Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்புக்கு அடிபணியும் யானை

அன்புக்கு அடிபணியும் யானை

அன்புக்கு அடிபணியும் யானை

இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நர்மதை ஆற்றோரத்தில் யானைப்பாகன் ஒருவன் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தான். அருகில் அவனுடைய யானை ஆசுவாசமாய் அமர்ந்திருந்தது. அதன் முன்னங்கால்களுக்கு இடையே பாகன் தன்னுடைய குழந்தையை விட்டுச் சென்றிருந்தான். “குழந்தை தவழ்ந்து சென்றபோதெல்லாம் யானை தன் தும்பிக்கையால் குழந்தையைப் பூப்போல் தூக்கி தன்னிடம் வைத்துக்கொண்டது. யானை இருக்கிற தைரியத்தில் அந்தப் பாகனும் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாமல் மும்முரமாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.” ஒரு யானையைப் பற்றி இப்படித்தான் விவரிக்கிறது புராஜக்ட் எலிஃபன்ட் என்ற புத்தகம்.

பொ.ச.மு. 2000-க்கு முன்பிருந்தே யானைகளை வைத்து மனிதன் வேலை வாங்கி வந்திருக்கிறான். பூர்வ காலங்களில் யானைகளுக்கு முக்கியமாகப் போர் பயிற்சியே கொடுக்கப்பட்டது. நவீன இந்தியாவில், யானைகள் வேலை செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. மரத் தொழிலில், கோவில் திருவிழாக்களில், திருமணங்களில், விளம்பரங்களில், சர்க்கஸ்களில், ஏன், பிச்சையெடுக்கும் தொழிலில்கூட யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. யானைகளை எப்படிப் பழக்கி, பயிற்சி அளிக்கிறார்கள்? ஒரு நோட்டம். . .

யானைகளை எப்படிப் பழக்குகிறார்கள்?

நிராதரவான யானைக் குட்டிகளைக் கவனித்துக்கொள்ள இந்தியாவில் நிறைய மையங்கள் இருக்கின்றன. கானகத்தில் பிடிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட அல்லது அடிபட்ட யானைக் குட்டிகள் இங்கே கொண்டுவரப்படுகின்றன. இந்த மையங்களில் யானைகளைக் கவனித்துக்கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று கேரள மாநிலத்தில் கோனி என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு இந்தக் குட்டி யானைகளுக்கு, வேலை செய்ய பயிற்சி அளிக்கிறார்கள். யானைக் குட்டிக்கு முதலில் பாகன்மீது நம்பிக்கை வர வேண்டும். அப்படி நம்பிக்கை வர வேண்டுமென்றால், அதற்கு வயிறு நிறைய தீனி போட வேண்டும். பாகனின் குரலை யானைக் குட்டி சீக்கிரமாகவே அடையாளம் கண்டுகொள்ளும். தீனி போடுவதற்காகப் பாகன் கூப்பிட்டால் போதும், பாலும் குழைக்கப்பட்ட கம்பும் சாப்பிடுவதற்காக அது குடுகுடுவென ஓடிவரும். கிட்டத்தட்ட 13 வயதான பிறகுதான் குட்டிகளுக்கு வேலை செய்ய பயிற்சி கொடுக்கப்படுகிறது. 25 வயதான பிறகு அவற்றிடமிருந்து வேலை வாங்கும் படலம் ஆரம்பமாகிறது. கேரள அரசு விதிமுறையின்படி, 65 வயதில் யானைகளுக்கு வேலையிலிருந்து ஓய்வளிக்கப்பட வேண்டும்.

அனுபவம் பெற்ற யானைப்பாகனாய் ஆவதற்கு நிறைய பயற்சி தேவை. கேரளத்தில் உள்ள திருச்சூர் யானை நல அமைப்பின்படி, ஒரு புது யானைப்பாகன் குறைந்தபட்சம் மூன்று மாதம் தீவிர பயிற்சி பெற வேண்டும். யானைகளுக்குக் கட்டளையிட கற்றுக்கொள்வது மட்டுமல்ல, யானையின் குணாதிசயங்கள் பற்றிய முழு விவரங்களைக் கற்றுக்கொள்வதும் அந்தப் பயிற்சியில் அடங்கும்.

வளர்ந்த யானைகளைப் பழக்குவதற்குக் கூடுதல் காலம் எடுக்கும். யானை அடைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து பாகன் சற்று தொலைவில் நின்றுகொண்டு தான் கொடுக்கும் கட்டளைகளை யானை முதலில் புரிந்துகொள்ள பயிற்சி அளிப்பான். ஒரு யானையிடமிருந்து வேலை வாங்குவதற்கு, கேரளாவில் உள்ள யானைப்பாகன்கள் சுமார் 20 கட்டளைகள் அல்லது சமிக்ஞைகள் பயன்படுத்துகிறார்கள். யானைப்பாகன் சப்தமாக, தெளிவாகக் கட்டளையிடுகிறான். யானை என்ன செய்ய வேண்டும் என்பதைத் தடியினாலேயே சமிக்ஞை காட்டி சொல்லிக்கொடுக்கிறான். அவன் சொல்கிற மாதிரியெல்லாம் யானை செய்யும்போது அதற்குப் பிடித்தமான உணவைப் பரிசாகக் கொடுக்கிறான். யானை தன்னோடு நன்றாகப் பழகிவிட்டது என்று தெரிந்த பின்பு அது அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இடத்திற்குள்ளேயே சென்று அதைப் பாராட்டி தடவிக் கொடுக்கிறான். இதனால், யானைக்கும் பாகனுக்கும் இடையே உள்ள பந்தம் பலப்படுகிறது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, யானையைப் பாகன் வெளியே அழைத்துச் செல்லலாம்—ஆனால் ஜாக்கிரதையாக. ஏனென்றால், அதன் மூர்க்கத்தனம் அவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடாது. நன்றாகப் பழகும்வரை, பயிற்சி பெற்ற இரண்டு யானைகளுக்கு மத்தியில் அதைச் சங்கிலியால் கட்டி அழைத்துச் செல்கிறார்கள்—குளியல்போட அழைத்துச் சென்றாலும்சரி உலாவ அழைத்துச் சென்றாலும்சரி.

வாய்மொழி கட்டளைகளை யானை புரிந்துகொள்ளப் பழகின பிறகு, பாகன் அடுத்த கட்ட பயிற்சியை ஆரம்பிக்கிறான். யானைமீது ஏறி உட்கார்ந்துகொண்டு கால் விரல்களால் அல்லது குதிங்கால்களால் அதற்கு சமிக்ஞை கொடுக்கிறான். யானை முன்னே செல்ல வேண்டுமென்றால், பெருவிரல்களால் யானையின் காதுகளுக்குப் பின் அழுத்துகிறான். பின்னே வரவேண்டுமென்றால், தன் குதிங்கால்களால் அதன் தோள்களை அழுத்துகிறான். யானைகள் குழம்பிவிடாதிருக்க, ஒரேவொரு யானைப்பாகன் மட்டும் வாய்மொழி கட்டளைகள் பிறப்பிக்கிறான். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் யானை எல்லா கட்டளைகளையும் படித்துவிடுகிறது. அதன் பிறகு ஆயுசுக்கும் மறப்பதில்லை. யானையின் மூளையை அதன் உடலோடு ஒப்பிடும்போது சிறியதாக இருந்தாலும் அது படுபுத்திசாலியான பிராணி.

யானையைக் கவனித்துக்கொள்ளுதல்

யானையை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அதைத் தினமும் குளிப்பாட்ட வேண்டும். யானையின் தோல் கெட்டியாக இருந்தாலும் மிருதுவானது, உணர்ச்சியுள்ளது. கற்களையும் நேர்த்தியாய் வெட்டப்பட்ட தேங்காய் நார்களையும் பயன்படுத்தி பாகன் அதைக் குளிப்பாட்டுகிறான்.

யானையின் காலை “சிற்றுண்டி”? கோதுமை, கம்பு, கொள்ளு ஆகியவற்றை யானைப்பாகன் மசித்து அதற்குக் கொடுப்பான். ஆனால், மூங்கில், பனை ஓலை, புல் ஆகியவைதான் அதன் முக்கிய உணவு. பச்சை கேரட்டுகள், கரும்புகள் என்றால் யானைக்குக் கொள்ளைப் பிரியம். யானைகள் பெரும்பாலும் சாப்பிடுவதிலேயே தங்கள் ஆயுசைக் கழித்துவிடுகின்றன. நாளொன்றுக்குச் சுமார் 140 கிலோ உணவும் சுமார் 150 லிட்டர் தண்ணீரும் கொடுத்தால்தான் யானையின் வயிறு நிரம்பும்! இப்படியெல்லாம் கவனித்துக்கொண்டால்தான் அது பாகனுக்குத் தோழனாய் இருக்கும்.

யானைக்கு வெறுப்பேற்றினால் . . .

சாதுவான இந்திய யானைகளைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஓட்டிச் செல்லவோ வேலை வாங்கவோ முடியாது. யானைகளைத் தண்டிப்பதற்காக அடிக்கவோ திட்டவோ செய்தால் பாகனை அவை பந்தாடிவிடும். “ஒரு கொம்பன் யானையைப் பாகன் மோசமாக நடத்தியதால் அதற்கு மதம் பிடித்துவிட்டது. பாகனை பழிவாங்குவதற்காக வன்முறையில் இறங்கி எல்லாரையும் மிரள வைத்தது. . . . கடைசியில் அதை மயக்க ஊசிபோட்டு அடக்க வேண்டியதாகிவிட்டது” என்று இந்தியாவில் வெளிவரும் சன்டே ஹெரல்ட் செய்தித்தாள் குறிப்பிட்டது. “கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட கொம்பன் யானைகள் கோவில் திருவிழாக்களின்போது வன்முறையில் இறங்கியிருக்கின்றன; கடந்த வருடம் ஜனவரி தொடங்கி 48 பாகன்கள் மதம் பிடித்த யானைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்கிறது ஏப்ரல் 2007-ல் வெளிவந்த இன்டியா டுடே இன்டர்நேஷனல் செய்தித்தாள். பெரும்பாலும், “மஸ்து” என்ற காலக்கட்டத்தில்தான் யானைகளின் அடாவடித்தனம் அதிகமாய் இருக்கும். ஆம், வருடத்தில் ஒருமுறை இனப்பெருக்க காலத்தில் ஆண் யானைகளின் உடலில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆரோக்கியமான ஆண் யானைகளுக்கு அந்தச் சமயத்தில் பாலுணர்வைத் தூண்டிவிடும் ஹார்மோன் (டெஸ்டிஸ்டிரோன்) அதிகமாய்ச் சுரக்கிறது. அதனால், ஆவேசமடைந்து மற்ற ஆண் யானைகளிடமும் மனிதர்களிடமும் மூர்க்கத்தனமாய் நடந்துகொள்கின்றன. இந்த மஸ்து, 15 நாட்களிலிருந்து மூன்று மாதங்கள்வரை நீடிக்கலாம்.

யானை கைமாறி, புதிய பாகனின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போதும் கோபமடைகிறது. ஏனென்றால், பழைய பாகனை விட்டுப் பிரிய அதற்கு மனமிருப்பதில்லை. “புகுந்த வீட்டில்” புதிய பாகனுடன் அதைப் பழக்கி விடுவதற்காகப் பெரும்பாலும் பழைய பாகனும் அதோடு செல்கிறான். புதிய பாகன் யானையுடன் நன்கு பரிச்சயமாகி அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்குப் பழைய பாகன் உதவுகிறான். ஆனால், பாகன் திடீரென இறந்து, புதிய பாகன் வரும்போது யானையைச் சமாளிப்பது இன்னும் பெரும் சவாலாகிவிடுகிறது. இருந்தாலும், காலப்போக்கில் புதிய பாகனுக்கும் புதிய சூழலுக்கும் ஒத்துப்போக அந்த யானை கற்றுக்கொள்கிறது.

நிலத்தில் வாழும் பிரமாண்டமான இந்த ஜீவராசியைப் பார்த்து சிலர் மிரண்டுவிடுகிறார்கள். ஆனால், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட யானை அன்பான பாகனுக்குப் பணிந்துபோகிறது. கொஞ்ச நேரத்துக்கு அவன் எங்கேயாவது சென்றுவிட்டாலும்கூட அதைச் சங்கிலியால் கட்டிப்போட வேண்டிய அவசியமில்லை. பாகன் தன்னுடைய தடியின் ஒரு முனையை அதன் பாதத்துக்கு மேலேயும் இன்னொரு முனையைத் தரையிலும் வைத்துவிட்டு, நகராதே என்று சொன்னால் போதும், அது அப்படி இப்படி நகராமல் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டு, குச்சி கீழே விழாதபடி அந்த இடத்திலேயே நிற்கும். முதல் பாராவில் பார்த்தவாறு யானைக்கும் பாகனுக்கும் இடையே உள்ள பரஸ்பர ஒத்துழைப்பு நம்மை வியக்க வைக்கிறது, நெகிழச் செய்கிறது. ஆம், அன்புள்ள பாகன் யானையுடன் நண்பனைப் போல் பழகலாம். (g 4/09)

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

மனிதனும் யானையும்—நீண்டகால சரித்திரம்

யானைகளை மனிதன் தொன்றுதொட்டே பயிற்றுவித்து வந்திருக்கிறான். ஹனிபல் என்பவர் அதற்குத் தலைசிறந்த உதாரணம். இவர் கார்தேஜ் படையின் தளபதி. பொ.ச.மு. 3-ஆம் நூற்றாண்டில், ரோமுக்கு எதிராக வட ஆப்பிரிக்க நகரமான கார்தேஜ் போரிட்டுக்கொண்டிருந்தது. இந்தப் போர் ஓரிரண்டு ஆண்டுகளாக அல்ல, நூறு ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. இதைத்தான் பியூனிக் போர்கள் என்று சரித்திரம் அழைக்கிறது. ரோமுக்கு எதிராகப் போர் தொடுக்க கார்டஜீனா என்ற ஸ்பெயின் நகரத்தில் ஹனிபல் தன் படையை ஒன்றுதிரட்டினார். தற்போதைய பிரான்சு நாட்டுக்குள் நுழைய ஹனிபல் முதலில் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவருடைய படையில் 25,000 வீரர்கள் இருந்தனர்; அதோடு, 37 ஆப்பிரிக்க யானைகளும், பொதி சுமப்பதற்காக எண்ணற்ற குதிரைகளும் கழுதைகளும் இருந்தன. ஹனிபல் இவை எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு ஆல்ப்ஸ் மலைகளைக் கடந்து இத்தாலிக்குச் சென்றார். ஹனிபல் இவ்வாறு செய்தது, “சரித்திரத்திலேயே அதிக தைரியமிக்க நடவடிக்கைகளில் ஒன்று” என தொல்லியல் (ஆங்கிலம்) பத்திரிகை கூறுகிறது. ஆனால், ஹனிபலின் படையிலிருந்த மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அது சுலபமான யாத்திரையாக இருக்கவில்லை. ஏனென்றால், கடும் குளிரையும் பனிப் புயல்களையும், பாறைச் சரிவுகளையும் தாக்குப் பிடிக்க வேண்டியிருந்தது. அதோடு, மூர்க்கமான மலைவாசிகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. ஹனிபல் படையிலிருந்த யானைகளுக்கு அது படுசிரமமான பயணமாக இருந்ததால், இத்தாலிக்கு வந்துசேர்ந்த ஒரே வருடத்தில் அவை எல்லாம் இறந்துவிட்டன.

[படத்திற்கான நன்றி]

© Look and Learn Magazine Ltd/The Bridgeman Art Library

[பக்கம் 11-ன் படம்]

யானையின் மிருதுவான, உணர்ச்சியுள்ள, ஆனால் கெட்டியான தோலை தேய்த்துவிடும் பாகன்

[படத்திற்கான நன்றி]

© Vidler/mauritius images/age fotostock

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

© PhotosIndia/age fotostock