Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எளிமையாக, சமநிலையாக வாழுங்கள்

எளிமையாக, சமநிலையாக வாழுங்கள்

எளிமையாக, சமநிலையாக வாழுங்கள்

எளிமையாக, சமநிலையாக வாழ்வது மிகுந்த பயனளிக்கும். ஆனால், அப்படி வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, என்னென்ன காரியங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்களென யோசித்துப் பார்க்க வேண்டும். எப்படி?

உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இதுவரை நான் என்ன சாதித்திருக்கிறேன்? இனிமேல் என்ன சாதிக்கப் போகிறேன்?’ பின்பு, உங்களுடைய முக்கிய லட்சியங்களை இங்கே எழுதுங்கள்:

1. .....

2. .....

3. .....

வாழ்க்கை என்று வரும்போது இன்று அநேகருக்குக் குறுகிய கண்ணோட்டமே இருக்கிறது; பணமும் பொருளும்தான் முக்கியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பார்க்கப்போனால், “‘சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்’ என்று இருக்கலாமே!” எனச் சொல்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:32) கைநிறைய சம்பாதித்து, உடனுக்குடன் செலவு செய்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பைபிள் இந்தக் கருத்தை ஆமோதிப்பதில்லை.

இயேசு ஓர் உவமையைச் சொன்னார்; அதில், ஒருவன் பொருள்களை ஏராளமாகச் சேர்த்து வைக்கிறான்; ஆனால், அவற்றை அனுபவிப்பதற்கு முன்பே அவன் இறந்துபோகிறான். “கடவுளுடைய பார்வையில் செல்வந்தனாக இல்லாமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவனுக்கு இப்படித்தான் நடக்கும்” என்று அவர் சொன்னார். (லூக்கா 12:16-21) அந்த மனிதன் கடினமாக வேலை செய்து தனக்கு வேண்டியதையெல்லாம் சேர்த்து வைத்தது தவறா? நிச்சயமாக இல்லை. பணமும் பொருளுமே முக்கியமென அவன் நினைத்ததுதான் தவறு. எதிர்காலத்திற்காக அவன் திட்டங்கள் போட்டபோது, கடவுளுடைய கண்ணோட்டத்தை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டான். அதனால், அவன் பாடுபட்டு சேர்த்து வைத்த அத்தனை சொத்தும் அவனுக்கு எதிர்காலத்தில் எவ்விதத்திலும் பயன்படாமல் போகவிருந்தது. எப்பேர்ப்பட்ட நஷ்டம்!—பிரசங்கி 2:17-21; மத்தேயு 16:26.

அவனைப் போல் இல்லாமல், முடிவில்லா வாழ்வுக்காக உழைக்கும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லா வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்” என்று அவர் ஒருசமயம் சொன்னார். (யோவான் 6:27) அதற்குமுன், அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்.” (யோவான் 3:16) முடிவில்லா வாழ்வு என்பது எப்பேர்ப்பட்ட அருமையான வெகுமதி!

கவலையை வெல்வது எப்படி?

பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகக் கவலைப்படும் இயல்பு மனிதருக்கு இருப்பதை இயேசு ஒப்புக்கொண்டார். ஆகவே, தம் சீடர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம் என்று யோசித்துக்கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள், என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள். இவற்றையெல்லாம் உலகத்தார் ஆர்வமாக நாடிச்செல்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார். என்றாலும், அவருடைய அரசாங்கத்தைத் தொடர்ந்து நாடிக்கொண்டிருங்கள்; அப்போது, இவையெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”—லூக்கா 12:29-31.

நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்ட எண்ணற்ற கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறார்கள். மலேசியாவில் வசிக்கும் ஜூலியட் இவ்வாறு சொல்கிறார்: “ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்ததில் சோர்வும் விரக்தியும்தான் மிஞ்சியது. ஆகவே, எங்கள் வாழ்க்கையை எளிமையாக்க உதவும்படி என் கணவரும் நானும் யெகோவாவிடம் ஜெபம் செய்தோம். உடனடியாக பதில் கிடைத்தது. ஒரே மாதத்திற்குள், ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பகுதிநேர வேலை எனக்குக் கிடைத்தது.” ஆஸ்திரேலியாவில் கூரை அமைத்துத் தரும் கான்ட்ராக்டராகப் பணிபுரிகிறார் ஸ்டீவ்; தன் குடும்பத்தாரோடு சேர்ந்து ஆன்மீகக் காரியங்களில் இன்னுமதிக நேரம் செலவிடுவதற்காக அவர் தன் வேலையில் சில மாற்றங்களைச் செய்தார். அவருடைய மனைவி மாரீன் இவ்வாறு சொல்கிறார்: “என் கணவரும் நாங்களும் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். இந்த வாழ்க்கைதான் பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது! எனக்கும் ரொம்பப் பிடித்திருக்கிறது! வாழ்க்கையை எளிமையாக்கினால் குடும்பமே களைகட்டும்.”

ஆனால், வேலை பறிபோய், இப்போது வீடும் பறிபோகும் நிலையில் நீங்கள் இருந்தால், இயேசுவின் ஆலோசனைப்படி நடக்க மிகுந்த விசுவாசம் தேவை. என்றாலும், ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலமும் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதன் மூலமும், நீங்கள்கூட எளிமையாக, சமநிலையாக வாழ முடியும். இது, “உண்மையான வாழ்வை” அடைய உங்களுக்கு உதவும்; அதாவது, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் முடிவில்லா வாழ்வை அடைய உங்களுக்கு உதவும்; அந்த உலகில் எல்லா வேலைகளும் இன்பம் தரும், எவ்வித உழைப்பும் வீண்போகாது.—1 தீமோத்தேயு 6:17-19; ஏசாயா 65:21-23.

பைபிள் வாக்குறுதி அளிக்கும் இந்த “உண்மையான வாழ்வை” பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள், அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள். (g10-E 01)

[பக்கம் 31-ன் சிறுகுறிப்பு]

கடவுளுடைய புதிய உலகில் எல்லா வேலைகளும் இன்பம் தரும், பயன் அளிக்கும்

[பக்கம் 30-ன் பெட்டி]

வீட்டுக்கு வெளியே வேலையை உருவாக்க முடியுமா?

உலகின் சில நாடுகளில் வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு உதவும் சில ஆலோசனைகள் இதோ:

● வீட்டுக் காவல் (மக்கள் வேலைக்காகவோ விடுமுறைக்காகவோ வெளியூர் செல்லும்போது, தங்கள் வீட்டை யாராவது பார்த்துக்கொள்ள வேண்டுமென விரும்பும்போது)

● சுத்தம் செய்தல்: கடைகள்; அலுவலகங்கள்; வீடுகள் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் (கட்டுமான வேலை முடிந்த பிறகு, தீ விபத்துக்குப் பிறகு, அல்லது குடித்தனக்காரர்கள் காலி செய்த பிறகு); வீட்டுவேலை (மற்றவர்களின் வீடுகளில்); ஜன்னல்கள் (அலுவலகங்களில், கடைகளில், வீடுகளில்)

● பழுதுபார்த்தல்: சைக்கிள்கள்; எல்லாவிதமான கருவிகள் (பழுது பார்ப்பது எப்படி என்பதைப் பற்றி எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் நூலகங்களில் கிடைக்கும்)

● எடுபிடி வேலைகள்: வீடுகளின் வெளிப்புற சுவர்களில் பலகையோ உலோகமோ பொருத்துதல்; அலமாரிகளையோ கதவுகளையோ செய்தல்; முற்றங்கள் கட்டுதல்; பெயின்ட் அடித்தல்; வேலி போடுதல்; மேற்கூரை அமைத்தல்

● விவசாயம்: பயிரிடுதல், பழம் பறித்தல், அறுவடை செய்தல்

● உட்புறத்தை அழகுபடுத்தி, செடிகளைப் பராமரித்தல்: அலுவலகங்களில், வங்கிகளில், வரவேற்பறைகளில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், முற்றங்களில்

● சொத்தை மேற்பார்வையிடுதல்: காவல்காத்தல், பராமரித்தல் (சில சந்தர்ப்பங்களில், இலவச தங்கு வசதி அளிக்கப்படும்)

● தரைவிரிப்பு பொருத்துதல், மரத்தளம் பொருத்துதல், அவற்றைச் சுத்தம் செய்தல்

● செய்தித்தாள் விநியோகம் (வயது வந்தவர்களும் சிறுவர்களும்), பிற விநியோக சேவைகள்: விளம்பரங்கள், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள்

● பொருள்களை இடமாற்றுதல், சேமிப்புக் கிடங்கு வைத்தல்

● இயற்கைக்காட்சி அமைத்தல், மரக்கிளைகளை வெட்டி சீர்செய்தல், புல்தரை பராமரித்தல், மரம் வெட்டுதல்

● பள்ளிப் பேருந்து ஓட்டுநர்

● புகைப்படத் தொழில் (தனிநபர்களையும் பொது நிகழ்ச்சிகளையும் படம்பிடித்தல்)

● மீனவர்களுக்குத் தூண்டிலுக்கான இரையை விற்றல்

● வேலையை மாற்றிக்கொள்ளுதல்: மின்சார வேலைகளுக்குப் பதிலாக காரைப் பழுதுபார்த்தல், குழாய்ப்பணிக்குப் பதிலாக தையல்வேலை செய்தல்

கூடுதலான தகவலுக்கு, மார்ச் 8, 1996 விழித்தெழு! இதழில் பக்கங்கள் 3-11-ஐப் பாருங்கள்.

[பக்கம் 31-ன் பெட்டி/படம்]

வீட்டில் வேலையை உருவாக்க வழிகள்

அக்கம்பக்கத்தில் என்னென்ன தேவைகள் இருக்கிறதெனக் கண்டறியுங்கள். அக்கம்பக்கத்தாரை விசாரியுங்கள். நீங்களாகவே முயற்சி எடுத்து வேலையில் இறங்குங்கள்.

● குழந்தையைக் கவனித்தல், பிள்ளை பராமரிப்பு

● வீட்டுத் தோட்டத்தின் காய்கறிகளையும் பூக்களையும் விற்றல்; பானங்களை விற்றல்

● துணிகளைத் தைத்தல், உடைகளை ஆல்ட்டர் செய்தல், கிழிசல்களைச் சரிசெய்தல்

● தயாரிப்பாளர்களுக்குத் துண்டுவேலை செய்தல்

● பேக்கரிப் பண்டங்களைத் தயாரித்தல், உணவு தயாரித்தல்

● மெல்லிய மெத்தை செய்தல், குரோஷா வேலை, பின்னல் வேலை; மண்பாண்டம் செய்தல்; பிற கைவினைப் பொருள்கள்

● சோபா போன்றவற்றிற்கு உறைகள் தைத்தல்

● கணக்கு வேலை, டைப்பிங் வேலை, கம்ப்யூட்டர் வேலை

● தொலைபேசியில் பதிலளிக்கும் சேவை

● முடி திருத்தும் வேலை

● வீட்டில் தங்கும் வசதியும் உணவு வசதியும் செய்துகொடுத்தல்

● விளம்பரதாரர்களுக்கு தபால் உறைகளின்மீது முகவரி எழுதி, அவற்றை ஒட்டி அனுப்பும் வேலை

● கார் கழுவுதலும் பாலிஷ் செய்தலும் (வாடிக்கையாளர்கள் உங்கள் வீட்டிற்குக் காரைக் கொண்டுவர வேண்டும்)

● செல்லப் பிராணியைப் பராமரித்துப் பழக்குவித்தல்

● பூட்டைச் செப்பனிடுதலும் சாவி தயாரித்தலும் (வீட்டில் ஒர்க் ஷாப்)

கவனிக்க: இவற்றுள் பெரும்பாலான வேலைகளுக்கான விளம்பரங்கள் இலவசமாகவே செய்யப்படலாம், அல்லது குறைந்த விலையில் வாரயிறுதி செய்தித்தாள்களுடன் அனுப்பப்படலாம், அல்லது சூப்பர்மார்க்கெட்டின் அறிவிப்புப் பலகைகளில் போடப்படலாம்.