Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க முடியும்!

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க முடியும்!

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க முடியும்!

“நினைவாற்றல் நித்தம் நம் உலகை விரிவாக்குகிறது. அது இல்லையேல், நம் வாழ்க்கை ஒரு தொடர்கதையாய் இராது; தினம் தினம் கண்ணாடி முன் நிற்கையில் நம்மைப் பார்த்து யாரோ அந்நியர் என நினைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு சம்பவமும் தொடர்பில்லாமல் தனித்தனியாக நிற்கும்; கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் மாட்டோம், எதிர்காலத்தை எதிர்நோக்கவும் மாட்டோம்.”​—⁠“மனதைப் பற்றிய மர்மங்கள்” (ஆங்கிலம்).

சில பறவைகள் தானியங்களைச் சேகரித்து வைத்த இடத்தைப் பல மாதங்களானாலும் மறப்பதில்லை; அதேமாதிரி அணில்களும் கொட்டைகளைப் புதைத்து வைத்த இடத்தை மறந்துவிட்டு முழிப்பதில்லை; ஆனால் ஒரு மணிநேரத்திற்கு முன்பு நம்முடைய சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிட்டு விழிபிதுங்கி நிற்கிறோம்!! ஆம், ‘எனக்கு மறதி அதிகம்’ என்று நம்மில் அநேகர் குறைபட்டுக்கொள்கிறோம். மனித மூளை பரிபூரணமாக இல்லாவிட்டாலும், கற்றுக்கொள்வதற்கும் நினைவில் வைப்பதற்கும் அதற்கு அபார திறன் இருக்கிறது. எனவே, நம்மிடம் இருக்கிற இந்தத் திறமையை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அபார ஆற்றல்

கிட்டத்தட்ட பம்பளிமாசு பழத்தின் அளவுள்ள மனித மூளையின் எடை சுமார் ஒன்றரை கிலோ. என்றாலும், அதில் சுமார் 10,000 கோடி நியூரான்கள், அதாவது நரம்பு செல்கள் இருக்கின்றன; இவையனைத்தும் மலைக்கவைக்கும் சிக்கலான வலைப்பின்னலாகச் செயல்படுகின்றன. சொல்லப்போனால், ஒரேவொரு நரம்பு செல் ஒரு லட்சம் நரம்பு செல்களோடு இணைக்கப்பட்டிருக்கலாம். இந்த இணைப்புகள் இருப்பதால்தான் மூளை எண்ணற்ற தகவல்களை ஒழுங்கமைத்து, நினைவில் நிறுத்திக்கொள்கிறது. ஆனால், தேவையான சமயத்தில் அந்தத் தகவல்களை நினைவுக்குக் கொண்டு வருவதில்தான் சவாலே இருக்கிறது. ஆனால், விஷயங்களை நினைவில் வைப்பதில் சிலர் சூரப்புலிகளாக இருக்கிறார்கள், ஏன், ரொம்பப் படிக்காதவர்களும்தான்.

உதாரணமாக, மேற்கு ஆப்பிரிக்க பழங்குடி மக்களில் ‘கிரியோ’ என்று அழைக்கப்படுகிறவர்கள், அதாவது கதை சொல்பவர்கள், இருக்கிறார்கள். படிப்பு வாசனையே இல்லாத இவர்கள் எத்தனையோ தலைமுறைகளின் பெயர்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். வேர்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்திற்கு புலிட்ஸர் பரிசு பெற்ற அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்க எழுத்தாளரின் வம்சாவளியைக் கண்டுபிடிப்பதற்கு இவர்கள்தான் உதவினார்கள். காம்பியாவில் ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த ஹேலியின் மூதாதையருடைய பெயர்களை இவர்கள் கண்டுபிடித்து சொன்னார்கள். “இந்த ஆப்பிரிக்க பழங்குடியினருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்; ஒரு ‘கிரியோ’வின் மறைவு ஒரு நூலகமே எரிந்து சாம்பலாவதற்குச் சமம் என்று இன்றைய ஆப்பிரிக்காவில் சொல்லப்படுவது மிகையல்ல” என்று ஹேலி கூறினார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆர்டூரோ டோஸ்கனினி என்ற பிரபல இசைக்குழு இயக்குநரின் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்; ஒருமுறை இசைக்குழு இயக்குநர் வராமல் போனபோது 19 வயது டோஸ்கனினி இசைக் குழுவை நடத்துவதற்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இவருடைய திறமையே உலகுக்குத் தெரியவந்தது. கண்பார்வை சரியாக இல்லாதபோதிலும், அவருடைய அபார நினைவாற்றலால் எய்டா என்ற இசை நிகழ்ச்சி முழுவதையும் வெற்றிகரமாய் நடத்தி முடித்தார்!

இதுபோன்ற சாதனைகளைக் கேட்டு நாம் வியக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், தாங்கள் நினைப்பதைவிட பன்மடங்கு அதிகமான தகவல்களை ஞாபகத்தில் வைக்கும் திறன் அநேகருக்கு இருக்கிறது. உங்களுடைய நினைவாற்றலை அதிகரிக்க ஆசையா?

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க . . .

நினைவாற்றலில் மூன்று படிகள் அடங்கியுள்ளன: தகவலை உருவகப்படுத்துவது, அதைத் தக்கவைத்துக்கொள்வது, அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது. தகவலை உங்கள் மூளை அறிந்து, புரிந்துகொள்ளும்போது அதை உருவகப்படுத்துகிறது. பின்பு நினைவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தத் தகவலைத் தக்கவைத்துக்கொள்கிறது. இந்த மூன்று படிகளில் ஏதாவது ஒன்றில் கோளாறு ஏற்படும்போதுதான் நம் அனைவருக்கும் ஞாபக மறதி உண்டாகிறது.

இந்த நினைவாற்றலில் பல்வேறு வகைகள் உள்ளன. புலன் சார்ந்த நினைவாற்றல், குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை அவற்றில் சில. புலன் சார்ந்த நினைவாற்றலுக்கு முகர்தல், பார்த்தல், தொடுதல் போன்ற புலனுணர்வுகள் வாயிலாகத் தகவல்கள் கிடைக்கின்றன. குறுகிய கால நினைவாற்றல் குறுகிய காலத்திற்காகச் சிறுசிறு தகவல்களைப் பதிய வைத்துக்கொள்கிறது. இதனால், மனதிலேயே கணக்குப்போட முடிகிறது; ஒரு தொலைபேசி எண்ணை டயல் செய்யும்வரை ஞாபகத்தில் வைக்க முடிகிறது; அதேபோல், ஒரு வாக்கியத்தின் பிற்பகுதியை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது அதன் முதல் பகுதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால், குறுகிய கால நினைவாற்றலுக்குச் சில வரம்புகள் இருப்பது நமக்குத் தெரிந்ததே.

ஒரு தகவல் என்றென்றும் நினைவில் இருப்பதற்கு, அது உங்களுடைய நீண்ட கால நினைவாற்றலுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அதை எப்படி அங்கே அனுப்புவீர்கள்? பின்வரும் குறிப்புகள் உங்களுக்குக் கைகொடுக்கும்.

ஆர்வம் காட்டுதல் நீங்கள் நினைவில் வைக்க விரும்புகிற விஷயத்தின் பேரில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அந்த விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கான காரணங்களை அடிக்கடி நினைப்பூட்டிக்கொள்ளுங்கள். ஒரு காரியத்தை முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது அது என்றைக்கும் உங்கள் நினைவில் இருக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் தெரிந்திருக்கலாம். பைபிளை ஆராய்ந்து படிப்பவர்களுக்கு இந்த விஷயம் பேருதவியாக இருக்கும். கடவுளிடம் நெருங்கிவர வேண்டும், அவரைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்கள் பைபிளைப் படிக்கும்போது, அவற்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.​—நீதிமொழிகள் 7:3; 2 தீமோத்தேயு 3:⁠16.

கவனம் செலுத்துதல் “நாம் சில விஷயங்களை மறந்துவிடுவதற்கு முக்கியக் காரணம் கவனக்குறைவுதான்” என்று சொல்கிறது மனதைப் பற்றிய மர்மங்கள் புத்தகம். சரி, கவனக்குறைவை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்? ஆர்வத்தோடு கேளுங்கள், முடிந்தால் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பெடுக்கையில் ஒருவர் தன் மனதை ஒருமுகப்படுத்த முடியும். பிற்பாடு அவற்றை எடுத்துப் பார்க்கவும் முடியும்.

புரிந்துகொள்ளுதல் “என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் [“புரிந்துகொள்ளுதலை,” NW] சம்பாதித்துக்கொள்” என்று நீதிமொழிகள் 4:7 சொல்கிறது. ஒரு பாடமோ கருத்தோ உங்களுக்குப் புரியவில்லை என்றால், அதை நினைவில் வைப்பது கஷ்டமாக இருக்கலாம். தகவலைப் புரிந்துகொண்டால்தான் அதிலுள்ள விஷயங்கள் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன, எப்படி முழு தகவலோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை உடனடியாகக் கிரகித்துக்கொள்வீர்கள். உதாரணமாக, என்ஜின் எப்படி வேலை செய்கிறது என்பதை பொறியியல் மாணவன் புரிந்துகொண்டால்தான், அந்த என்ஜினைப் பற்றிய நுட்பமான விவரங்களை அவனால் சுலபமாய் ஞாபகத்தில் வைக்க முடியும்.

ஒழுங்கமைத்தல் ஒத்த கருத்துகளை அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய விஷயங்களை வகைப்படுத்திக் கொள்ளுங்கள். மளிகை சாமான் வாங்கப் போகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை வகைப்படுத்திக் கொண்டால் நினைவில் வைப்பது சுலபம். இறைச்சி வகைகள், காய்கறிகள், பழவகைகள், இன்னும்.. இன்னும்.. என்று தனித்தனியாக வகைப்படுத்திக் கொள்ளுங்கள். அதேசமயம், நினைவில் வைத்துக்கொள்வதற்கு வசதியாக அவற்றைச் சிறுசிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஐந்து முதல் ஏழு ஐட்டம்களாக வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், தொலைபேசி எண்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டால் மறக்க மாட்டீர்கள். அதோடு, உங்கள் பட்டியலை அகர வரிசையில் நினைவில் வைத்துக்கொள்வது உதவியாக இருக்கலாம்.

ஒப்பித்தல், அதாவது வாய்விட்டுச் சொல்லுதல் நினைவில் வைக்க வேண்டிய விஷயத்தை (உதாரணமாக, வேற்று மொழி வார்த்தை அல்லது சொற்றொடரை) அடிக்கடி சத்தமாகச் சொல்லிப் பார்த்துக்கொண்டால் உங்கள் மூளையிலுள்ள நரம்பு செல்களின் இணைப்பு உறுதிப்படும். எப்படி? முதலாவது, அந்த வார்த்தையைச் சொல்லிப் பார்க்கும்போது கண்டிப்பாக அதற்குக் கூர்ந்த கவனம் செலுத்துவீர்கள். இரண்டாவது, நீங்கள் தவறாக உச்சரித்தால் உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பவர் உடனடியாகத் திருத்துவார்; அப்படியில்லையென்றால் சரியென்று சொல்லுவார். மூன்றாவது, நீங்கள் சொல்வதை நீங்களே கேட்கும்போது, மூளையிலுள்ள மற்ற பாகங்களும் செயல்படுகின்றன.

மனக்கண்ணில் ஓடவிடுதல் நீங்கள் ஞாபகத்தில் வைக்க விரும்பும் விஷயத்தை மனக்கண்ணில் கற்பனை செய்துபாருங்கள். அப்படிக் கற்பனை செய்வதை பேப்பரில் வரைந்துகொள்ளுங்கள் அல்லது எழுதிவைத்துக் கொள்ளுங்கள். வாய்விட்டுச் சொல்வதைப் போலவே மனக்கண்ணில் ஓடவிடும்போதும் உங்கள் மூளையிலுள்ள பல்வேறு பாகங்கள் செயல்படும். எந்தளவுக்கு உங்கள் புலன்களைப் பயன்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு விஷயங்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.

சம்பந்தப்படுத்திப் பார்த்தல் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயத்தோடு அதைத் தொடர்புபடுத்திப் பாருங்கள். இப்படித் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, அதை மனதில் உருவகப்படுத்தி மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டுவருவது எளிதாகும். சுருங்கச் சொன்னால், தொடர்புபடுத்திப் பார்க்கும்போது ஏற்கெனவே பதிவாகியுள்ள விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவர மூளைக்கு சிக்னல் கிடைக்கிறது. உதாரணமாக, ஒருவருடைய பெயரை ஞாபகத்தில் வைக்க வேண்டுமென்றால், அவருடைய தோற்றத்திலுள்ள ஏதாவதொரு வித்தியாசமான அம்சத்துடன் அல்லது எளிதில் மனதுக்குக் கொண்டுவர உதவும் ஓர் அம்சத்துடன் அதைத் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். அந்த அம்சம் எந்தளவு கேலிக்குரியதாக அல்லது எந்தளவு வினோதமாக இருக்கிறதோ அந்தளவு எளிதாக அவருடைய பெயரை நினைவுக்குக் கொண்டுவர முடியும். சுருக்கமாகச் சொன்னால், நாம் நினைவில் வைக்க விரும்பும் ஆட்களையும் பொருள்களையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

நினைவாற்றலைத் தேடி என்ற ஆங்கில நூல் இவ்வாறு கூறுகிறது: “நம்முடைய வாழ்க்கையைப் பற்றி அதிகம் யோசிக்காமல்.. திட்டமிடாமல்.. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல்.. அனுபவங்களிலிருந்து பாடம் படிக்காமல் இருந்தால், நாம் எங்கெல்லாம் சென்றோம், என்னவெல்லாம் செய்தோம் என்பதைப் பற்றிய நினைவுகள் மங்கலாகவே இருக்கும்.”

ஊன்றவைத்தல் சோப்பு நீரில் துணி நன்றாக ஊறுவதற்கு நேரம் தேவைப்படுவதுபோல் தகவல்கள் உங்கள் மனதில் நன்றாக ஊன்றுவதற்கும் நேரம் தேவை. இதற்கு மிகச் சிறந்த வழி, நீங்கள் கற்ற விஷயத்தை மீண்டும் அசைபோட்டு பார்ப்பது, அல்லது யாரிடமாவது சொல்வது. சுவாரஸ்யமான ஓர் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அல்லது பைபிளிலிருந்தோ பைபிள் பிரசுரத்திலிருந்தோ உற்சாகமூட்டும் ஒரு விஷயத்தை வாசித்திருந்தால் யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது இருவருக்கும் பலன் கிடைக்கும். அதாவது, உங்களுடைய நினைவாற்றலும் கூர்மையாகும், அதைக் கேட்பவருடைய மனமும் உற்சாகமடையும். அதனால்தான், “திரும்பத்திரும்ப சொல்லுதலே நினைவாற்றலின் சூட்சுமம்” என்று சொல்லப்படுகிறது.

மனதில் நிறுத்த​—⁠நினைவூட்டும் வாசகம்

பூர்வ கிரேக்கிலும் ரோமிலும் இருந்த சொல்வன்மைமிக்க பேச்சாளர்கள் குறிப்புத்தாள் இல்லாமலேயே நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார்கள். அவர்களால் அதை எப்படிச் செய்ய முடிந்தது? நினைவூட்டும் வாசகங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். நினைவூட்டும் வாசகம் என்பது தகவல்களை நீண்ட கால நினைவாற்றலில் வைத்து, தேவைப்படும்போது அவற்றை நினைவுக்குக் கொண்டுவர உதவும் ஒரு வழி.

பூர்வ கிரேக்க சொற்பொழிவாளர்களும் நினைவூட்டும் வாசகங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், அவர்கள் பயன்படுத்திய முறைக்குப் பெயர், லோகி முறை அல்லது கற்பனைப் பயணம் செல்லும் முறை; பொ.ச.மு. 477-⁠ல் சியஸ் தீவைச் சேர்ந்த கிரேக்க கவிஞர் சைமோனிடெஸ்தான் இந்த முறையை முதன் முதலில் விளக்கினார். ஒழுங்கமைத்தல், மனக்கண்ணில் ஓடவிடுதல், பரிச்சயமான ஒன்றுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தல் ஆகியவற்றிலுள்ள விதிகளின் ஒரு கூட்டுக்கலவைதான் இந்த லோகி முறை. சம்பந்தப்படுத்திப் பார்த்தல் என்பது நினைவில் வைக்க வேண்டிய விஷயத்தை சாலையிலுள்ள ஓர் அடையாளத்துடன் அல்லது ஓர் அறையிலோ வீட்டிலோ உள்ள ஒரு பொருளுடன் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதாகும். லோகி முறையைப் பயன்படுத்துகிறவர்கள் தங்கள் மனதிலேயே ஒரு பயணம் செல்வார்கள்; தாங்கள் நினைவில் வைக்க விரும்பும் ஒவ்வொரு விஷயத்தையும் ஏதாவதொரு அடையாளத்தோடு அல்லது பொருளோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பார்கள். அவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர வேண்டிய சமயத்தில், முதலில் மேற்கொண்ட அதே கற்பனைப் பயணத்தை மீண்டும் மேற்கொள்வார்கள்.​—⁠“ ஒரு கற்பனைப் பயணம் செல்லுங்கள்” என்ற பெட்டியைக் காண்க.

வருடா வருடம், நினைவாற்றலுக்கு உலகப் புகழ்பெற்றவர்களை வைத்து ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இவர்களுடைய அபார நினைவாற்றலுக்குக் காரணம் அதீத புத்திக்கூர்மை அல்ல என்பது இவர்களை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் 40-⁠க்கும் 50-⁠க்கும் இடைப்பட்ட வயதினர். இவர்களுடைய அபார நினைவாற்றலின் ரகசியம் என்ன? நினைவூட்டும் வாசகங்களைத் திறம்பட பயன்படுத்துவதே எனப் பெரும்பாலோர் சொன்னார்கள்.

ஒரு நீண்ட பட்டியலை நீங்கள் நினைவில் வைக்க வேண்டுமா? அந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தையும் அல்லது எழுத்துக்களையும் வைத்து ஒரு புது வார்த்தையை உருவாக்குங்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘அக்ரோனிம்’ (acronym) என அழைக்கிறார்கள். வட அமெரிக்க நாட்டவர் பலர், அவர்களுடைய நாட்டில் உள்ள ஐந்து பெரிய ஏரிகளின் பெயர்களை​—⁠Huron, Ontario, Michigan, Erie, Superior என்ற பெயர்களை​—⁠“HOMES” என்ற வாசகத்தின் மூலம் நினைவில் வைக்கிறார்கள். விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் இன்னொரு முறை “அக்ராஸ்டிக் முறை” (acrostic). பழங்கால எபிரெயர்கள் இந்த முறையைப் பரவலாகப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக, அநேக சங்கீதங்களில், ஒவ்வொரு வசனத்தின் அல்லது பல வசனங்களின் முதல் வார்த்தை எபிரெய எழுத்துக்களின் அகரவரிசையில் தொடங்கின. 119-⁠வது சங்கீதத்தில் வரும் 176 வசனங்களையும் மனப்பாடமாகச் சொல்ல பாடகர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவியது.

ஆம், உங்கள் நினைவாற்றலைப் பயிற்றுவித்து நன்றாகப் பட்டைத் தீட்டிக்கொள்ள முடியும். ஆராய்ச்சிகள் காட்டுகிறபடி, நம் நினைவாற்றலும் தசையும் ஒன்று. நாம் எந்தளவுக்கு அதைப் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு அது பயன்தரும், முதிர் வயதிலும்கூட! (g 2/09)

[பக்கம் 15-ன் பெட்டி]

டிப்ஸ்! டிப்ஸ்!! டிப்ஸ்!!!

◼புதுப்புது திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலமோ புதுப்புது பாஷைகளைக் கற்றுக்கொள்வதன் மூலமோ ஏதாவதொரு இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலமோ உங்கள் நினைவாற்றலை முடுக்கிவிடுங்கள்.

◼மிகமிக முக்கியமான விஷயங்கள்மீது உங்கள் கவனத்தை ஊன்றவையுங்கள்.

◼நினைவூட்டும் வாசக முறையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

◼போதுமானளவு தண்ணீர் குடியுங்கள். உடலில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டால், மனக்குழப்பம் ஏற்படலாம்.

◼நன்றாகத் தூங்குங்கள். நீங்கள் தூங்கும்போது தகவல்களை உங்களுடைய மூளை நினைவில் பதியவைக்கிறது.

◼டென்ஷனாகாமல் சாவகாசமாகப் படியுங்கள். ரொம்ப டென்ஷனாகிவிட்டால், கார்டீஸால் என்ற சுரப்பி அதிகமாய்ச் சுரந்து உங்களுடைய நரம்பின் இயக்கங்களைப் பாதிக்கும்.

◼அளவுக்குமீறி மது அருந்தாதீர்கள்; புகைபிடிக்காதீர்கள். மது அருந்துவது குறுகிய கால நினைவாற்றலைப் பாதிக்கிறது. குடிக்கு அடிமையாகிவிட்டால், தையமின், அதாவது உங்கள் நினைவாற்றல் சரியாகச் செயல்பட உதவும் பி-வைட்டமின் குறைந்துவிடலாம். புகைபிடித்தால் உங்கள் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. *

[அடிக்குறிப்பு]

^ தகவல்கள், மூளை-⁠மனம் என்ற ஆங்கில எலக்ட்ரானிக் பத்திரிகையின் அடிப்படையில்.

[பக்கம் 14, 15-ன் பெட்டி/படங்கள்]

 கற்பனைப் பயணம் செல்லுங்கள்

ரொட்டி, முட்டை, பால், வெண்ணெய்.. என மளிகை சாமான் பட்டியல் நீண்டுகொண்டே போனால் எப்படி நினைவில் வைப்பீர்கள்? வீட்டில் நீங்கள் கற்பனைப் பயணம் செல்கையில் அந்தப் பொருள்களையெல்லாம் ஒவ்வொரு இடத்தில் வைத்துப் “பாருங்கள்.”

இப்படிக் கற்பனை செய்யுங்கள்: நாற்காலியின் குஷன் ரொட்டியால் செய்யப்பட்டிருக்கிறது

முட்டைகளை விளக்கு அடைகாக்கிறது

பால் தொட்டியில் மீன் நீந்துகிறது

டிவி திரை முழுவதும் வெண்ணெய் அப்பியிருக்கிறது.

எந்தளவு நகைச்சுவையாக அல்லது வினோதமாகச் சிந்திக்கிறீர்களோ அந்தளவுக்கு நல்லது! நீங்கள் கடைக்குப் போனவுடன், உங்கள் கற்பனைப் பயணத்தை மறுபடியும் உங்கள் மனத்திரையில் ஓடவிடுங்கள்.

[பக்கம் 16-ன் பெட்டி]

மறப்பதும் நன்றே!

அதிமுக்கியமான விஷயங்கள்.. அற்பமான விஷயங்கள்.. இப்படி எல்லாமே உங்கள் நினைவில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்குமெனக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் நினைவகம் ஒரு பெரிய குப்பைத் தொட்டிபோல இருக்குமல்லவா? வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்த ஒரு பெண்மணியைப் பற்றி நியு ஸைன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது: ‘எல்லாமே என் ஞாபகத்திற்கு வரும், அவற்றைக் கட்டுப்படுத்தவே முடியாது, அப்படியே துவண்டு விடுவேன், எனக்கு ரொம்ப பாரமாக இருக்கும்’ என்று அவள் குறிப்பிட்டாள். ஆனால், நம்மில் அநேகருக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஏனென்றால், தேவையில்லாத விஷயங்களையும் செல்லரித்துப்போன செய்திகளையும் களைந்துபோடுகிற திறன் நம் மூளைக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். “மறக்கும் திறன் படைத்த மூளைக்கு ஞாபகசக்தி அதிகம். ஆனால், பயனுள்ள தகவல்களை நாம் மறந்துவிடும்போது, . . . களைந்துபோடும் திறன் நம் மூளைக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று அர்த்தம்” என்கிறது நியு சைன்டிஸ்ட் பத்திரிகை.