Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிரைக் குடிக்கும் புகையை வெளியேற்றுங்கள்

உயிரைக் குடிக்கும் புகையை வெளியேற்றுங்கள்

உயிரைக் குடிக்கும் புகையை வெளியேற்றுங்கள்

கதிகலங்க வைக்கும் புள்ளிவிவரம்: ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடத்திற்கு மூன்று பேர் தங்கள் வீட்டிலேயே கொலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் உயிரைக் குடிக்கும் கொலைகாரன்? உயிரிய எரிபொருள் (biomass) வெளிவிடுகிற புகையே.

உயிரிய எரிபொருள் என்பது என்ன? அது வறட்டியாகவோ காய்ந்த மரக்கட்டையாகவோ, குச்சிகளாகவோ, புற்களாகவோ, பயிர் எச்சங்களாகவோ இருக்கலாம். உலக மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது, 200 கோடி பேர், சமைப்பதற்கும் குளிர்காய்வதற்கும் இவற்றைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள் என த காட்மாண்டு போஸ்ட் என்னும் நேபாள நாட்டு செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. கொடிய வறுமையில் சிக்கித்தவிக்கும் ஏழைகளுக்கு இவைதான் பெரும்பாலும் எரிபொருளாகக் கிடைக்கின்றன.

ஆனால், இப்படிப்பட்ட எரிபொருள் நச்சுப் புகையை வெளிவிடுகிறது என்பதே வருந்தத்தக்க விஷயம். இதற்கு என்ன செய்வது? “வீட்டிற்குள்ளே காற்று மாசடைவதைத் தடுப்பதற்குச் சுலபமான வழி: வீட்டிற்குள் புகை வராதபடி செய்வது அல்லது வீட்டிலிருந்து அதை வெளியேற்றுவதாகும்” என இன்டர்மீடியட் டெக்னாலஜி டெவலெப்மண்ட் குரூப் (ITDG) சொல்கிறது. இது பல நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஓர் அமைப்பாகும்.

இந்த அமைப்பு தரும் முதல் ஆலோசனை, வீட்டிற்கு வெளியே சமைப்பதாகும். இது உங்களுக்குச் சரிப்பட்டு வரவில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? வீட்டிற்குள் நல்ல காற்றோட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி ITDG சொல்கிறது. இதைச் செய்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, கூரைக்கு சற்று கீழே சுவரில் சிறு சிறு திறப்புகளை அமைத்துக் கட்டுவது (சந்துகளுக்கு இரும்பு வலை போட்டால் சிறு பிராணிகள் வீட்டிற்குள் வராது), மேலும், வீட்டில் ஜன்னல்களை வைத்துக் கட்டுவது (வெளியிலிருந்து பார்த்தால் தெரியாமல் இருப்பதற்கு ஜன்னல்களுக்குக் கதவுகள் வைக்கலாம்). இப்படிச் செய்வதனால் வீடு காற்றோட்டமாகவும் இருக்கும், புகையும் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காய்வதற்கு இந்த ஓட்டைகள் இருந்தால் பயனில்லை. எனவே, இரண்டாவதாக இன்னொரு எளிய வழிமுறை இருக்கிறது.

அதாவது, புகையை வெளியேற்ற புகைக்கூண்டுகளைப் பயன்படுத்தலாம்; இது பலர் விரும்பும் சிறந்த ஒரு முறையாக இருக்கிறது என்று ITDG சொல்கிறது. புகைக்கூண்டுகளை அமைப்பதற்குச் செலவு குறைவுதான். உலோகத் தகடுகளால் அவற்றை அமைக்கலாம். ஏன் செங்கல், மண் வைத்துக்கூட அமைக்கலாம். இந்த அகன்ற கூண்டு, அடுப்பின் மீது வைக்கப்படுகிறது. அதனுடன் ஒரு புகைப்போக்கி பொருத்தப்படுகிறது. அதன் வழியே கூரையைத் தாண்டி புகை வெளியேறிவிடுகிறது. கூரைக்கு சற்று கீழே சுவரில் சிறு சிறு திறப்புகளை அமைத்து காற்றோட்டத்தை அதிகரிக்கும்போதும் புகைக்கூண்டுகளைக் கட்டும்போதும் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 80 சதவிகித நச்சுக் காற்று வெளியேற்றப்படுகிறது என வல்லுனர்கள் கூறுகிறார்கள். புகைக்கூண்டுகளைப் பயன்படுத்தும் மக்கள், அதிக ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்க முடிவதாகவும், அதிக வேலை செய்ய முடிவதாகவும் சொல்கிறார்கள்; அதோடு, வீட்டில் இருக்க அதிகம் விரும்புவதாகவும் சொல்கிறார்கள். ஓர் எளிய முறைகூட வாழ்க்கையை மேம்படுத்தும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. (g05 6/8)

[பக்கம் 14-ன் படம்]

புகைக்கூண்டு, சுவருக்கும் கூரைக்கும் இடையே பெரிய சந்துகள், ஜன்னல்கள் ஆகியவற்றைக் கொண்ட சமையலறை, கென்யாவில்

[படத்திற்கான நன்றி]

Dr. Nigel Bruce/www.itdg.org