Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறு கன்னத்தைக் காட்டுவது என்றால் என்ன?

மறு கன்னத்தைக் காட்டுவது என்றால் என்ன?

பைபிளின் கருத்து

மறு கன்னத்தைக் காட்டுவது என்றால் என்ன?

“உங்களுக்குத் தீங்கு செய்கிறவனுக்குத் தீங்கு செய்யாதீர்கள்; எவனாவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்று பிரசித்திபெற்ற மலைப் பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத்தேயு 5:39.

இயேசு என்ன அர்த்தத்தில் இப்படிச் சொன்னார்? யார் நமக்கு என்ன செய்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்திலா? அப்படியென்றால், குனியக் குனியக் குட்டும்போது கிறிஸ்தவர்கள் வாய்திறக்காமல் இருக்க வேண்டுமா? தங்கள் உரிமைக்காகச் சட்டத்தின் உதவியை நாடக் கூடாதா?

இயேசு சொன்னதன் அர்த்தம்

இயேசு என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள, அவர் யாரிடம்... எந்தச் சந்தர்ப்பத்தில்... அதைச் சொன்னார் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். தமது போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த ஒரு சட்டத்தை ஞாபகப்படுத்திய பிறகே மேற்கூறப்பட்ட அறிவுரையை இயேசு கொடுத்தார். ஆம், “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” என்று சொன்ன பின்பே இந்த அறிவுரையைக் கொடுத்தார்.—மத்தேயு 5:38.

இயேசு குறிப்பிட்ட அந்த மேற்கோள்கள் யாத்திராகமம் 21:24 மற்றும் லேவியராகமம் 24:20-ல் காணப்படுகின்றன. “கண்ணுக்குக் கண்” கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தில் குருமார்கள் மற்றும் நியாயாதிபதிகளின் தீவிர விசாரணைக்குப் பின்பே குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆம், எந்தச் சூழ்நிலையில் குற்றம் இழைக்கப்பட்டது... தெரியாத்தனமாகச் செய்யப்பட்டதா, தெரிந்தே செய்யப்பட்டதா... என்றெல்லாம் தீர ஆராய்ந்த பிறகே அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.—உபாகமம் 19:15-21.

காலப்போக்கில், யூதர்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்கள். 19-ஆம் நூற்றாண்டில் ஆடம் கிளார்க் தனது பைபிள் விளக்கவுரையில் இவ்வாறு சொல்லியிருந்தார்: “யூதர்கள் மற்றவர்கள்மீது தங்களுக்குள்ள பகையைத் தீர்த்துக்கொள்ளவும் அவர்களைப் பழிவாங்கவும் இந்தச் சட்டத்தை [கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்] ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது. அவர்கள் கணக்கு வழக்கில்லாமல் பழிவாங்கினார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகமாகத் தீங்கிழைத்தார்கள்.” ஆனால், அப்படிச் செய்ய வேதாகமம் அவர்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை.

மறு கன்னத்தைக் காட்டும்படி இயேசு கற்பித்தபோது, இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் முக்கிய நோக்கத்தையே சுட்டிக்காட்டினார். ஒரு கன்னத்தில் அறை வாங்கிய பின் சுதாரித்துக்கொண்டு மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. இன்றைக்கு ஒருவர் யாரையாவது கன்னத்தில் அறைந்தார் என்றால் அது அவரை அடித்துக் காயப்படுத்துவதற்காகச் செய்யப்படுவதில்லை; அவரை அவமானப்படுத்தும் நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. முக்கியமாக, சம்பந்தப்பட்ட நபரின் கோபத்தைக் கிளறி அவரைச் சண்டைக்கு இழுக்கவே அவ்வாறு செய்யப்படுகிறது. இதுவே பண்டைய காலங்களிலும் நடந்தது.

எனவே, இயேசு சொல்ல வந்த குறிப்பு என்னவென்றால்: ஒருவரை வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பதற்காக அவருக்கு அறை கொடுக்கும்போது அல்லது வார்த்தைகளால் தாக்கும்போது பாதிக்கப்பட்ட நபர் பதிலுக்குப் பதில் செய்யக் கூடாது; அதுமட்டுமல்ல, பிரச்சினை இன்னும் வளர்ந்துகொண்டே போகிற மாதிரி அவர் எதையும் செய்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால் நிலைமை இன்னும் மோசமாகவே ஆகும்.—ரோமர் 12:17.

“அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத் தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே” என்று அறிவுரை கூறினார் ராஜா சாலொமோன். (நீதிமொழிகள் 24:29) இவருடைய வார்த்தைகளுக்கும் இயேசுவின் வார்த்தைகளுக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது. அப்படியென்றால்... இயேசுவைப் பின்பற்றும் ஒரு நபர் எந்த அர்த்தத்தில் மறு கன்னத்தைக் காட்டுவார்? மற்றவர்கள் எவ்வளவுதான் தன்னை வலிய வம்புக்கு இழுத்தாலும் அவர் கோபப்பட மாட்டார்.—கலாத்தியர் 5:26, BSI.

நம்மைத் தற்காத்துக்கொள்ளலாமா?

மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, யாராவது தாக்கினால்கூட ஒரு கிறிஸ்தவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள மாட்டார் என்று அர்த்தமாகாது. இயேசு ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை; மாறாக, நாம் யாரையும் வலிய சென்று அடிக்கக் கூடாதென்றும், பழிவாங்கும்படி மற்றவர்கள் நம்மைத் தூண்டிவிட்டாலும் அதற்கு இடங்கொடுக்கக் கூடாதென்றும் சொன்னார். சண்டையைத் தவிர்ப்பதற்காக முடிந்தளவு அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிடுவதுதான் நல்லது; என்றாலும், முன்கூட்டியே தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, நாம் ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால் காவல் துறையின் உதவியையும் நாட வேண்டும்.

இயேசுவின் ஆரம்பகால சீடர்களும்கூட தங்களுக்கு இருந்த உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள சட்டத்தின் உதவியை நாடினார்கள். உதாரணத்திற்கு, நற்செய்தியை அறிவிக்கத் தனக்கிருந்த உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள அப்போஸ்தலன் பவுல் அன்றைய சட்டத்தின் உதவியை நாடினார். (மத்தேயு 28:19, 20) ஒருமுறை பவுலும் அவருடைய சக மிஷனரி சீலாவும் பிலிப்பி நகரத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, சட்டத்தை மீறினதாகப் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு அரசதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

பின்பு அனைவர் முன்பாகவும் அடிக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றி சிறையில் தள்ளப்பட்டார்கள். அதன்பிறகு பவுல் தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தான் ஒரு ரோமக் குடிமகன் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த உண்மை தெரிந்ததும், அந்த அதிகாரிகள் வெலவெலத்துப்போனார்கள்; பிரச்சினையைக் கிளப்பாமல் உடனே அங்கிருந்து கிளம்பும்படி பவுலையும் சீலாவையும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். இவ்வாறு, “நற்செய்திக்காக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுகிற” விஷயத்தில் பவுல் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைத்தார்.—அப்போஸ்தலர் 16:19-24, 35-40; பிலிப்பியர் 1:7.

பவுலைப் போலவே, யெகோவாவின் சாட்சிகளும் தங்களுக்கிருக்கும் உரிமையை வலியுறுத்தி அடிக்கடி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மத சுதந்திரம் இருக்கிற நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு இதே கதிதான். தங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அல்லது ஆபத்து நேரிடும்போது யெகோவாவின் சாட்சிகள் மறு கன்னத்தைக் காட்ட வேண்டியதில்லை; அதாவது தங்களைத் தற்காத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதனால்தான் அவர்கள் சட்டத்தின் உதவியை நாடுகிறார்கள்.

ஆகவே, ஊழியம் செய்யத் தங்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள சாட்சிகள் தக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்; தங்களுடைய முயற்சிகளுக்கு நூற்றுக்கு நூறு வெற்றி கிடைக்கப்போவதில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், இயேசுவைப் போல் எல்லாவற்றையும் யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடுகிறார்கள்; யெகோவா எல்லா விஷயங்களையும் அறிந்து செயல்படுவார்... சரியான நியாயம் வழங்குவார்... என்று இயேசுவைப் போல் அவர்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். (மத்தேயு 26:51-53; யூதா 9) பழிவாங்குதல் யெகோவாவுக்குரியது என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.—ரோமர் 12:17-19. (g10-E 09)

உங்கள் பதில்?

● கிறிஸ்தவர்கள் எதைத் தவிர்க்க வேண்டும்?—ரோமர் 12:17.

● கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள சட்டத்தின் உதவியை நாடக் கூடாதென்று பைபிள் சொல்கிறதா?—பிலிப்பியர் 1:7.

● தம் தகப்பன் என்ன செய்வாரென்று இயேசுவுக்கு நம்பிக்கை இருந்தது?—மத்தேயு 26:51-53.