Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாங்கள் பிரிந்துவிட வேண்டுமா?

நாங்கள் பிரிந்துவிட வேண்டுமா?

இளைஞர் கேட்கின்றனர்

நாங்கள் பிரிந்துவிட வேண்டுமா?

“நாங்க பழக ஆரம்பிச்சு மூனு மாசம்தான் ஆகியிருந்துச்சு. எங்க இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப்போகும்னு தோனுச்சு. வாழ்க்க பூரா ஒன்னாவே இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட மாதிரி பழகுனோம்.”​—⁠ஜெஸிக்கா. *

“முதல்ல நான்தான் அவன்மேல பைத்தியமா இருந்தேன், சில வருஷம் கழிச்சுதான் அவன் பார்வையே என் மேல பட ஆரம்பிச்சுது. என்னோட பாய்ஃபிரெண்ட் என்னவிட வயசுல பெரியவனா இருந்தா, என்னைக் கண்கலங்காம வச்சிப்பான்னு நெனச்சேன்.”​—⁠கேரல்.

கொஞ்ச நாட்களில் ஜெஸிக்காவும் கேரலும் தங்கள் பாய்ஃபிரெண்டுகளிடமிருந்து பிரிந்துவிட்டார்கள். ஏன் பிரிந்துவிட்டார்கள்? இவ்வளவு ‘சூப்பரான’ பையன்களை இவர்கள் விட்டுவிட்டது மடத்தனம் என்று நினைக்கிறீர்களா?

கிட்டத்தட்ட ஒரு வருடமாக யாரோ ஒருவரை நீங்கள் காதலித்து வருகிறீர்கள். ஆரம்பத்தில், “இவன்தான் எனக்கு ஏற்றவன்” என்று முடிவு செய்துவிடுகிறீர்கள். * நீங்கள் இருவரும் பழக ஆரம்பித்தபோது உங்களுக்குள் ஓர் இனம் புரியாத உணர்வு ஊடுருவிச் சென்றது, அதை நினைத்து நினைத்து நீங்கள் சிலிர்த்துப்போகிறீர்கள். ஆனால், இப்போது அந்த உணர்வு மெல்ல மெல்ல மறைந்து, அவன் உங்களுக்கு உண்மையிலேயே ஏற்றவனா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது. அதை நீங்கள் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமா, இந்த உறவை தொடர்வதா வேண்டாமா என்பதை எப்படித் தீர்மானிப்பீர்கள்?

முதலில், இந்தக் கசப்பான உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: உங்களுடைய காதல் உறவில் தெரிய வருகிற அபாய அறிகுறிகளை அசட்டை செய்துவிடுவது, கார் டேஷ்போர்டில் தெரியும் அபாய அறிவிப்புகளை அசட்டை செய்வதற்குச் சமம். அசட்டை செய்வதால், பிரச்சினை தீர்ந்துவிடாது, இன்னும் மோசமாகத்தான் ஆகும். நீங்கள் ஒருவரைக் காதலிக்கும்போது உங்கள் உறவில் தென்படுகிற என்னென்ன அபாய அறிகுறிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்?

கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் பூ பூக்கிறது. வேகமாய் வளரும் காதலில் பிரச்சினைகள் வரலாம். “நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஈ-⁠மெயில் அனுப்பினோம், இன்டெர்நெட்ல சாட்டிங் செஞ்சோம், ஃபோன்ல பேசினோம். இப்படி, நேருக்கு நேர் சந்திக்காம பேசும்போது ரொம்ப சீக்கிரமா நெருக்கம் ஏற்பட்டுவிட வாய்ப்பிருக்கு” என்கிறாள் கேரல். ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்குக் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். வேகமாய் முளைத்து வாடிவிடுகிற களைகளைப் போல் உங்கள் காதல் இருக்கக்கூடாது; படிப்படியாய்ச் செழித்து வளரும் பயிரைப் போல் உங்கள் காதல் இருக்க வேண்டும்.

குறை சொல்கிறான், கேவலமாக நடத்துகிறான். “என் பாய்ஃபிரெண்ட் எப்ப பார்த்தாலும் என்னை மட்டம் தட்டியே பேசுவான். ஆனாலும் அவனை பாக்காம என்னால் இருக்கவே முடியல” என்கிறாள் அனா. “எதெல்லாம் கனவுலகூட நான் சகிச்சிக்க மாட்டேனோ அதெல்லாம் அவனுக்காக சகிச்சிக்கிட்டேன்!” என்று அவள் மேலும் கூறுகிறாள். ஆனால், ‘பழித்துப் பேசுவதை’ பைபிள் கண்டனம் செய்கிறது. (எபேசியர் 4:​31, NW) வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் சிலர் மென்மையான தொனியில் சுருக்கென்று பேசலாம். ஆனால், அன்பான உறவில் அப்படிப்பட்ட பேச்சுக்கு இடமே கிடையாது.​—நீதிமொழிகள் 12:⁠18.

அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். “விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்” என்று நீதிமொழிகள் 17:27 சொல்கிறது. இந்த விஷயத்தில் தன்னுடைய பாய்ஃபிரெண்ட் ரொம்ப மோசம் என்பதை எரின் தெரிந்துகொண்டாள். “அவன் சொல்றத நான் ஒத்துக்கலைன்னா என்னை பிடிச்சு ஒரே தள்ளா தள்ளிடுவான் . . . சிலசமயத்தில அவன் அடிக்கிற அடியில என் உடம்பெல்லாம் கன்னிப்போயிடும்” என்கிறாள் அனா. “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் . . . உங்களைவிட்டு நீங்கக்கடவது” என்று கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுரை கூறுகிறது. (எபேசியர் 4:31) சுயக்கட்டுப்பாடு இல்லாதவனுக்குக் காதலிக்கத் தகுதியே இல்லை.​—2 தீமோத்தேயு 3:​1, 3, 5.

நாங்கள் பழகுவதை ரகசியமாக வைக்க விரும்புகிறான். “நாங்க காதலிக்கிறது யாருக்குமே தெரியக்கூடாதுன்னு என் பாய்ஃபிரெண்ட் நெனச்சான்” என்கிறாள் ஏஞ்சலா. “எங்க அப்பாவுக்கு தெரிஞ்சதும் அவன் ரொம்ப அப்செட் ஆயிட்டான்!” உண்மைதான், டேட்டிங் செய்பவர்கள் தங்களுடைய சொந்த விஷயங்களை வெளிப்படுத்தாமல் இருக்க சில நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் பழகுவதைத் தெரியப்படுத்த வேண்டியவர்களுக்குத் தெரியப்படுத்தாமல் வேண்டுமென்றே ரகசியமாய் வைப்பது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.

கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவனுக்கு இல்லை. கிறிஸ்தவர்கள் ஒருவேளை டேட்டிங் செய்தால் அதில் ஒரு கண்ணியமான நோக்கம் இருக்கும். ஆம், அந்நபரை கல்யாணம் செய்துகொள்வதா வேண்டாமா என்று தெரிந்துகொள்ளவே டேட்டிங் செய்கிறார்கள். அதற்காக, நீங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்த அடுத்த நாளே கல்யாணத் திட்டங்களைப் போட வேண்டுமென்று அர்த்தமில்லை. சொல்லப்போனால், அநேக நாடுகளில் தாங்கள் டேட்டிங் செய்த முதல் நபரையே பெரும்பாலோர் கல்யாணம் செய்துகொள்வது கிடையாது. அதேசமயம், திருமண வாழ்க்கையில் உள்ள பொறுப்புகளை ஏற்பதற்குத் தயாராக இல்லாத ஒருவர் டேட்டிங் செய்யக்கூடாது.

நாங்கள் அடிக்கடி பிரிந்துவிடுவோம், சேர்ந்துகொள்வோம். ‘சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்’ என்று நீதிமொழிகள் 17:17 கூறுகிறது. நீங்கள் இரண்டு பேரும் எல்லா விஷயத்திலும் ஒத்துப்போவீர்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால், அடிக்கடி பிரிவது, சேர்வது என உங்கள் உறவு ஊசலாடிக்கொண்டிருந்தால் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருப்பதையே அது காட்டுகிறது. இதை அனா பின்னர் புரிந்துகொண்டாள். “நானும் என் பாய்ஃபிரெண்டும் சண்டை போட்டுக்கிட்டு பிரியும்போதெல்லாம் என் மனசு சுக்குநூறா உடஞ்சிடும். போனா போகட்டும்னு இருந்திடாம நான்தான் எப்பவும் வலியப் போய் கெஞ்சிக் கூத்தாடி அவன்கூடச் சேர்ந்துக்குவேன்” என்கிறாள் அனா.

செக்ஸ் வைத்துக்கொள்ள வற்புறுத்துவான். “என்னை நீ உண்மையாவே காதலிச்சின்னா இதுக்கு நீ ஒத்துக்குவ.” “சரி, அடுத்த கட்டத்துக்கு எப்போ போறது?” “உடலுறவு கொண்டாதான் தப்பு, மத்தபடி எந்தத் தப்புமில்ல.” செக்ஸில் ஈடுபடும்படி பெண்களை வற்புறுத்துவதற்காகப் பையன்கள் பயன்படுத்தும் மந்திரச் சொற்களே இவை. ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளது’ என யாக்கோபு 3:17 சொல்கிறது. உங்கள் பாய்ஃபிரெண்ட் நல்லொழுக்கம் உள்ளவராக, உங்கள் கற்பை மதிக்கிறவராக இருக்க வேண்டும். உங்கள் ஒழுக்க நெறிகளை என்றைக்குமே விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்!

அவனைப் பற்றிப் பலபேர் என்னிடம் எச்சரித்திருக்கிறார்கள். “போதுமான அறிவுரையைப் பெற்றால்தான் நீ வெற்றி அடைவாய்; இல்லாவிட்டால் தோல்வி அடைவாய்” என்கிறது ஒரு பைபிள் பொன்மொழி. (நீதிமொழிகள் 15:​22, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) இதை ஜெஸிக்கா ஆமோதிக்கிறாள்: “உங்க அப்பா அம்மாவோட கருத்தையோ நீண்டகால நண்பர்களோட கருத்தையோ நீங்க எப்படி அசட்டை செய்ய மாட்டீங்களோ, அதேபோல உங்க மனசுக்குள்ள எதிரொலிக்கிற அபாய அறிவிப்பையும் அசட்டை செஞ்சிடாதீங்க. மத்தவங்க சொல்றத நீங்க அசட்டை செய்யச்செய்ய உங்களுக்குக் கஷ்டத்துக்கு மேல கஷ்டம்தான் வரும்.”

காதல் உறவில் பிரச்சினை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிற அபாய அறிகுறிகளில் சிலவற்றைத்தான் நாம் இதுவரை பார்த்தோம். * நீங்கள் டேட்டிங் செய்கிறீர்கள் என்றால், மேலே பார்த்த விஷயங்களில் உங்கள் பாய்ஃபிரெண்ட் எப்படி? இவை தவிர உங்களுடைய அனுபவத்தில் சந்தித்த பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் அவற்றைக் கீழே எழுதுங்கள்.

.....

உறவை எப்படி முறித்துகொள்வது

உங்கள் உறவை முறித்துகொள்வதுதான் நல்லது என்று நீங்கள் முடிவு செய்துவிட்டதாக வைத்துகொள்ளுங்கள். ஆனால், எப்படி முறிப்பீர்கள்? அதற்கு நிறைய வழிகள் இருந்தாலும், கீழேயுள்ள குறிப்புகளை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

தைரியம் அவசியம். “எல்லாத்துக்கும் என் பாய்ஃபிரெண்டையே நம்பிட்டிருந்தேன். அதனால அவனவிட்டுப் பிரியறத நெனச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு” என்கிறாள் ட்ரீனா. உறவை முறித்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் தீர்மானித்த பிறகு அதைத் தைரியமாகச் சொல்லிவிட வேண்டும். அந்தச் சமயத்தில், உங்கள் பக்கத்தில் இருக்கிற நியாயத்தையும் உங்கள் மனதில் இருப்பதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவதே நல்லது. (நீதிமொழிகள் 22:3) இப்படிச் செய்தால்தான் (டேட்டிங் செய்யும்போதும் சரி திருமணமான பிறகும் சரி) நீங்கள் எதைப் பொறுத்துக்கொள்வீர்கள், எதைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதை அந்த நபருக்குத் தெளிவாகப் புரியவைக்க முடியும்.

நியாயமாய் நடந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஆணாக இருந்திருந்தால் உங்களை அந்தப் பெண் எப்படி நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்? (மத்தேயு 7:12) ஆகவே, ‘நாம பிரிஞ்சிடலாம்’ என்று உங்கள் பாய்ஃபிரெண்டுக்கு வெறும் ஈமெயில், எஸ்எம்எஸ், அல்லது வாய்ஸ் மெயில் அனுப்பினால் அது நியாயமாய் இருக்காது.

சரியான சூழலைத் தேர்ந்தெடுங்கள். நேருக்கு நேர் பேசுவதா அல்லது ஃபோனில் பேசுவதா? கடிதம் எழுதுவதா அல்லது கலந்து பேசுவதா? எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. உங்களுக்கு ஆபத்தைத் தேடித்தருகிற சூழ்நிலையில்.. தவறான ஆசைகளைத் தூண்டிவிடுகிற தனிமையான இடத்தில்.. சந்திப்பதைத் தவிருங்கள்.​—1 தெசலோனிக்கேயர் 4:⁠3.

உண்மை பேசுங்கள். நீங்கள் ஏன் அவரைவிட்டுப் பிரிய நினைக்கிறீர்கள் என்பதைச் சுற்றிவளைக்காமல் நேரடியாகச் சொல்லிவிடுங்கள். உங்கள் பாய்ஃபிரெண்ட் உங்களை மோசமாக நடத்துவதாக நீங்கள் நினைத்தால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள். உதாரணமாக, “நீ எப்பவும் என்னை மட்டம்தட்டி பேசற” என்று சொல்வதற்குப் பதிலாக “இப்படிச் சொன்னது . . . என்னை மட்டம் தட்டிபேசுற மாதிரி இருந்துச்சு” என்று சொல்லுங்கள்.

காதுகொடுத்துக் கேளுங்கள். ஒருவேளை நீங்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டீர்களா என யோசித்துப் பாருங்கள். ஆனால், அவர் உங்களிடம் நைசாகப் பேசி உங்களை ஏமாற்ற இடமளித்துவிடாதீர்கள். அதோடு நியாயமாய் நடந்துகொள்ளுங்கள், எல்லா உண்மைகளையும் அலசிப் பாருங்கள். “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” என்ற ஞானமான அறிவுரையை கிறிஸ்தவர்களுக்கு பைபிள் தருகிறது.​—யாக்கோபு 1:19. (g 1/09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ இக்கட்டுரையில் வரும் பெயர்கள் நிஜப் பெயர்கள் அல்ல.

^ இந்தக் கட்டுரை ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதிலுள்ள நெறிமுறைகள் ஆணுக்கும் பொருந்தும்.

^ கூடுதல் தகவல் பெற, மே 2007 விழித்தெழு! பக்கங்கள் 18-⁠20-⁠ஐக் காண்க.

சிந்திப்பதற்கு

◼ நீங்கள் டேட் செய்யப்போகிற நபரிடம் என்னென்ன குணங்களை எதிர்பார்ப்பீர்கள்? .....

◼ என்னென்ன குணங்களை விரும்ப மாட்டீர்கள்? .....

[பக்கம் 31-ன் பெட்டி]

நீங்கள் டேட் செய்யப்போகிற நபர் . . .

❑ உங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.​—⁠1 கொரிந்தியர் 7:⁠39.

❑ உங்கள் ஒழுக்க நெறிகளை மதிக்க வேண்டும்.​—⁠1 கொரிந்தியர் 6:⁠18.

❑ உங்களிடமும் மற்றவர்களிடமும் கரிசனையுடன் நடந்துகொள்ள வேண்டும்.​—⁠பிலிப்பியர் 2:⁠4.

❑ நல்ல பெயர் எடுத்திருக்க வேண்டும்.​—⁠பிலிப்பியர் 2:⁠20.

[பக்கம் 31-ன் பெட்டி]

உஷார், உங்கள் பாய்ஃபிரெண்ட் . . .

❑ தான் சொல்கிறபடிதான் செய்ய வேண்டுமென வற்புறுத்தினால்.

❑ உங்களை எப்போதும் குற்றவாளியாக, முட்டாளாக, லாயக்கற்றவளாக உணர வைத்தால்.

❑ உங்கள் நண்பர்களோடு, அப்பா அம்மாவோடு ஒட்டவிடாமல் தடுத்தால்.

❑ என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள் என்று எப்போதும் விசாரணை செய்துகொண்டே இருந்தால்.

❑ மற்ற ஆண்களோடு நெருங்கிப் பழகுவதாக ஆதாரமே இல்லாமல் உங்களைக் குற்றப்படுத்தினால்.

❑ மிரட்டினால் அல்லது இறுதி எச்சரிக்கைகள் கொடுத்தால்.

[பக்கம் 30-ன் படம்]

உங்களுடைய காதல் உறவில் தெரிய வருகிற அபாய அறிகுறிகளை அசட்டை செய்துவிடுவது, கார் டேஷ்போர்டில் தெரியும் அபாய அறிவிப்புகளை அசட்டை செய்வதற்குச் சமம்

CHECK OIL