Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோர் எப்படி உதவலாம்?

பெற்றோர் எப்படி உதவலாம்?

பெற்றோர் எப்படி உதவலாம்?

அமெரிக்காவிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்று, “முடியாததையும் முடித்துக்காட்டுங்கள்” என்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. ஆகவே, சில இளைஞர்கள் தங்களுடைய லட்சியங்களை அடைய, சக்திக்கும் மிஞ்சிய காரியங்களில் இறங்குகிறார்கள். முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மாடலன் லவைன் என்பவர் இவ்வாறு எழுதினார்: “எக்ஸ்ட்ரா வகுப்புகள், இதர பயிற்சி வகுப்புகள், வயதுக்கு மிஞ்சிய படிப்புக்குத் தயார்படுத்தும் வகுப்புகள், சக்கையாய்ப் பிழிந்தெடுக்கும் ஸ்பெஷல் கோச்சிங் கிளாசுகள் மற்றும் டியூஷன்கள் என எல்லாம் சேர்ந்து பிள்ளைகளுடைய குரல்வளையை நெரிப்பதால் அவர்களுடைய ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கிறது.” இப்படிக் கசங்குகிற இளம் தளிர்கள் உடலிலும் உள்ளத்திலும் வாடி வதங்கிவிடுகிறார்கள்.

பெற்றோரே, படிப்புச் சுமையால் உங்கள் பிள்ளை தவிக்கும் தவிப்பைப் பார்த்து நீங்கள் மனம் புழுங்குகிறீர்களா? அப்படியென்றால், நேராக ஸ்கூலுக்குப் போங்கள். டீச்சர்களிடமும் பள்ளி நிர்வாகிகளிடமும் பேசுங்கள். பிள்ளை படும் பாட்டைச் சொல்லுங்கள். இதைச் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது.

பிள்ளையின் முன்னேற்றத்தில் முழு கவனம் செலுத்தும்படி பெற்றோரை பைபிள் ஊக்கப்படுத்துகிறது. இஸ்ரவேல் தேசத்திலிருந்த பெற்றோர்களிடம் கடவுளுடைய ஊழியரான மோசே இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் அவைகளை [கடவுளுடைய சட்டதிட்டங்களை] உங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீங்கள் உங்களுடைய வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுங்கள்.’—உபாகமம் 6:7.

பிள்ளையின் படிப்பில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, அவனுடைய விஷயத்தில் அனாவசியமாகத் தலையிடுவதை அர்த்தப்படுத்தாது. மாறாக, உங்கள் பிள்ளையைக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்கிறீர்கள் என்பதையே காட்டும். இது, கல்வியால் கலங்குகிற உங்களுடைய கண்மணிகளின் கண்ணீரைத் துடைக்கப் பேருதவியாய் இருக்கும். (g 4/09)

[பக்கங்கள் 8, 9-ன் படம்]

உங்கள் பிள்ளை தவிக்கும் தவிப்பைப் பற்றி டீச்சர்களிடமும் பள்ளி நிர்வாகிகளிடமும் பேசுங்கள்