Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அழிந்துவரும் உயிரினங்களின் சரணாலயம்

அழிந்துவரும் உயிரினங்களின் சரணாலயம்

அழிந்துவரும் உயிரினங்களின் சரணாலயம்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உலகெங்கும் உள்ள செடிகொடிகளும் விலங்குகளும் அடியோடு அழிந்துபோகும் அபாயத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்துவருவதாக சில விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள். பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் ஒருகாலத்தில் செழித்தோங்கிய வகைதொகையற்ற செடிகொடிகளுக்கும் கூட்டங்கூட்டமாகத் திரிந்த விலங்கினங்களுக்கும் மலைத்தொடர்கள் அடைக்கலம் அளித்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், இப்படிப்பட்ட புகலிடங்களில்கூட தூய்மைக்கேடும் மனித ஊடுருவலும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாய் இருக்கின்றன. உலகில் வேறெந்த இடத்தையும்விட, அதிக ஜனநெரிசலுள்ள ஐரோப்பாவில்தான் இந்தப் பிரச்சினை பூதாகாரமாகியிருக்கிறது.

பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் எல்லையாய் அமைந்துள்ள பிரனீஸ் மலைத்தொடரில் தேசிய பூங்காக்கள் பல உள்ளன; அந்தப் பகுதியிலுள்ள மரம் செடி கொடிகளுக்கும் மிருகங்களுக்கும் அவை தஞ்சம் அளிக்கின்றன. இந்தச் சரணாலயங்களுக்கு ஏராளமான பார்வையாளர்கள் திரண்டுசெல்கிறார்கள்; அழிந்துவருகிற பல உயிரினங்களை அங்கு கண்டுகளிக்கிறார்கள். வாருங்கள், நாமும் அவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.

அழிவின் விளிம்பிலுள்ள அரிய இனங்கள்

மலர்கள். கண்ணைக் கொள்ளைகொள்ளும் அழகழகான காட்டுப்புஷ்பங்கள் சில 5,000 அடிக்கும் அதிகமான உயரத்தில்தான் பூக்கின்றன. பனி ஜென்ஷன் மலர்களையும் ஊதுகொம்பு ஜென்ஷன் மலர்களையும் (1) பார்த்தீர்களா? பளிச்சிடுகிற அவற்றின் ஊதாநிற இதழ்கள், மரங்களில்லாத மலைச்சரிவுகளில் நீலக் கம்பளம் விரித்து நம்மை வரவேற்பதுபோல் அல்லவா இருக்கின்றன! அந்த மலைச்சரிவுகளில் இன்னும் கொஞ்சம் கீழே பாருங்கள்; புங்கை மரங்களுக்கு இடையே மங்கையர்-மிதியடி ஆர்க்கிட் மலர்கள் (2) எத்தனை ஒய்யாரமாய் கொலுவீற்றிருக்கின்றன; வேறு இடங்களில் கண்ணுக்குத் தட்டுப்படாத இந்த மலர்கள் இங்கே எப்படிப் பூத்துக் குலுங்குகின்றன! விழிகளுக்கு விருந்தளிக்கும் இந்த மலர்களைக் காண்பதற்காகவே இயற்கைப் பிரியர்கள் வருடாவருடம் இங்கு படையெடுக்கிறார்கள். அதோ பாருங்கள், காவலர்கள் இந்தப் பூக்களின் பக்கத்திலேயே இருந்து அவற்றை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள்! ஒவ்வொரு நாளும் 14 மணிநேரங்களுக்கு அவர்களை அங்கு நிறுத்தியிருக்கிறார்கள் அங்குள்ள வனத்துறை அதிகாரிகள்; பொத்திப்பொத்திப் பாதுகாக்கிற இந்தப் பூக்களை யாரும் தொட்டுவிடவோ பிடுங்கிவிடவோ கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருப்பது நியாயம்தானே?

பட்டாம்பூச்சிகள். அழகு கெடாத ஆல்ப்பைன் புல்வெளிகளில் கணக்குவழக்கில்லாத காட்டுப்புஷ்பங்களைப் பார்த்தீர்களா? அடடா, வர்ணஜாலம் புரிகிற வண்ணத்துப்பூச்சிகள்கூட இந்தப் புல்வெளிகளில் புகலிடம் புகுந்திருக்கின்றன, அல்லவா? முட்செடிகளுக்கு இடையே சிறகடித்துப் பறக்கிற அந்தப் பெரிய அப்பொல்லோ பட்டாம்பூச்சியின் (3) இறகுகளில் செக்கைச்செவேல் புள்ளிகளைக் கவனியுங்கள். அதோ, லைசினீடே குடும்பத்தைச் சேர்ந்த நீல வண்ணத்துப்பூச்சிகளும் செம்பு வண்ணத்துப்பூச்சிகளும் (4) சின்னஞ்சிறு மலர்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன. அந்த உயரமான மலைச்சரிவுகளில் வண்ணமங்கை வண்ணத்துப்பூச்சிகளும் ஆமையோட்டு வண்ணத்துப்பூச்சிகளும் எவ்வளவு சுறுசுறுப்போடு மேலே போவதும் கீழே வருவதுமாக இருக்கின்றன!

மிருகங்கள். ஐரோப்பாவைச் சேர்ந்த பெரிய பாலூட்டிகளில் பல ஒருகாலத்தில் அந்தக் கண்டத்தின் பரந்த நிலப்பரப்பைச் சொந்தம் கொண்டாடி சுற்றித் திரிந்துகொண்டிருந்தன. ஆனால், அவற்றில் சில பூண்டோடு அழியுமளவுக்கு மனிதன் அவற்றை வேட்டையாடி இருக்கிறான். ஓநாய்கள், கரடிகள், லிங்க்ஸ் காட்டுப்பூனைகள் (5), காட்டெருமைகள், வரைமான்கள், மலையாடுகள் (6) ஆகியவற்றை ஒருசில மலைத்தொடர்களிலோ கண்டத்தின் வடகோடிப் பகுதிகளிலோதான் இப்போது பார்க்க முடிகிறது. பிரனீஸ் மலைத்தொடர்களிலுள்ள இந்தச் சரணாலயங்களில் குடிபுகுந்திருக்கும் மிடுக்கான மிருகங்களைப் பார்க்கும்போது, முன்னொரு காலத்தில் திரள்திரளான மிருகங்கள் இந்த மலைகளை ஆக்கிரமித்திருந்த காட்சி நம் கண்முன் வந்து நிற்கிறது. மிச்சமீதியிருக்கிற மிருகங்களுடைய கதி என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறி இங்கு வருகிறவர்களின் முகத்தில் தொக்கி நிற்கிறது.

ஆனால், நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்; ஏனென்றால், படைப்பாளரான யெகோவா தேவன், மலைகளில் வாழும் வனவிலங்குகளின் நலனில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்; அவரே ‘மலைச்சிகரங்களுக்குச் சொந்தக்காரர்.’ (சங்கீதம் 95:4, NW) சங்கீதம் என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்.” (சங்கீதம் 50:10, 11) பூமியின்மீதும் பூமியிலுள்ள ஜீவராசிகளின்மீதும் யெகோவா அதிக அக்கறை காட்டுவதால், மலைவாழ் மிருகங்கள் மறைந்துபோக அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாரென நாம் முழுமையாக நம்பலாம். (g 3/09)

[பக்கங்கள் 20, 21-ன் படங்கள்]

1 ஊதுகொம்பு ஜென்ஷன்

2 மங்கையர்-மிதியடி ஆர்க்கிட் மலர்கள்

3 அப்பொல்லோ பட்டாம்பூச்சி

4 செம்பு வண்ணத்துப்பூச்சி

5 காட்டுப்பூனை

6 மலையாடு

[படத்திற்கான நன்றி]

La Cuniacha