Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருட்டுக்கு முற்றுப்புள்ளி

திருட்டுக்கு முற்றுப்புள்ளி

திருட்டுக்கு முற்றுப்புள்ளி

“திருட்டைக் குறைப்பது உங்களுடைய வேலை மட்டுமே அல்ல, இந்த முழு சமுதாயத்துக்குமே உரிய ஒரு வேலையாகும்; திருட்டை ஒழித்துக்கட்டும்போது அனைவரும் நன்மை அடைகிறார்கள்.”⁠“இழப்பைத் தடுக்க ஒவ்வொரு கடைக்காரருக்குமான வழிகாட்டி.” (ஆங்கிலம்)

கடைச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போவது, மோசமான மற்ற பழக்கங்களைப் போலவே ஒரு நபருடைய சிந்தனையை மழுங்கச் செய்து, தான் செய்வது சரியே என்பது போல் நினைக்க வைக்கிறது. எனவே, அப்படிப்பட்ட திருட்டில் இனி ஈடுபடாமல் இருக்க விரும்புகிறவர்கள், ஒரு தோட்டக்காரர் எப்படிக் களைகளை வேரோடு பிடுங்கிப்போடுவாரோ அப்படியே தங்கள் மனதிலுள்ள கெட்ட சிந்தனைகளைப் பிடுங்கிப்போட வேண்டும். ‘உங்கள் மனதைப் புதிதாக்குங்கள்’ என்று ரோமர் 12:2-⁠ல் பைபிள் நினைப்பூட்டுகிறது. ‘முன்னே நீங்கள் . . . கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாதிருங்கள்’ என்று 1 பேதுரு 1:14 அறிவுறுத்துகிறது. கடைச் சாமான்களைத் திருடும் ஒருவர் தன் மனதை மாற்றிக்கொள்வதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து குறிப்புகள் உதவலாம். a

சிந்தனையை நல்வழிப்படுத்த . . .

முதல் குறிப்பு: கடைச் சாமான்களைத் திருடுவது சட்ட விரோதமான செயலாகும். கடைகளிலிருந்து திருடும் ஒருவர், திருட்டு சர்வசகஜமாக நடக்கிற பகுதியில் வசித்து வந்தாலும் சரி, திருடும்போது ஒருவேளை மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து வந்தாலும் சரி, அவர் சட்டத்தை மீறுபவராகவே இருக்கிறார்.​—ரோமர் 13:1.

இப்படியே நிறைய பேர் சட்டத்தை மீறும்போது என்ன நடக்கிறது? பைபிள் சொல்கிறபடி, ‘சட்டம் பலவீனமாகிறது.’ (ஆபகூக் 1:3, 4, ஈஸி டு ரீட் வர்ஷன்) வேறு விதத்தில் சொன்னால், சட்டத்தின் நன்மையளிக்கும் கட்டுப்பாடுகள் வலுவற்றுப் போய்விடுகின்றன, இதன் விளைவாக சமுதாய ஒழுங்கு சீரழிந்துபோகிறது. கடைச் சாமான்கள் திருடப்படும் ஒவ்வொரு முறையும் சட்ட ஒழுங்குள்ள சமுதாயத்தின் அஸ்திவாரமே ஆட்டம்காண்கிறது. அப்படி ஆகும்போது எல்லாருக்குமே அவதிதான்.

இரண்டாவது குறிப்பு: கடைச் சாமான்களைச் சுருட்டுவது நம்பிக்கையைக் குலைத்துப் போடுகிறது. அத்தகைய நாணயமற்ற செயல் மனித உறவுகளை அரித்துவிடுகிறது; இதன் காரணமாக ஜனங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பட்சபாதமின்றி நடந்துகொள்ள முடியாமல் போகிறது.​—நீதிமொழிகள் 16:28.

“நான் செய்த மகாபாவம் எல்லாரையுமே அளவுக்கதிகமாக நம்பியதுதான்.” சொந்தமாகத் துணிக்கடை வைத்து நடத்திய ஒரு பெண் சொன்ன வார்த்தைகளே இவை; திருடர்கள் அவரைத் திவாலாக்கிவிட்டுப் போயிருந்தார்கள். தன் வாடிக்கையாளர்களும் வேலையாட்களும் தன்னுடைய கடையிலுள்ள பொருள்களைத் திருடவே மாட்டார்கள் என்று ஒரு காலத்தில் அவர் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த நம்பிக்கையெல்லாம் வீண் என்று இப்போது உணருகிறார்.

பொய் சொல்பவர்கள், தங்களுடைய ‘இமேஜை’ கெடுத்துக்கொள்கிறார்கள். கடைச் சாமான்களைச் சுருட்டுபவர்களோ, தங்களுக்குப் பிறகு கடைக்குள் நுழையும் அத்தனை பேர் மீதும் பெருமளவு சந்தேகத்தைக் கிளப்பி அவர்களுடைய ‘இமேஜை’ கெடுத்துப் போடுகிறார்கள். நேர்மையான ஆட்களைத் திருடர்களைப் போல் பிறர் காணும்படி செய்கிறார்கள். அப்படிச் செய்ய யாருக்காவது உரிமை இருக்கிறதா என்ன?

மூன்றாவது குறிப்பு: கடைச் சாமான்களைத் திருடுகிற பழக்கம் இன்னும் மோசமான குற்றங்களுக்கு வழிநடத்தலாம். அப்படித் திருடுபவர்கள் காலப்போக்கில் படு துணிச்சலான வேறு காரியங்களையும் செய்ய ஆரம்பித்துவிடலாம்.​—2 தீமோத்தேயு 3:13.

திருட்டுக்கு முற்றுப்புள்ளி

மிக முக்கியமான நான்காவது குறிப்பு: கடைச் சாமான்களைத் திருடுபவர் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு விரோதியாகி விடுகிறார். திருடுகிறவன் “இனித் திருடாமல்” இருக்க வேண்டுமென கடவுளுடைய வார்த்தை சொல்கிறது; அதோடு அவரை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அது எச்சரிக்கிறது. (எபேசியர் 4:28; சங்கீதம் 37:9, 17, 20) ஆனால், மனந்திருந்துகிற திருடர்களை யெகோவா மன்னிக்கிறார். அதன் பிறகு, அவரோடு அவர்கள் சமாதான உறவை அனுபவிப்பார்கள்.​—நீதிமொழிகள் 1:33.

ஐந்தாவது குறிப்பு: மற்ற எல்லாக் குற்றங்களைப் போலவே, கடைத் திருட்டும் சீக்கிரத்தில் ஒழிக்கப்பட்டுவிடும். பைபிளில் கடவுள் வாக்குக் கொடுத்துள்ளபடியே, அவருடைய ராஜ்யம் இந்தப் பூமி முழுவதிலும் ஆட்சி செய்யும்போது, மனிதர்கள் ஒருவரையொருவர் நேர்மையோடும் கண்ணியத்தோடும் நடத்துவார்கள். ஆக, இனி கடைத் திருட்டுகளும் நடக்காது, யாருக்கும் எந்தவொரு நஷ்டமும் ஏற்படாது.​—நீதிமொழிகள் 2:21, 22; மீகா 4:4. (g05 6/22)

[அடிக்குறிப்பு]

a கடைச் சாமான்களைத் திருடுகிறவர்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள நியமங்கள் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமே பொருந்துகிறது.

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

செலவில்லாமல் திருட்டைத் தடுக்க . . .

சிறுதொழில் வியாபாரிகள் சிலருக்கு விலையுயர்ந்த செக்யூரிட்டி அமைப்புகளை வைக்க ஒருவேளை போதிய பணவசதி இருக்காது. ஆனால் அதற்காக கடைச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போகிறவர்களை அவர்களால் தடுக்கவே முடியாது என்று அர்த்தமல்ல. சில எளிய படிகளை எடுப்பதன் மூலம் தங்கள் கடையை அவர்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

துப்பறியும் நிபுணர்களான மைக்கேல் ப்ரோ என்பவரும் டெரிக் ப்ரெளன் என்பவரும் சேர்ந்து வெளியிட்ட ஒரு பிரசுரத்தில், வாடிக்கையாளர்களிடம் கவனம் செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். “எல்லார் மீதும் ஒரு கண் இருக்கட்டும். . . . நீங்களும் உங்கள் கடையிலுள்ள வேலையாட்களும்தான் அதைத் தடுக்க வேண்டிய முக்கிய காவலாளிகள்.” சந்தேகத்திற்குரிய நபரை அணுகி இவ்வாறு சொல்லுமாறு அவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்: “நீங்கள் தேடுவது உங்களுக்குக் கிடைத்துவிட்டதா? தயவுசெய்து காஷ் கெளண்டர் பக்கத்தில் அதைக் கொண்டுபோய் வையுங்கள், பில் போட்டுத் தருகிறேன்.” “அதை ‘பேக்’ செய்து தரட்டுமா?” “நீங்கள் எடுத்துள்ளது கரெக்டான சைஸ் ஸ்வெட்டர் தானா?” “சாமான்களை வைக்க உங்களுக்கு ஒரு கூடையை எடுத்து வரட்டுமா?” துப்பறியும் நிபுணர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “இப்படியெல்லாம் சொல்லும்போது, அவர்களைக் கவனிக்கிறீர்கள், அவர்கள் மீது அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை நேர்மையான வாடிக்கையாளர்களும் சரி, திருடர்களும் சரி புரிந்துகொள்வார்கள்.”

கடை ஒழுங்கைப் பற்றிச் சொல்லும்போது: “சாமான்களை அலமாரி முழுக்க நிரப்பி வையுங்கள், நேர்த்தியாகவும் அடுக்கி வையுங்கள். அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் மீது எப்போதும் ஒரு கண் வைப்பது, அந்தப் பொருள்களை நன்கு தெரிந்துகொள்ள உதவும்; எந்தளவுக்கு அவை நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளதோ அந்தளவுக்கு எளிதாக அவற்றில் ஏதாவது கலைந்திருக்கிறதா அல்லது எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சொல்லிவிட முடியும்.”​—⁠இழப்பைத் தடுக்க ஒவ்வொரு கடைக்காரருக்குமான வழிகாட்டி.

ரஸல் பின்ட்லிஃப் என்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் இவ்வாறு ஆலோசனை வழங்குகிறார்: “எந்த இடையூறுமில்லாத உட்பாதையும் பொருள்கள் நிரப்பி வைக்கப்பட்ட அலமாரிகளும் வாடிக்கையாளர்களுடைய நடவடிக்கைகளைக் கவனிக்க வேலையாட்களுக்கு உதவும். சந்தேகத்திற்குரிய ஒரு நபர் நிற்கும் இடத்திற்கு, கடை வேலையாள் ஒருவர் கடையின் உட்பாதை வழியே நடந்துசென்று அங்கு ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம், பிறகு கடைச் சரக்குகளைக் கணக்கெடுப்பது போல் பாவனை செய்து, அப்படியே அந்த நபருடைய கூடைக்குள் அல்லது சாமான்களை வைக்கிற வண்டிக்குள் ஒரு பார்வை பார்க்கலாம். . . . என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று அந்தத் திருடர்கள் புரிந்துகொள்வார்கள்; நேர்மையான வாடிக்கையாளர்களோ கடை வேலையாள் தங்களைக் கவனித்துக் கொண்டிருப்பதைக்கூட அறியாமல் இருப்பார்கள்.” கடையின் உட்பாதை அமைப்பைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “[கடைச் சொந்தக்காரரும்] கடை வேலையாட்களும் வாடிக்கையாளர்களை நன்றாகப் பார்க்க முடிகிற விதத்தில் கடையின் உட்பாதை அமைக்கப்பட வேண்டும்.”​—⁠உங்கள் தொழிலைக் குற்றச்செயல்களிலிருந்து காத்திடுங்கள்​—⁠உங்கள் ஆஃபீஸை, கடையை, அல்லது தொழிலைப் பாதுகாக்க குறைந்த செலவில், செலவில்லாத 301 வழிகள்.

[பக்கம் 9-ன் படம்]

நேர்மையாக இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, சிநேகப்பான்மையான உறவுகளை வளர்க்கிறது