Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் பணக்காரராக வேண்டுமெனக் கடவுள் விரும்புகிறாரா?

நீங்கள் பணக்காரராக வேண்டுமெனக் கடவுள் விரும்புகிறாரா?

பைபிளின் கருத்து

நீங்கள் பணக்காரராக வேண்டுமெனக் கடவுள் விரும்புகிறாரா?

“ஆண்டவர் எனக்குப் புது வாழ்வு கொடுத்திருக்கிறார்! நான் லட்சலட்சமாகச் சம்பாதிக்கப் போகிறேன்!”

“நான் கோடீஸ்வரனாக வேண்டுமென ஆசைப்படுகிறேன், ஏனென்றால் கடவுளும் தேவதூதர்களும்கூட நான் கோடீஸ்வரனாக வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார்கள்.”

“பணத்தையும் பொருளையும் குவிக்க இறைவன் நமக்குச் சக்தி தருகிறார்.”

“இந்தப் புத்தகத்தால்தான் [பைபிளால்தான்] நான் செல்வச்செழிப்பாக இருக்கிறேன்.”

வெவ்வேறு நபர்களுடைய இந்தக் குறிப்புகள், செல்வம் கடவுள் தரும் ஆசீர்வாதமெனப் பல மதத்தவர் கருதுவதைக் காட்டுகின்றன. கடவுளுக்குப் பிரியமாக நாம் நடந்துகொண்டால், இந்த வாழ்வில் சீரும்சிறப்பும் பெற அவர் உதவுவார், பிற்காலத்திலும் பலனளிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தக் கருத்து உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, இதை ஆதரிக்கும் புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன. ஆனால், கடவுள் சீர்சிறப்போடு வாழ வைக்கிறார் என்ற கருத்தைத்தான் பைபிளும் சொல்கிறதா?

பைபிள் குறிப்பிடுகிறபடி ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருக்கும் நம் படைப்பாளர், நாம் சந்தோஷத்தோடும் சௌபாக்கியத்தோடும் வாழ வேண்டுமென்று விரும்புவது நிச்சயம். (1 தீமோத்தேயு 1:11; சங்கீதம் 1:1-3) அதோடு, அவருக்குப் பிரியமாக நடக்கிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். (நீதிமொழிகள் 10:22) ஆனால், இன்று பொன்னும் பொருளும் கொடுத்து மட்டுமே நம்மை அவர் ஆசீர்வதிக்கிறாரா? கடவுளுடைய நோக்கத்தின்படி நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் இக்கேள்விக்குத் தெளிவான பதில் கிடைத்துவிடும்.

காசு குவிப்பதற்கு இது காலமா?

பூர்வ காலங்களில் கடவுள் தம் ஊழியர்கள் சிலருக்குச் செல்வச்செழிப்பை அருளினார்; யோபுவும் சாலொமோன் ராஜாவும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். (1 இராஜாக்கள் 10:23; யோபு 42:12) ஆனாலும், யோவான் ஸ்நானகர், இயேசு கிறிஸ்து போன்ற கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் செல்வந்தர்களாக இருக்கவில்லை. (மாற்கு 1:6; லூக்கா 9:58) இது எதைக் காட்டுகிறது? பைபிளின்படி, கடவுள் அந்தந்த காலத்திற்குரிய தம் நோக்கத்திற்கு இசைவாகத்தான் தம் ஊழியர்களுக்கு ஆசி வழங்குகிறார். (பிரசங்கி 3:1) இந்த நியமம் இன்று நமக்கு எப்படிப் பொருந்துகிறது?

‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்’ அல்லது இன்றைய உலகத்தின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்வதாக பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. இந்தக் காலத்தில் போர், வியாதி, பஞ்சம், பூகம்பம், சமுதாய சீர்குலைவு போன்றவை பேரளவில் நடக்குமென பைபிள் சொன்னது; அதன்படி, 1914 முதற்கொண்டு இச்சம்பவங்கள் சரித்திரம் காணாத அளவுக்கு உலகத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. (மத்தேயு 24:3; 2 தீமோத்தேயு 3:1-5; லூக்கா 21:10, 11; வெளிப்படுத்துதல் 6:3-8) சுருக்கமாகச் சொன்னால், இந்த உலகம் தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலைப் போல் இருக்கிறது! இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கடவுள் தம் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னும் பொருளும் கொடுத்து ஆசீர்வதிப்பதில் அர்த்தம் இருக்குமா? ஒருவேளை, வேறு முக்கியமான காரியங்களுக்கு நாம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டுமென அவர் விரும்புகிறாரா?

இயேசு கிறிஸ்து நம் காலத்தை நோவாவின் காலத்தோடு ஒப்பிட்டார். “நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முன்னான காலத்தில், நோவா பேழைக்குள் நுழைந்த நாள்வரை, மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை; மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 24:37-39) நம் காலத்தை லோத்துவின் காலத்தோடும் இயேசு ஒப்பிட்டார். லோத்துவுடன் சோதோம் கொமோராவில் வசித்தவர்கள், “சாப்பிட்டுக்கொண்டும், குடித்துக்கொண்டும், வாங்கிக்கொண்டும், விற்றுக்கொண்டும், நட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், சோதோம் நகரைவிட்டு லோத்து வெளியேறிய நாளில் வானத்திலிருந்து நெருப்பும் கந்தகமும் பெய்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது” என்று இயேசு சொன்னார். அதோடு, “மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அவ்விதமாகவே நடக்கும்” என்றும் சொன்னார்.—லூக்கா 17:28-30.

சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் திருமணம் செய்வதிலும் வாங்குவதிலும் விற்பதிலும் எந்தத் தவறுமில்லை என்பது உண்மைதான். ஆனால், நாம் இவற்றிலேயே மூழ்கிப்போய், அவசர உணர்வுடன் வாழ்வதற்குக் கவனம் செலுத்தாதிருப்பது ஆபத்தானது. ஆகவே, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள், தம்மைச் சேவிப்பதற்குத் தடையாக இருப்பவற்றையே கொடுத்து நம்மை ஆசீர்வதித்தால் எவ்விதத்திலாவது நமக்கு நன்மை செய்வதாக இருக்குமா?’ * உண்மையில், அவர் நமக்கு மிகப் பெரிய தீமை செய்வதாகவே இருக்கும். அன்பே உருவான கடவுளுக்கு அது பொருந்தவே பொருந்தாது!—1 தீமோத்தேயு 6:17; 1 யோவான் 4:8.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கான காலம்!

மனித சரித்திரத்திலேயே முக்கியமான இந்தக் காலக்கட்டத்தில், கடவுளுடைய மக்கள் அவசர உணர்வோடு ஒரு வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) யெகோவாவின் சாட்சிகள் இந்த வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆகவே, அந்த அரசாங்கத்தைப் பற்றியும் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கான தகுதிகளைப் பற்றியும் கற்றுக்கொள்ளும்படி சக மனிதரை உற்சாகப்படுத்துகிறார்கள்.—யோவான் 17:3.

என்றாலும், உண்மையுள்ள தம் ஊழியர்கள் சன்னியாசிகளைப் போல் வாழ வேண்டுமெனக் கடவுள் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் தம்மைச் சேவிப்பதிலேயே குறியாக இருப்பதற்காக, உள்ளதை வைத்துத் திருப்தியாக வாழ வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார். (மத்தேயு 6:33) அப்படிச் செய்தால், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார். எபிரெயர் 13:5 இப்படிச் சொல்கிறது: “பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்; ஏனென்றால், ‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று [கடவுள்] சொல்லியிருக்கிறார்.”

இந்தச் சகாப்தத்தின் முடிவின்போது கடவுள் “திரள் கூட்டமான” உண்மை வணக்கத்தாரைக் காப்பாற்றி சமாதானமும் செழுமையுமான புதிய உலகில் வாழ வைக்கையில் இந்த வாக்குறுதியை மிகச் சிறந்த விதத்தில் நிறைவேற்றுவார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) “[உண்மையுள்ள சீடர்கள்] வாழ்வு பெறுவதற்காக, அதுவும் நீடிய வாழ்வு பெறுவதற்காக வந்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 10:10) இங்கே “நீடிய வாழ்வு” என்பது தற்போது செல்வச்செழிப்பாக வாழ்வதைக் குறிக்காது; மாறாக, கடவுளுடைய அரசாட்சியில் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும்போது அதில் முடிவில்லாமல் வாழ்வதையே அது குறிக்கிறது.—லூக்கா 23:43.

கடவுள் சீர்சிறப்போடு வாழ வைக்கிறார் என்ற கருத்து உண்மையில் கடவுளைச் சேவிப்பதற்குத் தடையாக இருக்கும் கருத்தாகும்; ஆகவே, அதை நம்பி ஏமாந்து, உண்மையான ஆசீர்வாதங்களை இழந்துவிடாதீர்கள். மாறாக, இயேசுவின் இந்த அன்பான வார்த்தைகளுக்கு, அதேசமயம் அவசர உணர்வைத் தூண்டும் வார்த்தைகளுக்கு, செவிசாயுங்கள்: “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இருதயம் பாரமடையாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; இல்லாவிட்டால், எதிர்பாராத வேளையில் அந்த நாள் திடீரென உங்கள்மீது கண்ணியைப் போல் வரும்.”—லூக்கா 21:34. (g 5/09)

[அடிக்குறிப்பு]

^ முதல் நூற்றாண்டைப் போலவே இன்றும், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். என்றாலும், செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்கக் கூடாதென்றும் அவை தங்கள் கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாதென்றும் கடவுள் அவர்களை எச்சரிக்கிறார். (நீதிமொழிகள் 11:28; மாற்கு 10:25; வெளிப்படுத்துதல் 3:17) பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, நாம் எல்லாரும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலேயே குறியாக இருக்க வேண்டும்.—லூக்கா 12:31.

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

◼ இது என்ன செய்வதற்கான காலம்?மத்தேயு 24:14.

◼ இயேசு நம் காலத்தை யார் யாருடைய காலத்திற்கு ஒப்பிட்டார்?மத்தேயு 24:37-39; லூக்கா 17:28-30.

◼ நாம் முடிவில்லா வாழ்வைப் பெற எதைத் தவிர்க்க வேண்டும்?லூக்கா 21:34.

[பக்கம் 25-ன் சிறுகுறிப்பு]

கடவுள் சீர்சிறப்போடு வாழ வைக்கிறார் என்ற கருத்து உண்மையில் கடவுளைச் சேவிப்பதற்குத் தடையாக இருக்கும் கருத்தாகும்