Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துள்ளிக் குதிக்கும் பெர்ரியை ருசித்திருக்கிறீர்களா?

துள்ளிக் குதிக்கும் பெர்ரியை ருசித்திருக்கிறீர்களா?

துள்ளிக் குதிக்கும் பெர்ரியை ருசித்திருக்கிறீர்களா?

கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கந்தகத்தை நிலத்தில் தூவி மண்ணின் அமிலத் தன்மையைக் கூட்டுகிறார் விவசாயி. இலையுதிர் காலம் வருகிறது. பழங்களும் அறுவடைக்குத் தயாராகின்றன. அவர் தோட்டத்தில் வழிய வழிய நீர் பாய்ச்சுகிறார். அறுவடையும் முடிந்துவிடுகிறது. பிறகு அந்த விவசாயி, பழத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறார். எதற்காக? அந்தப் பழம் துள்ளிக் குதிக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக.

அவருக்குப் பைத்தியமா என்ன? இல்லை. அவற்றை நாசம் பண்ணுவது போலத் தோன்றுகிற அந்தக் காரியம் அவர் அறுவடை செய்துள்ள அப்பழங்கள் உயர்தரமானவையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவும். அவர் அறுவடை செய்திருப்பது கிரான்பெர்ரிகளையே. எதையும் தாக்குப்பிடிக்கும் தன்மையுள்ள இந்த பெர்ரிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

சதுப்பு நிலத்தில் வளரும் பெர்ரி செடிகள்

வட அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் முதன்முறையாக வந்திறங்கிய ஐரோப்பியர்களுக்கு, புளிப்பு சுவை ததும்பிய புத்துயிரூட்டுகிற சிவப்பு பெர்ரிகளை, ஊர் ஜனங்கள் விற்றார்கள். இப்போது கேப் கட் என்று அழைக்கப்படும் இடத்தில் வசித்த அமெரிக்க இந்தியர்கள் (Pequot Indians) இப்பழத்தை இபிமி அதாவது “புளிக்கும் பழம்” என்று பெயரிட்டார்கள். பெர்ரி செடியின் தண்டும் பூவும் பார்ப்பதற்கு கிரேனின் (நாரையின்) கழுத்தைப் போலவும் தலையைப் போலவும் இருப்பதால் பில்கிரிம்கள் (ஆங்கிலேய நாட்டவர்கள்) அதற்கு கிரேன்பெர்ரிகள் என்று பெயர் வைத்தார்கள். அந்தப் பகுதியில் ஏராளமாய் காணப்பட்ட கிரேன்கள் அதை விரும்பி சாப்பிட்டதாலும் அந்தப் பெயர் வந்திருக்கலாம். சீக்கிரத்திலேயே கிரேன்பெர்ரி என்ற பெயர், கிரான்பெர்ரி என்று மாறிவிட்டது.

அமெரிக்க இந்தியர்கள், சதுப்பு நிலங்களிலிருந்து கிரான்பெர்ரிகளை அறுவடை செய்தார்கள். இந்நிலத்தில் செடிகள் ஈரமாகவும் அழுகியும் கிடப்பதால் நிலத்தின் அமிலத்தன்மை பயங்கரமாகக் கூடிவிடுகிறது. இதனால் அநேக செடிகளுக்குத் திண்டாட்டம்; கிரான்பெர்ரி செடிகளுக்கோ கொண்டாட்டம். தாழ்வாக வளரும் கிரான்பெர்ரி செடிகள் பார்ப்பதற்கு ஸ்டிராபெர்ரி செடிகளைப் போல் இருக்கின்றன. இவை தெற்கேயுள்ள இன்றைய வர்ஜீனியாவிலிருந்து வடக்கேயுள்ள கனடா வரையாகத் தளதளவென்று வளர்ந்து நிற்கின்றன.

நியூ ஜெர்ஸியில் குடியேறிய மஹலோன் ஸ்டேஸி என்பவர் இங்கிலாந்தில் வசித்த தன் அண்ணனுக்கு 1680-⁠ல் எழுதிய கடிதத்தில் பெர்ரிகளைப் பற்றி இப்படியாகக் குறிப்பிட்டார்: “கலரிலும் ஸைஸிலும் கிரான்பெர்ரிகள் செர்ரிகளைப் போல் இருக்கின்றன. இவை அடுத்த ஸீஸன் வரும்வரை கெடுவதில்லை. மான் இறைச்சி, வான் கோழி இறைச்சி, வேறே பெரிய பறவைகளின் இறைச்சி போன்றவற்றிற்கு கிரான்பெர்ரி ஸாஸ் ஸூப்பர். நெல்லிக்காயையும், செர்ரியையும்விட, கிரான்பெர்ரியிலிருந்து தயாரிக்கப்படும் டார்ட் அப்பங்களுக்கு டேஸ்ட் அதிகம். இந்தியர்கள் இதை ஏராளமாக எங்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்.”

த்ரீ இன் ஒன்

கிரான்பெர்ரிகள், பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கும் பண்பை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன. இந்தப் பண்பைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க இந்தியர்கள், பெமிகண் எனும் ஒருவித உணவுப் பண்டத்தைத் தயாரித்தார்கள். அதாவது, காய வைத்த இறைச்சி அல்லது மீனுடன் கிரான்பெர்ரிகளையும் சேர்த்து அரைத்து, அதைச் சிறு சிறு வட்டங்களாகச் செய்து வெயிலில் காயவைத்து வத்தலாக்கினார்கள். நீண்ட குளிர்காலங்களில் இந்த பெமிகண் வத்தல்கள் புரோட்டீன் மற்றும் வைட்டமின் நிறைந்த சமச்சீர் உணவாக அமைந்தன. பெர்ரியில் பசைச் சத்து எக்கச்சக்கமாக இருப்பதால் அது மற்ற பொருட்களை மிக நன்றாகப் பாதுகாக்கிறது. அதோடு அவற்றில் வைட்டமின் ‘சி’-யும் அதிகமாக இருக்கிறது. எனவே, முற்காலங்களில், ஸ்கர்வி நோயினால் பாதிக்கப்படாதிருக்க மாலுமிகள் தொலைதூர பயணங்களின்போது கூடைகூடையாக பெர்ரிகளை வாங்கி தங்களோடு எடுத்துச் சென்றார்கள்.

கிரான்பெர்ரிகள் த்ரீ இன் ஒன் பழங்களாகப் பயன்படுத்தப்பட்டன, அதாவது அமெரிக்க இந்தியர்கள் கிரான்பெர்ரிகளை உணவாகவும், கெடாமல் பாதுகாக்கும் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தினார்கள். உதாரணத்திற்கு, அதை சோள மாவுடன் கலந்து காயத்தின் மேல் மருந்தாகத் தடவினார்கள். அதன் மூலம் இரத்தத்தில் விஷம் கலப்பது தடுக்கப்படுகிறது. கிரான்பெர்ரி ஜூஸ் குடிப்பதால், சிறுநீர்ப் பாதையின் சுவர்களில் சில நோய்க் கிருமிகள் தொற்றிவிடாதபடி தடுக்கப்படுகிறது என நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

துள்ளிக் குதிக்கும் பெர்ரி என்ற பெயர் ஏன்?

பழுத்த கிரான்பெர்ரியைப் பாதியாக அறுத்துப் பார்த்தால் உள்ளே நான்கு காற்றுப் பைகள் இருப்பது தெரியும். வாணிகப் பயிராக இதைப் பயிரிடுவோருக்கு இந்தப் பைகள் இரண்டு விதத்தில் பயனளிக்கின்றன. ஒன்று, பழங்களை கையால் கஷ்டப்பட்டுப் பறிப்பதற்குப் பதிலாக விவசாயிகள் தோட்டத்தில் வழிய வழிய நீர் பாய்ச்சி, மெஷின்களை வைத்து செடிகளை வேகமாக ஆட்டி, பழுத்த பெர்ரிகளை கீழே விழச் செய்கிறார்கள். பெர்ரிகளுக்குள் காற்றுப் பைகள் இருப்பதால் அவை தண்ணீரில் மிதக்கின்றன. a விவசாயிகள் மேலாக மிதக்கும் பழங்களை வாரியெடுத்து பிறகு தரம் பிரிக்கிறார்கள்.

இரண்டாவது பயனை, கிரான்பெர்ரி விவசாயிகள் 1800-⁠களின் பிற்பகுதியில் கண்டுபிடித்தார்கள். ஒரு கட்டுக்கதையின்படி, படியிறங்கி வந்த விவசாயி ஒருவரின் கையிலிருந்து பழக்கூடை தவறி விழுந்ததாம். நல்ல பெர்ரிகள் கடைசி படி வரை துள்ளிக் குதித்ததையும் குழைவான அல்லது அழுகிய பெர்ரிகள் படியில் ஒட்டிக்கொண்டதையும் பார்த்த விவசாயி அப்படியே அசந்து போய்விட்டாராம். தரமான பெர்ரிகளில் இருந்த காற்றுப்பைகள், அவற்றைக் காற்றடித்த டயர்களைப் போல் துள்ளிக் குதிக்க வைத்தன. தரம் குறைந்த பெர்ரிகளோ பஞ்சரான டயர்கள் போல படியிலேயே ஒட்டிக்கொண்டன.

1881-⁠ல் வடிவமைக்கப்பட்ட மெஷின் பெர்ரியின் துள்ளிக் குதிக்கும் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டது. இன்றுள்ள தரம் பிரிக்கும் மெஷின்களும் அப்படியே செய்கின்றன. தரமான பெர்ரிகள் மெஷினிலுள்ள ஒரு தடுப்பைத் தாண்டி துள்ளிக் குதித்து இன்னொரு பக்கம் விழுகின்றன. அவை முழு பழங்களாக விற்பனை செய்யப்படுகின்றன. குழைவான மற்ற பெர்ரிகளோ மெஷினிற்குள் சென்றுவிடுகின்றன; அவை ஜூஸ் அல்லது ஜெல்லி தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஐக்கிய மாகாணங்களின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும் கனடாவிலும் கிரான்பெர்ரிகளுக்கென்றே ஸ்பெஷலாகத் தயார் செய்யப்பட்ட சதுப்பு நிலங்களில் வருடத்திற்கு 25 கோடி கிலோவிற்கும் அதிகமான கிரான்பெர்ரிகளை விவசாயிகள் அறுவடை செய்கிறார்கள். புளிப்பு சுவைமிக்க இந்த பெர்ரியை இதுவரை நீங்கள் ருசி பார்த்ததில்லையெனில், அதை ஏன் நீங்கள் ‘டிரை’ செய்யக் கூடாது? இந்தப் பழங்களில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகம் உள்ளன. அவற்றில் மிகுதியாகக் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இருதய நோயிலிருந்தும் புற்று நோயிலிருந்தும்கூட உங்களைக் காத்திடலாம். ஏன் உங்களைத் துள்ளிக் குதிக்கவும் வைத்துவிடலாம்​—⁠ஆரோக்கியத்தில்! (g05 6/22)

[அடிக்குறிப்பு]

a அறுவடை காலங்களில் கிரான்பெர்ரி தோட்டங்களில் நீர் அதிகளவில் பாய்ச்சப்படுவதால் பெர்ரிகள் தண்ணீருக்கடியில் வளர்கின்றன என்ற தவறான கருத்து நிலவுகிறது.

[பக்கம் 17-ன் பெட்டி]

கிரான்பெர்ரிகள்​—⁠வட அமெரிக்காவில் மட்டுமா?

சம்பிரதாயப்படி, தேங்ஸ் கிவிங் டே (நன்றி தெரிவிக்கும் நாள்) அன்று பரிமாறப்படும் உணவில் கிரான்பெர்ரியும் ஒன்று. ஐக்கிய மாகாணங்களில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழன் அன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது. கனடா நாட்டில், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது திங்கள் அன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு பழங்காலக் கதை சொல்கிறபடி, 1621-⁠ல் முதல் தேங்ஸ் கிவிங் டே பண்டிகைக்கு அமெரிக்க இந்தியர்கள் வந்தபோது கிரான்பெர்ரிகளையும் கொண்டு வந்தார்களாம். அந்த மூன்று நாள் பண்டிகையின் விருந்துக்கும் கொண்டாட்டங்களுக்குமான செலவுகளை பிளைமெளத் காலனியின் கவர்னர் உவில்லியம் பிரேட்ஃப்ர்ட் ஏற்றுக்கொண்டார். ஆக, கிரான்பெர்ரிக்கும் அநேக சம்பிரதாய சடங்குகளுக்கும் சம்பந்தமிருப்பதாலும், வட அமெரிக்காவில் வாணிகப் பயிராகப் பயிரிடப்படும் ஓர் உள்ளூர் செடியாக இருப்பதாலும் அது அங்கு மட்டும்தான் வளருகிறது என்று அநேகர் நினைக்கிறார்கள்.

என்றாலும் சின்னஞ்சிறிய கிரான்பெர்ரி (V. oxycoccus) வட அமெரிக்காவில் மட்டுமல்ல ஆசியாவிலும் வட மற்றும் மத்திய ஐரோப்பாவிலும் வளருகிறது. அதேபோல், இதைக் கொண்டு பதார்த்தங்கள் செய்வது வட அமெரிக்கர்கள் மட்டுமே அல்ல. “கிரான்பெர்ரி ஸாஸையும் ஜெல்லியையும் அமெரிக்கர்கள் மட்டுமே செய்கிறார்கள் என நம்பப்படுகிறது. ஆனால் ஸ்கான்டிநேவியர்களுக்கு அவர்களுடைய இடத்தில் விளையும் பெர்ரிகள் (lingonberry [V. vitisidaea]) மீது உயிர். அவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கிரான்பெர்ரிகளைப் [V. macrocarpon] போல் இருந்தாலும் அதைவிட காரசாரமாக இருக்கின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

[பக்கம் 15-ன் படம்]

கிரான்பெர்ரி பூக்கள்

[படத்திற்கான நன்றி]

Courtesy Charles Armstrong, Cranberry Professional, Univ. of Maine Cooperative Extension, USA

[பக்கம் 16, 17-ன் படம்]

நீர் நிறைந்த சதுப்பு நிலத்தில் கிரான்பெர்ரி அறுவடை

[படத்திற்கான நன்றி]

Keith Weller/ Agricultural Research Service, USDA

[பக்கம் 17-ன் படங்கள்]

வெண்ணிற கிரான்பெரி அறுவடை

[படத்திற்கான நன்றி]

உட்படங்கள்: Courtesy of Ocean Spray Cranberries, Inc.