Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூச்சிகளின் உடனடி உணவகங்கள்

பூச்சிகளின் உடனடி உணவகங்கள்

பூச்சிகளின் உடனடி உணவகங்கள்

சுலபமாகக் கிடைக்கிற, மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளையே பூச்சிகள் விரும்புகின்றன. அவை தேடுபவை எளிதில் கிடைக்கும் இடம்தான் பூக்களின் தலை. உடனடி உணவகங்களைப் போல், இந்தப் பூக்களும் கண்ணைப் பறிக்கும் நிறங்களால் தாங்கள் இருக்குமிடத்தை மௌனமாய் விளம்பரப்படுத்துகின்றன. கவர்ச்சியான இந்த மலர்களைக் கண்டதும் பூச்சிகள் அவற்றின் மீது வந்து அமர்ந்து மகரந்தத் துகள்களை கொறிக்கின்றன அல்லது தேனை உறிஞ்சுகின்றன.

குளு குளு இரவில் நன்கு தூங்கி எழுந்த பின் கொஞ்சம் சுறுசுறுப்படைய இந்தக் குளிர் ரத்த ஜீவிகளுக்கு சூரிய வெப்பம் தேவைப்படுகிறது. பூச்சிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவையும், வெயில் காய்வதற்கு ஏற்ற இடத்தையும் அநேக பூக்கள் இலவசமாய் அளிக்கின்றன. அவற்றில், பிரபலமான ஒரு பூவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

ஆக்ஸி டெய்ஸி என்ற பூ ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமாக இருப்பதில்லை என்றாலும் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவற்றில் பல பூச்சிகள் ‘மேய்வதை’ கண்டு வியந்துபோவீர்கள். பூச்சிகள் தங்கள் நாளை சுறுசுறுப்பாகத் துவங்குவதற்கு இந்த டெய்ஸி பூக்கள் பெரும் உதவி புரிகின்றன. இந்தப் பூவின் வெண்ணிற இதழ்கள் சூரியனின் வெப்பத்தை பிரதிபலிக்கின்றன; அதன் மத்தியில் உள்ள மஞ்சள்நிற பகுதி, பூச்சிகள் அமர்ந்து சூரிய வெப்பத்தை ‘பருகுவதற்கு’ ஏற்ற இடமாக இருக்கிறது. *

மகரந்த துகள்களையும் மதுரமான தேனையும் கொண்டு பூச்சிகளுக்கு விருந்து படைக்கின்றன இந்த டெய்ஸி பூக்கள். ஊட்டச்சத்துள்ள இந்த உணவை உண்டு பூச்சிகள் கொழிக்கின்றன. காலை சிற்றூண்டிக்கும் வெயில் காய்வதற்கும் டெய்ஸி மலரைவிட பூச்சிகளுக்கு வேறு ‘சொர்க்கம்’ உண்டோ?

எனவே, ஒரு நாளில் டெய்ஸி மலர்களில் பூச்சிகளின் ஒரு பெரிய அணிவகுப்பே நடைபெறும். வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், கவச வண்டுகள், சுவர்க்கோழிகள், பலவகை ஈக்கள் போன்றவை டெய்ஸி மலர்களை மொய்ப்பதை நீங்கள் பார்க்கலாம். கொஞ்சம் கூர்ந்து கவனிக்காவிட்டால் பூச்சிகளின் இந்த வியப்பூட்டும் “உடனடி உணவகங்களை” நீங்கள் பார்க்காமலேயே போய்விடக்கூடும்.

எனவே, அடுத்த முறை நீங்கள் கிராமப்புறத்திற்குச் செல்கையில், தங்களை விளம்பரப்படுத்த விரும்பாத இந்த டெய்ஸி மலர்களின் சூழியல் அமைப்புகளைக் கூர்ந்து கவனிக்கலாமே? அப்படிச் செய்தால், அவற்றைப் படைத்த படைப்பாளருக்கான உங்கள் நன்றியுணர்வு நிச்சயம் அதிகரிக்கும். (g10-E 03)

[அடிக்குறிப்பு]

^ சில பூக்களின் மேற்பரப்பில் உள்ள வெப்பம் சுற்றுப்புறத்தின் வெப்பத்தைவிட பல டிகிரி அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.