Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்களுக்கு ஏன் என்னைப் பிடிப்பதில்லை?

பெண்களுக்கு ஏன் என்னைப் பிடிப்பதில்லை?

இளைஞர் கேட்கின்றனர்

பெண்களுக்கு ஏன் என்னைப் பிடிப்பதில்லை?

நான் உண்மையிலேயே அவளை மயக்கிவிட்டேன். என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது, நான் எங்கெல்லாம் போயிருக்கிறேன், எனக்கு யாரெல்லாம் தெரியும் என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிட்டேன். என்னுடன் டேட்டிங் செய்ய அவள் துடித்துக்கொண்டிருப்பாள்!

நான் எங்கே போய் முட்டிக்கொள்வதெனத் தெரியவில்லை! நாசூக்காகச் சொன்னால் அவனுக்குப் புரியாதா? ஏதாவது சொல்லி அவன் என் பக்கமே தலை காட்டாதபடி செய்துவிட வேண்டும்; ஆனால், அவனுடைய மனதை நோகடிக்காமல் அதை எப்படிச் சொல்வது?

டேட்டிங் செய்கிற வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள். ஓர் அழகான பெண்ணை, உங்கள் மதத்தைச் சேர்ந்த பெண்ணை, கண்டுபிடிக்க விரும்புகிறீர்கள். (1 கொரிந்தியர் 7:39) இதற்கு முன்பு ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தபோதும் அது ஏனோ படுதோல்வி அடைந்ததாக நினைக்கிறீர்கள்.

ஒரு பெண்ணுடன் நீங்கள் பழக விரும்பினால் என்னென்ன விஷயங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? என்னென்ன பைபிள் நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?

முதலாவதாக என்ன செய்ய வேண்டும்?

ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பிப்பதற்கு முன்பு சில முக்கியமான திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; இது, எப்படிப்பட்டவரையும் நண்பராக்கிக்கொள்ள உங்களுக்கு உதவும். பின்வருவனவற்றைச் சிந்தியுங்கள்.

நல்லொழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். “அன்பு தீயொழுக்கம் இல்லாதது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:5, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) நல்லொழுக்கம், நீங்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவைப் போன்ற முதிர்ச்சி வாய்ந்த ஆளுமையை வளர்த்து வருகிறீர்கள் என்பதையும் காட்டுகின்றன. எனினும், நல்லொழுக்கம் என்பது, மற்றவர்களுடைய மனதைக் கவருவதற்காக அணிந்துகொண்டு வீட்டுக்கு வந்ததும் கழற்றிவிடும் ‘கோட்சூட்டைப்’ போன்றது அல்ல. உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் குடும்பத்தாரிடம் நல்லொழுக்கமாக நடந்துகொள்கிறேனா?’ அப்படி இல்லாவிட்டால், வெளியாட்களிடம் நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ளும்போது அது போலியாகத் தெரியும். நீங்கள் உண்மையில் எப்படிப்பட்டவரெனக் கண்டுபிடிப்பதற்கு உங்கள் குடும்பத்தாரிடம் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் புத்திசாலிப் பெண் கவனிப்பாள் என்பதை நினைவில் வையுங்கள்.—எபேசியர் 6:1, 2.

பெண்களின் கருத்து: “எனக்காக கதவைத் திறந்துவிடுவது போன்ற சின்ன காரியத்திலும்சரி, என்னிடம் மட்டுமல்லாமல் என் குடும்பத்தாரிடமும் அன்பு அக்கறையோடு நடந்துகொள்வதைப் போன்ற பெரிய காரியத்திலும்சரி, இங்கிதமாக நடந்துகொள்பவனைத்தான் எனக்குப் பிடிக்கும்.”—டீனா, 20. *

“ஒரு பையன் என்னைப் பார்த்ததும், ‘நீ யாரையாவது டேட்டிங் செய்கிறாயா?’ ‘உன்னுடைய இலட்சியங்கள் என்ன?’ என்றெல்லாம் என் சொந்த விஷயங்களைப் பற்றித் துருவித்துருவிக் கேட்டால் எனக்கு எரிச்சல் வரும். நாகரிகம் இல்லாமல் இப்படியெல்லாம் கேட்டால் புழுபோல் நெளிவேன்!”—கேத்தி, 19.

எப்போதும் சுத்தபத்தமாய் இருங்கள். சுத்தமும் சுகாதாரமும் மற்றவர்களை மதிப்பதை மட்டுமல்ல, உங்களையே மதிப்பதையும் காட்டுகிறது. (மத்தேயு 7:12) உங்களையே நீங்கள் மதித்தால் மற்றவர்களும் உங்களை மதிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மறுபட்சத்தில், நீங்கள் சுத்தம் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், நீங்கள் எத்தனை முயன்றாலும் ஒரு பெண்ணின் மனதைக் கவருவது கடினம்.

பெண்களின் கருத்து: “ஒரு பையன் என்மீது ஆசைப்பட்டான், ஆனால் அவன் வாயைத் திறந்தால் ஒரே துர்நாற்றம்; என்னால் அதைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.”—கெல்லி, 24.

உரையாடும் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நன்கு உரையாடுவதே நிலையான உறவுக்கு மிகவும் அவசியம். உரையாடுகையில் உங்கள் விருப்புவெறுப்புகளைச் சொல்வதோடு அவளுடைய விருப்புவெறுப்புகளையும் கேட்க வேண்டும்.—பிலிப்பியர் 2:3, 4.

பெண்களின் கருத்து: “ஒரு பையன் என்னிடம் இயல்பாக பேசுவதும், நான் சொன்ன காரியங்களை நினைவில் வைத்திருப்பதும், பேச்சைத் தொடருவதற்குக் கேள்விகள் கேட்பதும் எனக்குப் பிடிக்கும்.”—கிறிஸ்டின், 20.

“என்னைப் பொறுத்தவரை பையன்கள் அழகில் மயங்கிவிடுகிறார்கள், பெண்களோ பேச்சில் மயங்கிவிடுகிறார்கள்.”—லாரா, 22.

“பரிசுகள் கொடுப்பது ஒரு பெண்ணைச் சுண்டியிழுக்கலாம். ஆனால், ஒரு பையன் கலகலவென்று பேசி, ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்தால், . . . ஆகா, அது ரொம்பவே சுண்டியிழுக்கும்!”—ஏமி, 21.

“ஒருவன் நகைச்சுவை உணர்வுள்ளவனாக இருந்தால், அதேசமயத்தில் போலித்தனமில்லாமல் முக்கியமான காரியங்களையும் பேசத் தெரிந்திருந்தால், அவனுடன் பழக நிச்சயம் விரும்புவேன்.”—கெல்லி, 24.

மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றுவது, நல்ல நட்புறவை அனுபவிக்க உங்களுக்கு உதவும். எனினும், திருமணம் செய்துகொள்கிற எண்ணத்துடன், குறிப்பிட்ட ஒரு பெண்ணோடு பழக நீங்கள் தயாராய் இருப்பதாக நினைத்தால்?

அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?

நீங்களே முதலாவது அணுகுங்கள். நீங்கள் விரும்புகிற ஒரு பெண் உங்களுக்குப் பொருத்தமான மனைவியாக இருப்பாள் என நினைத்தால், உங்கள் காதலை அவளிடம் தெரிவியுங்கள். தெளிவாகவும் நேரடியாகவும் உங்கள் உணர்ச்சிகளைச் சொல்லுங்கள். உண்மைதான், அதை நினைத்தாலே நெஞ்சு படபடக்கலாம். எங்கே மறுத்துவிடுவாளோ என நீங்கள் பயப்படலாம். ஆனால், நீங்களாகவே முதலாவது அணுகுவது நீங்கள் பக்குவமடைந்திருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாய் இருக்கும்.

பெண்களின் கருத்து: “ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறதென எனக்கு எப்படித் தெரியும்? அதனால், ஒருவருக்கு என்மீது ஆசையிருந்தால் நேர்மையுடன், சுற்றிவளைக்காமல், நேரடியாக என்னிடம் சொல்லிவிட வேண்டும்.”—நீனா, 23.

“நண்பனாகப் பழகிவிட்டுத் திடீரெனக் காதலிப்பதாகச் சொல்வது கஷ்டம்தான். ஆனால், அப்படி நேரடியாகச் சொல்கிறவன்மீது எனக்குத் தனி மதிப்புமரியாதை வரும்.”—ஹெலன், 25.

அந்தப் பெண்ணின் தீர்மானத்திற்கு மதிப்பு கொடுங்கள். உங்களைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லையென ஒரு பெண் சொல்லிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவள் மனது அவளுக்கே நன்கு தெரியும் என்பதையும், அவள் மறுத்தது மறுத்ததுதான் என்பதையும் புரிந்துகொண்டு அவளுக்கு மதிப்புமரியாதை காட்டுங்கள். அதை விட்டுவிட்டு, நீங்கள் சதா நச்சரித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் பக்குவப்படவில்லை என்றே அர்த்தம். வெளிப்படையாக ஒரு பெண் உங்களை மறுத்த பிறகும் அதை நீங்கள் பொருட்படுத்தாவிட்டால், அவள் மறுத்ததை எண்ணிக் கோபமும் அடைந்தால், நீங்கள் யாருடைய அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அவளுடைய அக்கறைகளுக்கா, உங்களுடையதற்கா?—1 கொரிந்தியர் 13:11.

பெண்களின் கருத்து: “பிடிக்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொன்ன பிறகும் ஒரு பையன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தால் எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும்.”—காலின், 20.

“எனக்கு விருப்பமில்லையென ஒரு பையனிடம் சொல்லிவிட்டேன், ஆனாலும் என் ஃபோன் நம்பரைக் கேட்டு என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தான். அவனிடம் நல்ல விதமாக நடந்துகொள்ள முயற்சி செய்தேன். ஏனென்றால், அவன் கஷ்டப்பட்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என்னிடம் தன் விருப்பத்தைச் சொல்ல முயற்சி செய்திருப்பானே என்று நினைத்தேன். ஆனால், கடைசியில் வேறு வழியில்லாமல் ரொம்பக் கறாராக அவனிடம் நடந்துகொள்ள வேண்டியிருந்தது.”—சாரா, 23.

நீங்கள் என்ன செய்யக் கூடாது?

எந்தப் பெண்ணையும் எளிதாகத் தங்கள் வலையில் விழ வைக்க முடியுமென சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். தங்களில் யார் அதிகப்படியான பெண்களை வசப்படுத்த முடியுமென அவர்கள் மத்தியில் போட்டா போட்டிகூட நடக்கலாம். எனினும், அப்படிச் செய்வது கொடூரமானது, அது கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுக்கும். (நீதிமொழிகள் 20:11) பின்வரும் அறிவுரையை நீங்கள் கேட்டு நடந்தால் அந்த மோசமான விளைவைத் தவிர்க்கலாம்.

விளையாட்டுக்குக் காதலிக்காதீர்கள். விளையாட்டுக்குக் காதலிப்பவர் தேனொழுகப் பேசுவார்; அவருடைய ஒவ்வொரு அசைவும் காம உணர்ச்சியைத் தூண்டுவதாக இருக்கும். கண்ணியமான விதத்தில் காதலிக்கும் எண்ணமே அவருக்கு இருக்காது. இத்தகைய செயல்களும் மனப்பான்மைகளும், “இளம் பெண்களைத் தூய உள்ளத்தோடு தங்கைகள் போல” நடத்தும்படி பைபிள் சொல்லும் புத்திமதிக்கு முரணாய் இருக்கின்றன. (1 தீமோத்தேயு 5:2) இப்படிப்பட்டவர்கள் கெட்ட நண்பர்களாகவும் படுமோசமான கணவர்களாகவும் இருப்பார்கள். புத்தியுள்ள பெண்களுக்கு இது தெரியும்.

பெண்களின் கருத்து: “போன மாதம் உங்கள் தோழியிடம் இனிக்க இனிக்கப் பேசிய பையன் இப்போது உங்களிடம் வந்து அதேபோல் பேசுவதைப் பார்க்கும்போது சீ! சீ! என்று இருக்கும்.”—ஹெலன், 25.

“ஒரு அழகான பையன் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தான்; எப்போது பார்த்தாலும் தன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். எங்கள் க்ரூப்பில் இன்னொரு பெண் வந்து சேர்ந்தபோது, அவளிடமும் அப்படியே நடந்துகொண்டான். மூன்றாவதாக ஒரு பெண் வந்து சேர்ந்தபோதும் அதே கதைதான். பார்க்கவே அருவருப்பாக இருந்தது!”—டீனா, 20.

பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாடாதீர்கள். ஆண்களோடு பழகுவதைப் போலவே பெண்களோடு பழகுவதும் இருக்குமென எதிர்பார்க்காதீர்கள். ஏன்? இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: உங்கள் தோழன் புதிய ‘கோட்சூட்டில்’ பிரமாதமாய் இருப்பதாக நீங்கள் சொல்லலாம் அல்லது அவனிடம் அடிக்கடி மனந்திறந்து எல்லாவற்றையும் பேசலாம்; இதையெல்லாம் வைத்து, நீங்கள் அவனைக் காதலிப்பதாக அவன் நினைத்துக்கொள்ளவே மாட்டான். ஆனால், அழகாக இருப்பதாக ஒரு பெண்ணைப் பாராட்டினால் அல்லது அவளிடம் அடிக்கடி மனந்திறந்து எல்லாவற்றையும் பேசினால் நீங்கள் அவளைக் காதலிப்பதாக அவள் நினைத்துக்கொள்வாள்.

பெண்களின் கருத்து: “ஆண்களிடம் நடந்துகொள்வதுபோல் பெண்களிடம் நடந்துகொள்ளக்கூடாதென இந்தப் பையன்களுக்குப் புரிவதே இல்லை.”—ஷெரல், 26.

“ஒரு பையன் என்னுடைய ஃபோன் நம்பரை வாங்குவான், பிறகு எனக்கு எஸ்எம்எஸ் அனுப்புவான். இதெல்லாம் எதற்கு? சில சமயம் இப்படி எஸ்எம்எஸ் அனுப்பி அனுப்பியே நெருக்கம் அதிகரிக்கலாம். ஆனால், இந்த விதத்தில் எவ்வளவுதான் பேசிக்கொள்ள முடியும்?”—மாலரி, 19.

“ஒரு பையன் ஒரு பெண்ணிடம் அக்கறையோடு நடந்துகொண்டால், அவளிடம் நன்கு பேசிப் பழகினால், அவள் எவ்வளவு சீக்கிரம் அவனுடன் உணர்ச்சிப்பூர்வமாய் ஒன்றிவிடுவாள் என்பது அவனுக்குத் தெரியாதென நினைக்கிறேன். பெண்கள் ஒன்றும் பையன்களுக்காக அலைவதில்லை. என்னைப் பொறுத்தவரை நிறைய பெண்கள் காதலிக்க விரும்புகிறார்கள், தங்களுக்குப் பொருத்தமான ஒருவனை எப்போதும் தேடுகிறார்கள், அவ்வளவுதான்.”—ஆலிஸன், 25.

நியாயமானவர்களாய் இருங்கள்

‘எல்லா பெண்களுக்கும் என்னைப் பிடிக்கும்’ என்று நினைப்பவர்கள் நியாயமற்றவர்கள், சொல்லப்போனால், தற்பெருமைபிடித்தவர்கள். ஆனால், நீங்கள் பின்வருவதை நினைவில் வைத்தால் ஒருவேளை சில பெண்களுக்கு உங்களைப் பிடிக்கலாம்: உங்கள் வெளித்தோற்றம் எப்படியிருக்கிறது என்பது அந்தளவு முக்கியமல்ல, ஆனால் உங்கள் அகத்தோற்றம் எப்படியிருக்கிறது என்பதே மிக முக்கியம். எனவே, “புதிய சுபாவத்தை” வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை பைபிள் வலியுறுத்துவதில் ஆச்சரியமேதும் இல்லை.—எபேசியர் 4:24.

முடிவாக, கேட் என்ற 21 வயது பெண் இப்படிச் சொல்கிறாள்: “பெண்களை மயக்க தாங்கள் இப்படி இப்படி உடையணிய வேண்டும் அல்லது பார்ப்பதற்கு இப்படி இப்படி இருக்க வேண்டுமெனப் பையன்கள் நினைக்கிறார்கள். ஓரளவுக்கு இது உண்மையாக இருந்தாலும், நல்ல குணங்களைக் கண்டே அநேக பெண்கள் மயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்.”  * (g 5/09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்படும் விழித்தெழு! பத்திரிகையின் 2007, மே இதழில் பக்கம் 18-ல் உள்ள கட்டுரையைக் காண்க.

சிந்திப்பதற்கு

◼ உங்களை நீங்களே மதிப்பதை எப்படிக் காட்டலாம்?

◼ ஒரு பெண்ணின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நீங்கள் மதிப்பதை எப்படிக் காட்டலாம்?

[பக்கம் 11-ன் படம்]

நல்லொழுக்கம் என்பது, மற்றவர்களுடைய மனதைக் கவருவதற்காக அணிந்துகொண்டு வீட்டுக்கு வந்ததும் கழற்றிவிடும் ‘கோட்சூட்டைப்’ போன்றது அல்ல