Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒப்பற்ற புத்தகம்

ஒப்பற்ற புத்தகம்

“உலகில் மிகப் பரவலாக வினியோகிக்கப்படுகிற புத்தகம் பைபிளே.”​—⁠த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா.

அச்சுக் கோர்த்து அச்சடிக்கும் முறையை 550-⁠க்கும் அதிகமாக ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டு யோஹனஸ் கூட்டன்பர்க் ஆவார். அவருடைய அச்சகத்தில் முதலாவது அச்சடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க புத்தகம் பைபிளே. a அப்போது முதற்கொண்டு எத்தனை எத்தனையோ வித்தியாசப்பட்ட தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. என்றாலும், அவை எல்லாவற்றிலும் தன்னிகரற்று விளங்குவது பைபிளே.

  • இதுவரை 470 கோடிக்கும் அதிகமான பைபிள்கள் (முழுமையாகவோ பகுதியாகவோ) அச்சிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதற்கு அடுத்ததாக முன்னணி வகிப்பது கொட்டேஷன்ஸ் ஃப்ரம் சேர்மன் மா என்ற புத்தகமாகும். ஆனால் பைபிளோ இப்புத்தகத்தைவிட ஐந்து மடங்குக்கும் அதிகமாக வினியோகிக்கப்படுகிறது.

  • சமீபத்தில், ஒரு வருடத்தில் மட்டுமே ஐந்து கோடிக்கும் அதிகமான பைபிள்கள் முழுமையாகவோ பகுதியாகவோ வினியோகிக்கப்பட்டுள்ளன. “இந்த வருடத்தில் ஏன், ஒவ்வொரு வருடத்திலுமே விற்பனையில் நம்பர் 1 புத்தகம் பைபிளே” எனக் குறிப்பிடுகிறது த நியு யார்க்கர் பத்திரிகையில் வெளிவந்த ஓர் அறிக்கை.

  • பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 2,400-⁠க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் தாய்மொழியில் பைபிளின் ஒரு பகுதியாவது கிடைக்கிறது.

  • புகழ்பெற்ற சீன சாது கன்பூசியஸும் புத்த மதத்தைத் தோற்றுவித்த சித்தார்த்த கௌதமரும் பிறப்பதற்கு முன்னரே பைபிள் எழுத்தாளர்களில் ஏறக்குறைய பாதிபேர் தங்களுடைய புத்தகத்தை எழுதி முடித்திருந்தார்கள்.

  • பைபிளின் தாக்கத்தை கலைகளிலும் காணமுடிகிறது; உதாரணமாக, உலகின் புகழ்பெற்ற ஓவியங்களிலும் இசையிலும் இலக்கியத்திலும் காணமுடிகிறது.

  • அரசாங்கத் தடைகள், விமர்சகர்களின் குற்றச்சாட்டுகள், மத விரோதிகளின் தீவைப்பு ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பைபிள் தப்பி வந்திருக்கிறது. வரலாற்றில் எந்தவொரு புத்தகமும் இந்தளவு எதிர்ப்பைச் சந்தித்ததுமில்லை, அதிலிருந்து தப்பி வந்ததுமில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் யாவும் பைபிள் ஈடிணையற்ற புத்தகம் என்பதைக் காட்டுகின்றன, அல்லவா? உண்மைதான், ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விவரங்களும் புள்ளிவிவரங்களும் மட்டுமே பைபிளை நம்பகமான புத்தகம் என நிரூபிப்பதில்லை. லட்சக்கணக்கானோர் பைபிளை நம்பத்தகுந்த புத்தகமாக ஏற்றுக்கொள்வதற்கான ஐந்து காரணங்களை நாம் அடுத்து பார்க்கலாம்.

a கூட்டன்பர்க் அச்சிட்ட லத்தீன் மொழிபெயர்ப்பு பைபிள், 42 வரி பைபிள் எனவும் அழைக்கப்பட்டது. அது சுமார் 1455-⁠ல் பிரசுரிக்கப்பட்டது.