Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு முதலிடம் கொடுத்ததால் எத்தனை எத்தனை ஆசீர்வாதங்கள்!

கடவுளுக்கு முதலிடம் கொடுத்ததால் எத்தனை எத்தனை ஆசீர்வாதங்கள்!

கடவுளுக்கு முதலிடம் கொடுத்ததால் எத்தனை எத்தனை ஆசீர்வாதங்கள்!

பையர் வரூ சொன்னது

“பான்சூர்!” வாழ்க்கை பூராவும் இந்த பிரெஞ்சு வார்த்தையைச் சொல்லிதான் வணக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால், அப்படிச் சொன்னதற்காக நவம்பர் மாதம் 1975-ல் என்னைக் கைது பண்ணினார்கள். ஏன் என்றுதானே யோசிக்கிறீர்கள்? அந்தக் கதையை சொல்கிறேன் கேளுங்கள். அதோடு, அன்று முதல் இன்று வரை நடந்த விஷயங்களையும் சொல்கிறேன், கேளுங்கள்.

ஜனவரி 1, 1944-ல் மல்லிட்டி என்ற இடத்தில் பிறந்தேன். அது மத்திய பெனின் நாட்டில் சவே என்ற பட்டணத்தின் புறநகராகும். * யொருபா பாரம்பரியத்தை மறக்காதிருக்க என் அப்பா அம்மா எனக்கு அபியோலா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால், நான் சிறுவனாய் இருந்தபோதே பையர் என்று என் பெயரை மாற்றிக்கொண்டேன். அது கொஞ்சம் நவீனமாகவும் பிரபலமாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

எங்கள் ஊரில் குட்டீஸ்களுக்குச் செல்லப் பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எனக்கும் அப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டது. நான் பிறந்தபோது அந்த ஊர் பாஸ்டரின் சாயலில் இருந்ததால், ஊர் மக்களெல்லாரும் சேர்ந்து பாஸ்டர் என்றே எனக்குப் பெயர் வைத்துவிட்டார்கள். ஆனால், சன்டே கிளாஸுக்குப் போவதைவிட கால்பந்து விளையாடத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

என் பள்ளிப் படிப்பைத் தொடர்வதற்காக 1959-ல் சக்கட்டி என்ற பட்டணத்துக்குக் குடிமாறிப் போனேன். இந்தப் பட்டணம் பெனின் நாட்டின் தெற்கே இருக்கிறது. அங்கே என் பெரியப்பா மகன் சைமனோடு தங்கினேன். அவர் ஒரு வாத்தியாராக வேலை பார்த்து வந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தார். ஆரம்பத்தில் அவர்களோடு உட்கார்ந்து படிக்க எனக்குக் கொஞ்சம்கூட இஷ்டமில்லை. பின்பு ஒருநாள் சைமனின் தம்பி மிஷலையும் பைபிள் படிப்பில் கலந்துகொள்ளும்படி சொன்னேன். அவனும் ஒத்துக்கொண்டான். அப்போதுதான் முதல்முறையாக யெகோவாவின் பெயரைக் கேள்விப்பட்டேன்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் நாங்கள் மூன்று பேரும் சர்ச்சுக்குப் போவது வழக்கம். ஆனால், அன்றைக்கு நாங்கள் சர்ச்சுக்குப் போகாமல் யெகோவாவின் சாட்சிகளின் கூட்டத்துக்குச் சென்றோம். ஐந்தே பேர்தான் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள்; நாங்கள் மூன்று பேரும், சாட்சிகள் இரண்டு பேரும்தான் அந்த ஐந்து பேர். இருந்தாலும், இதுதான் சத்தியம் என நாங்கள் புரிந்துகொண்டோம், அதனால் தொடர்ந்து பைபிளைப் படித்து வந்தோம். மிஷல்தான் முதலில் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் எடுத்தான். இன்றைக்கு அவன் ஒரு பயனியராக இருக்கிறான். முழுநேர ஊழியம் செய்கிறவர்களை யெகோவாவின் சாட்சிகள் இப்படித்தான் அழைக்கிறார்கள்.

பெனினுக்கு வடக்கே உள்ள கோகாரோ என்ற பட்டணத்திற்கு சைமன் குடிமாறிப் போனார். நானும் அவருடன் போனேன். ஹவான்சூகான் என்ற கிராமத்தில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு மாநாட்டை நடத்தப் போவதாகக் கேள்விப்பட்டோம். சைமன் ஒரு டாக்ஸி பிடித்து மாநாட்டுக்குச் சென்றார். நான் 220 கிலோமீட்டர் தூரம் என் சைக்கிளிலேயே போனேன். 1961 செப்டம்பர் 15-ஆம் தேதி நாங்கள் இருவரும் அங்கே ஞானஸ்நானம் பெற்றோம்.

முழுநேர ஊழியத்தோடு வந்த சவால்கள்

நான் ஓவியங்கள் வரைந்து அவற்றை விற்று வந்தேன், அதோடு செழிப்பான ஒரு நிலத்தில் பயிர் செய்துவந்தேன். இதில் கிடைத்த வருமானத்தை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டினேன். ஒருமுறை ஃபீலீப் ஸானாவு என்ற பயணக் கண்காணி எங்கள் சபைக்கு வந்திருந்தார். முழுநேர ஊழியம் செய்யச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். நானும் என் நண்பன் எமான்யல் ஃபாடுன்பீயும் அதைக் குறித்து யோசித்துப் பார்த்தோம். பிற்பாடு 1966 பிப்ரவரி மாதத்தில் முழுநேர சேவையைத் தொடங்குவதாக அவரிடம் சொன்னோம். நாளடைவில் நானே ஒரு பயணக் கண்காணியாகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். ஃபான், கூன், யொருபா, பிரெஞ்சு மொழி சபைகளில் சேவை செய்துவந்தேன்.

பின்பு ஒருநாள் ஜூலியன் என்ற இளம் கிறிஸ்தவ சகோதரியைச் சந்தித்தேன். அவள் ரொம்ப அழகாக இருந்தாள். அவளும் என்னை மாதிரியே எளிமையாக வாழ விரும்பினாள். 1971 ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாங்கள் இருவரும் மணம் செய்துகொண்டோம். சபைகளைப் போய்ச் சந்திப்பதில் அவளும் என்னுடன் சேர்ந்துகொண்டாள். 1972 ஆகஸ்ட் 18-ஆம் தேதி எங்கள் மகன் போலா பிறந்தான். ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கு நாங்கள் சைக்கிளிலேயே சென்றோம்; குழந்தையை ஜூலியன் தன் முதுகோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு சைக்கிள் பின்னால் உட்கார்ந்துகொள்வாள். எங்கள் பெட்டிப் படுக்கையை எல்லாம் உள்ளூர் சகோதரர் யாராவது அவருடைய சைக்கிளில் எடுத்து வந்து அங்கு கொடுப்பார். இப்படி, நான்கு வருடங்களாகச் சைக்கிளிலேயே சபைகளைப் போய் சந்தித்தோம்.

ஒருநாள் ஜூலியனுக்கு ரொம்பவே உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அது ஒரு பயங்கரமான இரவு. அடுத்த நாள் காலையில், யாராவது உதவி செய்ய வருவார்களா என எதிர்பார்த்துக்கொண்டு அந்தத் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று அந்தப் பக்கம் ஒரு டாக்ஸி வந்தது. அந்த இடத்தில் டாக்ஸி வருவதெல்லாம் ரொம்ப அபூர்வம்! அதைவிட அபூர்வம் என்னவென்றால், அந்த டாக்ஸி காலியாக இருந்தது!! அந்த டிரைவரிடம் என் நிலைமையை எடுத்துச் சொல்லி, தலைநகர் போர்டோ நோவாவுக்கு எங்களை அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டேன். அது சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அவரும் ஒத்துக்கொண்டார். அங்கு போய் எங்களை இறக்கிவிட்டவுடன் “எனக்கு நீங்கள் பணம் தரவேண்டாம், இதை என் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்!

ஜூலியன் இரண்டு வாரங்களுக்கு ஒரு சகோதரியின் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. கரிசணையுள்ள ஒரு டாக்டர் தினமும் வீட்டுக்கே வந்து பார்த்துவிட்டுச் சென்றார். வரும்போது மருந்துகளையும் எடுத்து வந்தார். கடைசியாக வந்து ஜுலியனுக்குச் சிகிச்சை அளித்துவிட்டுச் சென்றபோது நான் பயந்துகொண்டே அவரிடம் போய் “எவ்வளவு ஆச்சு” என்று கேட்டேன். அவர் “பணமே வேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது.

தலைகீழ் மாற்றங்கள்

டஹோமி அரசாங்கம் 1975-ஆம் ஆண்டில் மார்க்ஸிஸ கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தது. ‘பெனின் மக்கள் குடியரசு’ என நாட்டுக்குப் புதுப் பெயர் சூட்டப்பட்டது. அன்றாட வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. வணக்கம் சொல்வதிலும் ஒரு புதிய மாற்றம் வந்தது: இத்தனை நாட்களாக “பான்சூர்!” என்று சொல்லியே மக்கள் ஒருவரையொருவர் வாழ்த்தினார்கள். ஆனால், இனிமேல் “பூர் லா ரெவ்வல்யூசன்?” (நீங்கள் புரட்சிக்குத் தயாரா?) என்று சொல்ல வேண்டுமென அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. அவ்வாறு சொல்லும்போது “பிரே!” (தயார்!) என்று சொல்ல வேண்டும். ஆனால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட எங்கள் மனசாட்சி இப்படிப்பட்ட அரசியல் சுலோகங்களைச் சொல்ல எங்களை அனுமதிக்கவில்லை. அதனால், எதிர்ப்பு அலைகள் எங்களை நோக்கிச் சீறி வந்தன.

1975-ல் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று செ.மிஷல் என்ற இடத்திற்குப் பக்கத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். “பூர் லா ரெவ்வல்யூசன்?” என்று ஒருவன் என்னிடம் சொன்னபோது நான் அவனிடம் “பான்சூர்!” என்றேன். அதனால் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டுபோய் அடித்தார்கள். ஆனால், சாயங்காலம் ஆனபோது சாட்சிகள் மூன்றுபேர் வந்து நான் விடுதலையாவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

கைதுசெய்யப்பட்ட முதல் யெகோவாவின் சாட்சி நான்தான். அதற்குப் பிறகு அந்நாட்டில் நிறைய பேர் கைதுசெய்யப்பட்டார்கள். ராஜ்ய மன்றங்களை அரசு பறிமுதல் செய்தது, மிஷனரிகளை நாடு கடத்தியது. கிளை அலுவலகமும் இழுத்து மூடப்பட்டது, சாட்சிகள் பலர் நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருந்தது. அதனால் சிலர் மேற்கே உள்ள டோகோவுக்கும் சிலர் கிழக்கே உள்ள நைஜீரியாவுக்கும் குடிமாறிப் போனார்கள்.

நைஜீரியாவில் எங்கள் குடும்பம் பெருகியது

எங்களுடைய இரண்டாவது மகன் கோலா, 1976 ஏப்ரல் 25-ஆம் தேதி பிறந்தான். இரண்டு நாள் கழித்து 111-வது சட்டப் பிரிவின்படி யெகோவாவின் சாட்சிகளின் வேலைக்கு அரசு தடை விதித்தது. அதனால், நைஜீரியாவுக்குக் கிளம்பினோம். அங்கு ஒரு ராஜ்ய மன்றத்தில் அகதிகளின் கூட்டம் ஏற்கெனவே நிரம்பி வழிந்தது. அவர்களை அருகிலிருந்த சபைகளுக்கு அழைத்துச் செல்ல டிரக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு தொகுதியாகச் செல்ல செல்ல புதியவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அடுத்த நாள் பக்கத்திலிருந்த சபைகளுக்குச் செல்வதற்கு எங்களுக்கு நியமிப்பு கிடைத்தது.

பெனினிலிருந்து வந்திருந்த எல்லா சாட்சிகளையும் போய்ச் சந்திக்கும்படி நைஜீரியா கிளை அலுவலகம் என்னிடம் கேட்டுக்கொண்டது. நைஜீரியாவில் யொருபா மொழி சபைகளுக்குப் பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். பின்பு, கூன் மொழி சபைகளுக்குப் பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். நாங்கள் மோட்டார் பைக்கில் இந்தச் சபைகளுக்குப் பயணம் செய்தோம். போலா முன்னாடி உட்கார்ந்துகொள்வான். பின்னாடி ஜுலியனும் அவளுக்கு முன்னால் கோலாவும் உட்கார்ந்துகொள்வார்கள்.

1979-ல் எங்களுடைய மகள் ஜெமிமா பிறந்ததால் பயண வேலையை விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஜுலியனின் தங்கை எங்களோடு இருப்பதற்காக (அவளை நாங்கள் பேபே என்று அழைத்தோம்) பெனினிலிருந்து வந்திருந்தாள். எங்கள் குடும்பம் பெருகிக்கொண்டே போனது. பின்பு இரண்டு பையன்கள் பிறந்தார்கள்: 1983-ல் கேலப்; 1987-ல் சைலஸ். மொத்தம் எட்டு பேர்கொண்ட குடும்பமாக ஆனோம். நானும் ஜூலியனும் நல்ல பெற்றோராய் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டோம். முடிந்தால் முழுநேர ஊழியத்தைத் தொடர வேண்டுமென்றும் விரும்பினோம். ஆனால் எப்படி? ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மரவள்ளிக் கிழங்கு, சோளம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைப் பயிர் செய்தோம். பின்பு ஈலோக்போயேரேமீ என்ற கிராமத்தில் சின்னதாய் ஒரு வீடு கட்டிக்கொண்டோம்.

பிள்ளைகளையெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு நானும் ஜூலியனும் காலையில் ஊழியத்திற்குச் செல்வோம். ஆனால், மதியம் குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்து விடுவோம். ஒரு குட்டித்தூக்கம் போட்ட பிறகு வயலில் வேலை செய்ய கிளம்பிவிடுவோம். பயிர் செய்த காய்கறிகளை ஜூலியனும் பேபேயும் மார்கெட்டில் விற்றுவிடுவார்கள். நாங்கள் எல்லாருமே கடினமாய் உழைத்தோம். நல்லவேளை நாங்கள் யாருமே அந்தச் சமயங்களில் வியாதிப்பட்டுப் படுக்கையில் விழுந்துவிடவில்லை.

மேல் படிப்பு இல்லாமலேயே பல ஆசீர்வாதங்கள்

மேல் படிப்பு படிக்கச் சொல்லி எங்கள் பிள்ளைகளை நாங்கள் ஒருநாளும் ஊக்கப்படுத்தவில்லை. ஊழியம் செய்வதற்கு முதலிடம் கொடுப்பது, கிறிஸ்தவ பண்புகளை வளர்த்துக்கொள்வது, கடினமாய் உழைப்பது இவைதான் சந்தோஷமான வாழ்க்கைக்கு உயிர்நாடி என்பதை அறிந்திருந்தோம். இதை எங்கள் பிள்ளைகளின் மனதிலும் ஆழமாய்ப் பதியவைத்தோம். நானே அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். அவர்கள் ஒவ்வொருவரும் யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொண்டு அவருக்கு தங்களை ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் எடுத்ததைப் பார்த்தபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது!

பேபே எங்கள் பிள்ளைகளைவிட வயதில் பெரியவள். அதனால், முதலில் கல்யாணமாகிப் போனதும் அவள்தான். அவள் எங்கள் வீட்டுக்கு முதன்முதலில் வந்தபோது நான் அவளுக்கு வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன். பள்ளிப்படிப்பு அவளுக்கு அவ்வளவாய் இல்லையென்றாலும் பைபிள் படிப்பதிலும் மற்ற ஆன்மீகக் காரியங்களிலும் அவள் ரொம்ப ஆர்வம் காட்டினாள். கொஞ்ச காலத்துக்கு பயனியராகச் சேவை செய்தாள், பின்பு மன்டே அக்கின்ராவைக் கல்யாணம் செய்துகொண்டாள். அவர் ஒரு பயணக் கண்காணியாக சேவை செய்து வந்தார்; அதனால் கல்யாணத்திற்குப் பிறகு அவளும் அந்த வேலையில் சேர்ந்துகொண்டாள். இப்போது அவர்களுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு தீமோத்தேயு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பேபேயும் மன்டேயும் இப்போதும் முழுநேர ஊழியர்களாகச் சேவை செய்து வருகிறார்கள். அதோடு, மாநாடுகளில் பல பொறுப்புகளை ஏற்று வருகிறார் மன்டே.

போலா பெரிய கம்பெனி ஒன்றில் சமையல்காரனிடம் பயிற்சி பெற்றான். அவனுடைய உழைப்பையும் நேர்மையையும் மற்ற கிறிஸ்தவப் பண்புகளையும் அந்தக் கம்பெனி மேலாளர் ஒருவர் கவனித்தார். அதனால் கொஞ்ச நாட்களிலேயே அந்தக் கம்பெனியில் பொறுப்புள்ள ஒரு ஸ்தானத்தில் அவனை அமர்த்தினார். மிக முக்கியமாக வீட்டிலேயும் தன் அன்புள்ள மனைவி ஜேனுக்குச் சிறந்த கணவனாகவும் தன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்கிறான், போலா. அதோடு, நைஜீரியாவில் லாகோஸ் என்ற நகரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் பொறுப்புள்ள ஒரு மூப்பராகவும் சேவை செய்கிறான்.

கோலா ஒரு தையல்காரனிடம் பயற்சி பெற்றான். பின்பு அவனும் பயனியர் ஊழியத்தில் இறங்கினான். நைஜீரியாவில் இருந்த சமயத்தில் அவன் ஆங்கிலம் கற்றுக்கொண்டதால் 1995-ல் பெனினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் சேவை செய்ய அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த 13 வருடங்களாக அங்குதான் சேவை செய்து வருகிறான்.

மீண்டும் பெனினில் ஊழியம்

முன்பு பிரசங்க வேலைக்குப் போடப்பட்டிருந்த தடையை ரத்து செய்து ஜனவரி 23, 1990-ல் அரசு இன்னொரு ஆணை பிறப்பித்தது. அதைக் கேள்விப்பட்டபோது எங்கள் உள்ளமெல்லாம் சிலிர்த்துப்போனது. நிறைய அகதிகள் மறுபடியும் தாய்நாட்டிற்கே திரும்பினார்கள். புதிய மிஷனரிகளும் பெனினில் வந்திறங்கினார்கள், கிளை அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. 1994-ல் எங்கள் குடும்பமும் பெனினுக்கு வந்து சேர்ந்தது. ஆனால், பேபேவும் போலாவும் அவர்களுடைய குடும்பத்தினரும் நைஜீரியாவிலேயே தங்கிவிட்டார்கள்.

எனக்குப் பகுதிநேர வேலை கிடைத்தது. நைஜீரியாவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து கிடைத்த சிறிதளவு வாடகையை வைத்தும் தாராள மனதினால் போலா கொடுத்த பணத்தை வைத்தும் கிளை அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே எங்கள் ஐந்துப் பேருக்காக ஒரு வீட்டைக் கட்டினோம். என்னுடைய மகள் ஜெமிமா, டெய்லர் வேலை செய்துகொண்டே ஆறு வருடங்களாக பயனியர் சேவை செய்து வந்தாள். பின்பு கக்கூ அஹூமெனூ என்பவரைக் கரம் பிடித்தாள், இப்போது அவர்கள் இரண்டுபேரும் பக்கத்தில் இருக்கும் கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். கேலப்பும் சைலஸும் பள்ளிப் படிப்பை முடிக்கப் போகிறார்கள். கடவுளுடைய உதவியாலும் எங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பாலும்தான் நானும் ஜூலியனும் 40 வருடங்களுக்கும் மேலாக முழுநேர சேவையில் நிலைத்திருக்கிறோம்.

பெனினில் செய்யப்பட்ட பிரசங்க வேலைமீது கடவுள் ஆசீர்வாதத்தைப் பொழிந்திருக்கிறார். 1961-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தபோது அந்த நாட்டில் 871 யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் ராஜ்ய செய்தியை அறிவித்து வந்தார்கள். நான் கைது செய்யப்பட்ட வருஷம் அந்த எண்ணிக்கை 2,381-க்கு உயர்ந்தது. பின்பு பிரசங்க வேலைக்கு 14 வருஷமாகத் தடை இருந்தது. ஆனாலும், 1994-ல் நாங்கள் பெனினுக்குத் திரும்பி வந்தபோது அந்த எண்ணிக்கை 3,858-ஐ எட்டியது. இன்றைக்கு அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டது. அதாவது, 9,000-த்தையும் தாண்டிவிட்டது. 2008-ல் நடந்த கிறிஸ்துவின் நினைவுநாளுக்கு 35,752 பேர் வந்திருந்தார்கள்.

30 வருடங்களுக்குமுன் நான் கைது செய்யப்பட்ட இடத்தைச் சிலசமயங்களில் போய்ப் பார்ப்பேன். அப்போது பழைய நினைவுகள் என் மனதில் பெருக்கெடுத்து வரும். எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்ததற்காகக் கடவுளுக்கு கோடி நன்றி சொன்னாலும் போதாது. இதுவரை எங்களுக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. இன்றைக்கும், “பான்சூர்!” என்று சொல்லித்தான் எல்லாருக்கும் வணக்கம் சொல்கிறேன். (g 3/09)

[அடிக்குறிப்பு]

^ அந்தச் சமயத்தில் பெனின் நாடு டஹோமி என அழைக்கப்பட்டது; இது பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவின் பாகமாய் இருந்தது.

[பக்கம் 27-ன் சிறுகுறிப்பு]

“எனக்கு நீங்கள் பணம் தரவேண்டாம், இதை என் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார் சிரித்த முகத்துடன்

[பக்கம் 28-ன் சிறுகுறிப்பு]

மேல் படிப்பு படிக்கச் சொல்லி எங்கள் பிள்ளைகளை நாங்கள் ஒருநாளும் ஊக்கப்படுத்தவில்லை

[பக்கம் 29-ன் படம்]

1970-ல் பயணக் கண்காணியாக

[பக்கம் 29-ன் படம்]

என் முதல் இரண்டு மகன்கள் போலா, கோலாவுடன் 1976-ல்

[பக்கம் 29-ன் படம்]

இன்றைக்கு என் குடும்பம்—என் மனைவி, ஐந்து பிள்ளைகள், மூன்று பேரப்பிள்ளைகள், பேபே குடும்பம்