை சீன தத்துவஞானி கன்பூசியஸ் எழுதியதாக சொல்லப்படுகிறது. ஐந்து இலக்கியங்களும் அவற்றிற்கான எண்ணற்ற விளக்கவுரைகளும் சீனர்கள் சிந்திக்கும் விதத்தை பெரிதும் பாதித்தன; அரசகுல நூலகங்களிலும் தனியார் நூலகங்களிலும் அவை இரண்டாயிரத்திற்கும் அதிக ஆண்டுகளுக்கு முக்கிய புத்தகங்களாக இருந்தன.

ஜப்பானில் ஆட்சி செய்து வந்த சாமுராய் குடும்பத்தைச் சேர்ந்த ஹோஜோ சானேடோகி என்பவர் (தற்போது யோகஹாமாவிலுள்ள) கனஸாவா என்ற இடத்தில் தன் குடும்பத்தாருக்குரிய வீட்டில் 1275-⁠ல் ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார். அவர் சீன மொழியிலும் ஜப்பானிய மொழியிலும் இருந்த எல்லா புத்தகங்களையும் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். இப்புத்தகங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்ட போதிலும் இன்றும் இருக்கின்றன.

பைபிளும், துறவி மட நூலகங்களும், மேற்கத்திய கலாச்சாரமும்

“கிறிஸ்தவ மதம் உருவாகி, பரவி, நிலைத்திருக்கும் விதமே, அச்சிடப்பட்ட புத்தகங்களின் வலிமைக்கும் நூலகங்களின் மதிப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது” என மேற்கத்திய உலகில் நூலகங்களின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. நூலகங்கள் வளர்ச்சியடைந்ததற்கும் கிறிஸ்தவம் பரவியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

ரோம சாம்ராஜ்யம் பிளவுற்ற பிறகு, அதன் மாபெரும் நூலகங்களில் இருந்தவை அழிந்துபோயின அல்லது சிதறிப்போயின; அப்போது ஐரோப்பா எங்கும் தோன்றிய கிறிஸ்தவமண்டல துறவி மடங்கள் இந்தப் பண்டைய நூலகங்களிலிருந்த எஞ்சிய புத்தகங்களைச் சேகரித்தன. பைபிள் கையெழுத்துப் பிரதிகளையும் பிற கையெழுத்துப் பிரதிகளையும் நகலெடுப்பதே இந்தத் துறவி மடங்கள் பலவற்றின் முக்கிய பணியாக இருந்தது. உதாரணமாக, பெனடிக்டைன் துறவி மடங்கள், புத்தகங்களை வாசிக்கவும் நகலெடுக்கவும் வேண்டுமென்ற “புனிதர் பெனடிக்டின் சட்டத்திற்குக்” கட்டுப்பட்டிருந்தன.

கான்ஸ்டான்டிநோபிளில் இருந்த நூலகங்கள் பூர்வ கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து வைத்து, நகல்கள் எடுத்தன; பின்னர், அவை ஒருவழியாக இத்தாலியை வந்தடைந்தன. இந்தக் கையெழுத்துப் பிரதிகளே மறுமலர்ச்சி காலம் ஆரம்பமாவதில் முக்கிய பங்காற்றியதாக நம்பப்படுகிறது. சரித்திராசிரியரான எல்மர் டி. ஜான்சன் இவ்வாறு சொல்கிறார்: “மேற்கத்திய கலாச்சாரத்தைப் பாதுகாத்ததில் துறவி மட நூலகத்தின் பங்கை மறுக்க முடியாது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு அதுவே ஐரோப்பாவின் மேதைகளுடைய மையமாக இருந்தது, அது மட்டும் இல்லாதிருந்தால் மேற்கத்திய உலகின் நாகரிகம் தலைகீழாகியிருக்கும்.”

அந்தக் காலத்தில், பைபிளை நகலெடுக்கும் வேலை, ‘ஐரோப்பாவின் மேதைகளுடைய மையம்’ தொடர்ந்து இயங்குவதற்கு உதவியது. ஐரோப்பா எங்கும் சீர்திருத்த இயக்கம் தலைதூக்கியபோது, பைபிளை வாசிக்க வேண்டுமென்ற ஆசை எழுத்தறிவின்மையை விட்டொழிக்கும்படி சாமானியரையும் தூண்டியது. நூலகங்களின் கதை என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு நபரும் பைபிளை வாசிக்கும் அளவுக்காவது கல்வி கற்றிருக்க வேண்டும் என்ற கருத்து புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கத்தில் ஆரம்பமாகி இருப்பதைக் காண்கிறோம். இறையியல் சார்ந்த முரண்பாடுகள் அதிகரித்தபோது அநேக மத புத்தகங்களை வாசிப்பதற்கான திறமை தேவைப்பட்டது. இதற்கு வாசிக்க தெரிந்திருப்பதோடு, புத்தகங்கள் இருந்த இடத்திற்கு செல்வதும் தேவைப்பட்டது.”

எனவே மேற்கத்திய உலகெங்கும் நூலகங்களும் எழுத்தறிவும் பரவுவதில் பைபிள் முக்கிய பங்காற்றியது. அச்சகம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ஐரோப்பாவிலும் பின்னர் உலகம் முழுவதிலும் பல்வேறு விஷயங்களை விளக்கும் புத்தகங்கள் அடங்கிய மிகப் பெரிய தனியார் நூலகங்களும் தேசிய நூலகங்களும் பிறந்தன.

21-⁠ம் நூற்றாண்டின் நூலகங்கள்

இன்று சில நூலகங்கள் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றன. 850 கிலோமீட்டர் நீளமுடையதும், 2.9 கோடிக்கும் அதிக புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதுமான ஒரு புத்தக ஷெல்ஃபுக்கு அருகில் நிற்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். ஐக்கிய மாகாணங்களில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகமான லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் கிட்டத்தட்ட அவ்வளவு பெரியதாக இருக்கிறது. புத்தகங்கள் மட்டுமல்லாமல் அந்த நூலகத்தில் சுமார் 27 லட்சம் ஆடியோ, வீடியோ கேஸட்டுகளும், 1.2 கோடி புகைப்படங்களும், 48 லட்சம் வரைபடங்களும், 5.7 கோடி கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. ஒவ்வொரு நாளும் அந்த நூலகத்திற்கு 7,000 ஐட்டங்கள் வந்த வண்ணமிருக்கின்றன!

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரி, மிகப் பெரிய நூலகங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது; இதில் 1.8 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மாஸ்கோவிலுள்ள ரஷ்யன் ஸ்டேட் லைப்ரரியில் 1.7 கோடி புத்தகங்கள் உள்ளன; சுமார் 6,32,000 செய்தித்தாள்களின் வருடாந்தர தொகுப்புகளும் இருக்கின்றன. ஐரோப்பாவிலுள்ள தேசிய நூலகங்களில் மிகப் பழமையான ஒன்று, பிரான்சிலுள்ள நேஷனல் லைப்ரரி ஆகும்; இதில் 1.3 கோடி புத்தகங்கள் உள்ளன. அதோடு, லைப்ரரி உவர்ல்டு ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “தன் வசமுள்ள புத்தகங்களில் அதிகமானவற்றை இன்டர்நெட் மூலம் வாசிக்க வழிசெய்த முதல் நூலகம் பிரான்சு நாட்டின் தேசிய நூலகமாகும்.” கம்ப்யூட்டர் வைத்திருக்கும் நபருக்கு, மனிதனின் அறிவுக் களஞ்சியத்துடன் தொடர்புகொள்வதற்கு இன்டர்நெட் வெகு சுலபமான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

ஒருபோதும் இல்லாதளவுக்கு, பொது மக்கள் தெரிந்துகொள்வதற்கு எக்கச்சக்கமான தகவல்கள் குவிந்த வண்ணமிருக்கின்றன. மனிதனுக்கு கிடைக்கும் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாலரை ஆண்டுகளுக்கும் இரு மடங்கு அதிகரிப்பதாகக் கணக்கிடப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே 1,50,000-⁠க்கும் அதிகமான புதிய புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன.

எனவே பூர்வகால கல்விமானும், எழுத்தாளரும், ராஜாவுமான சாலொமோன் கவனித்த விஷயம் இன்று முக்கியமாக வெகு பொருத்தமானதாய் இருக்கிறது. அவர் இவ்வாறு எழுதினார்: “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) இருப்பினும் ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகம் குறிப்பிட்டது போல, விவேகத்துடன் பயன்படுத்தும்போது நூலகங்கள் ‘அருகிலுள்ள அறிவுக் களஞ்சியத்தின் கதவுகளாக’ தொடர்ந்து செயலாற்றும். (g05 5/22)

[அடிக்குறிப்புகள்]

a எஸ்றா 4:10-⁠ல் அஸ்னாப்பார் என குறிப்பிடப்பட்டிருப்பவரே அசூர்பானிபால் என்பதாக நம்பப்படுகிறது; இவர் யூத ராஜாவாகிய மனாசே வாழ்ந்த அதே காலத்தைச் சேர்ந்தவர்.

b அன்றும் இன்றுமுள்ள அலெக்சாண்டிரிய நூலகத்தைப் பற்றி கூடுதல் தகவலறிய ஜனவரி 8, 2005 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு!-வைப் பாருங்கள்.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

நூலகரின் பணி

நூலகத்தின் பட்டியலில் உங்களுக்குத் தேவைப்படும் புத்தகத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் சோர்ந்துவிடாதீர்கள், நூலகரிடம் கேளுங்கள். ஒரு நூலகரின் அறிவுத்திறம் எப்போதுமே அதிக மதிப்புமிக்கது. ராடிரிக் என்பவர் 20 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “நூலகங்களையோ நூலகர்களையோ பார்த்து மக்கள் பெரும்பாலும் பயந்துவிடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி, ‘நான் கேட்பது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் . . . ’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் முட்டாள்தனமான கேள்வி என ஒன்றுமே இல்லை. நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற புத்தகத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்தான் திறமைசாலியான நூலகர்.”

[பக்கம் 19-ன் பெட்டி/படம்]

எண்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?225.7

டுவே தசம எண் வகைப்படுத்தும் முறை

அநேக நூலகங்கள் தங்கள் வசமுள்ள எக்கச்சக்கமான புத்தகங்கள் தொலைந்துவிடாமல் இருப்பதற்கு டுவே தசம எண் வகைப்படுத்தும் முறையைப் பின்பற்றுகின்றன; இதன்படி, புத்தகப் பட்டியல்களிலும் புத்தக அட்டையில் அதன் விவரங்கள் காணப்படும் விளிம்பு முனைப்புகளிலும் (spines) எண்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. மெல்வில் டுவே என்ற பிரபல அமெரிக்க நூலகர் இந்த முறையை 1876-⁠ல் முதன்முறை வெளியிட்டார். இதன்படி, பொருள் வாரியாக புத்தகங்களை வகைப்படுத்துவதற்கு 000 முதல் 999 வரையான எண்கள் பயன்படுத்தப்பட்டு, பத்து பிரதான தொகுப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

000-099 பொதுவானவை

100-199 தத்துவமும் மனோவியலும்

200-299 மதம்

300-399 சமூகவியல்

400-499 மொழி

500-599 அறிவியலும் கணிதமும்

600-699 தொழில்நுட்பம் (செயல்முறை அறிவியல்)

700-799 கலைகள்

800-899 இலக்கியமும் அணியிலக்கணமும்

900-999 புவியியலும் சரித்திரமும்

இந்த ஒவ்வொரு பிரதான தொகுப்பும் பத்து உபதொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அந்தத் தொகுப்புக்குள்ளாகவே அவற்றிற்குக் குறிப்பிட்ட பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 200 (மதம்) என்பதற்குரிய வகைப்படுத்துதலில் பைபிளுக்கு 220 என்ற ஓர் எண் கொடுக்கப்படுகிறது. பைபிள் பற்றிய குறிப்பிட்ட பொருள்கள் பின்வருமாறு மேலும் பிரிக்கப்பட்டுள்ளன: 221 என்ற எண் “பழைய ஏற்பாட்டை” (எபிரெய வேதாகமத்தை) அடையாளம் காட்டுகிறது, 225 என்ற எண் “புதிய ஏற்பாட்டை” (கிரேக்க வேதாகமத்தை) அடையாளம் காட்டுகிறது. கூடுதல் எண்கள் எத்தகைய புத்தகம் என்பதை அடையாளம் காட்டுகின்றன.

01 தத்துவயியலும் கோட்பாடும்

02 இதர தகவல்கள்

03 அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சொல் விளக்கப் பட்டியல்கள்

04 விசேஷ தலைப்புகள்

05 தொடர்வரிசை வெளியீடுகள்

06 அமைப்புகளும் மேலாண்மையும்

07 கல்வி, ஆய்வு, மற்றும் சம்பந்தப்பட்ட தலைப்புகள்

08 தொகுப்புகள்

09 சரித்திரம்

எனவே, முழு பைபிளையும் பற்றிய ஓர் என்ஸைக்ளோப்பீடியாவின் எண் 220.3 என்பதாக இருக்கும், அதே சமயத்தில் கிரேக்க வேதாகமத்தின் விளக்கவுரையின் எண் 225.7 என்பதாக இருக்கும்.

இதே போன்ற வகைப்படுத்தும் முறையை லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் பின்பற்றுகிறது, ஆனால் அதில் எழுத்துக்களையும் எண்களையும் சேர்த்துப் பயன்படுத்துகிறது. புத்தகங்களின் எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதற்கு பெரும்பாலான புத்தகங்களில் எண்களையும் எழுத்துக்களையும் கொண்ட குறியீடும் (alphanumeric code) உள்ளது. இன்னும் வேறு நாடுகளில் வித்தியாசமான வகைப்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.

[பக்கம் 16-ன் படம்]

பொ.ச.மு. 650-⁠ல், அசீரியாவின் ராஜாவான அசூர்பானிபால்; இவருடைய நூலகத்தில் ஆப்புவடிவ எழுத்துக்களைக் கொண்ட களிமண் பலகை துண்டுகள் இருந்தன

[பக்கம் 16-ன் படம்]

இங்கிலாந்தில் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் லைப்ரரி

[பக்கம் 16-ன் படம்]

1761, சுவிட்சர்லாந்தின் துறவி மடத்திலிருந்த நூலகம்

[பக்கம் 17-ன் படம்]

சுமார் பொ.ச.மு. 300-⁠ல் எகிப்திலிருந்த அலெக்சாண்டிரிய நூலகம்

[படத்திற்கான நன்றி]

From the book Ridpath’s History of the World (Vol. II)

[பக்கம் 18, 19-ன் படம்]

யூ.எஸ். லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், உலகிலேயே மிகப் பெரியது

[படத்திற்கான நன்றி]

From the book Ridpath’s History of the World (Vol. IX)

[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]

மேலே இடது புறமும் கீழேயுமுள்ள ஃபோட்டோக்கள்: Erich Lessing/Art Resource, NY; பலகை துண்டு: Photograph taken by courtesy of the British Museum