Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள்மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டேன்

கடவுள்மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டேன்

கடவுள்மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டேன்

எலா டோம் சொன்னபடி

நாங்கள் குடும்பமாக தென் எஸ்டோனியாவிலுள்ள ஓடெப்பா என்னும் சிறிய நகரத்திற்கு அருகில் வசித்து வந்தோம். ரஷ்யாவின் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது தென் எஸ்டோனியா. அக்டோபர் 1944-⁠ல் நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து சில மாதங்களே ஆகியிருந்தபோது இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. ஜெர்மானியர்களை ரஷ்யப் படை எஸ்டோனியா வழியாகத் துரத்தியடித்தபோது நாங்களும் அக்கம்பக்கத்தாரும்​—⁠கிட்டத்தட்ட 20 பேர்​—⁠எங்கள் ஆடுமாடுகளுடன் காட்டுக்குள்ளே ஒளிந்துகொண்டோம்.

இரண்டு மாதங்களுக்கு, எங்களைச் சுற்றிலும் ஒரே குண்டுமயம்தான். நாங்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு மிக அருகில் போர் நடந்துகொண்டிருந்ததால் போர்க்களத்தின் நடுவே மாட்டிக்கொண்டதுபோல் இருந்தது. அங்கே நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்திருக்கும்போது நான் பைபிளிலிருந்து, அதுவும் முக்கியமாக புலம்பல் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசிப்பேன். வாழ்க்கையில் முதல் முறையாக பைபிளை வாசித்தது அப்போதுதான். ஒருநாள் உயரமான ஒரு மலைமீது ஏறி, முழங்காற்படியிட்டு, “கடவுளே, சத்தியமாகச் சொல்கிறேன், போர் முடிந்த பிறகு நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் சர்ச்சுக்குப் போவேன்” என்று ஜெபித்தேன்.

சீக்கிரத்திலேயே போர் மேற்கத்திய நாடுகளில் தீவிரமடைந்தது. இறுதியில், மே 1945-⁠ல் ஜெர்மனி சரணடைந்தபோது இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், ஏற்கெனவே நான் கடவுளுக்குக் கொடுத்திருந்த வாக்கின்படி வாரம் தவறாமல் சர்ச்சுக்குப் போக ஆரம்பித்திருந்தேன். ஆனால் ஒருசில வயதான பெண்மணிகள் மட்டுமே அங்கு இருந்ததால் எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு யாராவது திடீரென்று வந்துவிட்டால் பைபிளை உடனே டேபிளுக்கு அடியில் மறைத்துவிடுவேன்.

சீக்கிரத்தில் நான் வசித்துவந்த இடத்திலேயே ஒரு ஸ்கூலில் எனக்கு டீச்சர் வேலை கிடைத்தது. அந்தச் சமயத்திற்குள்ளாக கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது, எனவே அநேகர் நாத்திகர்களாக ஆகிவிட்டிருந்தார்கள். ஆனால், நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர மறுத்துவிட்டேன். அதற்கு பதிலாக, சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டினேன். உதாரணத்திற்கு, பிள்ளைகளுக்கான நாட்டுப்புற நடனத்தை ஒழுங்கமைக்கும் வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டேன்.

சாட்சிகளைச் சந்தித்தல்

பிள்ளைகள், மேடை ஏறி நடனமாடுவதற்கு ஏற்ற உடைகள் தேவைப்பட்டன. அதனால், ஏப்ரல் 1945-⁠ல், எமிலி ஸன்னாமிஸ் என்ற திறமையான டெய்லரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்ற விஷயம் எனக்குத் தெரியாது. “இன்றைய உலக நிலைமையைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று பேச்சுவாக்கில் அவர் என்னிடம் கேட்டார். அப்போது அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில், சமாதான மாநாடு நடந்துகொண்டிருந்ததால், “சீக்கிரத்தில் இந்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வரும். அதற்காகத்தான் இந்த சமாதான மாநாடே நடக்கிறது என்று முழுக்க முழுக்க நம்புகிறேன்” என்று சொன்னேன்.

இந்தச் சமாதான மாநாடு நிரந்தரமான நன்மைகளைக் கொண்டுவர முடியாது என்றார் எமிலி. அதற்கான காரணத்தையும் பைபிளிலிருந்து எடுத்துக்காட்டினார். இந்தச் சாந்தமான பெண்மணியின் விளக்கத்தை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இருந்தாலும், நான் அங்கிருந்து கிளம்பும் முன் என்னிடம், “ஆதாம் ஏவாள் எங்கே வாழ வேண்டுமென கடவுள் விரும்பினார் என்று உனக்குத் தெரியுமா?” என கேட்டார். எனக்கு பதில் தெரியவில்லை. அதனால், “அப்பாவிடம் கேட்டுப்பார்” என்றார்.

வீட்டுக்குப் போனதும் அப்பாவிடம் அதைக் கேட்டேன். அவருக்கும் பதில் தெரியவில்லை. அதனால், பைபிளைப் படித்து மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை, கடவுள் நம்பிக்கை இருந்தாலே போதும் என்று சொல்லி சமாளித்துவிட்டார். தைத்த துணிகளை வாங்கிவருவதற்காக நான் மறுபடியும் எமிலி ஸன்னாமிஸின் கடைக்குச் சென்றேன். அந்தக் கேள்விக்கு, அப்பாவாலும் பதில் சொல்ல முடியவில்லை என்று சொன்னதும், அவரும் அவரது அக்காவுமே எனக்கு பதிலைச் சொன்னார்கள். ஆதாம் ஏவாளுக்கு கடவுள் ஒரு பூங்காவனத்தை வீடாக கொடுத்திருந்தார், அதைப் பராமரித்து என்றைக்கும் அங்கே சந்தோஷமாக குடியிருக்கச் சொன்னார். அதோடு, பிள்ளைகளைப் பெற்று முழு பூமியையும் ஒரு பூங்காவனமாக மாற்றும்படி கட்டளையிட்டிருந்தார். இவை எல்லாவற்றையுமே அவர்கள் பைபிளிலிருந்தே விளக்கியது என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது!​—ஆதியாகமம் 1:28; 2:8, 9, 15; சங்கீதம் 37:29; ஏசாயா 45:18; வெளிப்படுத்துதல் 21:3, 4.

நான் சென்ற முதல் சபை கூட்டம்

அந்த வருடத்தின் கோடையில் டீச்சர்களுக்கான மூன்று மாத பயிற்சி வகுப்பு டார்டூ நகரில் நடக்கவிருந்தது. நானும் அதில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் அந்நகரில் வசித்த ஒரு யெகோவாவின் சாட்சியின் விலாசத்தையும், படைப்பு புத்தகத்தையும் எமிலி எனக்குத் தந்தார். அடிப்படை பைபிள் சத்தியங்களை அது தெளிவாக விளக்கியிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 1945, ஆகஸ்ட் 4 அன்று எமிலி கொடுத்த விலாசத்திற்குச் சென்றேன்.

கதவைத் தட்டினேன். யாருமே திறக்கவில்லை. திரும்பவும் பலமாக தட்டினேன், சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் வந்து விட்டார். 56, சால்மி தெரு என்ற விலாசத்தில் சென்று பார்க்கும்படி சொன்னார். அங்கே சென்றதும் கடையில் உருளைக் கிழங்குகளை உரித்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம், “இங்கு மதக் கூட்டம் ஏதாவது நடக்கிறதா?” என்று கேட்டேன். அவரோ, ‘இங்கிருந்து போய்விடு, உன்னை யாரும் கூப்பிடவில்லை’ என்று கத்தினார். ஆனால் நான் விடாப்பிடியாக இருந்ததால், மாடியில் நடந்த பைபிள் கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார். மதிய இடைவேளையின்போது வீட்டுக்குக் கிளம்பத் தயாரானேன். ஆனால், அங்கிருந்தவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகும்படி வற்புறுத்தினார்கள்.

அந்த இடைவேளையின்போது சுற்றுமுற்றும் பார்த்தேன். ரொம்பவே வெளிறிப்போயிருந்த, ஒல்லியான, இரண்டு வாலிபர்கள் ஜன்னலருகே உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் போரின்போது கைது செய்யப்படாமல் இருப்பதற்காக ஒரு வருடத்திற்குள் பல்வேறு நிலத்தடிப் புதர்களுக்குள் தலைமறைவாக இருந்தவர்கள் என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன். a மதிய நிகழ்ச்சியின்போது, “அர்மகெதோன்” என்ற வார்த்தையை ஃபிரட்ரிக் ஆல்ட்பீர் தன்னுடைய பேச்சில் பயன்படுத்தினார். அந்த வார்த்தையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதே இல்லை. பிற்பாடு அவரிடம் போய் அதைப் பற்றி விசாரித்தேன். அவர் அந்த வார்த்தையை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டியதும், எனக்கு ஒரே ஆச்சரியம். (வெளிப்படுத்துதல் 16:16) அர்மகெதோன் என்ற வார்த்தையை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை என்று சொன்னபோது அவரும் ஆச்சரியப்பட்டார்.

நன்கு பழக்கமான, நம்பகமான சாட்சிகள் மட்டும்தான் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும் என்பதை மெதுவாக புரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல, போருக்கு பின் நடத்தப்பட்ட முதல் கூட்டமே அதுதானாம்! அப்போதுமுதல் கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். (நீதிமொழிகள் 3:5, 6) ஒரு வருடத்திற்குப் பிறகு, அதாவது, ஆகஸ்ட் 1946-⁠ல் என்னுடைய 20-வது வயதில், உண்மை கடவுளாகிய யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றேன்.

குடும்பத்தில் எதிர்ப்பு

ஸ்கூல்களில் நாத்திகக் கொள்கையை கற்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியது. இது, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சிக்கு சோதனையாக இருந்தது. டீச்சர் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போக நினைத்தேன். இதைப் பற்றி அம்மாவிடம் சொன்னபோது அவர் அடித்த அடியில் என்னுடைய தலைமுடியில் கொஞ்சம் அவர் கையோடு வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி, வீட்டை விட்டுப் போய்விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால், அப்பா எனக்கு கைகொடுக்க முன்வந்தார். அதுவரை கொஞ்ச நாட்களுக்கு பொறுமையாக இருக்கும்படி கூறினார்.

என் தம்பி ஆன்ட்ஸும் அம்மாவுடன் சேர்ந்துகொண்டு என்னை எதிர்க்க ஆரம்பித்தான். திடீரென ஒருநாள் என்னிடம் பைபிள் பிரசுரங்கள் சிலவற்றை வாங்கிப் படித்தான். அது அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இதையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு டென்ஷன் தலைக்கேறிவிட்டது. ஆன்ட்ஸ் ஸ்கூலிலும் கடவுளைப் பற்றிப் பேசத் தொடங்கினான். ஆனால், எதிர்ப்பு கிளம்பியபோது சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்வதை நிறுத்திக்கொண்டான். அதன்பிறகு சீக்கிரத்திலேயே, ஒருநாள் அவன் தண்ணீரில் எகிறிக்குதித்து டைவ் அடித்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. கைகால் செயலிழந்துபோய் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தான். ஆனால், புத்திமட்டும் தெளிவாக இருந்தது. “யெகோவா என்னை மன்னிப்பாரா?” என்று என்னிடம் கேட்டான். “மன்னிப்பார்” என்றேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஆன்ட்ஸ் இறந்துவிட்டான். அப்போது அவனுக்கு வயது 17 தான்.

செப்டம்பர் 1947-⁠ல் டீச்சர் வேலையை விட்டுவிட்டேன். அம்மாவின் கோபம் உச்சத்தை எட்டியது. வீட்டிலிருந்து என் துணிமணிகளையெல்லாம் எடுத்து வெளியே எறிந்துவிட்டார், வேறுவழியின்றி, வீட்டைவிட்டு வெளியேறினேன். ஸன்னாமிஸ் சகோதரிகள் எனக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். யெகோவா ஒருபோதும் தம் ஊழியர்களைக் கைவிடமாட்டார் என்று அவர்கள் அடிக்கடி சொன்னது எனக்கு உற்சாக டானிக்காக இருந்தது.

போருக்குப் பிறகு எஸ்டோனியாவில் சோதனைகள்

ஸன்னாமிஸ் சகோதரிகள் பண்ணைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு துணிகளை தைத்து கொடுத்தார்கள். அந்தத் தொழிலில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். அந்தக் குடும்பங்களுடன் பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு அடிக்கடி சந்தர்ப்பம் கிடைத்தது. என் வாழ்க்கையில் சந்தோஷம் நிறைந்த காலம் அது. ஏனென்றால், நான் தையல் வேலையை மட்டுமல்ல, கிறிஸ்தவ ஊழியத்தையும் திறம்பட செய்யக் கற்றுக்கொண்டேன். தையல் வேலையோடுகூட கணக்கு டீச்சராக வேலை செய்யவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்தோஷம் தொடரவில்லை. காரணம், 1948-⁠ல் அதிகாரிகள் சாட்சிகளைக் கைதுசெய்யத் தொடங்கினர்.

அதற்கடுத்த வருஷம் அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் நான் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதிகாரிகள் என்னைக் கைது செய்வதற்காக ஸன்னாமிஸ் சகோதரிகளின் வீட்டுக்குப் போயிருப்பதாக செய்தி கிடைத்தது. உடனே, சகோதரர் ஹூகோ ஸூஸியின் பண்ணையில் ஒளிந்துகொள்வதற்காக ஓடினேன், அவரும் அப்போதுதான் கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்தது. என்னிடம் வாடிக்கையாக துணி தைக்கும் ஒரு பெண் தன் வீட்டில் தங்கிக் கொள்ளும்படி கூறினாள். பிறகு நான் ஒவ்வொரு பண்ணையாக மாறிமாறிப் போனேன். தையல் வேலை செய்துகொண்டே பிரசங்க வேலையையும் செய்தேன்.

டார்டூ நகரில் லின்டா மெட்டிக் என்ற வைராக்கியமான சாட்சி இருந்தார். வயதில் என்னைவிட சில வருடங்கள் மட்டுமே மூத்தவர். அவருடைய வீட்டில் நான் இருப்பதை சோவியத் நாட்டு பாதுகாப்புக் குழு (KGB) எப்படியோ அந்த வருட குளிர்காலத்தில் கண்டுபிடித்துவிட்டது. என்னை கைது செய்து விசாரித்தார்கள். நான் போட்டிருந்த துணிமணியைக் கழற்றும்படி வற்புறுத்தினார்கள். இளம் போலீஸ் அதிகாரிகள் வைத்த கண் வாங்காமல் என்னை ஏறஇறங்கப் பார்த்தபோது அவமானத்தால் கூனிக்குறுகினேன். ஆனாலும், யெகோவாவிடம் ஜெபம் செய்தபிறகு மன நிம்மதியும் சமாதானமும் கிடைத்தது.

பிறகு, படுக்கக்கூட இடமில்லாத ஒரு சிறையில் என்னை அடைத்தார்கள். விசாரணைக்கு மட்டுமே வெளியேவர முடிந்தது. அந்த சமயத்தில் அதிகாரிகள் என்னிடம், “கடவுளே இல்லையென நீ சொல்லத் தேவையில்லை. பைத்தியகாரத்தனமா பிரசங்கிப்பதை மட்டும் நிறுத்திவிடு! உன் எதிர்காலம் நல்லா இருக்கும்” என்று ஆசைகாட்டுவார்கள். பிறகு, “நீ வாழ ஆசைப்படுகிறாயா? அல்லது சைபீரியாவில் உன் கடவுளோடு சேர்ந்து சாக ஆசைப்படுகிறாயா?” என்று மிரட்டுவார்கள்.

மூன்று நாட்கள் என்னை திரும்பத் திரும்ப விசாரணை செய்தார்கள். அந்த மூன்று நாட்களும் என்னைத் தூங்கவே விடவில்லை. பைபிள் நியமங்களைக் தியானிப்பதன் மூலம் சகித்திருப்பதற்கான பலத்தைப் பெற்றேன். கடைசியாக, ஓர் அதிகாரி என்னை ஓர் ஆவணத்தில் கையெழுத்து போடும்படி சொன்னார். நான் பிரசங்கிப்பதை நிறுத்திக்கொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்தது. “இதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தேன். நான் விடுதலையாகி கடவுளுடைய அங்கீகாரத்தை இழப்பதைவிட, சிறையில் இருந்துகொண்டு கடவுளோடு நல்ல உறவை வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அந்த அதிகாரி, “அறிவுகெட்டவளே! உங்கள் எல்லாரையும் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்போகிறோம்!” என்று கத்தினார்.

எதிர்பாராத விடுதலை

ஆனால், நடுராத்திரியில் என்னை கூப்பிட்டு, என்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து போகும்படி அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாயிருந்தது. நான் போனாலும் யாராவது என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள் என்பது எனக்குத் தெரியும், அதனால், நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களின் வீட்டிற்குப் போகவில்லை, ஏனென்றால், அவர்களைக் காட்டிக் கொடுத்ததுபோல் ஆகிவிடுமே! நான் தெருவில் நடந்து சென்றபோது நான் நினைத்தபடியே மூன்று பேர் என்னைப் பின்தொடர்ந்தார்கள். என்னை வழிநடத்தும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்துகொண்டே இருட்டாக இருந்த ஒரு தெரு பக்கமாகத் திரும்பி சட்டென்று ஒரு தோட்டத்திற்குள் ஓடினேன். தரையில் படுத்துக்கொண்டு இலைகளால் என்னை மறைத்தேன். சர்க் சர்க் என்று ஆட்கள் நடக்கிற சத்தம் காதில் விழுந்தது. பளிச் பளிச்சென்று டார்ச்லைட் வெளிச்சமும் கண்ணில் பட்டது.

பல மணிநேரங்கள் அங்கேயே பதுங்கியிருந்ததால், குளிரில் விறைத்துப்போய்விட்டேன். பிறகு, எழுந்து நடக்க ஆரம்பித்தேன். கல்பதித்த தெருக்களாய் இருந்தபடியால் சத்தம் போடாமல் நடக்க ஷூக்களை கையில் எடுத்துக்கொண்டேன். நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் கால்வாய் வழியாகவே நடந்து ஊரைவிட்டு வெளியேறினேன், கார்கள் அந்தப் பக்கமாக வந்தபோது தரையோடு தரையாக படுத்துக்கொண்டேன். விடியற்காலை ஐந்து மணி வாக்கில் யூரி, மீட்டா டோமெல் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன். அவர்களுடைய வீடு டார்டூவிற்குப் பக்கத்தில்தான் இருந்தது.

மீட்டா உடனடியாக எனக்கு ‘செளனா’ என்றழைக்கப்படும் ஒருவகை குளியலுக்கு ஏற்பாடு செய்தார். சுடச்சுட இருந்த அந்தக் குளியல் சுகமாக இருந்தது! அடுத்த நாள் மீட்டா, டார்டூவிற்கு சென்று லின்டா மெட்டிக்கைச் சந்தித்தார். லின்டா என்னிடம், “வாங்க, இப்பொழுதே நாம் பிரசங்க வேலையை ஆரம்பித்து எஸ்டோனியா முழுவதும் நற்செய்தியைப் பரப்புவோம்” என்று உற்சாகப்படுத்தினார். என் தோற்றத்தை கொஞ்சம் மாற்றினேன்: புது ஹேர் ஸ்டைல், கொஞ்சம் மேக் அப், ஒரு கண்ணாடி. இந்த மாறு வேஷத்துடன் பிரசங்கிக்க கிளம்பினேன். அதற்குப் பின் சிலமாதங்களுக்கு சைக்கிளில் வெகுதூரம் பயணித்து பிரசங்கித்தோம். நாங்கள் சென்ற வழியில் இருந்த பண்ணைகளில் குடியிருந்த சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தினோம்.

சாட்சிகள், ஜூலை 24, 1950-⁠ல் ஒரு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தார்கள். ஓடெப்பாவிற்கு அருகே வசித்த ஒரு பைபிள் மாணாக்கரின் வைக்கோல் களஞ்சியத்தில் அந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இந்த விஷயம் KGB-⁠க்குத் தெரிந்துவிட்டதென்று நாங்கள் கேள்விப்பட்டோம். உடனே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துகொண்டிருந்த அநேக சாட்சிகளை வழியிலேயே சந்தித்து எச்சரித்தோம். அடுத்த நாளே மாநாடு வேறொரு இடத்தில் நடத்தப்பட்டது. அதற்கு கிட்டத்தட்ட 115 பேர் வந்திருந்தார்கள். மாநாடு முடிந்தபின், அவர்கள் ஒவ்வொருவரும் சந்தோஷத்துடனும், எந்த சோதனை வந்தாலும் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு அதிக உறுதியுடனும் வீடு திரும்பினார்கள். b

பிறகு நானும் லின்டாவும் பழையபடி பிரசங்கிப்பதிலும் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதிலும் இறங்கினோம். அந்த வருடத்தின் பிற்பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை செய்தபோது எங்களோடுகூட வேலைசெய்த ஆட்களுடன் ராஜ்ய செய்தியைப் பகிர்ந்துகொண்டோம். ஒரு பண்ணை முதலாளி தன்னுடைய வேலையை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நாங்கள் பேசுவதைக் கேட்ட பிறகு, “இந்த மாதிரி செய்தியைக் கேட்பதே அபூர்வம்தான்!” என்று ஆச்சரியப்பட்டார்.

நானும் லின்டாவும் டார்டூவிற்குத் திரும்பினோம். அங்கிருந்த அநேக சாட்சிகள்போக லின்டாவின் அம்மாவும்கூட கைது செய்யப்பட்டிருந்தது அங்கு போனபிறகுதான் தெரியவந்தது. எங்கள் நண்பர்கள் நிறைய பேர் ஏன், ஸன்னாமிஸ் சகோதரிகள்கூட கைது செய்யப்பட்டிருந்தார்கள். எங்களையும் KGB தேடிக்கொண்டு இருந்ததால் இரண்டு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு டார்டூவிற்கு வெளியே ஊழியத்தைத் தொடர்ந்தோம். ஆனால் 1950, டிசம்பர் 27-⁠ம் தேதி இரவன்று KGB ஆட்கள் நான் ஆல்மா வார்டஜா என்ற புதிய சாட்சி ஒருவரின் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டனர். வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் என் பாஸ்போர்ட்டைப் பார்த்துவிட்டு, “ஏய், எலா! உன்னை எங்கெல்லாம் தேடுவது!” என்று கர்ஜித்தார்.

சிறைக்கு, பிறகு சைபீரியாவிற்கு

நானும் ஆல்மாவும் அமைதியாக சில பொருள்களை பையில் அடுக்கினோம். பிறகு, சாப்பிட உட்கார்ந்தோம். KGB அதிகாரிகளுக்கோ பயங்கர ஆச்சரியம். “உங்கள் கண்களிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லையே, இப்படி ஆற அமர உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே” என்றார். “நாங்கள் புதிய வேலைக்குப் போகப் போகிறோம், இதற்குப்பிறகு எப்போது சாப்பிடுவோமோ தெரியாது” என்றோம். போகும்போது, ஒரு கம்பளியை எடுத்துச் சென்றேன், அதை வைத்துத்தான் பிறகு காலுறைகளையும் கையுறைகளையும் தைத்தேன். பல மாதங்கள் சிறையிலே இருந்த பிறகு, ஆகஸ்ட் 1951-⁠ல் என்னையும் எஸ்டோனியாவில் இருந்த மற்ற சாட்சிகளையும் நாடு கடத்தினார்கள். c

எங்களை எஸ்டோனியாவிலிருந்து ரஷ்யாவிலிருக்கும் லெனின்கிராட்டிற்கு (இப்போது செ. பீட்டர்ஸ்பர்க்) ரயிலில் அனுப்பினார்கள். அங்கிருந்து, வோர்குடா கோமியில் இருந்த மோசமான அடிமை முகாம்களுக்கு அனுப்பினார்கள். இது ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே இருக்கிறது. சைபீரியாவிற்கு எங்களோடு நாடுகடத்தப்பட்டவர்களில் மூன்றே மூன்று சாட்சிகள்தான் இருந்தார்கள். ஸ்கூலில் ரஷ்ய மொழி கற்றிருந்தேன். கைது செய்யப்பட்டதில் இருந்து அந்த மொழியிலேயே பேசிப் பழகினேன். அதனால், முகாம்களுக்கு வந்துசேர்ந்தபோது சரளமாக ரஷ்ய மொழியில் பேச முடிந்தது.

வோர்குடாவில் ஓர் இளம் உக்ரேனிய பெண்ணைச் சந்தித்தோம். அவள் போலந்தில் நாசி சித்திரவதை முகாமில் இருந்தபோது சாட்சியாக ஆகியிருந்தாள். 1945-⁠ல் அவளும் மற்ற 14 சாட்சிகளும் ஏற்றப்பட்டிருந்த கப்பலை ஜெர்மானியர் பால்டிக் கடலில் மூழ்கச்செய்ய திட்டமிட்டிருந்தார்கள். எனினும், கப்பல் பத்திரமாக டென்மார்க்கை அடைந்தது. பிற்பாடு, அவள் ரஷ்யா திரும்பியதும் பிரசங்க வேலை செய்ததால் மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்து வோர்குடாவிற்கு அனுப்பப்பட்டிருந்தாள். எங்களுக்கெல்லாம் அவள் ஓர் உற்சாக ஊற்றாக இருந்தாள்.

நாங்கள் இன்னும் இரண்டு பெண்களைச் சந்தித்தோம். அவர்கள் உக்ரேனிய பாஷையில், “யெகோவாவிற்கு சாட்சி சொல்கிறவர்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் நம்முடைய கிறிஸ்தவ சகோதரிகள் என்பதை உடனே புரிந்துகொண்டோம்! அவர்கள் எங்களுக்கு ஊக்கமூட்டி எங்கள் தேவைகளைக் கவனித்துக்கொண்டார்கள். இதைப் பார்த்து மற்றவர்கள், உங்களுக்கென்றே இங்கு ஒரு குடும்பம் காத்திருப்பதுபோல் தெரிகிறதே என்றார்கள்.

மார்டோவியன் முகாம்களுக்கு மாற்றப்பட்டேன்

1951 டிசம்பரில் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது தைராய்டு பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்தது. உடனே தென்மேற்கில் கிட்டத்தட்ட 1,500 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற மார்டோவியன் சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டேன். அது மாஸ்கோவின் தென்கிழக்கிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. அங்கிருந்த மகளிர் முகாம்களில் ஜெர்மன், ஹங்கேரியன், போலிஷ், மற்றும் உக்ரேனியன் மொழி பேசும் சாட்சிகளைச் சந்தித்தேன். எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த மைமூ என்ற அரசியல் கைதியையும் அங்கு சந்தித்தேன்.

மைமூ எஸ்டோனியா சிறையில் இருந்தபோது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஓர் அனுதாபமுள்ள சிறைக்காவலர் குழந்தையை மைமூவின் அம்மாவிடம் ஒப்படைத்தார். மார்டோவியன் சிறையில் நாங்கள் மைமூவுக்கு பைபிள் படிப்பு நடத்தினோம், கற்ற விஷயங்களை அவர் ஏற்றுக்கொண்டார். அந்த பைபிள் சத்தியங்களை தன் அம்மாவுக்கும் கடிதத்தில் எழுதினார். அவருடைய அம்மாவும் பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொண்டார், அதை மைமூவின் பிஞ்சு மகளான, காரினுக்கும் சொல்லிக்கொடுத்தார். ஆறு வருடங்களுக்குப் பிறகு மைமூ சிறையிலிருந்து விடுதலையாகி தன் மகளுடன் ஒன்றுசேர்ந்தார். காரின் வளர்ந்தபிறகு ஒரு சாட்சியைத் திருமணம் செய்துகொண்டாள். அவளும் அவள் கணவரும் கடந்த 11 வருடங்களாக எஸ்டோனியாவில் டல்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்துவருகிறார்கள்.

மார்டோவியன் சிறை வளாகத்திலுள்ள ஒரு முகாமை கூண்டு என்று சொல்வார்கள். ஏனென்றால், அதிலிருந்த சிறிய குடியிருப்புகள் பாதுகாப்பு மிகுந்தவை, அதோடு அவை நாலாபக்கமும் சுவர்களால் சூழப்பட்டிருந்தன. பிரசங்கித்த குற்றத்திற்காக என்னையும் மற்ற ஆறு சாட்சிகளையும் அந்தக் கூண்டுக்குள் அடைத்தார்கள். ஆனால் நாங்கள் அங்கு இருந்தபோதுகூட காவற்கோபுர பிரதிகளை மிகச் சிறியதாக எழுதி அருகிலிருந்த முகாம்களுக்கு இரகசியமாக கொடுத்தனுப்பினோம். எங்கள் இரகசிய முறைகளில் ஒன்று, சோப்புக் கட்டியில் பள்ளமுண்டாக்கி, அதில் காவற்கோபுர கட்டுரையை வைத்து மறுபடியும் அந்தப் பள்ளத்தை மூடிவிடுவது.

நான் மார்டோவியன் முகாம்களில் செலவிட்ட காலப்பகுதியில், பத்துக்கும் அதிகமானோர் கடவுளுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பதற்கு உதவினேன். இறுதியாக, மே 4, 1956-⁠ல், “உன்னை விடுதலை செய்கிறோம். இனிமேல் நீ, உன் யெகோவா கடவுளை தாராளமாக வணங்கலாம்” என்று என்னிடம் சொன்னார்கள். அந்த மாதமே, எஸ்டோனியாவிற்கு திரும்பிச் சென்றேன்.

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன்

எனக்கு வேலை இல்லை, கையில் சல்லிக்காசு இல்லை, ஒதுங்க வீடும் இல்லை. ஆனால் ஒருசில நாட்களுக்குள், பைபிளில் ஆர்வம் காட்டிய ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். அவரும் அவர் கணவரும் ஒரேவொரு அறையுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு நானும் அவர்களுடன் தங்க அவர் இடம்கொடுத்தார். பணத்தை கடன் வாங்கி கொஞ்சம் கம்பளி நூல் வாங்கினேன். அதில் ஸ்வெட்டர்கள் பின்னி கடையில் விற்றேன். பிறகு எனக்கு டார்டூவில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அடுத்த ஏழு வருடங்களுக்கு நான் அந்த ஆஸ்பத்திரியில் வெவ்வேறு வேலைகளைச் செய்தேன். இதற்கிடையில் லெம்பிட் டோம்கூட சைபீரியா சிறையிலிருந்து திரும்பினார். நவம்பர் 1957-⁠ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

KGB எப்போதுமே எங்கள்மீது ஒரு கண் வைத்திருந்தது, எங்களுடைய பிரசங்க வேலைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததால் அது எங்களை சதா தொந்தரவு செய்துகொண்டிருந்தது. இருந்தாலும், முடிந்தளவு சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டோம். அந்த காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை லெம்பிட் பிப்ரவரி 22, 1999 விழித்தெழு! இதழில் விவரித்திருக்கிறார். நாடுகடத்தப்பட்ட சாட்சிகள், 1950-களின் இறுதியிலும் 1960, 1970-களிலும் கொஞ்சம் கொஞ்சமாக வீடு திரும்பினார்கள். 1980-களின் இறுதியில் 700-க்கும் அதிகமான சாட்சிகள் எஸ்டோனியாவில் இருந்தார்கள். 1991-⁠ல் எங்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. அதுமுதல் எஸ்டோனியாவில் சாட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இன்று அங்கே 4,100 சாட்சிகள் இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எஸ்டோனியாவில் சாட்சிகள் முதன்முதலாக நடத்தின அந்த இரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டேன் அல்லவா? அதற்குப் பிறகு இப்போது 60 வருடங்கள் உருண்டோடி விட்டன. அன்றுமுதல் இன்றுவரை இதுவே என் தீர்மானம்: “கர்த்தரை நம்பி நன்மைசெய்.” இதைச் செய்வதன் மூலம், “இருதயத்தின் வேண்டுதல்களை” பெற்றுக்கொள்ளலாம் என்பதே வாழ்க்கையில் நான் கற்ற பாடம்.​—சங்கீதம் 37:3, 4.

[அடிக்குறிப்புகள்]

a இவர்களில் ஒருவர், லெம்பிட் டோம் என்பவர். பிப்ரவரி 22, 1999, விழித்தெழு! இதழில் இவரது வாழ்க்கை சரிதை வெளிவந்துள்ளது.

b இந்த மாநாட்டைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு பிப்ரவரி 22, 1999 விழித்தெழு! இதழைப் பார்க்கவும்.

c இருப்பினும், எஸ்டோனியாவில் இருந்த அநேக சாட்சிகள் ஏப்ரல் 1951-⁠ல் நாடு கடத்தப்பட்டார்கள். ஏப்ரல் 22, 2001 விழித்தெழு! இதழில் பக். 6-8-ஐப் பார்க்கவும். அதோடு, சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்​—⁠சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் என்ற படக்காட்சியையும் பார்க்கவும்.

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

“வாங்க, இப்பொழுதே நாம் பிரசங்க வேலையை ஆரம்பித்து எஸ்டோனியா முழுவதும் நற்செய்தியைப் பரப்புவோம்.” ​—⁠லின்டா மெட்டிக்

[பக்கம் 24-ன் படம்]

மார்டோவியன் சிறையில் மற்ற ஒன்பது சாட்சிகளுடன்

[பக்கம் 24-ன் படம்]

இன்று என் கணவர், லெம்பிட்டுடன்