Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா?

இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா?

பைபிளின் கருத்து

இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா?

மனிதனுக்கு நன்கு தெரிந்த மத சின்னங்களில் ஒன்றுதான் சிலுவை. இயேசுவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அந்தக் கருவியை புனிதமான சின்னமாகக் கருதி அதைக் கோடிக்கணக்கானோர் பூஜிக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்க எழுத்தாளரும் தொல்லியலாளருமான அடால்ப்-நப்பாலேயன் டிட்ரான் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்துவுக்குச் சமமாக இல்லையென்றாலும், அவரைப் போலவே சிலுவையும் வழிபாட்டிற்குரிய ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது; சொல்லப்போனால், மரத்தினால் செய்யப்பட்ட இந்தப் புனிதச் சின்னம் ஏறக்குறைய கடவுளுக்குச் சமமாகவே பூஜிக்கப்படுகிறது.”

சிலுவையை வைத்து ஜெபிப்பது கடவுளிடம் இன்னும் நெருங்கி வருவதுபோல் உணரச் செய்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். தீமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று நினைத்து, சிலர் அதை ஒரு தாயத்து போல பயன்படுத்துகிறார்கள். ஆனால், சிலுவையை கிறிஸ்தவர்கள் வழிபட வேண்டுமா? இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா? இதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?

சிலுவை எதை அடையாளப்படுத்துகிறது?

கிறிஸ்தவ சகாப்தத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே, தம்மூஸ் என்ற கருவள தெய்வத்தை வழிபடுவதற்கு, பூர்வ பாபிலோனியர் சிலுவைகளைச் சின்னங்களாகப் பயன்படுத்தினார்கள். சிலுவையைப் பயன்படுத்துவது எகிப்து, இந்தியா, சிரியா, சீனா போன்ற நாடுகளுக்கும் பரவியது. நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பொய்க் கடவுளான தம்மூஸை பூஜிக்கும் பழக்கங்களோடு யெகோவாவின் வணக்கத்தை இஸ்ரவேலர் கலந்துவிட்டார்கள். இத்தகைய வழிபாட்டை ‘அருவருப்பான காரியம்’ என பைபிள் குறிப்பிடுகிறது.​—எசேக்கியேல் 8:13, 14.

இயேசுவைக் கொலை செய்ய உபயோகப்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் குறிப்பிடுவதற்கு மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் எழுதிய சுவிசேஷ பதிவுகள் ஸ்டாரஸ் என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. (மத்தேயு 27:40; மாற்கு 15:30; லூக்கா 23:26) ஸ்டாரஸ் என்ற வார்த்தை செங்குத்தான ஒரு கம்பத்தையோ கழுமரத்தையோ ஸ்தம்பத்தையோ குறிக்கிறது. ஜே. டி. பார்ஸன்ஸ் எழுதிய கிறிஸ்தவமற்ற சிலுவை என்ற ஆங்கில நூல் இவ்வாறு கூறுகிறது: “இயேசுவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்டாரஸ் என்பது சாதாரண ஸ்டாரஸைவிட வேறு ஏதோவொன்றை குறிக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கு, பூர்வ கிரேக்கில் பல புத்தகங்கள் அடங்கிய புதிய ஏற்பாடு எதிலும் ஒரு வரிகூட கிடையாது, மறைமுகமான அத்தாட்சியும்கூட இல்லை. அது ஒரு கம்பம் அல்ல, ஆனால் சிலுவை என்ற வடிவில் இரண்டு கம்பங்கள் குறுக்காக ஆணி அடிக்கப்பட்டது என்பதற்கும் நிச்சயமாகவே எந்த அத்தாட்சியும் இல்லை.”

அப்போஸ்தலர் 5:30-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி ஸைலோன் என்ற வார்த்தையை அப்போஸ்தலன் பேதுரு பயன்படுத்தினார்; ‘மரம்’ என்பது இதன் அர்த்தம், இது ஸ்டாரஸ் என்ற வார்த்தையின் அதே அர்த்தத்தைத் தரும் ஒரு பதமாகும்; இது, இரண்டு குறுக்கு கம்பங்களை அல்ல, ஆனால் செங்குத்தான ஒரு சாதாரண மரக்கட்டையை அல்லது மரத்தைக் குறிக்கிறது. இயேசுவின் மரணத்திற்கு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்பே, இரண்டு குறுக்கு கம்பங்களாலான சிலுவையில் இயேசு கொலை செய்யப்பட்டார் என்ற கருத்தைப் பொய் கிறிஸ்தவர்கள் பரப்பினார்கள். என்றாலும், இந்தக் கருத்து பாரம்பரியத்தின் அடிப்படையிலானது, அதோடு ஸ்டாரஸ் என்ற கிரேக்க வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். ஒரேவொரு மரக்கம்பத்தில் அல்லது மரத்தில் ரோமர்கள் தண்டனை வழங்கியதைப் பூர்வகால ஓவியங்கள் சில சித்தரித்துக் காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும்.

‘விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’

இயேசுவைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியை பூஜிப்பது சரியா என்பதே உண்மை கிறிஸ்தவர்களுக்கு முக்கிய விஷயமாக இருக்க வேண்டும். அது செங்குத்தான ஒரே கம்பமாகவோ சிலுவையாகவோ வில்லாகவோ ஈட்டியாகவோ அல்லது ஒரு கத்தியாகவோ இருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு கருவியை வழிபாட்டில் பயன்படுத்தலாமா?

உங்களுடைய அன்பானவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார், அந்த ஆயுதம் அத்தாட்சியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்ளுங்கள். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த ஆயுதத்தைப் பெறுவதற்கும், அதை போட்டோ எடுத்து அச்சடித்து பல பிரதிகளை வினியோகிப்பதற்கும் முயற்சி செய்வீர்களா? அந்த ஆயுதத்தைப் பல்வேறு அளவுகளில் மாதிரி எடுப்பீர்களா? அவற்றில் சிலவற்றை உங்களுடைய ஆபரணங்களில் அழகுக்காகப் பயன்படுத்துவீர்களா? அல்லது இவற்றை வியாபார ரீதியில் தயாரித்து நண்பர்களும் உறவினர்களும் பூஜிக்க விற்பனை செய்வீர்களா? இதை நினைத்தாலே உங்களுக்கு அருவருப்பாக இருக்கும் இல்லையா! என்றாலும், சிலுவையைப் பொறுத்தவரை இப்படித்தான் செய்யப்பட்டிருக்கிறது!

அதோடு, வழிபாட்டில் சிலுவையைப் பயன்படுத்துவதற்கும், பைபிள் கண்டனம் செய்கிற உருவச்சிலைகளைப் பயன்படுத்துவதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. (யாத்திராகமம் 20:2-5; உபாகமம் 4:25, 26) ‘விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ என்று சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் யோவான் புத்திமதி கூறியபோது, மெய் கிறிஸ்தவ போதனைகளைத் துல்லியமாக தெரியப்படுத்தினார். (1 யோவான் 5:21) ரோம அரங்கத்தில் மரணத்தை எதிர்ப்படுவதாக இருந்தாலும் இதை அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

என்றாலும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் தியாக மரணத்தை உயர்வாக மதித்தார்கள். அதைப் போலவே இன்றும், இயேசுவை சித்திரவதை செய்து கொலை பண்ணுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியை உண்மை கிறிஸ்தவர்கள் வழிபடாதபோதிலும், அபூரண மானிடருக்கு இரட்சிப்பைத் தருவதற்கு கடவுள் பயன்படுத்தும் ஒரே வழியாக அவருடைய மரணத்தை நினைவுகூருகிறார்கள். (மத்தேயு 20:28) கடவுளுடைய அன்பின் இந்த மாபெரும் வெளிக்காட்டு சத்தியத்தை நேசிப்போருக்கு விவரிக்கமுடியா ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும், ஏன் நித்திய ஜீவ நம்பிக்கையையும் தருகிறதே.​—யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 21:3, 4.

[பக்கம் 12-ன் படம்]

ஒரேவொரு கம்பத்தில் ரோமர்கள் கொலை செய்வதை சித்தரித்துக் காட்டும் பூர்வகால ஓவியம்

[படத்திற்கான நன்றி]

Rare Books Division, The New York Public Library, Astor, Lenox and Tilden Foundations