Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரகசியமாக டேட்டிங் செய்வதில் என்ன தவறு?

இரகசியமாக டேட்டிங் செய்வதில் என்ன தவறு?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இரகசியமாக டேட்டிங் செய்வதில் என்ன தவறு?

ஜெஸிகா a இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்துக்கொண்டிருந்தாள். அவளுடன் படிக்கும் ஜெரமி என்பவன் அவள்மீது காதல்கொள்ள ஆரம்பித்த நாளிலிருந்தே அவ்வாறாகக் குழம்பிப்போயிருந்தாள். “அவன் ரொம்ப அழகாக இருந்தான். அவனைப் போல பண்புள்ள ஒருவனை என்னுடைய வாழ்நாளில் நான் சந்திக்கவே முடியாது என என்னுடைய நண்பர்கள் சொன்னார்கள். அநேக பெண்கள் அவனை வளைத்துப்போட நினைத்தார்கள். ஆனால் அவன் யார் வலையிலும் விழவில்லை, அவனுக்கு என்னை மட்டுமே பிடித்திருந்தது” என்று அவள் சொல்கிறாள்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஜெஸிகாவை டேட்டிங்குக்கு அழைத்தான் ஜெரமி. அதைக் குறித்து ஜெஸிகா இவ்வாறு சொல்கிறாள்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சி. அதனால் என்னுடைய மதத்தைச் சாராத ஒருவரோடு டேட்டிங் செய்ய என் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என அவனிடம் விளக்கினேன். ஜெரமி அதற்கும் வேறே யோசனை வைத்திருந்தான். ‘உன்னுடைய அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் டேட்டிங் செய்தாலென்ன?’ என்று அவன் கேட்டான்.”

நீங்கள் விரும்புகிற ஒருவர் உங்களிடம் இதுபோன்ற கேள்வியைக் கேட்டால் என்ன செய்வீர்கள்? ஆரம்பத்தில் ஜெரமியின் யோசனையின்படி நடக்க ஜெஸிகா ஒத்துக்கொண்டது உங்களுக்கு ஒருவேளை ஆச்சரியமாய் இருக்கலாம். “நான் அவனுடன் டேட்டிங் செய்தால், யெகோவாவை நேசிக்க அவனுக்கு நிச்சயம் கற்றுக்கொடுக்க முடியுமென நம்பினேன்” என்று அவள் சொல்கிறாள். ஆனால் நடந்தது என்ன? அதை நாம் பிற்பாடு பார்க்கலாம். மற்ற விஷயங்களில் நல்ல முன்மாதிரியாய் திகழ்ந்த ஜெஸிகாவைப் போன்ற கிறிஸ்தவ இளைஞர்கள் இந்த இரகசிய டேட்டிங்குக்கு தங்களை அறியாமலேயே எப்படி இரையாகிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்.

ஏன் இரகசியமாய் டேட்டிங் செய்கிறார்கள்

சிறு வயதிலேயே அநேகர் டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். “10, 11 வயதிலேயே அநேக பிள்ளைகள் பாய்ஃபிரெண்ட்ஸ் கேர்ள்ஃபிரெண்ட்ஸ்கூட சுற்றுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்கிறாள் பிரிட்டனைச் சேர்ந்த சூசன். அவர்கள் ஏன் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? எதிர்பாலாரின் மீது இயற்கையாகவே வரும் ஈர்ப்பும், நண்பர்களின் அழுத்தமுமே அதற்கு முக்கிய காரணங்களாய் இருக்கின்றன. “உங்கள் உடலுக்குள் அநேக மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதோடு, பள்ளியிலுள்ள மற்ற எல்லா பிள்ளைகளும் டேட்டிங் செய்கிறார்கள்” என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோயிஸ் சொல்கிறாள்.

ஆனால், சிலர் ஏன் இரகசியமாக டேட்டிங் செய்கிறார்கள்? “பெற்றோரிடம் தெரிவித்தால் என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோ என ஒருவேளை அவர்கள் பயப்படலாம்” என்று பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப்ரி சொல்கிறான். தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் டேவிட்டும் அவ்வாறே உணருகிறான். “பெற்றோர் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்களென அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதைச் சொல்லாமல் மறைக்கிறார்கள்” என்று அவன் சொல்கிறான். மற்றுமொரு காரணத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள ஜேன் குறிப்பிடுகிறாள்: “நீங்கள் இரகசியமாக டேட்டிங் செய்கையில் உங்களைச் சுதந்திர பறவைகளாக காட்டுகிறீர்கள் . . . நீங்கள் வளர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்கள், மற்றவர்களும் உங்களை அப்படியே நடத்த வேண்டுமென விரும்புகிறீர்கள். அது நடக்காதபோது நீங்கள் செய்ய நினைப்பதையே செய்யத் தீர்மானிக்கிறீர்கள், அதுவும் பெற்றோருக்குத் தெரியாமல். இரகசியமாக செய்தால் பிரச்சினையே இருக்காது” என்று அவள் சொல்கிறாள்.

உங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென பைபிள் உங்களுக்குக் கட்டளையிடுகிறது. (எபேசியர் 6:1) ஆகவே, உங்களுடைய டேட்டிங்குக்கு உங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு நிச்சயம் நியாயமான காரணங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, உங்களுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால் நீங்கள் சக விசுவாசி ஒருவரோடுதான் டேட்டிங் செய்ய வேண்டுமென அவர்கள் விரும்புவார்கள்; அதுவும், நீங்கள் இருவருமே திருமணம் செய்வதற்கான பக்குவத்தை அடைந்திருந்தால் மட்டுமே அதற்கு அனுமதிப்பார்கள். b என்றாலும், பின்வருமாறு நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்:

◼ என்னைத் தவிர அனைவருமே டேட்டிங் செய்வதால், நான் எதையோ இழப்பதுபோல் உணருகிறேன்.

◼ என் மதத்தைச் சாராத ஒருவரை நான் விரும்புகிறேன்.

◼ நான் திருமண வயதை எட்டவில்லை என்றாலும், ஒரு சக கிறிஸ்தவரை டேட்டிங் செய்ய விரும்புகிறேன்.

இதைப்பற்றி அப்பா அம்மா என்ன சொல்வார்கள் என்று ஒருவேளை உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களுடைய பெற்றோர் சொல்வதும் சரிதான் என உங்கள் மனம் சொல்லும். இருந்தாலும், மானாமீ என்ற பெண் உணரும் விதமாகவே நீங்களும் உணரலாம். ஜப்பானைச் சேர்ந்த இவள் இவ்வாறு சொல்கிறாள்: “டேட்டிங் செய்யக்கூடாது என்று நான் தீர்மானமாயிருந்தாலும், சில நேரங்களில் டேட்டிங் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அதிகமாகும்போது குழம்பி விடுகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு, டேட்டிங் செய்யாதிருப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயம்.” அப்படிப்பட்ட நிலையிலிருந்த சிலர் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள், தங்களுடைய பெற்றோரிடமிருந்து அதை மறைத்தும் இருக்கிறார்கள். எப்படி?

“இதை இரகசியமாக வைக்கும்படி சொல்லப்பட்டோம்”

“இரகசியமான டேட்டிங்” என்ற பதமே ஒரு வகையில் ஏமாற்றுவதை காட்டுகிறது. பெரும்பாலும், ஃபோன் அல்லது இன்டர்நெட்டை பயன்படுத்தி தொடர்புகொள்வதன்மூலம் சிலர் தங்கள் டேட்டிங்கை இரகசியமாக வைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு முன்பு நண்பர்களைப் போலவே பழகுவார்கள், ஆனால் அவர்களுடைய ஈ-மெயில்களும், எஸ்எம்எஸ்களும், ஃபோன் கால்களும் சொல்லும் கதையே வேறு.

இரகசிய டேட்டிங் சம்பந்தப்பட்ட மற்றுமொரு தந்திரத்தைப்பற்றி நைஜீரியாவைச் சேர்ந்த கேலப் சொல்கிறான். “நண்பர்கள்கூட இருக்கும்போது அவர்கள் இரண்டு பேரும் சங்கேத வார்த்தைகளையும் பட்டப்பெயர்களையும் பயன்படுத்தி பேசுவார்கள், அப்போதுதானே மற்றவர்களுக்குப் புரியாது” என்று அவன் சொல்கிறான். இன்னொரு உத்தியானது, இரண்டு பேர் தனியாக இருப்பதற்கு பார்ட்டி போன்று பலர் கூடிவரும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகும். இதைக் குறித்து பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் இவ்வாறு சொல்கிறான்: “ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி ஒரு சிலர் அழைக்கப்பட்டோம். எங்கள் மத்தியில் இருந்த இரண்டு பேர் தனியாக நேரம் செலவழிக்கவே இந்த ஏற்பாடு என்பது பிறகுதான் தெரிந்தது. இதை இரகசியமாக வைக்கும்படி சொல்லப்பட்டோம்.”

ஜேம்ஸ் சொன்னதுபோல, நண்பர்களின் உதவியோடுதான் இரகசியமான டேட்டிங் அதிகளவில் செய்யப்படுகிறது. “நண்பர்களில் ஒருவருக்காவது உண்மை தெரிந்திருக்கும், இருந்தாலும் இவ்விஷயத்தில் இரகசியம் காக்க தீர்மானித்திருப்பதால், அவர் அதை யாருக்கும் சொல்லாமல் இருக்கவே விரும்புவார்” என்று ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கேரல் சொல்கிறாள்.

இரகசியமாக டேட்டிங் செய்வோர் பெரும்பாலும் அநேக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார்கள். “அநேகர் தாங்கள் எங்கே போகிறார்கள் என்பதை பெற்றோரிடமிருந்து மறைப்பதன்மூலம் தங்களுடைய டேட்டிங்கை இரகசியமாகவே வைக்கிறார்கள்” என்று கனடாவைச் சேர்ந்த பெத் சொல்கிறாள். தானும் அப்படியே செய்ததாக ஜப்பானைச் சேர்ந்த மீஸாகீ ஒத்துக்கொள்கிறாள். “ரொம்ப ஜாக்கிரதையாக கதைகட்ட வேண்டியிருந்தது . . . என்னுடைய டேட்டிங் விஷயத்தைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் பொய் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாய் இருந்தேன். என் பெற்றோரின் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருக்கவே அப்படியெல்லாம் செய்தேன்” என்று அவள் சொல்கிறாள்.

இரகசிய டேட்டிங்கின் படுகுழிகள்

நீங்கள் இரகசியமாக டேட்டிங் செய்ய தூண்டப்பட்டால் அல்லது ஏற்கெனவே அவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், பின்வருபவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும்:

என்னுடைய இந்த ஏமாற்று வேலை எதில் விளைவடையும்? நீங்கள் டேட்டிங் செய்யும் நபரை விரைவில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களா? “திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் டேட்டிங் செய்வது, நீங்கள் விற்காத பொருளுக்கு விளம்பரம் செய்வது போலிருக்கும்” என்கிறான் அமெரிக்காவைச் சேர்ந்த இவான். “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் [“நோகடிக்கும்,” NW]” என்று நீதிமொழிகள் 13:12 சொல்கிறது. நீங்கள் நேசிக்கும் ஒருவரின் இருதயத்தை நோகடிக்க உண்மையில் விரும்புவீர்களா, என்ன?

நான் செய்கிறவற்றைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார்? “சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 4:13) எனவே, உங்கள் டேட்டிங் பற்றியோ உங்கள் நண்பரின் டேட்டிங் பற்றியோ நீங்கள் மறைத்தாலும், யெகோவா அதைப்பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறார். இந்த விஷயத்தில் ஒருவேளை ஏமாற்றுகிறீர்கள் என்றால் பொய் சொல்வதை யெகோவா தேவன் கண்டனம் செய்கிறார் என்பதை நிச்சயம் நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அவர் வெறுக்கும் காரியங்களென பைபிள் கொடுக்கும் பட்டியலில் “பொய்நாவு” முக்கிய இடத்தை வகிக்கிறது.​—நீதிமொழிகள் 6:16-19.

உண்மையில், உங்களுடைய டேட்டிங்கில் எந்தவித சூழ்ச்சியும் ஏமாற்றுதலும் உட்படாமல் இருக்கும்போது கிடைக்கிற பாதுகாப்பு, டேட்டிங்கை இரகசியமாய் வைக்கும்போது கிடைப்பதில்லை. இரகசியமாக டேட்டிங் செய்கிறவர்களில் சிலர் ஒழுக்கக்கேட்டில் விழுந்து விடுகிறார்கள் என்பதில் ஆச்சரியமே இல்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேன், பள்ளியில் படிக்கும் ஒரு பையனோடு தன் சிநேகிதி இரகசியமாக டேட்டிங் செய்ததைக் குறித்து சொல்கிறாள். இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த அவளைக் குறித்து ஜேன் சொல்வதாவது: “அவளுக்கு ஒரு பாய்ஃபிரெண்ட் இருப்பது அவளுடைய அப்பாவுக்குத் தெரிய வந்தபோது நேரம் கடந்துவிட்டிருந்தது, ஏனெனில், அவள் ஏற்கெனவே கர்ப்பமாகிவிட்டிருந்தாள்.”

நிச்சயமாகவே, அப்படியொரு இரகசிய உறவை நீங்கள் வைத்திருந்தால் உங்களுடைய பெற்றோரிடமோ முதிர்ச்சிவாய்ந்த ஒரு கிறிஸ்தவரிடமோ அதைப்பற்றி பேசுவது ஞானமாய் இருக்கும். உங்கள் நண்பர் ஒருவர் அவ்வாறு இரகசியமாக டேட்டிங் செய்தால் அதை மறைத்துவைப்பதில் அவருக்கு உதவி செய்யாதீர்கள், அப்படிச் செய்தால் நீங்களும் அவருடைய தவறில் பங்கு கொள்வீர்கள். (1 தீமோத்தேயு 5:22) ஒருவேளை அந்த உறவு ஆபத்தில் முடிவடைந்தால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? அந்த விளைவுகளுக்கு ஒரு வகையில் நீங்களும் காரணராகி விடுவீர்கள், அல்லவா? உதாரணத்திற்கு, சர்க்கரை நோயாளியான ஒரு நண்பர் இரகசியமாக இனிப்புகளைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதைக் கண்டுபிடித்து விட்டீர்கள், உங்களுடைய நண்பரோ யாரிடமும் சொல்ல வேண்டாமென்று கெஞ்சுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? எது முக்கியமானது என தீர்மானிப்பீர்கள்? உங்களுடைய நண்பரின் தவறை மறைப்பீர்களா அல்லது அவருடைய உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுப்பீர்களா?

இரகசியமாக டேட்டிங் செய்யும் நண்பர் உங்களுக்கு இருந்தால், அவரிடத்திலும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும். உங்களுடைய நட்பை நிரந்தரமாக இழந்து விடுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்! நேரம் வரும்போது நீங்கள் அவன் அல்லது அவளுடைய நன்மைக்காகவே அவ்வாறு செய்தீர்கள் என்பதை உண்மையான நண்பர் புரிந்துகொள்வார்.​—நீதிமொழிகள் 27:6.

“நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்”

நாம் ஆரம்பத்தில் பார்த்த ஜெஸிகா, தான் எதிர்ப்பட்ட அதே சூழ்நிலையில் இருந்த வேறொரு கிறிஸ்தவ சகோதரியின் அனுபவத்தைக் கேட்டபோது, இரகசிய டேட்டிங் பற்றிய தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். அதைக் குறித்து ஜெஸிகா இவ்வாறு சொல்கிறாள்: “அவள் அந்த உறவை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தாளென கேட்டபிறகு, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.” அந்த உறவை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதாக இருந்ததா? இல்லவே இல்லை! ஏனென்றால், “நான் மனதார நேசித்தது இவன் ஒருவனைத்தான். பிரிவைத் தாங்கமுடியாமல் பல வாரங்களாக தினமும் அழுதுகொண்டே இருந்தேன்” என்று ஜெஸிகா சொல்கிறாள்.

ஆனாலும், தான் யெகோவாவை நேசிப்பதையும், தற்காலிகமாக திசை மாறிச் சென்றாலும்கூட உண்மையில் சரியானதைச் செய்யவே விரும்புவதையும் ஜெஸிகா அறிந்திருந்தாள். அந்த உறவை முடிவுக்கு கொண்டுவந்ததால் ஏற்பட்ட வலி காலப்போக்கில் குறைந்தது. “யெகோவாவிடம் உள்ள என்னுடைய உறவு எப்போதையும்விட இப்போது அதிக பலமாக இருக்கிறது. சரியான நேரத்தில் நமக்குத் தேவையான வழிநடத்துதலைக் கொடுத்து வருவதற்காக யெகோவாவுக்கு மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்!” என்று ஜெஸிகா சொல்கிறாள்.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

சிந்திப்பதற்கு

◼ பக்கம் 27-⁠ல் தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சூழ்நிலைகளையும் மறுபடியும் சிந்தியுங்கள். சில சமயங்களில் அவற்றில் எந்தச் சூழ்நிலையில் நீங்கள் இருந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

◼ இரகசியமாக டேட்டிங் செய்யாமல் அந்தச் சூழ்நிலைமையை எப்படிச் சமாளிப்பீர்கள்?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b ஜனவரி 2007 தேதியிட்ட எமது இதழில் வெளிவந்த, “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் டேட்டிங் செய்ய தயாரா?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் -ன் பெட்டி] 28]

யாருக்கும் தெரியாமலா, சிலருக்குத் தெரிந்தா?

டேட்டிங்குடன் சம்பந்தப்பட்ட எல்லா இரகசியங்களுமே ஏமாற்றுதலை உட்படுத்துவது கிடையாது. உதாரணத்திற்கு, திருமண வயதை எட்டிய ஓர் இளம் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள விரும்பலாம். அதுவரை தங்களுடைய டேட்டிங் விஷயத்தை யாரிடமும் சொல்லாதிருக்க தீர்மானிக்கலாம். வாலிபராக இருக்கிற தாமஸ் சொல்கிற விதமாய், “‘எப்போ கல்யாணம்?’ போன்ற கேள்விகளால் துளைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.”

மற்றவர்களிடமிருந்து தேவையில்லாத அழுத்தங்கள் வருகையில் அவை தீங்கிழைக்கலாம் என்பது உண்மையே. (உன்னதப்பாட்டு 2:7) அதனால், டேட்டிங் செய்யும் சிலர் தாங்கள் பழக ஆரம்பிக்கையில் அதைப்பற்றி அனைவரும் தெரிந்துகொள்கிற விதமாக நடந்துகொள்ளாமலிருக்க தீர்மானிக்கலாம். அதேசமயம், தங்களைத் தனிமைப்படுத்தாமல் இருக்கவும் ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 10:19) “இப்படிச் செய்வது தாங்கள் பொருத்தமானவர்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இரண்டு பேருக்குமே போதுமான நேரத்தை அளிக்கும். ஒருவேளை அவர்கள் பொருத்தமானவர்களாய் இருப்பதாகத் தெரிந்தால், அதன் பிறகு மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்” என்று 20-வயது நிரம்பிய அன்னா சொல்கிறாள்.

அதே சமயத்தில், உங்களுடைய உறவைப்பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவர்களான உங்கள் பெற்றோருக்கோ நீங்கள் டேட்டிங் செய்பவரின் பெற்றோருக்கோ தெரியப்படுத்தாமல் இருப்பது தவறு. உங்களுடைய டேட்டிங்கைப்பற்றி அவர்களுக்குச் சொல்ல தயங்குகிறீர்கள் என்றால், ஏன் அவ்வாறு தயங்குகிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெஸிகா இருந்த அதே நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்களா? உங்கள் டேட்டிங்குக்கு மறுப்பு தெரிவிக்க உங்கள் பெற்றோருக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

[பக்கம் 29-ன் பெட்டி]

பெற்றோருக்கு ஒரு குறிப்பு

இதற்கு முந்தைய கட்டுரையை வாசித்தப் பிறகு, ‘என் மகனோ மகளோ எனக்குத் தெரியாமல் டேட்டிங் செய்வானா/ளா?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். சிலர் ஏன் இரகசியமாக டேட்டிங் செய்ய தூண்டப்படலாம் என்பதைப்பற்றி இளைஞர்களில் சிலர் விழித்தெழு!-விடம் சொன்னவற்றைக் கவனியுங்கள். பிற்பாடு அதைத் தொடர்ந்து வரும் கேள்விகளைச் சிந்தியுங்கள்.

“சில இளைஞர்களுக்கு வீட்டில் ஆதரவு கிடைக்காததால் ஒரு பாய்ஃபிரெண்டையோ கேர்ள்ஃபிரெண்டையோ சார்ந்திருக்க முடிவு செய்கிறார்கள்.”​—⁠வெண்டி.

உங்களுடைய பிள்ளைகளின் உணர்ச்சி ரீதியான தேவைகள் கவனிக்கப்படுகிறதா என்பதை ஒரு பெற்றோராக நீங்கள் எப்படி நிச்சயித்துக்கொள்வீர்கள்? இந்த விஷயத்தில் நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படியானால், எதில் நீங்கள் முன்னேற்றம் செய்யலாம்?

“நான் 14 வயதாயிருக்கையில் வேறொரு நாட்டிலிருந்து படிக்க வந்திருந்த மாணவன் ஒருவன் என்னை அவனுடைய கேர்ள்ஃபிரெண்டாக இருக்கும்படி கேட்டான். நானும் ஒத்துக்கொண்டேன். ஒரு இளைஞன் என் தோள்மீது கைகளைப் போடுவதைப் பெருமையாக எண்ணினேன்.”​—⁠டையன்.

டையன் உங்களுடைய மகளாக இருந்தால் இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவீர்கள்?

“மொபைல் ஃபோன்கள் இரகசியமாக டேட்டிங் செய்வதை எளிதாக்குகின்றன. என்ன நடக்கிறது என்பது பெற்றோருக்கு தெரிய வாய்ப்பேயில்லை!”​—⁠அநெட்.

உங்களுடைய பிள்ளைகள் செல் ஃபோன்களைப் பயன்படுத்துபவர்களாய் இருந்தால், நீங்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?

“தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், யாரோடு பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது இரகசிய டேட்டிங் இன்னும் எளிதாகி விடுகிறது.”​—⁠தாமஸ்.

உங்களுடைய பருவ வயது பிள்ளையின் நடவடிக்கைகளை இன்னும் நன்றாக அறிந்துகொள்ள ஏதாவது வழியிருக்கிறதா? அதேசமயத்தில் அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தையும் உங்களால் கொடுக்க முடியுமா?

“பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் பெற்றோர் அங்கு இருப்பதில்லை. அல்லது தங்கள் பிள்ளைகள்மீது அளவுக்கதிகமான நம்பிக்கை இருப்பதால் அவர்களை மற்றவர்களோடு வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள்.”​—⁠நிக்கலஸ்.

உங்களுடைய பிள்ளையின் நெருங்கிய நண்பனைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஒன்றாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் என உங்களுக்கு உண்மையில் தெரியுமா?

“பெற்றோர் அளவுக்கதிகமாக கண்டிக்கிறவர்களாய் இருப்பதும் இரகசிய டேட்டிங்குக்கு வழி வகுக்கலாம்.”​—⁠பால்.

பைபிள் சட்டங்களையும் நியமங்களையும் விட்டுக்கொடுக்காமல் உங்களுடைய ‘நியாயத்தன்மையை’ எவ்வாறு தெரியப்படுத்துவீர்கள்?​—⁠பிலிப்பியர் 4:5, NW.

“நான் பருவ வயதில் அடியெடுத்து வைத்தபோது தாழ்வு மனப்பான்மையால் கஷ்டப்பட்டேன், மற்றவர்கள் என்னை கவனிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் பக்கத்து சபையிலிருந்த ஒரு பையனிடம் ஈ-மெயில் மூலம் தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், காதல் வலையில் விழுந்தேன். அவன் என்னை விசேஷித்தவளாக உணரச் செய்தான்.”​—⁠லிண்டா.

லிண்டாவின் தேவைகள் வீட்டிலேயே எவ்வாறு பயன்தரும் விதத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கலாம் என உங்களுக்குத் தோன்றுகிறது?

உங்கள் மகனிடமோ மகளிடமோ கலந்துபேச நீங்கள் இந்தக் கட்டுரையையும் இந்தப் பக்கத்தையும் பயன்படுத்தலாமே! பிள்ளைகள் எதையும் இரகசியமாகச் செய்வதைத் தடுப்பதற்குச் சிறந்த வழி, இருதயப்பூர்வமான ஒளிவுமறைவற்ற பேச்சுத்தொடர்பே ஆகும். ஒரு இளைஞருடைய தேவைகளைக் கண்டுணர நேரமும் பொறுமையும் அவசியம், ஆனால் அதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் பயனுள்ளதே.​—⁠நீதிமொழிகள் 20:5.