Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அசத்தலான பாரம்பரிய தோட்டம்

அசத்தலான பாரம்பரிய தோட்டம்

அசத்தலான பாரம்பரிய தோட்டம்

குவாடலூப்பிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அழகான ஓரிடத்தில் வாழ்ந்தும் அதன் அழகை அனுபவிக்க முடியாமல்போவது எவ்வளவு கொடுமை! 17-⁠ம் நூற்றாண்டு முதல், ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் இதுபோன்ற கொடுமையான சூழலில்தான் வாழ்ந்துவந்தார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து குவாடலூப், மார்டினிக் போன்ற கரீபிய தீவுகளுக்கு அவர்கள் கடத்தி வரப்பட்டார்கள். காலம்பூராவும் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக இராப்பகலாய் வேலைசெய்து நாட்களை நகர்த்தினார்கள்.

அத்தீவிலிருந்த பண்ணையார்களில் அநேகர் அந்த அடிமைகளுக்கு எந்த உணவும் கொடுக்கவில்லை; ஆகவே, அவர்கள் தோட்டங்களை அமைத்தார்கள். பொதுவாக, அதிக வேலை செய்யும் ஆட்கள் கூடுதலான வேலையை இழுத்துப்போட்டுக்கொள்ள மாட்டார்கள். என்றாலும், இந்த அடிமைகள் தாங்கள் விரும்பும் பயிர் வகைகளைச் சாப்பிடுவதற்காக சொந்த தோட்டங்களை அமைத்தார்கள். மரவள்ளி, சேனைக் கிழங்கு போன்றவற்றை அங்கு பயிரிட்டார்கள். அவர்களுடைய எஜமானர்களே உணவளித்திருந்தால்கூட அந்தளவிற்கு ருசியான, சத்துள்ள உணவைக் கொடுத்திருக்க முடியாது. அதுமட்டுமா, மூலிகைகளையும் சமையலில் உபயோகிக்கும் நறுமணச் செடிகளையும்கூட வளர்த்தார்கள்.

பிரான்சு நாட்டு அரசாங்கம் 1848-⁠ல் அடிமைத்தனத்திற்கு முடிவுகட்டியது. விடுதலைபெற்ற அடிமைகளோ தாய்நாட்டிற்குச் செல்லாமல் அங்கேயே இருந்து சொந்த தோட்டங்களைப் பராமரித்து வந்தார்கள். இன்று குவாடலூப்பிலும் மார்டினிக்கிலும் உள்ளவர்களில் அநேகர், கடின உழைப்பாளிகளான அந்த ஆப்பிரிக்கர்களின் சந்ததியினரே. “கிரியோல்” என்று அழைக்கப்படும் அந்தத் தோட்டங்களை இவர்கள் இப்போதும் பராமரித்து வருகிறார்கள்.

குட்டி மழைக்காடுகள்

அந்த அடிமைகள் இரண்டு வகையான தோட்டங்களை அமைத்தார்கள். ஒன்று, பொதுவாக வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்தது; அது காய்கறி தோட்டம். மற்றொன்று, வீட்டிற்குப் பக்கத்திலேயே இருந்தது; அது ‘வீட்டுத் தோட்டம்’ (இதை உள்ளூர்காரர்கள் ஷார்டன் ட காஸ் என்று அழைக்கிறார்கள்). இன்றைய கிரியோல் தோட்டங்களும் இவற்றைப் போலத்தான் இருக்கின்றன. இவற்றில் ஏராளமான பூச்செடிகள், புல் வகைகள், மரங்கள், புதர்கள் போன்றவை நிறைந்திருக்கின்றன. இந்தப் புதர்கள் மழைக்காடுகளில் இருப்பதுபோல் மண்டிக்கிடக்கின்றன. தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் செடிகள் நிறைந்திருப்பதால், ‘பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இல்லையே’ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையில், இந்தத் தோட்டம் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டு பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. செடிகளுக்கு இடையே குறுகிய பாதைகளும் இருக்கின்றன, இவற்றின் வழியே தோட்டக்காரர் சென்று ஒவ்வொரு செடியையும் கவனிக்க முடிகிறது.

இந்தத் தோட்டம் வீட்டின் பின்பக்கத்திலிருந்து முன்பக்கம்வரை நீண்டிருக்கிறது. முன்பக்கத்தில் அழகான வரவேற்பு அறைபோல் இருக்கிறது. வர்ணஜாலம் புரியும் குரோட்டன்கள், கோல்டன்-⁠ட்ரம்பெட்டுகள், கலர்கலரான காகிதப்பூக்கள், ஒரு வகை ஊதாப்பூக்கள் ஆகியவற்றின் மத்தியில் வரவேற்கப்பட்டால் யாருக்குத்தான் உச்சிகுளிராது!

கிரியோல் தோட்டத்தின் மற்ற பகுதிகளில் மூலிகைகள் உள்ளன. இவை பொதுவாக, வீட்டின் நிழல்படும் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. திருநீற்றுப் பச்சை, இலவங்கம், கோட்வீட், பிரியாணி இலை, ஒருவகை ஆயப்பனை போன்றவை அத்தீவுகளில் காலங்காலமாக வளர்க்கப்படும் மூலிகைகளாகும். கர்ப்பூரப்புல்லும் அங்கு வளர்க்கப்படுகிறது. காய்ந்துபோன அதன் இலைகளை எரித்தால் கொசுக்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

தீவுவாசிகளில் அநேகர் இந்த மூலிகைகளைப் பற்றி அறிந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். முற்காலங்களில், யாராவது வியாதிப்பட்டால் அல்லது காயப்பட்டால் உடனடியாகக் கவனிப்பதற்கு டாக்டர்கள் யாரும் அருகில் இருக்கவில்லை. ஆகவே, கிரியோல் தோட்டத்தின் மூலிகைகளையே தங்கள் பிணி தீர்க்கும் மருந்தாக மக்கள் உபயோகித்தார்கள். இன்றும் அப்படியே செய்துவருகிறார்கள்; என்றாலும், மூலிகைகளை வைத்து சுயவைத்தியம் செய்துகொள்வது ஆபத்தில் விளைவடையலாம். ஒரு மூலிகையைச் சரியாக உபயோகிக்கவில்லை என்றால், அது குணமளிப்பதற்குப் பதிலாக நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடலாம். ஆகவே, இன்றைய தீவுவாசிகள் சுயவைத்தியம் செய்துகொள்வதற்குப் பதில் பொதுவாக டாக்டர்களிடமே செல்கிறார்கள்.

கிரியோல் தோட்டத்தின் முக்கிய பகுதி வீட்டின் பின்பக்கத்தில் அமைந்துள்ளது. உணவிற்காக வளர்க்கப்படும் செடிகளே அங்கு காணப்படுகின்றன. சேனைக் கிழங்கு, கத்தரி, மக்காச் சோளம், ஒருவகை சிறுகீரை, சல்லாத்துக் கீரை போன்றவை அங்கு இருக்கின்றன. இவற்றைச் சமைத்து சாப்பிடுவதற்குத் தேவையான நறுமணப் பொருள்களும் அருகிலேயே வளர்க்கப்படுகின்றன. அதோடு, வாழை, பலா, அவகாடோ, கொய்யா, அல்லது மாங்காய் போன்ற மரங்களையும் அங்கு பார்க்க முடிகிறது.

தோட்டத்தில் உலா வரலாம் வாருங்கள்!

ஒரு கிரியோல் தோட்டத்தைக் கண்டால் அருகில் சென்று அதன் அழகை ரசிக்காமல் இருக்க முடியாது. உள்ளே சென்றதும், சூரிய ஒளிபட்டு பல வர்ணங்களில் மின்னுகிற மலர் கொத்துக்களையும் விதவிதமான இலைகளையும் கண்டுகளிப்பீர்கள். தென்றல் காற்றில் மலர்களின் வாசனைகள் மிதந்து வரும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதைப் போன்ற நறுமணம் கிடைக்கவே கிடைக்காது. ஒருநாள் சுற்றிப்பார்க்க வந்திருக்கும் நீங்களே மெய்மறந்து போகிறீர்கள் என்றால், அந்தத் தோட்டத்தை அமைத்து ஒவ்வொரு நாளும் அதில் உலாவரும் அதன் சொந்தக்காரருக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!

கிரியோல் தோட்டம் தொடர்ந்து நிலைத்திருக்குமா? கண்ணைக் கவரும், பிரயோஜனமான இந்தப் பாரம்பரிய தோட்டத்தைக் கட்டிக்காக்க இளைய தலைமுறையினர் விரும்பாததைக் கண்டு தீவுவாசிகள் சிலர் புலம்புகிறார்கள். இருந்தாலும், இந்தத் தோட்டத்தின் அழகையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் அநேக இளையோரும் முதியோரும் பெரிதும் போற்றுகிறார்கள். ஏனெனில், ஆப்பிரிக்க அடிமைகள் மிகவும் மோசமான சூழ்நிலையையும் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டார்கள் என்பதற்கு ஒவ்வொரு கிரியோல் தோட்டமும் சான்றாக இருக்கிறது.

[பக்கம் 27-ன் பெட்டி]

“கிரியோல்” என்பதன் அர்த்தம்

ஆரம்பத்தில், “கிரியோல்” என்ற வார்த்தை ஐரோப்பிய வம்சத்தைச் சேர்ந்த, ஆனால் அமெரிக்காவில் பிறந்த ஜனங்களைக் குறித்தது. தற்போதோ அந்த வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. மிகவும் கவர்ச்சியான அல்லது தரமான ஒன்றை விவரிக்க ஹெய்டி தீவுவாசிகள் “கிரியோல்” என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். ஜமைகா, ஹெய்டி போன்ற இடங்களில் உபயோகிக்கப்படும் சில மொழிகளும் கிரியோல் என்று அழைக்கப்படுகின்றன. சொல்லப்போனால், வேறொரு மொழி அரைகுறையாகப் பேசப்பட்டு, பின்னர் அதுவே ஒரு தொகுதியினரின் தாய்மொழியாக ஆகும்போது கிரியோல் என்று அழைக்கப்படுகிறது.

“கிரியோல்” என்பது குறிப்பிட்ட வாழ்க்கை முறையையும், அதாவது அநேக கரீபிய தீவுகளில் உருவாகியிருக்கும் பழங்குடி கலாச்சாரத்தையும் இன்று குறிக்கிறது. இதோடு சம்பந்தப்பட்ட கிரியோயோ என்ற ஸ்பானிய வார்த்தை பியூர்டோ ரிகோ, டொமினிகன் குடியரசு ஆகிய இடங்களில் இதே அர்த்தத்தைத் தருகிறது. நூற்றாண்டுகளினூடே, கரீபியன் தீவு பழங்குடி மக்களின் சந்ததியினரும் ஆப்பிரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்து அழகிய குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். இதனால் ஆர்வமூட்டும் பாரம்பரியங்களும் தோன்றியிருக்கின்றன. அப்படிப்பட்ட பாரம்பரியங்களின் விளைவாகத்தான் குவாடலூப், மார்டினிக் ஆகிய இடங்களிலுள்ள தோட்டங்களுக்கு கிரியோல் என்ற பெயர் வந்தது.

[பக்கம் 26-ன் படங்கள்]

உள்படங்கள் (மேலிருந்து): அல்பைனா, மிளகு, அன்னாசி, கோக்கோ, காபி