Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்ப காலத்தில் கடவுள் என்னைத் தாங்கினார்

துன்ப காலத்தில் கடவுள் என்னைத் தாங்கினார்

துன்ப காலத்தில் கடவுள் என்னைத் தாங்கினார்

விக்டோரியா கோஜோயீ சொன்னபடி

“இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது! உங்கள் மகள் வாழ்நாள் முழுவதும் போலியோ-ஷூக்களைப் போட்டுக்கொண்டும் ஊன்றுகோல் வைத்துக்கொண்டும்தான் நடக்க வேண்டியிருக்கும்” என்று அம்மாவிடம் ஒரு டாக்டர் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் அப்படியே உடைந்துபோய்விட்டேன்! அப்படியென்றால், இனி என்னால் நடக்கவே முடியாதா..?

மெக்சிகோவைச் சேர்ந்த சீயாபாஸ் மாகாணத்தில் டாப்பாச்சூலா என்ற ஊரில் நவம்பர் 17, 1949-ல் பிறந்தேன். நான்கு பிள்ளைகளில் நான்தான் மூத்தவள். பிறந்த சில மாதங்களில் நான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருந்தேன். ஆனால், ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது திடீரென்று தவழ்வதை நிறுத்திவிட்டேன். கை, கால்களை லேசாகத்தான் அசைக்க முடிந்தது. இரண்டு மாதங்களுக்குப் பின்பு என்னுடைய கை, கால்களைச் சுத்தமாக அசைக்கவே முடியவில்லை. அங்கிருந்த டாக்டர்களுக்கு ஒரே குழப்பம்; ஏனென்றால், டாப்பாச்சூலாவிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும் இதே பிரச்சினை இருந்தது. அதனால் ஓர் எலும்பியல் டாக்டர், மெக்சிகோ நகரிலிருந்து வந்து எங்களைப் பரிசோதித்தார். எங்களுக்கு போலியோ நோய் அதாவது இளம்பிள்ளைவாதம் வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.

எனக்கு மூன்று வயதானபோது, இடுப்பிலும் முழங்கால்களிலும் கணுக்கால்களிலும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு, என்னுடைய வலது தோள்பட்டையும் படுமோசமாக பாதிக்கப்பட்டது. ஆறு வயதானபோது, மெக்சிகோ நகரிலிருந்த ஒரு குழந்தைநல மருத்துவமனையில் தொடர்ந்து எனக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சீயாபாஸிலிருந்த ஒரு பண்ணையில் அம்மா வேலை செய்து வந்ததால், மெக்சிகோ நகரிலிருந்த பாட்டி வீட்டில் வளர்ந்தேன். என்றாலும், முக்கால்வாசி நாள் மருத்துவமனையில்தான் இருந்தேன்.

எனக்குக் கிட்டத்தட்ட எட்டு வயதானபோது, கொஞ்சம் நன்றாக ஆனேன். ஆனால், மறுபடியும் என் உடல்நிலை மோசமானது, கொஞ்சம்கூட நடமாட முடியாமல் போனது. அப்போதுதான் டாக்டர் அப்படிச் சொன்னார்; அதாவது, வாழ்நாள் முழுவதும் போலியோ-ஷூக்களைப் போட்டுக்கொண்டும் ஊன்றுகோல் வைத்துக்கொண்டும்தான் நடக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்.

15 வயதிற்குள்... முதுகெலும்பு, கால்கள், முழங்கால்கள், கணுக்கால்கள், கால்விரல்கள் என என்னுடைய உடலில் மொத்தம் 25 அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தன. ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருமுறை இப்படி அறுவை சிகிச்சை நடந்த பிறகு, ஓர் அச்சிற்குள் என்னுடைய கால்களை வைத்திருக்க வேண்டியிருந்தது. அந்த அச்சை எடுத்த பிறகு, நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. அதைச் செய்வதற்குள் உயிரே போய்விடும்போல் இருந்தது.

யெகோவாவே என்னைத் தாங்கினார்

ஒரு சமயம் எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து நான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தபோது அம்மா என்னைப் பார்க்க வந்தார்; அப்போது எனக்கு 11 வயது. இயேசு, நோயாளிகளைக் குணப்படுத்தினார்... பக்கவாத நோயாளி ஒருவனைக்கூட நடக்க வைத்தார்... என்பதையெல்லாம் அவர் படித்திருந்தார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட காவற்கோபுரம் பத்திரிகையிலிருந்துதான் அவர் இந்த விஷயத்தைப் படித்திருந்தார்; அந்தப் பத்திரிகையை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். அதை என்னுடைய தலையணையின் கீழ் ஒளித்து வைத்திருந்தேன்; ஆனால், ஒருநாள் அது காணாமல் போய்விட்டது. நர்சுகள் அதை எடுத்து எங்கேயோ போட்டுவிட்டார்கள். அதை வாசித்ததற்காக என்னைத் திட்டினார்கள்.

சுமார் ஒரு வருடம் கழித்து, சீயாபாஸிலிருந்து அம்மா மறுபடியும் என்னைப் பார்க்க வந்தார். அந்தச் சமயத்தில், அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார். பரதீஸை இழந்ததிலிருந்து பரதீஸைத் திரும்பப் பெறும்வரை என்ற ஆங்கில புத்தகத்தைக் கொண்டுவந்தார். * அம்மா என்னிடம், “புதிய உலகில் இயேசு உன்னைக் குணப்படுத்துவார்... நீ அங்கே வாழ வேண்டுமென்றால், பைபிளைப் படிக்க வேண்டும்” என்று சொன்னார். அதனால், 14-வது வயதில் நான் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன்; பாட்டிக்கோ அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்த மருத்துவமனையில் சிறுபிள்ளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், அடுத்த வருடம் அங்கேயிருந்து போய்விடும்படி என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

சவால்களைச் சமாளித்தேன்

இதனால், நான் மனமொடிந்துபோனேன். நான் பைபிளைப் படித்தது பாட்டிக்குப் பிடிக்காததால், அப்பா அம்மாவுடன் இருப்பதற்காக சீயாபாஸுக்கே திரும்பிப் போய்விட்டேன். ஆனால், அப்பா குடிகாரராக இருந்ததால், வீட்டிலும் ஒரே பிரச்சினை! வாழ்க்கையே வெறுத்துப்போனது. விஷம் சாப்பிட்டுச் செத்துப்போய்விடலாம் என்றுகூட சில சமயங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால், பைபிள் படிப்பைத் தொடர்ந்தபோது, என்னுடைய கண்ணோட்டம் மாறியது. கடவுள் இந்த பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவார் என்பதை பைபிளிலிருந்து படித்தபோது அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.

பைபிளிலுள்ள இந்த அருமையான நம்பிக்கையை மற்றவர்களுக்கும் சொல்லத் தொடங்கினேன். (ஏசாயா 2:4; 9:6, 7; 11:6-9; வெளிப்படுத்துதல் 21:3, 4) 18 வயதில், அதாவது மே 8, 1968-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். 1974-லிருந்து, 70-க்கும் அதிகமான மணிநேரங்களை ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் செலவழித்திருக்கிறேன்; வாழவேண்டுமென்ற ஆசையை எனக்குள் விதைத்த தெய்வீக வாக்குறுதிகளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்காக!

வாழ்க்கையில் மனநிறைவும் மகிழ்ச்சியும்

காலப்போக்கில், நானும் அம்மாவும் டிஜுயெனா நகருக்குக் குடிமாறி வந்துவிட்டோம்; அது மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் இருக்கிறது. எங்களுக்குச் சௌகரியமான ஓர் இடத்தில் குடியிருக்கிறோம். போலியோ-ஷூக்களோடும் ஊன்றுகோலோடும் வீட்டில் நடமாடி வருகிறேன்; சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சமைப்பது, துணிமணிகளைத் துவைப்பது, இஸ்திரிபோடுவது போன்ற வேலைகளைச் செய்கிறேன். எனக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு வண்டியில் ஊழியத்திற்குப் போய் வருகிறேன்.

வீடுகளில் உள்ளவர்களிடமும், தெருக்களில் நடக்கிறவர்களிடமும் பைபிள் சத்தியங்களைச் சொல்லி வருகிறேன்; அதோடு, பக்கத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்குப் போய், அங்கே டாக்டரைப் பார்ப்பதற்காகக் காத்திருப்பவர்களிடமும் பைபிளை எடுத்து விளக்கமாகப் பேசுகிறேன். அவர்களிடம் பேசி முடித்த பிறகு, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருவதற்காக என்னுடைய வண்டியில் கடைத்தெருவிற்குச் செல்கிறேன்; பின்பு, வீட்டிற்குப் போய் சமையலிலும், மற்ற வேலைகளிலும் அம்மாவுக்கு உதவுகிறேன்.

எங்களுடைய செலவுக்காகப் பழைய துணிமணிகளை வாங்கி விற்கிறேன். அம்மாவுக்கு இப்போது 78 வயதாகிறது; மூன்று தடவை அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதால் முன்புபோல் அவரால் வேலைசெய்ய முடிவதில்லை. அவருக்கு வேண்டிய மருந்து, சாப்பாடு என எல்லாவற்றையும் நான்தான் வேளாவேளைக்குக் கொடுத்துவருகிறேன். எங்கள் இரண்டு பேருக்குமே நல்ல உடல்நிலை இல்லாவிட்டாலும்... சபைக் கூட்டங்களுக்கு எப்படியாவது போய்விடுகிறோம். என்னுடன் பைபிளைப் படித்த, 30-க்கும் அதிகமானவர்கள் ஊழியத்தில் கலந்துகொள்கிறார்கள்.

கடவுளுடைய புதிய உலகில், “முடவன் மானைப்போல் குதிப்பான்” என்று பைபிள் தருகிற வாக்குறுதி நிறைவேறும் என நான் நூற்றுக்கு நூறு நம்புகிறேன். அதுவரையில், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று கடவுள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் என்னைத் தாங்குகின்றன.—ஏசாயா 35:6; 41:10. * (g10-E 12)

[அடிக்குறிப்புகள்]

^ இது யெகோவாவின் சாட்சிகளால் 1958-ல் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சில் இல்லை.

^ விக்டோரியா கோஜோயீ நவம்பர் 30, 2009 அன்று தன்னுடைய 60-வது வயதில் இறந்துவிட்டார். அவருடைய அம்மா ஜூலை 5, 2009-ல் இறந்தார்.

[பக்கம் 14-ன் படம்]

ஏழு வயதில், போலியோ-ஷூக்களை அணிந்துகொண்டு

[பக்கம் 15-ன் படம்]

எனக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு வண்டியில் ஊழியத்திற்குப் போய் வருகிறேன்