Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்கூல் ஃபிரெண்ட்ஸுடன் எந்தளவு ‘க்ளோஸாக’ பழகலாம்?

ஸ்கூல் ஃபிரெண்ட்ஸுடன் எந்தளவு ‘க்ளோஸாக’ பழகலாம்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஸ்கூல் ஃபிரெண்ட்ஸுடன் எந்தளவு ‘க்ளோஸாக’ பழகலாம்?

“சனி ஞாயிறுகளில் ஒன்றாகச் சேர்ந்து எப்படியெல்லாம் கும்மாளம் போட்டார்கள் என்று என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் ஜாலியாகப் பேசிக்கொள்வார்கள். என்னை யாருமே கண்டுகொள்ளாதது போல் இருக்கும்.” a​—⁠ மஷெல்.

“சில பசங்கள் குரூப் குரூப்பாக இருப்பதைப் பார்ப்பேன், அப்போது, ‘அட, எவ்வளவு நல்ல ஃபிரெண்ட்ஸ்’ என நினைத்துக்கொள்வேன். அந்த குரூப்பில் இருக்க வேண்டுமென்று எனக்கும் ஆசையாய் இருக்கிறது.”​—⁠ ஜோ.

“ஸ்கூலில் ஃபிரெண்ட்ஸ் பிடிப்பது எனக்குப் பிரச்சினையாகவே இருக்கவில்லை. ஆனால், அதுதான் என் பிரச்சினையே.”​—⁠ மரீயா.

காலையிலிருந்து சாயங்காலம்வரை நீங்கள் அதிக நேரம் செலவிடுவது உங்கள் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸோடுதான். அவர்களுக்கு வருகிற பெரும்பாலான பிரச்சினைகள், எரிச்சல்கள் உங்களுக்கும் வரலாம், அவர்களைப் போலவே நீங்களும் பல சாதனைகள் புரியலாம். சில விஷயங்களில் உங்கள் பெற்றோருடனும், கூடப்பிறந்தவர்களுடனும், அல்லது சக கிறிஸ்தவர்களுடனும் ஒத்துப்போவதைவிட, உங்கள் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸுடன்தான் அதிகமாக ஒத்துப்போகிறீர்கள் என நீங்கள் நினைக்கலாம். நியாயம்தான், அவர்களில் ஒருவருடன் நெருங்கிப் பழக நீங்கள் ரொம்பவே ஆசைப்படலாம். அது தவறா? அதில் ஆபத்துகள் உள்ளனவா? ஸ்கூல் ஃபிரெண்ட்ஸுடன் எந்தளவு ‘க்ளோஸாக’ பழகலாம்? எங்கே முற்றுப்புள்ளி வைக்கலாம்?

உங்களுக்கு ஃபிரெண்ட்ஸ் தேவை

எல்லாருக்குமே ஃபிரெண்ட்ஸ் தேவை; ஆம், இனிய சந்தர்ப்பங்களில் சேர்ந்து சிரிப்பதற்கும், துயர சந்தர்ப்பங்களில் தோள் கொடுப்பதற்கும் நமக்கு ஃபிரெண்ட்ஸ் தேவை. இயேசுவுக்கும் ஃபிரெண்ட்ஸ் இருந்தார்கள், அவர்களோடு நேரம் செலவிடுவதை அவர் மிகவும் விரும்பினார். (யோவான் 15:15) பிற்பாடு, கழுமரத்தில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சமயத்தில், ‘அவர் [மிகவும்] நேசித்த சீஷன்,’ அதாவது அவருடைய நெருங்கிய சிநேகிதனான யோவான் அவர் அருகிலேயே இருந்தார். (யோவான் 19:25-27; NW; 21:20) இன்ப துன்பங்களில் உங்கள் கூடவே இருக்கும் அப்படிப்பட்ட சிநேகிதர்கள்தான்,​—⁠யோவானைப் போன்ற சிநேகிதர்கள்தான்​—⁠உங்களுக்குத் தேவை. பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”​—நீதிமொழிகள் 17:17.

இப்படிப்பட்ட ஒரு சிநேகிதர் உங்கள் ஸ்கூலில், ஏன் உங்கள் வகுப்பிலேயே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம்; எடுத்த எடுப்பிலேயே அவரோடு நீங்கள் நன்றாக ஒட்டிக்கொண்டுவிடலாம். உங்கள் இருவருக்கும் ஒரேமாதிரியான விருப்புவெறுப்புகள் இருக்கலாம், ஒருவரோடொருவர் பேசி மகிழலாம். ஆனால், அவர் சக விசுவாசியாக இல்லாதிருக்கலாம்; என்றாலும், அவரோடு ஃப்ரெண்ட்ஷிப் வைத்துக்கொள்வது ‘கெட்ட சகவாசம்’ கிடையாது என உங்களுக்குத் தோன்றலாம். (1 கொரிந்தியர் 15:33, NW) ஆம், பைபிள் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சில இளைஞர்கள் மிகவும் பண்புடன் நடந்துகொள்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (ரோமர் 2:14, 15) இருந்தாலும், நீங்கள் அவர்களுடைய ‘க்ளோஸ்’ ஃபிரெண்ட் ஆக வேண்டுமா?

கிறிஸ்தவர்கள் ஒதுங்கி வாழ்பவர்கள் அல்ல

மெய்க் கிறிஸ்தவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்த ஆட்களைப் புறக்கணிப்பதில்லை என்பது நன்கு தெரிந்த விஷயம். ஆம், ‘சகல தேசத்தாரையும் சீஷராக்க’ வேண்டுமென்ற தங்கள் நியமிப்பை நிறைவேற்றுவதற்காக, எல்லா இன, மத, பண்பாட்டைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் சந்தித்து அவர்கள் பேசுகிறார்கள். (மத்தேயு 28:19, NW) தங்கள் அக்கம்பக்கத்தாரையும், சக பணியாளர்களையும், தங்கள் ஸ்கூல் பிள்ளைகளையும் விட்டு அவர்கள் ஒதுங்கி ஒதுங்கிப் போவதில்லை. மாறாக, அவர்கள்மீது ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார்கள்.

இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். ‘எல்லா விதமான மக்களுடனும்’​—⁠அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும்​—⁠எப்படிப் பேச வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும், அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, “சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்” என்று அவர் சொன்னார்.​—1 கொரிந்தியர் 9:22, 23; NW.

பவுலின் முன்மாதிரியை நீங்கள் பின்பற்றலாம். உங்கள் சகாக்களிடம் சிநேகமாகப் பழகுங்கள். அவர்களோடு கனிவுடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய ஸ்கூல் பிள்ளைகளில் சிலர், பைபிளிலுள்ள எதிர்கால நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒருவேளை ஆர்வமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஜானட் என்ற கிறிஸ்தவப் பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அவளும் அவளுடைய வகுப்பு மாணவர்களும் தங்கள் சக மாணவ மாணவியரைப் பற்றிச் சுருக்கமாக ஓரிரு குறிப்புகள் எழுத வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்; அதன்பின், தங்களைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளை அவரவர் படித்துப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். ஜானட்டைப் பற்றிய ஒரு குறிப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “எப்போதுமே நீ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய். ஏன் என்று தயவுசெய்து எங்களுக்குச் சொல்.”

இந்த அனுபவம் காண்பிக்கிறபடி, உங்கள் வகுப்பு மாணவர்களில் சிலர் உங்களுடைய மத நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுடன் சிநேகபாவத்துடன் பழகுவது நிச்சயம் உங்களுக்கு அனுகூலம்தான். ஆம், உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி விளக்க கட்டாயம் அது உங்களுக்கு வாய்ப்பளிக்கும். எனவே, அவர்களது கருத்துகளைச் சொல்ல அனுமதியுங்கள், அவர்கள் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேளுங்கள். இப்படி உங்கள் சகாக்களோடு பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வது, பிற்காலத்தில், வேலை செய்யுமிடத்தில் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்ப்பட வேண்டியிருக்கும்போது உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். ஸ்கூலிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, ‘இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்பதற்கு’ சிநேகப்பான்மையான நடத்தை உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.​—தீத்து 2:9.

‘பொருத்தமற்ற’ நட்புகள்

நிச்சயமாகவே, வகுப்பிலுள்ள ஒருவரோடு இனிமையாக பழகுவதற்கும் நெருக்கமாக பழகுவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “அவிசுவாசிகளுடன் பொருத்தமற்று பிணைக்கப்படாதிருங்கள்.” (2 கொரிந்தியர் 6:14, NW) ஒரு நபருடைய ‘க்ளோஸ்’ ஃபிரெண்டாக நீங்கள் ஆக வேண்டுமானால், உங்களுக்கிருக்கிற அதே நெறிமுறைகளும் இலட்சியங்களும் அந்த நபருக்கு இருக்க வேண்டும். உங்களுடைய பைபிள் நம்பிக்கைகளையும் தராதரங்களையும் பின்பற்றாத ஒரு நபரோடு உங்களால் அப்படி ‘க்ளோஸாக’ இருக்கவே முடியாது. அவிசுவாசியான வகுப்பு மாணவனோடு/மாணவியோடு பொருத்தமற்று பிணைக்கப்பட்டீர்கள் என்றால், ஒன்று, தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபட தூண்டப்படுவீர்கள், இல்லையென்றால் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துக்கொள்வீர்கள்.

அது எவ்வளவு உண்மை என்பதை கசப்பான ஓர் அனுபவத்தின் மூலம் மரீயா கற்றுக்கொண்டாள். எல்லாரோடும் கலகலப்பாக பழகும் சுபாவம் இருந்ததால், அவளுக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருந்தார்கள், அதேசமயம் எந்தளவு அவர்களோடு நெருங்கிப் பழகுவது என்பதைத் தீர்மானிப்பது அவளுக்குச் சிரமமாகவும் இருந்தது. “கேர்ல்ஸ், பாய்ஸ் எல்லாருக்குமே என்னைப் பிடித்திருந்ததை நினைத்து நான் பெருமைப்பட்டேன்” என ஒத்துக்கொள்கிறாள் அவள். “இதனால், இந்த உலகமென்ற புதைமணலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்துகொண்டே போனேன்” எனவும் சொல்கிறாள்.

உங்களுடைய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஒருவருடன் அளவுக்கு மீறி நெருங்கிப் பழகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது மரீயாவைப் போல உங்களுக்கும் சிரமமாக இருக்கலாம். என்றாலும், யாருடன் அளவாகப் பழகுவது, யாருடன் நெருக்கமாகப் பழகுவது என்பதைத் தீர்மானிக்க தெளிவான வரையறைகளை வகுத்துக்கொள்ளுங்கள், இதன் மூலம் உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய வரையறைகளை நீங்கள் எப்படி வகுத்துக்கொள்ளலாம்?

நல்ல ஃபிரெண்ட்ஸை தேர்ந்தெடுப்பது எப்படி

முன்னர் குறிப்பிட்டபடி, இயேசு பூமியிலிருந்தபோது அநேகரை ‘க்ளோஸ்’ ஃபிரெண்ட்ஸாக ஆக்கிக்கொண்டார். எப்படி? கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்ததன் மூலமும், ஆன்மீகக் காரியங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசியதன் மூலமும் ஆகும். அவருடைய போதனைகளையும் வாழ்க்கைப் பாணியையும் ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய ‘க்ளோஸ்’ ஃபிரெண்ட்ஸ் ஆனார்கள். (யோவான் 15:14) உதாரணத்திற்கு, அவர் கொடுத்த பேச்சைக் கேட்ட பிறகு, நான்கு பேர் ரொம்பவுமே மனம் நெகிழ்ந்துபோனதால், “எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.” அந்த நால்வரும், அதாவது பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் ‘க்ளோஸ்’ ஃபிரெண்ட்ஸாக ஆனார்கள்.​—லூக்கா 5:1-11; மத்தேயு 4:18-22.

இயேசு தம்முடைய நம்பிக்கைகளை எக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதை தமது சொல்லிலும் செயலிலும் தெளிவாகக் காட்டினார். அவரையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் அவரைவிட்டு விலகிப்போனார்கள், இயேசுவும் அவர்களைத் தடுக்கவில்லை.​—யோவான் 6:60-66.

உதாரணத்திற்கு, ஒரு வாலிபனின் நல்மனதைக் கண்டு இயேசு மிகவும் நெகிழ்ந்துபோனார். பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்தார்.’ ஆனால் தம்முடைய சிநேகிதர்களிடம் இயேசு என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டதும், அவன் அங்கிருந்து “போய்விட்டான்.” அந்த வாலிபன் நல்லவனாக இருந்திருக்க வேண்டும், அதனால்தான் இயேசு ‘அவனிடத்தில் அன்புகூர்ந்திருந்தார்.’ ஆனாலும், தம்முடைய சிநேகிதர்களிடமிருந்து இயேசு இன்னும் அதிகத்தை எதிர்பார்த்தார். (மாற்கு 10:17-22; மத்தேயு 19:16-22) உங்களைப் பற்றி என்ன?

உங்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனிடமோ மாணவியிடமோ நீங்கள் நன்றாக ஒட்டிக்கொள்ளலாம். ஆனால், உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள். ‘இவன்(ள்) இயேசுவின் கட்டளைகளின்படி நடக்க விரும்புகிறானா(ளா)? யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள அவன்(ள்) விரும்புகிறானா(ளா)?’ (மத்தேயு 4:10) உங்கள் வகுப்பு மாணவ மாணவியரிடம் நீங்கள் பேசி வருகையிலும், பைபிளின் தராதரத்திற்கிசைய நீங்கள் வாழ்ந்து வருகையிலும், இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும்.

உங்கள் வகுப்பு மாணவர்களுடன் நீங்கள் இனிமையாகப் பழகுவது நல்லது, இயேசுவும்கூட எல்லாவிதமான மக்களுடனும் அப்படித்தான் பழகினார். ஆனால் தமது பரலோகப் பிதாவான யெகோவாவை நேசித்தவர்களோடுதான் அவர் நெருங்கிப் பழகினார். நீங்களும் அப்படியே செய்யலாம். உங்கள் ஸ்கூலில் “நல்நடக்கையுள்ளவர்களாய்” இருங்கள், மற்றவர்களிடம் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பக்குவமாகப் பேசுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மிகச் சிறந்த ஃபிரெண்ட்ஸையே தேர்ந்தெடுக்கத் தீர்மானமாயிருங்கள்.​—1 பேதுரு 2:12.

சிந்திப்பதற்கு

◼ ஸ்கூல் முடிந்த பிறகு, யெகோவாவின் சாட்சியாக இல்லாத வகுப்பு மாணவனோடு அல்லது மாணவியோடு பொழுதைக் கழிப்பதில் என்ன ஆபத்துகள் உள்ளன? அப்படிச் செய்வது ஞானமாகுமா?

◼ இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு, வகுப்பிலுள்ள ஒருவரோடு நீங்கள் மிக நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால் நீங்கள் என்ன செய்யலாம்?

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி?

யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஆங்கில வீடியோவில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் நேரடியான பேட்டிகள் உள்ளன. இது 36 மொழிகளில் கிடைக்கிறது.

[பக்கம் 18-ன் படம்]

உங்கள் நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்கள் வகுப்பு மாணவர்கள் சிலர் ஆர்வமாக இருக்கலாம்