Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோவாவின் பேழையும் கப்பல் வடிவமைப்பும்

நோவாவின் பேழையும் கப்பல் வடிவமைப்பும்

நோவாவின் பேழையும் கப்பல் வடிவமைப்பும்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல் வடிவமைப்பாளராகவும் கடல் பொறியியலாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறேன். பல வித்தியாசமான வடிவங்களிலும் அளவுகளிலும் உள்ள கப்பல்களையும் அவற்றை இயக்கும் இயந்திரங்களையும் வடிவமைப்பதுமே என் தொழில். 1963-⁠ல் கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசித்துவந்தேன். அப்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிளில் ஆதியாகமப் புத்தகத்திலுள்ள நோவாவின் பேழையைப் பற்றிய பதிவை என்னிடம் காட்டினார். அது நீளமான பெட்டியை அல்லது பெட்டகத்தைப் போல் இருந்ததென பைபிள் விவரிப்பதாகச் சொன்னார். அது என் ஆர்வப் பசியைத் தூண்டிவிட்டது. அதனால், அதைக் குறித்து ஆராய தீர்மானித்தேன்.

துன்மார்க்கத்தில் திளைத்திருந்த இந்தப் பூமியைத் தண்ணீரினால் துடைத்தழிக்க கடவுள் தீர்மானித்திருந்ததை ஆதியாகமப் புத்தகத்திலுள்ள பதிவு காட்டுகிறது. இந்தப் பெருவெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார். அதன் மூலம் அவரையும் அவர் குடும்பத்தையும் எல்லாவித மிருகங்களையும் பாதுகாக்கும்படி கூறினார். 300 முழ நீளம், 50 முழ அகலம், 30 முழ உயரமுள்ள பேழையைக் கட்டும்படி உத்தரவிட்டார். (ஆதியாகமம் 6:15) அது தோராயமாக, சுமார் 134 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம், 13 மீட்டர் உயரம் இருந்திருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. a பேழையின் மொத்த எடை சுமார் 40,000 கன சதுரமாக இருந்தது. ஆகவே, இது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவு, கிட்டத்தட்ட ஆடம்பர டைட்டானிக் கப்பல் இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவுக்கு இருந்தது.

பேழையின் வடிவம்

அந்தப் பேழையில் மூன்று தளங்கள் இருந்தன. இரண்டாவது, மூன்றாவது தளங்கள் பேழைக்கு உறுதி சேர்த்தன. எல்லா தளங்களையும் சேர்த்து பேழையின் ஒட்டுமொத்த பரப்பளவு சுமார் 8,900 சதுர மீட்டராக இருந்தது. பிசின் மரங்களால் இந்தப் பேழை கட்டப்பட்டிருந்ததால் அதில் தண்ணீர் புக சிறிதும் வாய்ப்பிருக்கவில்லை. ஒருவேளை அதைக் கட்டுவதற்கு கொப்பேர் மரம் (புன்னை மரம்) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பிறகு உள்ளும் புறமும் தார் பூசப்பட்டது. (ஆதியாகமம் 6:14-16) நோவா எப்படி மரக்கட்டைகளை எல்லாம் ஒன்றிணைத்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஜலப்பிரளயத்தைப் பற்றி குறிப்பிடுவதற்கு முன்பே செம்பு, இரும்பு கருவிகளை உருவாக்குபவர்கள் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 4:22) எப்படியிருந்தாலும், இன்றுவரை மர கப்பல்களைக் கட்டுவதற்கு மர ஆணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பேழையில் பல அறைகள் இருந்தன. பக்கவாட்டில் ஒரு கதவும் இருந்தது, பேழைக்கு மேலிருந்த சற்றே சரிவான அதன் கூரை ஒரு முழ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்து. காற்றோட்டத்திற்காகவும் வெளிச்சத்திற்காகவும் கூரைக்கு சற்று கீழே திறப்புகள் விடப்பட்டிருக்கலாம். என்றாலும், பேழைக்கு அடிக்கட்டையோ முகப்போ கப்பற்பாய்களோ துடுப்புகளோ சுக்கான்களோ இருந்ததாக ஆதியாகமப் பதிவில் சொல்லப்படவில்லை. பார்க்கப்போனால், “பேழை” என்பதற்குரிய எபிரெய வார்த்தையே, மோசேயின் தாய் உபயோகித்த கூடைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கீல் அதாவது, தார் பூசப்பட்ட இந்தக் கூடையில்தான் மோசேயை அவருடைய தாய் நைல் நதியில் மிதக்கவிட்டார்.​—யாத்திராகமம் 2:3, 10.

காற்றடித்தாலும் அலையடித்தாலும் கவலையில்லை

பேழையின் நீளம் அதன் அகலத்தைவிட ஆறு மடங்கு அதிகமாகவும் அதன் உயரத்தைவிட பத்துமடங்கு அதிகமாகவும் இருந்தது. இன்றைய கப்பல்களின் அநேகம் கிட்டத்தட்ட இந்தப் பேழையின் விகிதாச்சாரத்திலே கட்டப்படுகின்றன. அவற்றின் நீளமும் அகலமும் தண்ணீரைக் கிழித்துச் செல்வதற்குத் தேவையான ஆற்றலுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நோவாவின் பேழை நீரை கிழித்துக்கொண்டு செல்ல தேவையில்லை, மிதந்தால் மாத்திரம் போதும். அது சுலபமாக மிதந்திருக்குமா?

காற்றையும் அலைகளையும் கப்பல் தாக்குப்பிடிக்கிற தன்மையையே ஆங்கிலத்தில் “ஸீ கீப்பிங் பிஹேவியர்” என்கிறார்கள். இதுவும் கப்பலின் நீளத்தையும் அகலத்தையும் உயரத்தையும் பொருத்தே இருக்கிறது. மழைக் கொட்டோ கொட்டென்று கொட்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக பைபிள் சொல்கிறது; அதோடு, கடவுள் காற்றை வீசச் செய்ததாகவும் அது சொல்கிறது. (ஆதியாகமம் 7:11, 12, 17-20; 8:1) அப்போது காற்றும் அலையும் எவ்வளவு ஆக்ரோஷமாக தங்கள் கைவரிசையைக் காட்டின என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், காற்று மற்றும் அலையின் வேகமும் போக்கும் இன்று போலவே அன்றும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்திருக்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையிலேயே வழக்கமாக அலைகள் அடிக்கும். நெடுநேரமாக கடுங்காற்று வீசும்போது ஆளையே விழுங்கிவிடும் அளவுக்கு இராட்சத அலைகள் அடுத்தடுத்து மேல் எழும்பும். அதோடு, நிலநடுக்கத்தால் பயங்கரமான அலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

சரியான அளவுகளில் பேழை துல்லியமாகக் கட்டப்பட்டிருந்ததால் அது மூழ்கிவிடாமல் மிதந்தது. ஆக்ரோஷ அலைவீசும் கடல்களில் பயணிக்கும்போது அதன் முன்பக்கம் நீரில் மூழ்கி விடாமல் இருக்கும் விதத்திலும் அது கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அலையும் பேழையின் முனைகளை கன்னாபின்னாவென்று தூக்கி மீண்டும் நீரில் அமிழ்த்தும்போது உள்ளே இருந்த மக்களுக்கும் மிருகங்களுக்கும் அதிக அசெளகரியம் ஏற்பட்டிருக்கும். இப்படி அலைகள் கப்பலைத் தூக்கியடிக்கும்போது கப்பல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பெரிய அலைகள் வந்து ஒரே சமயத்தில் கப்பலின் இருமுனைகளையும் தூக்கினால் கப்பலின் நடுப்பகுதி மூழ்காமல் தாக்குப்பிடிப்பதற்கு அது உறுதியாக இருக்க வேண்டும். எனினும், ஒரு பெரிய அலை கப்பலின் நடுப்பகுதியைத் தூக்கியடிக்குமானால் அதன் முகப்பும் பின்புறமும் தண்ணீருக்குள் மூழ்கிவிடலாம். 10-⁠க்கு ஒன்று என்ற விகிதத்தில் பேழையின் நீளத்தையும் உயரத்தையும் அமைக்கும்படி நோவாவிடம் கடவுள் கூறினார். இந்த விகிதாச்சாரமே கடுமையான அலைகளை சமாளிக்க வல்லது என்பதைக் கப்பல் கட்டுபவர்கள் பின்பு தங்கள் கசப்பான அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்கள்.

பாதுகாப்பானதும் செளகரியமானதும்

பேழை, பெட்டி வடிவத்தில் இருந்ததால் அதன் மிதப்பாற்றல்​—⁠கப்பலைத் தண்ணீரில் மிதக்க வைக்கும் ஆற்றல்​—⁠ஒரு முனையிலிருந்து மறு முனைவரை சீராக இருந்திருக்கும். அதன் எடைகூட சமமாக இருந்திருக்கும். ஒருவேளை நோவாவும்கூட, சாமான்களையும் மிருகங்களையும் ஒரு வருடத்திற்கும் மேல் சாப்பிடுவதற்குத் தேவையான உணவையும் பேழையில் சரிசமமாக வைத்திருந்திருப்பார். சரக்குகள் அனைத்தும் கப்பலில் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதற்குப் பதிலாக கப்பல் முழுவதும் சமமாக வைக்கப்படுகையில் அவற்றால் கப்பலுக்கு ஏற்படும் கூடுதல் பாதிப்பு குறைகிறது. இரண்டு முக்கியமான காரணங்களால் உலகத்தை வெள்ளக்காடாக்கிய ஜலப்பிரளயத்திலிருந்து பேழையும் அதில் இருந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள். முதலாவது, அந்தப் பேழை கடவுள் கொடுத்த அளவுகளுக்கு இசைய வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது, யெகோவாவின் பாதுகாப்பு இருந்தது. அந்தப் பேழை கடைசியில் பொருத்தமான, பாதுகாப்பான இடத்தில் போய் நிற்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்விஷயத்தைக் குறித்து தீவிரமாக ஆராய்ந்ததிலிருந்து, நோவாவின் பேழையைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்கள் உண்மையானவை, இன்றைய கப்பல் கட்டுமான பணியுடன் பொருந்துபவை என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், பேழையையும், பெருவெள்ளத்தையும் பற்றிய பல தகவல்கள் ஆதியாகமப் பதிவில் கொடுக்கப்படவில்லை. பல காலம் கஷ்டப்பட்டு நோவா கட்டின பேழையால்தான் மனித உயிரும் மிருக உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. நோவா உயிர்த்தெழுந்து வரும்போது அவரைப் பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன். (அப்போஸ்தலர் 24:15; எபிரெயர் 11:7) முதலாவது, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பேன். பிறகு என் கேள்விக் கணைகளைத் தொடுப்பேன்.​—⁠அளிக்கப்பட்டது.

[அடிக்குறிப்பு]

a முழம் எனப்படுவது பண்டைய காலத்து அளவீடு. முழங்கையிலிருந்து விரல் நுனிவரை உள்ள அளவே கிட்டத்தட்ட ஒரு முழமாகக் கருதப்பட்டது. இஸ்ரவேலரின் காலத்தில் ஒரு முழம் என்பது சராசரியாக 44.5 சென்டிமீட்டராகக் கணக்கிடப்பட்டது.

[பக்கம் 22-ன் பெட்டி/படம்]

மாதிரி பேழை

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரியைப் பயன்படுத்தி நீங்களே ஒரு பேழையைச் செய்து அதை பரிசோதித்துப் பார்க்கலாம். (இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரியின் அளவீட்டை உங்களுக்குத் தேவையான அளவு அதிகரித்து பெரிய மாதிரி பேழையை உருவாக்கலாம்.) சாதாரண பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். பேப்பர் முழுவதும் மெழுகை அல்லது ‘க்ரேயானை’ பூசுங்கள், அப்போதுதான் பேப்பர் தண்ணீரை உறிஞ்சாது. பிறகு பேப்பரை மடித்து, ஓரங்களை டேப் அல்லது கோந்து வைத்து ஒட்டுங்கள். மாதிரி பேழை தண்ணீரில் நிலையாக மிதப்பதற்கு அதனடியிலே சமச்சீரான இடைவெளியில் சில காசுகளை கோந்து அல்லது டேப் வைத்து ஒட்டுங்கள். பேழையின் மூன்றில் ஒரு பாகம் தண்ணீருக்குள் மூழ்கும்வரை அவ்வாறு செய்யுங்கள்.

உங்களுடைய பேழை அலைகளையும் காற்றையும் எப்படிச் சமாளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அதைத் தண்ணீர் தொட்டியிலோ பக்கெட்டிலோ மிதக்க விட்டுப் பாருங்கள். பக்கெட்டின் அல்லது தொட்டியின் ஒரு முனையில் ஏதேனும் சிறிய அட்டை பெட்டியையோ அதைப் போன்ற வேறு ஏதாவது பொருளையோ தண்ணீருக்குள் மெதுவாக முக்கி, முக்கி அலைகள் ஏற்படுமாறு செய்யுங்கள்.

[படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உள்ளே மடியுங்கள் உள்ளே மடியுங்கள்

 

உள்ளே மடியுங்கள் உள்ளே மடியுங்கள்

[படம்]

பேழையின் விகிதாச்சாரம், கடலில் பயணிக்கும் கப்பலுக்கு ஒத்திருந்தது

[பக்கம் 20, 21-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

முன்பக்கம்

பக்கம்

மேல் பக்கம்

முன்பக்கம்

பக்கம்

மேல் பக்கம்

[படங்கள்]

நீரைக் கிழித்துக்கொண்டு செல்லும் அதன் வேகம் கிட்டத்தட்ட பிரமாண்டமான “டைட்டானிக்” கப்பலுக்கு இணையாக இருந்தது

[படங்களுக்கான நன்றி]

டைட்டானிக் திட்டம்: Courtesy Dr. Robert Hahn/www.titanic-plan.com; புகைப்படம்: Courtesy of The Mariners’ Museum, Newport News, VA